தாயே ! நல்லவனெல்லாம் துன்பப்படுகிறான். அநியாயமும் அக்கிரமும் செய்கிறவனெல்லாம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்கிறானே ? உன் படைப்பில் ஏன் இந்த முரண்பாடு ? ” என்று கேட்டார் ஒரு தொண்டர்.

அதுகேட்டு அன்னை அந்தத் தொண்டரிடம் திருப்பிக் கேட்டாள்.
நல்லவன் என்பவன் யார் மகனே ? ” என்றாள்.

தான் உண்டு, தன் வேலையுண்டு என எந்த வம்புக்கும் போகாதவன் தானே நல்லவன் ? ” என்றார் தொண்டர்.

நீ நல்லவன் என்று நினைக்கிறவனுடைய ஆன்ம பரிபக்குவம் எனக்குத் தான் தெரியும் மகனே ! “.

எனக்கு நல்லவன் யார் தெரியுமா மகனே ? ”

சாலையோரத்தில் சித்தப்பிரமை பிடித்து விழுந்து கிடக்கிறானே அவன் தான் எனக்கு நல்லவன். ஏன் தெரியுமா ? அவன் மனத்தில் தான் கள்ளமில்லை: கபடமில்லை: சூது இல்லை: சூழ்ச்சி இல்லை: ஆசையில்லை: பாசமில்லை: அழுக்கு இல்லை. அவன் தான் எனக்கு நல்லவன்.

பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமாகச் சிலருக்குச் செல்வம் கொடுக்க வேண்டி இருக்கிறது மகனே ! அந்தச் செல்வத்தைப் பெற்றவன் என்ன நினைக்க வேண்டும் தெரியுமா ?”

ஏதோ தெய்வ அருளால் நமக்கு இந்தச் செல்வம் கிடைத்தது என்று நினைக்க வேண்டும் மகனே ! தனக்குப் போக ஏழை எளியவர்களுக்குத் தான தருமமும் செய்து வாழ வேண்டும் மகனே ! அதை மறந்து விட்டு அகங்காரத்தினால் ஏழை எளியவர்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வேன் தெரியுமா ? என வினவினாள் அன்னை.
தொண்டர் மௌனமாக இருந்தார்.

எதனால் மகனே அவனுக்கு அந்த அகங்காரம் வந்தது ? ” என்றாள் அன்னை.

செல்வத்தினால் தாயே ….! ” என்றார் தொண்டர்.

அவன் அகங்காரத்தை அழிக்க அவனை எப்படித் தண்டிப்பேன் தெரியுமா ? ” என்று கேட்டாள் அன்னை.
தொண்டர் விழித்தார்.

மேலும் மேலும் அவனுக்குச் செல்வத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அவன் அகங்காரத்தையும் வளர்த்துக் கொண்டே வருவேன். இந்தச் செல்வம் எல்லாம் தன்னைக் காப்பாற்றாது என்று உணரும் நிலையை உண்டாக்குவேன். இறுதியில் அழித்து விடுவேன் ” என்றாள் அன்னை.

இதெல்லாம் புரியாமல் ” இவ்வளவு அநியாயம் அக்கிரமம் செய்கிறான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு கடவுள் சும்மா இருக்கிறான். இவனுக்கு கூலி கொடுக்க வேண்டாமா ? உம்…! கடவுளாவது, கத்தரிக்காயாவது….? ” என்று பேசுகிறார்கள்.

வில்லாற்றல் படைத்த இராமன் ஒரு கணத்தில் இராவணனை அழித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை ? அவன் அகங்காரத்தை வளர விட்டே அழித்தான்.

சூரபத்மனை முருகன் ஒரு கணத்தில் அழித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை ? அவன் அகங்காரத்தை வளர விட்டே அழித்தான்.

இதுவே நமக்குப் பாடம் !

குருவடி சரணம். திருவடி சரணம்.