மேல்மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவங்கள்

பாகம் – 4

4. வருமுன் காத்த படலம்

அனுபவித்தே தீரவேண்டிய வினையைப் ‘‘பிராரத்துவ வினை” என்று சொல்கின்றார்கள். தெய்வத்தை வழிபடுவதால் இந்த வினை தணியும் என்றும் சொல்கின்றார்கள். இப்படி அனுபவித்துக் கழிக்க வேண்டிய துன்பங்களிலிருந்து அம்மா சிலரைக் காப்பாற்றி இருக்கின்றாள் ‘‘உனக்கு மூன்று மாதம் பொறுத்து கார்ப் பயணத்தில் விபத்து ஏற்படப் போகிறது” என்று அம்மா வெளிப்படையாகச் சொல்வதில்லை. குறிப்பாகத்தான் உணர்த்துகின்றாள். கருணை உள்ள தாய் ஏன் முதலிலேயே எச்சரிக்கை கொடுத்துக் காப்பாற்றக் கூடாது? என்று அவன் மனம் நினைத்தது உண்டு. அவரவர் செயல்களுக்குரிய இன்ப துன்பங்களை அவரவர்கள்தான் அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பது அவளே ஏற்படுத்தி வைத்த சட்டம். தன்னை நம்பிச் சரணமடைந்தவர்களை அவர்கள் எடுத்த பிறவிகளை எல்லாம் கணக்கில் வைத்துப்பார்த்து யார் யாருக்கு எந்தெந்த அளவில் சட்டத்தைத் தளர்த்தலாம் என்று பார்த்துத்தான் விதிவிலக்காகச் சிலருக்கு விதியை மாற்றி அமைக்கின்றாள்.

ஆலயத்தில் ஓடியாடித் தொண்டு செய்யும் அன்பர் ஒருவரிடம், ‘‘மகனே! நீ இத்தனை நாட்கள் ஆலயத்திலேயே இரு! எங்கும் செல்ல வேண்டாம். விழா வருகின்றது அதற்கான வேலைகளைக் கவனி” என்று ஆணையிட்டிருந்தான். அந்தத் தொண்டரே ஆலயப் பணிகளைச் செய்வதற்காகவே அம்மா இப்படி ஆணை இட்டிருக்கின்றாள் என்று கருதிக் கொண்டார். அவருடைய உறவினர்கள் கார் ஒன்று வாங்கிக் கொண்டு மருவத்தூருக்கு ஓட்டிக் கொண்டு வந்தனர். ‘‘நீங்களும் வாருங்களேன்; பக்கத்து ஊர் வரை போய்த் திரும்பிவிடலாம்” என்று அழைத்தனர். அன்று அடிகளார் எங்கோ போக வேண்டியிருந்தது. எனவே அந்தத் தொண்டரை அழைத்து, ‘‘நான் திரும்பி வரும் வரை கோயிலில் இருங்கள், போய்விட்டு வந்து விடுகின்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதனையும் மீறி உறவினர்களோடு காரில் ஏறிச் சென்று விட்டார். சில கிலோ மீட்டர் சென்றபோது எதிரே மாடு ஒன்று குறுக்கே வந்ததால் வண்டியைத் திருப்ப நேர்ந்தது. வண்டி சென்ற வேகத்தால் திருப்ப நேர்ந்த போது வண்டி கவிழ்ந்து விட்டது. அந்தத் தொண்டரின் கைவிரல்கள் இரண்டு துண்டாகி விட்டன் பின்னர் மருத்துவ மனையில் சேர்த்தனர்; அந்தத் தொண்டரின் சகோதரரும் அன்னையிடம் ஈடுபாடு கொண்டவர். அவரும் ஆலயத்தில் தொண்டு புரிபவர். அவர், அன்னையிடம் வந்து அழாக்குறையாக, ‘‘என்ன தாயே” நானெல்லாம் உன் கோயிலுக்குத் தொண்டு செய்த என் தம்பியை இப்படி ஆக்கிவிட்டாயே!” என்று முறையிட்டார். அம்மா சொன்னாள். ‘‘மகனே! ஆலயத்தை விட்டு எங்கும் செல்லாதே என்று சொல்லியிருந்தேன். உன் சகோதரன் கேட்கவில்லை. அதுதான் போகட்டும். பாலகன் மூலமாகவும் எச்சரித்தேன். எதையும் கேட்காமல் சென்று விட்டான் மகனே! அவன் போகவில்லை என்றால் வாகனத்தில் சென்ற அத்தனைபேரும் மரணம் அடைந்திருப்பார்கள். உன் சகோதரன் என் தொண்டன் ஆதலால் அவனுக்காக மற்றவர்களை காப்பாற்றினேன். அவனுக்குச் சிறு ஊனம்தான் ஏற்பட்டது, என்றாலும் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி இருக்கிறேன் மகனே!” என்று சொல்லி முடித்தாள். தேவரகசியம்! சொல்லக்கூடாது

