ரூ13 லட்சம் நலத்திட்டங்களை ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வழங்கினார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் 13 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலத்திட்ட உபகரணங்களை வழங்கி இலவச திருமணங்கள் நடத்தி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் “விகாரி” தமிழ்ப்புத்தாண்டு விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலச, விளக்கு, வேள்வி பூசை, கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், பொது மக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் ஆன்மிககுரு பங்காருஅடிகளார் அவர்களிடம் ஆசி பெற்றனர்.

நேற்று 13ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு 
அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிடேகம் செய்யப்பட்டது. மாலை 4.45 மணிக்கு கருவறையின் முன்பாக கலச, விளக்கு, வேள்வி பூசையை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு செங்கல்பட்டு “விநாயகா நாட்டியாலயாவின்” நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு ” செஞ்சி ராகப்பிரியா” குழுவினரின் இன்னிசையும் நடைபெற்றன.

இன்று 14ஆம் தேதி விடியற்காலை 3 மணிக்கு 
மங்கல இசையுடன் சிறப்பு அபிடேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 09.00 மணிக்கு சித்தர்பீடத்திற்கு வருகை புரிந்த ஆன்மிககுரு அடிகளாருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக பக்தர்கள் பாதபூசை செய்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். காலை 9.20 மணிக்கு பிரசாத விநியோகத்தினை இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் துவங்கி வைத்தார். காலை 10.00 மணிக்கு அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்களின் முன்னிலையில் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் துவங்கின. இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கி விழாப் பேருரை ஆற்றினார். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கொண்டா ரெட்டியார் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் 424 பயனாளிகளுக்கு 13 லட்சம் மதிப்பில் கோதானமாக‌ ஒரு பசுவும், 35 நபருக்கு தையல் எந்திரங்கள், 33 நபருக்கு இரண்டு சக்கர மிதிவண்டிகள், 154 நபருக்கு ஆடைதானம், 3 மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர வாகனங்கள், 8 நபருக்கு காது கேட்கும் கருவிகள், 4 நபருக்கு விசை தெளிப்பான், 6 நபருக்கு கை தெளிப்பான், 1 நபருக்கு வெல்டிக் கருவி, 16 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, 16 நபருக்கு இட்லி கொப்பறை, 14 நபருக்கு சலவைப்பெட்டி, 1 நபருக்கு சிற்றுண்டி அங்காடி அமைத்திட பாத்திரங்கள், 100 நபருக்கு போர்வைகள், 10 ஜோடிகளுக்கு திருமணங்கள், 6 ஜோடிகளுக்கு மணிவிழா மற்றும் சதாபிஷேகம், ஒரு லட்சத்து எட்டாயிரம் மதிப்புள்ள சித்த மருத்துவ மருந்துகள் ஆகியவைகள் மேடையில் வழங்கப்பட்டன.

விழாவினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க காஞ்சிபுர மாவட்டத் தலைவர் கொண்டா ரெட்டியார் அவர்கள் பொறுப்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சக்திபீடமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.