ஒரு முறை தியானத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம்(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) ஒரு சந்தேகம் பற்றி விளக்கம் கேட்டேன். “தாயே நீ நினைத்தால் மக்கள் அனைவரையும் நல்லவர்களாக்கித் தீமையை அகற்றலாமே…. ! அது ஏன் இன்றுவரை நடக்கவில்லை?” என்று கேட்டேன்.

அதற்கு அன்னை ஆதிபராசக்தி (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்) உணர்த்திய பதில் இது ….!

இந்த விஞ்ஞான யுகத்தின் பெருஞ்சாதனையாகக் கம்ப்பூட்டர் துணைக் கொண்டு இயந்திர மனிதனைப் படைத்துச் சில கோட்பாடுகளைத் திணிக்கிறார்கள்.அந்தக் கம்ப்யூட்டரும் அந்தக் கோட்பாட்டின் விதிமுறைப்படி தான் இயங்குகிறதேயன்றி மாறுபட்டு இயங்குவதில்லை.

அதுபோல் தான் தெய்வத்தால் படைக்கப்பட்ட மனிதனும் அவன் கர்ம வினைப்படியே இயங்குகிறான்.

எனக்கு யாரிடத்திலும் விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. நல்லவன் என்று ஒருவனை விரும்புவதும் இல்லை. கெட்டவன் என்று ஒருவனை வெறுப்பதும் இல்லை.

மனிதர்களிடையே அமைந்துள்ள வேறுப்பாடுகளுக்கு அவனவன் எண்ணங்களும் கர்மவினைகளுமே காரணம். அவற்றின் அடிப்படையில் அவனவனும் இயங்குகிறான்.

நெருப்பு சுடும் என்ற தாயின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டுக் குழந்தை நடந்தால் காயம்படாமல் தப்பிக்கலாம்.அன்னைஆதிபராசக்தியின்
(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) அறிவுரைப்படி நடந்தால் கர்ம வினை என்ற நெருப்பில் சிக்காமல் தப்பிக்கலாம்.

இன்றைய கலியுகத்தில் பாவச் செயல்களே அதிகரித்து வருகின்றன. எண்ணங்கள் சுத்தமில்லை. அடி மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை எண்ணங்கள் சுத்தமில்லை.

இப்படிப்பட்ட நிலையில் எத்தனை பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும், பாமர மக்களுக்குப் பலன்கள் போய்ச் சேர்வதில்லை. அதன் விளைவாகவே அங்கங்கே போராட்டங்கள் வெடிக்கின்றன. இவற்றை மேல்பூச்சுப் பூசி மெழுகி விட்டால் மட்டும் போதாது. அடிப்படைக் காரணத்தை உணர வேண்டும்.

ஆன்மிக உணர்வு! தெய்வ பயம்! பாவம் செய்வதில் அச்சம்! இவற்றைப் பதிய வைக்காமல் மக்களை முன்னேற்றி விட முடியாது.

படித்தவர்களே பாவமும், சூதும் நிரம்பி வாழும் போது, பாமர மக்கள் எப்படி ஒழுங்காக இருப்பார்கள்?

ஆன்மிக அடித்தளம் உறுதியாக அமையாத எந்தச் சமுதாயமும் ஆட்டம் காணும்; தனி மனித வாழ்வும் ஆட்டம் காணும்.

ஆன்மிக அடித்தளத்தை உறுதியாக அமைத்துக் கொண்டு திட்டம் தீட்டினால் பொருளாதார சுபிட்சம் உண்டாகும். இந்த உணர்வு மக்கள் மனதில் பதிய வேண்டும்.

நோய் நீங்க வேண்டுமானால் நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் நோயை வேருடன் களைய முற்பட வேண்டும்.”

நோயின் மூல காரணத்தை அன்னைஆதிபராசக்தி(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்)
தியானத்தில் உணர்த்தி விட்டாள். புரிந்து கொண்டு வாழ்வது அவரவர் பொறுப்பு! சமுதாயத்தின் பொறுப்பு.

ஓம் சக்தி!

நன்றி.

பக்கம் 32-33.

சக்தி ஒளி- ஜுன் 2011.