ஆலயத்தில் தொண்டு புரிந்த இன்னொரு தொண்டருக்கு, அம்மா, ‘‘மகனே நீ இத்தனை நாள் ஆலயத்துக்கு வந்து அடிக்கடி என் மண்ணை மிதித்துவிட்டுச்செல்” என்று ஆணையிட்டிருக்கின்றாள். அடிக்கடி மதுராந்தகம் வருவார்; ஐந்து கல் தொலைவில் மருவத்தூர் இருந்தாலும் ஆலயம் வந்து ஊர் திரும்புவதற்குச் சோம்பல்; ஆகவே, அம்மா சொன்ன ஆணையை அவர் ஏனோ தானோ என்று மதிக்காமல் இருந்துவிட்டார். இதற்கு இடையில், அந்தத் தொண்டருக்குச் சோதனைக் காலம் வந்து சேர்ந்து விட்டது; அந்தத் தொண்டர் ஏராளமான நில புலம் வைத்திருப்பவர். அவருக்கும் அவர் ஊரில் இருந்த இன்னொருவருக்கும் நிலத்தகராறு உண்டு. இவருக்கும் பண்ணையாட்கள் மிகுதி; இவர் பகைவருக்கும் பண்ணையாட்கள் மிகுதி; ஒருநாள், இவருடைய ஆட்களுக்கும் இவருடைய எதிரியின் ஆட்களுக்கும் நில சம்பந்தமான தகராறு ஏற்பட்டு விட்டது. அந்தத் தகராறு அடிதடியில் முடிந்தது.

அதனால் போலீஸ் – வழக்கு – கோர்ட் என்று நாயாய் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது. சோர்ந்து போன மனநிலையில் தொண்டர் அம்மாவிடம் வந்தார். பொது அருள்வாக்குச் சொல்லிவிட்டு அம்மா முடித்துக் கொள்ளும் நேரத்தில் சுயம்புவின் அருகே பின்னால் வந்து ‘‘அம்மா” என்று நா தழுதழுக்க அழைத்தார். அம்மா, அவரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினாள் ‘‘மகனே! சில தேவரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது என்று கருதி இத்தனை நாளைக்கு ஆலயம் வந்து என் மண்ணை மிதித்துவிட்டுப் போ! என்று சொன்னேன். தாயின் சந்நிதிக்கு வருவதற்குக் கூட உன்னால் முடியவில்லை. அதுவே உனக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எங்கே எங்கே அலைகிறாய் மகனே! வழக்கு மன்றம் போலீஸ் நிலையம் என்றெல்லாம் அலைய வேண்டி வந்து விட்டது பார்த்தாயா மகனே! இருந்தாலும் உன் சிக்கல்களைத் தீர்க்கின்றேன்; உத்தரவு என்று முடித்தாள். இவற்றைச் சொல்லும் போது நாத்திகனும் அருகில் நின்றுகொண்டு இருந்தான். இந்த வார்த்தைகளில் அவனுடைய மனத்தில் எழுந்த புதிர் ஒன்று இருந்தது; அம்மா, தேவ ரகசியம் என்கின்றாளே அது என்ன தேவரகசியம்; அம்மாவே வெளியிடக் கூடாத தேவரகசியங்கள் இருக்கின்றனவா? என்று அவன் குழம்பினான். வள்ளலார் தம் நூல்களில் சில கருத்துக்களைக் குறிப்பிடும் போது, இனிமேலும் இதனை விளக்கக் கூடாது அது இரகசியம் என்று குறிப்பிடுகின்றார். மனிதர்கள் அறிவுக்கு எட்டாத தேவரகசியங்கள் பல உள்ளன என்பதை, திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றைப் படித்தபோது அவன் அறிந்துகொண்டான்.

