1996 ஆம் ஆண்டு நடந்த
சம்பவம் இது. நான் அம்மாவின் பக்தை. 1996 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை பல்லாவரத்தில் குடியேறினோம். அதற்கு முன்பு மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது வருடம் தவறாமல் சக்தி மாலை இருமுடி செலுத்தி வந்தேன். பல்லாவரத்தில் வந்து குடியேறிய பிறகு இருமுடி செலுத்த வேண்டிய நேரம் வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் இருமுடி செலுத்திவிட வேண்டும் என்று கூறினார்கள். ஏதேனும் வழிபாட்டு மன்றத்தின் மூலமாக வரவேண்டும். இங்கே மன்றம் இருக்குமிடம் தெரியவில்லையே எனத் தவித்தேன். மனம் பரபரத்தபடி இருந்தது. இந்த சுற்று வட்டாரத்தில் அம்மாவின் வழிபாட்டு மன்றம் இருக்குமிடம் தெரியவில்லையே……….. நமக்கோ இது புதிய இடம்! யாரைக் கேட்பது? எப்படித் தெரிந்து கொள்வது….. இன்னும் கொஞ்ச நாட்கள்தானே இருக்கிறது? தொடா்ச்சியாகச் செலுத்தி வந்த இருமுடி….. இந்த வருடம் விடுபட்டுப் போய்விடுமோ என்ற கவலை அதிகரித்துத் தின்றபடி இருந்தது.

அம்மா! தாயே…… இந்த வருடம் விட்டுப் போகாதபடி இருமுடி செலுத்த நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அன்று முழுவதும் சாப்பிடாமல் அழுதபடி உறங்கிவிட்டேன்.

நள்ளிரவு நேரம் 12.05 மணி இருக்கும். பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தேன். என் மகன் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் தரையில் படுத்துக் கிடந்தேன்.

ஏதோ பேச்சுக் குரல் கேட்பதுபோல இருந்தது. கட்டிலிலிருந்து என் பையன் கீழே விழுந்து விட்டானோ என்று திரும்பிப் பார்த்தேன். அவனோ அயா்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.

இந்த நள்ளிரவு நேரத்தில் எங்கிருந்து பேச்சுக் குரல் வருகிறது…..? யார் நம்மிடம் பேசியது? என்று யோசித்தவாறு படுத்துக் கிடந்தேன். தூக்கம் வராமல் புரண்டபடி இருந்தேன்.
அப்போது……….

சுவா் முழுவதும் சிவப்பு விளக்கு எரிவதுபோல ஒரே ஒளி வண்ணம். சிவப்பு விளக்கு எரிவதுபோல் சிவப்பு ஒளி!

அந்த வெளிச்சத்தில் அறை முழுதும் ஒரே ஒளி மயம். சுவரைப் பார்க்கிறேன். அங்கே….. ஒரு அற்புதக் காட்சி….. அந்தச் சுவா் வெளிச்சத்தில்…… சிவப்பு ஒளி வெள்ளத்தின் நடுவே அன்னையின் உருவம்! அதுவும் எப்படி……..?

கருவறை அன்னை தெரிகிறாள். சிவப்பு நிறப் பட்டுப் புடவை! புடவையின் கரை நீல நிறம்! கையில் சூலம்! நிறைய நகைகள் போட்டுக் கொண்டு ஜொலிக்கிறாள். அப்படி ஓா் ஜொலிப்பு!

அது கண்டு எனக்கு ஆனந்தப் பரவசம் ஏற்பட வேண்டும் அல்லவா…….? அதற்கு மாறாக பயம்தான் ஏற்பட்டது. உடம்பெல்லாம் நடுக்கம்! என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரையும் எழுப்பிக் கூப்பிடவும் முடியவில்லை. வாய் அடைத்துக் கொண்டது. என் அனைத்து நாடி நரம்புகளும் ஒடுங்கி விட்டன.

அப்படியே…………….. அந்தக் காட்சி ஐந்து நிமிடம் கிடைத்தது.

அதன்பின் அம்மா என் மகன் தலைமாட்டுக்கு அருகே அப்படியே இறங்கினாள். மறைந்து கரைந்து போனாள்.

அவன் மேற்குத் திசைப்பக்கம் தலை வைத்துப் படுத்திருந்தான்.

எப்படியாவது அம்மாவுக்கு இருமுடி செலுத்திவிட வேண்டுமே என்று மனம் பரபரத்தது. இருப்புக் கொள்ளவில்லை.

மன்றம் பற்றி விசாரித்துக் கேட்டறிய வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.

செவ்வாடை உடுத்திய ஒரு பாட்டியிடம் விசாரித்தேன்.

குரோம்பேட்டையில் ஆதிபராசக்தி மன்றம் இருப்தாகச் சொன்னார். குரோம்பேட்டைக்கே சென்றேன். அங்கே ஒரு செவ்வாடை சக்தி கிடைத்தார். என் வீட்டின் பின்புறம் ஒரு மன்றம் இருக்கிறது. மேற்குத் திசையில் ஒரு மன்றம்
இருக்கிறது என்றார். எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள மன்றம் கிழக்குத் திசையில் இருக்கிறது என்றார்.

கொஞ்சம் என் கூட வந்து காட்டுங்களேன் என்று கெஞ்சினேன். அவா் தன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மன்றத்துக்கு அழைத்துச் செல்லாமல், மேற்குத் திசையில் இருந்த மன்றத்துக்கே அழைத்துச் சென்று விட்டார்.

அதன் காரணம் அங்கே தான் புரிந்தது. அங்கே தொண்டு செய்ய ஆட்கள் இல்லை.

விடுவிடென்று மன்றத்துக்குச் சென்று, பொறுப்பாளா்களை விசாரித்தேன். அங்குச் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்தேன்.

தொடா்ச்சி அறுபடாமல் அந்த ஆண்டு இருமுடி செலுத்திய பிறகுதான் எனக்கு நிம்மதி கிடைத்தது.

அன்று சிவப்பு ஒளி வெளிச்சத்தில் அந்தச் சுவரில் காட்சி கொடுத்த அம்மாவின் உருவம்……….. இப்போது நினைத்தாலும் கண் முன் நிற்கிறது. என் போன்ற எளிய பெண்களுக்கும் காட்சி கொடுத்த அவள் கருணையே, கருணை!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. ஆர். கௌரி ராஜகோபால், மந்தவெளி, சென்னை – 28

மருவூர் மகானின் 68வது அவதாரத் திருநாள் மலர்.