கோவை நகரில் வசித்து வந்த ஒற்றுமையான, அன்பான குடும்பம் அது கணவன் – மனைவிக்குள் எந்த பூசலும் இல்லை…இருப்பினும் கணவர்க்கெ ஏதோ வெறுப்பு! என்னவோ மன உளைச்சல்! ஒரு காரணமும் இன்றி குடும்பத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டார். அந்தப் பெண்மணி கணவரைப் பிரிந்து குழந்தைகளை வைத்துக் கொண்டு தத்தளித்தார்.என்ன சண்டை? என்ன தகராறு? என்று கேட்டவர்க்கு என்னக் காரணம் சொல்வது என்று புரியாமல் தவித்து அழுதார்.

கோவை ஹட்கோ காலனி மன்றத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தார் அந்தப் பெண்மணிக்கு வேண்டியவர்கள். அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் கூறினார். மன்றத்தில் நடைபெறும் கூட்டுவழிபாட்டில் கலந்து கொண்டு அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி வழி சொன்னார்.

அந்தப் பெண்மணியிடம் கொடுத்து வழிபடுவதற்கு அம்மாவின் படம் எதிர் அப்போது கைவசமில்லாத்தால் ஒரு சக்திஒளி பத்திரிக்கையைக் கொடுத்து , இந்தப்படத்தை மட்டும் உங்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்து வழிபாடு செய்து வாருங்கள் என்று கூறினார். அருள்திரு அடிகளார் அவர்கள் மட்டுமே கொண்ட சக்திஒளி பத்திரிக்கை அது!

அந்தப் பெண்மணி வீட்டில் அருள்திரு அடிகளார் அவர்கள் படத்தை வைத்து வழிபட்டதோடு மன்ற வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

அந்தப் பெண்மணியின் வழிபாட்டிற்கும், பிரார்த்தனைக்கும் செவி சாய்த்தாள் அன்னை.

குடும்பத்தை விட்டு வெளியேறிய அன்பரின் கதை என்ன ஆயிற்று தெரியுமா? கோவையை விட்டு கிளம்பிய அந்த அன்பர் வடக்கே எங்கெங்கோ திரிந்து காசியை அடைந்தார். காசியில் தமிழ் பேசுகிற சிலர் தங்கியிருந்த மடத்திலே போய் இவர் தங்கினார்.

ஒருநாள் இரவு…உறக்கத்தில் ஒரு கனவு! அருள்திரு அடிகளார் அவர்கள், அவர் கனவில் தோன்றி மரியாதையாய் ஊர் போய் சேர்! வீட்டிற்குப் போ! என்று சாட்டையால் ஓங்கி ஓங்கி அடிப்பது போலக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து கொண்டார். அருள்திரு அடிகளார் அவர்கள் யார் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. விழித்தெழுந்த பிறகும் அவர் உடம்பு சாட்டையால் அடிபட்டதுபோலவே வலி வலித்தது. உடம்பில் தழும்புகளும் தென்பட்டனவாம். கண்டது என்னவோ கனவுதான்! கனவில் நடந்த நிகழ்ச்சியால் வலியும், தழும்புகளும் எப்படி உடம்பில் வரும் என்று குழம்பினார்.

இந்த மடத்தில் தங்கினால்தானே இப்படிப்பட்ட தீய கனவு வந்து தொலைக்கிறது! வேறு மடத்திற்குப் போவோம் என்று வேறொரு மடத்தில் போய்த் தங்கியிருந்தார்.

அன்றும் அதே அருள்திரு அடிகளார் அவர்கள்! அதே கனவு! சாட்டையடி கொடுத்து வீட்டிற்குப் போய்ச்சேர்! என்ற எச்சரிக்கை.

அலறியடித்து விழித்த அன்பர்க்கு முதல்நாள் போலவே உடம்பில் வலி! தழும்புகள் தென்பட்டன.

இனி இங்கே நீடித்துத் தங்குவது உசிதமல்ல என்று தீர்மானித்துக் கொண்ட அன்பர், உடனே காசியில் இருந்து கோவைக்குப் புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்ததும் தாங்கொணாத மகிழ்ச்சி அந்தப் பெண்மணிக்கு! பிள்ளைகளுக்கு குதூகலம்!

ஏன்னய்யா இப்படி பண்ணிவிட்டீர்? அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?என அவர் நண்பர் கேட்டார்.

என்னவோ தெரியவில்லை…
இருந்தாற் போலிருந்து எனக்கு உலக வாழ்க்கை, குடும்பம் எல்லாவற்றிலும் வெறுப்பு, சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஏதோ ஒன்று ஓடு! வீட்டைவிட்டு ஓடு! என எச்சரித்தபடியே இருந்தது. எனக்கு யார்மீதும் கோபமில்லை.
மனைவியோடும் சண்டையில்லை. ஏன் இப்படி வெறுப்பும், சலிப்பும் வந்தது என்று புரியவில்லை. ஆனால் ஒன்று! ஏதோ ஒன்று என்னை உள்ளிருந்து வீட்டைவிட்டு வெளியேறி ஓடு! என்று அடிக்கடி தூண்டியது. அது எது? எப்படி என்று சொல்லத் தெரியவில்லை. விளக்கவும் முடியவில்லை எனக் கூறி தான் திரும்பி வந்த கதையைக் கூறினார்.

காசியில் தங்கியிருந்தபோது இந்த ஆள்தான் என் கனவில் சாட்டையால் அடிஅடியென்று அடித்து இங்கே கொண்டு வந்து சேர்த்தவர் . எனக்கு இவர் யார் எவர் என்பதெல்லாம் தெரியாது என்றார்.

அந்த நண்பர் இந்த ஆள் என்று தயவுசெய்து சொல்லாதே ஐயா! இவர்தான் மேல்மருவத்தூர் அருள்திரு அடிகளார் அவர்கள்.

உங்கள் மனைவி நம்பிக்கையோடு வழிபட்டு பிரார்த்தனை செய்ததால்தான் அடிகளார் அவர்கள் உங்களை வீட்டில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்…
என்றார்.

சக்திஒளி
மார்ச் 90