ஒருமுறை அம்மாவைப் பார்த்து ‘‘தாயே! புராணங்களில் நம்பமுடியாத கதைகள் இருக்கின்றனவே அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதானே நாத்திகக் கருத்துக்களைப் பரப்புகின்றார்கள். புராணங்கள் எல்லாம் மெய்தானே?” என்று பயந்து பயந்து கேட்டான். அம்மா ‘‘மகனே எத்தனையோ தேவ ரகசியங்கள் உண்டு, அவற்றையெல்லாம் வெளியிடக்கூடாது” என்று சொன்னாளே தவிர உண்மை என்றோ பொய் என்றோ சொல்லாமல் விட்டு விட்டாள். அம்மாவை வழிபடுவதாலும் நம்புவதாலும் எப்படியெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்பதை அனுபவத்தில் பார்த்துத் தெரிந்து கொண்ட பிறகு புராணங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு நமக்கு ஆகப் போவது என்ன? நம் போன்ற சிற்றறிவு கொண்ட மனிதர்கட்குப் புரியாத விஷயங்கள் உலகத்தில் பலப்பல இருக்கின்றன என்று மட்டும் உணர்ந்து கொண்டான்.

அவனுக்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது. இலைகளை எண்ணுவது வாழ்க்கையின் குறிக்கோள் அன்று! கனியை உண்பதுதான் குறிக்கோள்” பரம்பொருளை ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்தவர்களும் அனுபூதிமான்களும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பொருள் அது என்றுதான் சொல்லிவிட்டுப் போனார்கள்.

‘‘கூர்த்தஅறிவெல்லாம் கொள்ளை கொடுத்து உன் முகத்தைப் பார்க்க நினைத்தேன் என்னை முகம் பாராய் பராபரமே” என்று தாயுமானவர் பாடினார்.

‘‘கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று மாணிக்க வாசகர் பாடினார்.

ஆகவே, கடவுளைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்யும் அளவுக்கு நம் அறிவு பழுக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். ஆனாலும், எதிலும் உண்மைகண்டு நம்ப வேண்டும்; காரண, காரியம் தெரிந்து ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது நினைப்பான். பழைய நாத்திக வாசனை அவனை விட்டு அகன்றபாடில்லை. அம்மாவிடம் நெருங்குவதற்கு அதுதான் தடையாக இருக்கின்றது என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டான்.

கடவுள், சமயம், மெய்ப்பொருள், தத்துவம் இவை பற்றிய உண்மைகளை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அவ்வப்போது எழுந்ததுண்டு. ஆதி சங்கரரின் அத்வைதக் கோட்பாட்டைப் படித்துச் செரித்துக்கொள்ள முடியாமல் அவன் மூளை குழம்பியது உண்டு. சில நேரங்களில் அவள் அருள் வாக்கு மூலமாக அம்மாவிடம் கேட்டுத் தொpந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற சந்தேகங்களை யார் மூலமாவது அம்மா உணர்த்துவது வழக்கம். தத்தவங்களைப் படித்துக் குழம்பிக் கொண்டிருந்த நாளில், ஓர் அன்பர் கோவிலில் அவனோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது அம்மா சொன்னதாக அவர் சொன்னார். ‘‘மகனே! தத்துவங்களைப் பற்றிக் குழம்பாதே; பக்தியை வளர்த்துக் கொள்; பக்தி மிகுந்தவனுக்குத் தத்துவம் பற்றிய கவலை வேண்டாம்” என்று சொன்னாளாம். அவனுக்காகவே அம்மா சொன்ன அறிவுரையாக அதனை எடுத்துக் கொண்டான். தாயைச்சார்ந்து வளர்கின்ற குழந்தை போல நம்முடைய மனத்தைப் பழக்கிக்கொண்டு அம்மாவைப் பற்றிக் கொண்டு வாழ்வதை விட்டு விட்டு வீணாக மனத்தை அலட்டிக் கொள்வது மதியீனம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

