மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி உண்டு. அந்த பௌர்ணமி பூரண நாட்க‌ளில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள். சித்தவனம் என அழைக்கப்படும் மேல்மருவத்தூரில் 21 சித்தர்களின் ஜீவ சமாதி இருப்பதால் அதிகளவில் உலாவி வருகிறார்கள்.

சித்தர்களின் தலைவியாக நம் அன்னை ஆதிபராசக்தி அருள்திரு அம்மா வடிவத்திலே அருள்பாலித்து மக்களை காத்து வருகிறாள். ஒரு முறை அன்னை தொண்டர் ஒருவரை அருள்வாக்கில் அழைத்து, “சித்திரைப் பௌர்ணமி பெருவிழாவில் சித்தர்கள் பலர் பல்வேறு உருவங்களுடன் வந்து செல்வார்கள். யாரிடமும் கோபப்படாதே மகனே” என்று கூறியதை சக தொண்டர்களிடம் கூறினார்.

மருவூரில் நடைபெறும் பௌர்ணமி வேள்விப் பூஜையில் சித்தர்கள் ஆவலோடு வந்து கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வேண்டுதல்களையெல்லாம் எப்படி தீர்க்கலாம் என சிந்திக்கிறார்கள். மனிதர்களாக நடமாடி அவர்களுடைய கவலைகளைத் தீர்க்கிறார்கள். அன்னதானத்தில் பங்குபெற்று உணவருந்தி மகிழ்கிறார்கள். இந்த மகேஸ்வர பூஜையில் பங்கு பெற்றும் அடியார்களை வாழ்த்தி மகிழ்கிறார்கள். அருவமாக, உருவமாக உலவும் சித்தர்களின் ஆசியால் வாழ்க்கையில் ந‌ம்மை வருத்தும் சாபங்கள் தீர்க்கப்படுகின்றன. சித்தர்கள் கடவுளைக் கண்டவர்கள். கடவுளாக இருப்பவர்கள். அவர்கள் உலாவும் மாதம் இந்த சித்திரை மாதம். அத்தனை சிறப்பானது இந்த சித்திரைப் பௌர்ணமி. சித்தர் மாதம் தான் சித்திரை மாதம் என்பதும் உண்டு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரைப் பௌர்ணமி பெருவிழாவில் அருட்பெருந்தெய்வமான நம் அம்மா அவர்கள் அருள்வாக்கில் சொல்லும் சக்கரங்களை வரைந்து, அதற்கு ஏற்றார் போல யாக குண்டங்களை அமைக்க அம்மா அருள்வாக்கில் உத்தரவிடுகிறாள். நாக யாககுண்டம், சதுர யாக குண்டம், திரிசூல யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. பல்வேறு பிரச்சனைகளுடன் வரும் ஆன்மாக்களை அவர்களுக்கு தகுந்தார் போல யாக குண்டங்களை சொல்லி வேள்வியில் பங்கு பெற்று அதற்கான கரும விணைகளை குறைக்க செய்கிறாள். பல்வேறு துன்பங்களில் இருந்து காப்பாற்றுகிறாள்.

அம்மாவின் அவதார காலத்தில் வாழ்கிறோம். அவள் அருள் உரைகளை பின்பற்றி வாழ்ந்தால் கூட சில நேரங்களில் விதியின் வழியே நாம் நடக்கிறோம். அதற்கு காரணம், நம்முடைய ஆராய்ச்சி தான். அருள் மண்டபத்திலோ, புற்று மண்டபத்திலோ அம்மா சொல்லியும் சிலர் ஆராய்ச்சி செய்வது அவரவரின் கரும விணையின் வலிமையே ஆகும். ஒவ்வொரு முறையும் அம்மா சொன்னால் மட்டுமே வேள்வி செய்வேன் என்பவர்களும் உண்டு. அம்மா, ஒரு முறை சொன்னாலே போதும் என்ற பக்தர்களும் இருக்கிறார்கள். அம்மாவின் அவதார காலத்தில், அவள் கண் முன்னே நடைபெறும் இது போன்ற வேள்வியில் பங்குபெற்ற பின்னர் அதன் பலனை அனுபவிக்கின்றனர்.

உலகம் நலம்பெறவும், நம் தலைமுறைகள் நலமுடன் வாழவும் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வேள்வியில் கலந்து கொண்டு அன்னையின் பேரருளை பெறுவோம்.