அடிகளார் நடத்தும் கும்பாபிடேகம்

மகனே! அடிகளாரின் கைகளினால் நடத்தப்படும் கும்பாபிடேகத்திற்குச் சிறப்புண்டு

கோயில்கள் சிறப்படையும், விக்கிரங்களுக்கு ஆற்றல் ஏற்படும். திருஷ்டிகள் ஏற்படாது.

தீய சக்திகளினால், மந்திரங்கள் சரிவரச் சொல்லிப் பூசை செய்யப்படாததினால் சில நேரங்களில் கோயில் விக்கிரகத்தின் சக்தி குறைந்து விடும்.

அடிகளார் பார்வை பட்டதும், அவனது பாதம் பட்டதும், அது மீண்டும் பழைய நிலை அடையும்.

கோயில் வருமானம் பெருகும். பக்தி வளரும். நாடு செழிக்கும் .

இன்று இந்த சக்தி அடிகளார் தவிர யாரிடம் இல்லை மகனே! தெரிந்து கொள்!

அடிகளார் பாதம் பட்டு, அவனது பார்வைபட்டு எத்தனையோ திருக்கோயில்களில் நன்மை அடைந்திருக்கின்றன. சொல்வதைப் பின்பற்று!

‘சைக்கிள் டியூபில் அளவிற்கு அதிகமாகக் காற்றடித்தால் வெடித்து விடும். சைக்கிள் டியூபிற்கு லாரி டியூபிற்குரிய காற்றா அடைக்க முடியும்? போடா போ! டியூப் வெடித்துவிடும். போய் வேலையைப் பாரு! எனக்கு எல்லாம் தெரியும்’ என்றாள் அன்னை.

வர்ம ரசியங்கள்

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர வேண்டியுள்ளது.மேலே சொல்லப்பட்டதெல்லாம் சித்தர்களின் மறைப்பொருளாகக் கட்டுக் காக்கப்பட்டு வந்தவையாகும்.

இவ்வளவு ரகசியங்களை அருளியதனால் சித்தர்களின் தலைவர் யார் என்பது நமக்கு நன்கு விளங்கும்.

பார்வை வர்மம், தொடு வர்மம், சுண்டு வர்மம், மந்திர வர்மம் என்ற கருத்துகள் எல்லாவற்றுக்கும் அடிகளாரிடம் தான் விளக்கமடைய வேண்டியுள்ளது.

சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வர்ம சாஸ்திரம் இன்று தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளத்திலும் நிலவி வருகிறது.

அகத்திய முனிவர் தான் வர்ம சாஸ்திரத்தை உலகிற்குத் தந்தார் என்று வரலாறு கூறுகிறது. அவருக்குப் பார்வதி தேவி உபதேசித்தாள் என்பது வரலாறு.

அகத்திய முனிவர், மனித உடம்பில் 108 வர்மங்களும், 51 படு வர்மங்களும் உண்டென்று சொன்னார்.

அகத்தியர், போகர், தேரையர், மச்சமுனி ஆகியோர் 108 வர்மங்களையும் 12 படுவர்மங்களையும் 96 தொடுவர்மங்களையும் பகுத்திருக்கின்றனர்.

இந்த வர்மங்கள் ரகசியமாகக் காக்கப்பட்டு வருகின்றன.

கழுத்திற்கு மேல் 37 இடங்களிலும் கழுத்தின் கீழ் மூலாதாரம் வரை 34 இடங்களிலும் முதுகில் 16 இடங்களிலும், காலில் 11 இடங்களிலும், கையில் 10 இடங்களிலும் வர்மங்கள் உண்டு.

108 மந்திரங்கள் சொல்லும் பொழுது 108 வர்மங்களும் சக்தி பெறுகின்றன. வர்மம் என்பது உடம்பின் இரகசியமான சக்தி நிலையம்.

இது முழுக்க முழுக்க திராவிடர்களினால் அருளப்பட்ட கொடையாகும். இந்த வர்மங்கள் சித்தர்களினால் ரகசியங்களாகக் காக்கப்பட்டு வருகின்றன.வர்ம சாஸ்திரத்தைச் சரியான முறையில் கையாளாவிட்டால் உண்டாகின்ற கெடுதலைப் பற்றி அகஸ்தியர் தெளிவாகக் கூறியிருக்கிறாள்.

