நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் ! தற்போது இருப்பது சென்னையில்!

ஒருமுறை என் மனைவி ‘எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன’ என்று சொல்லி மன வேதனைப்பட்டாள்.

என்னுடைய இரு சக்கர வாகனம் தொலைந்து விடுவது போல அடிக்கடி எனக்கு கனவு வரும்.

இவற்றால் *என் மனம் கலக்கம் அடைந்தாலும் , ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மாவிடம் என் பாரத்தையெல்லாம் போட்டுவிட்டு, அம்மாவின் மூலமந்திரம் சொல்லிவிட்டு, கலச தீர்த்தம், பாதபூஜைத் தீர்த்தம் அருந்தி உடல் முழுவதும் தெளித்துக் கொண்டுதான் தினமும் வேலைக்குப் புறப்படுவேன்.*

ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்ப இரவு 9.00 மணி ஆகிவிட்டது.

இடையில் இரயில் பாதையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அப்போது என் வலப்பக்கமாக ஒரு இரயில் தொலைவில் வருவது தெரிந்தது.

எனக்கு முன்னால் இருவர் சொன்றதால் இரயில் வருவதற்குள் தண்டவாளத்தைக் கடந்து விடலாம் என்ற அசட்டுத் துணிச்சலால் வண்டியைச் செலுத்தினேன். இடதுகைப் பக்கம் பார்க்கிறேன். ஒரே அதிர்ச்சி!

*என் இடதுகைப் பக்கமிருந்தும் ஒரு இரயில் வந்தபடி இருக்கிறது.! அந்த இரண்டுமே அதிவேக இரயில்கள் (Super Fast Express Trains) இரண்டு இரயில்களும் ஒலி எழுப்பியபடி வர எங்களைப் பார்த்து கேட் கீப்பர் (Gate Keeper) விசில் எழுப்ப, சாலை ஒரத்தில் இருந்த மக்கள் ‘ வண்டி! வண்டி!’ என்று அலற நான் நிலைகுலைந்து போனேன்*. உடனே என்னுடன் வந்த வளர்ப்புமகளை வண்டியிலிருந்து இறங்கச் சொல்லிவிட்டு, இரயில் அடித்து விடாதபடி என் வண்டியின் கைப்பிடியை வளைத்தப்படி நின்றேன்.

*வலப்பக்கமாக வந்த இரயில் என் வண்டியின் பின்புறத்தில் மோதியது. உடனே நான் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையிலே வந்து விழுந்துவிட்டேன். என் வண்டி என் மீது விழுந்து கிடக்கிறது*.

*அடுத்து இடதுபக்கம் வந்த இரயில் என் வண்டியின் முன்பக்கத்தை அடித்து நொறுக்கிவிட்டது…!*

நானே நிசப்தமான ஆகாயத்தில் படுத்திருப்பது போல, மெத்தையைக் கவிழ்த்துப் போட்டது போல, என் கை, கால், தலை அத்தனையும் ஆமை தன் ஒட்டுக்குள் ஒடுங்குவது போல ஒடுங்கிக் கொண்டிருந்தேன்.

இரயில் என்னைக் கடந்து போய் முடிந்தவுடன், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் பாய்ந்து வந்தனர். வண்டியைத் தூக்கி விட்டனர். நான் தானாக எழுந்த்துவிட்டேன்.

*’எண்ணய்யா இது? ஒரு வண்டி மோதினாலே சுக்குநூறாய்ப் போய்விடுவான் . உன் மீது இரண்டு இரயிலும் டமால் ! டமால்! என்று அடித்தும் உயிர் பொழச்சி நிக்கிறே …! நீ எந்த சாமியைக் கும்பிடறியோ அந்த சாமிதான் உன்னை அதிசமாய்க் காப்பாத்தி இருக்கு!* ‘என்று சொல்லி சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

சில கம்பிகள் என் உடலை கீறிவிட்டன. அதனால் அதிக இரத்தம் சிந்தியிருந்தது. நான் அணிந்திருந்த செவ்வாடை, என் கால் சட்டையின் ஒரு பகுதியை இரயில் உருவிக் கொண்டுபோய்விட்டது.

என் நண்பர் ஒருவருக்குத் தகவல் சொல்லி வரவழைத்து, அவரது துணையுடன் மருத்துவமனையில் சேர்ந்தேன்.

ஒருமாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அந்தச் சமயத்தில் அம்மா அவர்களின் அருள்வாக்குகளைத்தான் என் மனம் அசைபோட்டுக் கொண்டிருந்தது!.

*1.” உன் விதியையும் மாற்றும் சக்தி தொண்டுக்கு உண்டு”*

*2. “தாய்ப்பறவை தன் குஞ்சுகளைக் காப்பது போல,அடிகளார் உங்களை எப்படியெல்லாம் காப்பாற்றி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்!”*

*3.”தாயே ! என்று என் மண்ணை மித்தவனை இளகிய வெண்ணெயில் அகப்பட்ட ஈயைப் போல வைத்து அனைத்துக் கொள்வேன்.”*

*விதியை மாற்றும் அளவுக்கு நாம் தொண்டு செய்துவிட்டோமா…? இல்லையே…*

*அப்படி இருந்தும் நாம் செய்யும் சின்னச் சின்னத் தொண்டுக்கே இப்படிக் காப்பாற்றுகிறாளே… உண்மையாக அம்மாவுக்கே நம்மை அர்ப்பணித்துக் கொண்டு தொண்டு செய்தால் எவ்வளவு பாதுகாப்பு…?*

ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமானதும், நானும் ,என் மனைவியும் மேல்மருவத்தூர் சென்று, எனக்கு உயிர் பிச்சை அளித்த அம்மா ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பாதபூஜை செய்து நன்றி செலுத்தினோம்.
ஓம்சக்தி.

சக்தி பாலசுப்பிரமணி,
செங்குன்றம், சென்னை.

பக்கம் (28-30)
சக்தி ஒளி.ஆகஸ்ட்-2013.

குருவடி சரணம். திருவடி சரணம்.