வாரத் தவறாமல் கோவிலுக்கு வருகின்றோம்; மாதத் தவறாமல் கோவிலுக்கு வருகின்றோம்; பௌர்ணமி தோறும் வருகின்றோம்; என்றாலும் ஓரளவு கூட நமக்கு முன்னேற்றம் இல்லையே என்று அந்தநாள் முதல் இந்த நாள்வரை பணிபுரிந்து வரும் தொண்டர்கள் சிலர் இங்கு நினைப்பதுண்டு. அது போல அவனும் நினைத்தது உண்டு. ஒரு முறை அம்மாவே அவனுக்குச் சொன்னாள், ‘‘உன் உடம்புக்கு வர வேண்டிய நோயை வராமல் தடுத்திருக்கின்றேன்; உனக்குத் தெரியாமலேயே உன்னை மாற்றிக் கொண்டு வருகின்றேன்” என்று சொன்னதுண்டு!

ஏழை அன்பர் ஒருவர், ஆற்றாமையோடு அன்னையிடம் தன் பிரச்சினை தீராதது பற்றிக் குறைபட்டபோது அம்மா சொன்னாள்; ‘‘என்ன செய்வது மகனே; உன்னுடைய ஒரு வினை முடிச்சை அவிழ்க்கின்றேன்; உள்ளே இன்னும் ஏழெட்டு வினை முடிச்சுகள் வருகின்றனவே!” என்றாள். இந்தக் கருத்தின் நுட்பத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நூற்றுக் கணக்கான பாவங்களையெல்லாம் செய்துவிட்டு ஆதிபராசத்தி என் குறையைத் தீர்க்கவில்லை. என் குறையைத் தீர்க்க முடியாத தெய்வம் சக்தி உள்ள தெய்வமா? என்று அறியாமையோடு பேசுவதில் பயனில்லை. செய்த பாவங்களைப் புண்ணியங்கள் செய்துதான் கழிக்க வேண்டும் பிறவிதோறும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள பாவ மூட்டைகளைச் சிறிது சிறிதாக இறக்க வேண்டுமானால் நாள்தோறும் கோயிலுக்குப் போ; நாள்தோறும் தெய்வத்தை நினைத்து வழிபடு; இதனால் சிறுகச் சிறுக அந்த வினைமாசுகள் நீங்கும் என்றெல்லாம் நம் பொpயவர்கள் சொன்னார்கள். இப்போது தான் அவற்றின் பொருள் அவனுக்குத் தெரிகின்றது.

அம்மாயார் ஒருவர். அவரும் அவர் கணவரும் அம்மாவுடைய கோவிலுக்கு அடிக்கடி வருபவர்கள்; தொண்டு செய்பவர்கள். அந்தத் தம்பதிகட்குப் ‘‘பிள்ளை பேறு” இல்லை; எனவே, அம்மாவிடம் அந்த அம்மையார் இத்தனை ஆண்டுகளாக எனக்குப் பிள்ளை பாக்கியமே இல்லையே தாயே” என்று கேட்டாராம்; அதற்கு அம்மா சொன்னாளாம்” உனக்கு மாங்கல்ய பாக்கியமே பலமில்லாமல் இருக்கிறதே என்று உன்னைக் குறித்து தான் கவலைப்படுகிறேன்; நீயோ பிள்ளைப் பாக்கியம் இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றாய்” என்றாளாம். இப்போது பராசத்தி பிள்ளைப் பேற்றுக்கு வரமளிப்பாளா? கணவன் உயிரைக் காப்பாற்றித் தருவாளா? இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு எல்லாம் காரணமாக இருக்கின்ற அந்த ஊழ்வினை தான் என்ன? அது படைத்தவளுக்கு மட்டுமே தெரியும்! அம்மா ‘‘அருள்வாக்கு” என்று சொல்வதனால் இந்தச் செய்திகள் எல்லாம் தெரிகின்றன! அவற்றை வைத்துக் கொண்டு நம்மால் ஓரளவு சிலவற்றை ஊகிக்க முடிகின்றது. இவையெல்லாம் மனிதருடைய சிற்றறிவுக்கு எட்டாதவை அம்மாவையும் நம்பிக்கொண்டு குறைதீரவில்லையே என்றும் அலுத்துக் கொள்ளும் அன்பர்கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அனுபவங்கள் எழுதப்படுகின்றன.

– தொடரும்

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 7 (1982) பக்கம்: 26-30

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here