தேரையர் கூறுவன

சரியான முறையில் வர்மத்தைக் கற்காத ஒருவன், வர்ம திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவனைக் குணப்படுத்த முயலும் போது , நோயாளியான அவன் ஒரு வர்மத்திற்குப் பதில் பல வர்மங்களை ஏற்று , மூர்ச்சை அடைந்து, சரியாகக் கற்றறியா குரு பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் விட்டுவிடுவான்.

மிகக் கவனமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சூத்திரங்களைக் கற்றுத் தெளியாத மூடருடன் சேர்ந்து, சரியான குரு இல்லாமல் கற்றுத் தவறான வழியில் சென்று சாஸ்திரமே பொய் என்ற நிலைக்கு வந்து விடுவான் .

– என்று சித்தர் தேரையர் எச்சரிக்கை செய்கிறார்.

மூப்பூ

சித்தர்களின் வழக்கில் மிக முக்கியமாக இருக்கும் ‘முப்பூ ‘ என்பதாகும்.

பல ஆண்டுகள் முயற்சித்தும் இதனை என்னவென்று யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதைத் தேடி அலைந்தவர்கள் கோடி!

வேறு பெயர்கள்

இதற்குச் சிங்கம், பேரண்டம், வெள்ளைச் சாரை, தாங்கை, சிறு நாகம், பட்டிராகன், காலன், அண்டம், ஆதியுப்பு, சக்தியுப்பு, வாலையுப்பு, அண்ட கேசரி, கொடுமுடி, பொது குரு பீடம், குருக்கள், ஜோதி, தீபம், அமிர்த ரச வாக்கியம், பூரண வழலை, மும்மூர்த்தி, காமப்பால், ரவி, மதி, அக்கினி, முப்பொருள், மூலாதாரம், என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

மூப்பு தெரிந்தவனே குரு ஆவான்.

அம்மா சொல்லியவை

ஒரு நாள் அம்மா கூறினார்கள். “மகனே! அங்கப்பிரதட்சணமும், தியானமும் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா….?

மகனே! யாரும் அறியா முப்பூ ரகசியம் அதில் உண்டுடா!

மகனே! அங்கப்பிரதட்சணம் செய்யும் மண்ணிலும் முப்பூ உண்டு. தியானம் செய்கின்றாயே…. தலையிலும் முப்பூ உண்டு! தேடு! குரு மருந்தை அறிய குருவை நாடு.

காலம் வரும் போது உலகத்திற்குக் கிடைக்குமடா!

நாளைய உலகம் அருள் உலகமடா! எல்லோரும் சித்தனடா! நீ வந்த வேலையைப் பாரடா! மற்றதெல்லம் என் சொந்த வேலையடா!

அடிகளாருக்கு முப்பூவும் தெரியும். மற்றவர்களின் தப்பும் தெரியும். பரகாயப் பிரவேசம் செய்யும் பாலகனிடம் முப்பூ ரகசியம் உண்டு.

முப்பூ ஒரு விளக்கம்

சித்தர்களின் பாடல்களில் காய கல்ப மருந்தாகக் கருதப் படுவது முப்பூ!

மரணமிலாப் பெருவாழ்வில் மக்கள் வாழ சித்தர்களால் அருளப்பட்டது முப்பூ!

இது என்னவென்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.

இதனை பாதரசத்தைச் சூடாக்கி அதில் போட்டால் தங்கமாகிவிடும். இதற்கு ரசவாதம் என்று பெயர்.

சித்தர்கள் தங்கம் செய்வதற்காக மட்டும் இதனைப் பயன்படுத்தவில்லை.

முப்பூ சாதனை செய்கிறவன் இளமையோடு இருப்பான். பிறவி நோய்கள் வாட்டாது.

இது பற்றிய பல்வேறு கருத்துகள் உண்டு.

முப்பூ தரையில் விளைகிறது என்று தேடி அலைகின்றவர்கள் பல கோடி! இதற்குச் சித்தர்களின் பாடல்களில் சான்று உண்டு.

முப்பூ மனித உடம்பில் இருக்கிறது. அதை முறையறிந்து தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து வேறு சிலரிடம் உண்டு.

இது அறியாமல் சிறுநீரைக் காய்ச்சி முப்பூ எனச் சொன்னவர்கள் பலர்.

அமுரி சாதனை என்று சிறுநீரைக் குடித்து முப்பூ சாதனை செய்கின்றவர்கள் பலர் ஆவர்.

இன்னொரு சாரார் சித்தர் பாடல்களின் பொருள் அறியாமல் ஒரு சித்தர் பாடலில், நவம் என்றால் ஒன்பது எனப் பொருள் கொண்டு ஒன்பது மாத மனிதப் பிண்டத்தில் தான் முப்பூ இருக்கும் எனத் தேடினர்.

ஜங்கோலம் என்ற பரிபாசை வார்த்தைக்குப் பொருள் தெரியாமல், ஜந்து மாத மனிதப் பிண்டத்தில் தான் முப்பூ உள்ளதாக நம்பினவர்கள் சிலர்.

சிலர் வேறு கருத்தைக் கொண்டிருந்தனர். மனிதன் தியானம் செய்யும் போது தலை உச்சியில் நாக்கிற்கு மேல் அமுதம் கசிகின்றது.இதற்கு அருள் அமுது, மதியமுது கரவாப்பால், காயாப்பால், அமிர்தம் , மாங்காய்ப்பால், சந்திர அமுது என்றெல்லாம் பெயர் கூறி, இந்த முறைக்கு உச்சியிலே பிச்சை எடுத்தல் என்றனர். அந்த அமுதம் தான் முப்பூ என்றார் சிலர்.

சிலர் மூலிகைகளில் முப்பூ உண்டு என நம்பினர். திருமூலருக்கு காட்டிலே முப்பூ கிடைத்தது. எப்படி?

வயோதிபன் ஒருவன் காட்டில் அடுப்பு எரித்துக் கஞ்சி காய்ச்சினான். கீழே கிடந்த குச்சி ஒன்றினால், கஞ்சியைக் கலக்கினான். கஞ்சி கறுப்பாகியது. அந்தக் கஞ்சியை உண்டான். இளமை கொண்டான். உடம்பு இளமையாக மாறியது. திருமூலர் அவனிடம் கெஞ்சிக் கொங்சம் கஞ்சியை வாங்கி உண்டு இளமையைப் பெற்றார் என்பது வரலாறு.

கலக்கிய குச்சி முப்பூ குச்சி! கருத்து யாதெனில் தழைகளாகிய மூலிகைகளிலும் முப்பூ உண்டு என்பது ஆகும்.

காய கல்பம், காய சித்தி, மரணமிலாப் பெருவாழ்வு, சாகாக்கலை என்பதற்கெல்லாம் மூலம் முப்பூ தான்!

இதனை நம் அம்மா எப்படி அழகுபடச் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.

மண்ணிலும் உண்டு…!

உடம்பிலும் உண்டு…..!

தலையிலும் உண்டு…!

தழையிலும் உண்டு…!

தேடு ! குரு மருந்தை அறிய குருவை நாடு ! முப்பூவிற்குக் குருமருந்து என்ற பெயரும் உண்டு.

அருள்திரு அடிகளார் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருந்ததைப் பலர் பார்த்துள்ளனர். சித்தர் பீடத்திலும் இருப்பார். ஏழையின் கண்ணீர் துடைக்கக் காவலுக்காக அவனது குடிசையின் திண்ணையிலும் வீற்றிருப்பார்.

முப்பூ ரகசியம் தெரிந்தவர்களினால் இவ்வாறு செய்ய முடியும் என்பது சித்தர்களின் கருத்து.

கோபி செட்டிப்பாளையம் ஆன்மிக மாநாட்டில் நடந்தது

“மகனே! கோபிசெட்டிப்பாளையம் ஆன்மிக மாநாட்டில் என்னடா பார்த்தாய் ?” என்று ஒரு நாள் கேட்டாள்.

வெற்று ஆகாசத்தைத் தொட்டவுடன் அடிகளார் கையிலிருந்து ஒன்பது தங்கக் காசுகள் விழுந்ததைப் பார்த்தாயா?

பாலகனுக்கு மண்ணும் வேண்டாம்! உடம்பும் வேண்டாம், தலையும் வேண்டாம், தழையும் வேண்டாம்! முப்பூவுக்கு மேலே அப்பூவைக் கடந்த நிலை பாலகன் நிலை!

மகனே! குருவி பனங்காயைச் சுமக்க முடியுமா? உன்னால் முடியாது. பக்குவம் வரட்டும், பார்க்கலாம்.

சித்தர்களுடைய கருத்துகளுக்கு அடிகளார் அவர்களிடம் தான் விளக்கம் பெற முடியும். ஏனென்றால் சித்தர்களின் தலைவியான அம்மா அவர்கள் அடிகளாரை உலகிற்கு அருளியிருக்கிறாள்.சித்தர்களின் வாக்குக்கு அடிகளாரிடம் தான் தெளிவு பெற வேண்டியிருக்கிறது.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி அக்டோபர் 2008

பக்கம் 22- 27.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here