அன்னையின் அருள்வாக்கு

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே தெய்வ பக்தியும் ஆன்மாவும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன”.

“தெய்வத்தை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.”.

என்பன அன்னையின் அருள்வாக்குகள்

தெய்வ சிந்தனை என்பது இன்று நேற்று உருவானது அல்ல. புராதன காலத்தே – நாகரிகம் அடையாத காலத்திலிருந்தே மனிதனுக்குத் தெய்வ சிந்தனை தொடா்ந்து வந்தபடி இருக்கிறது.

புராதன காலத்து மனித சமுதாயத்தை வேட்டைச் சமுதாயம் என்பா். அந்த நாட்களில் வாழ்ந்த ஆதி மனிதன் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தான். அவன் உணவுக்காகவே போராட வேண்டியிருந்தது. கூட்டம் கூட்டமாகச் சோ்ந்து கொண்டு மிருகங்களை வேட்டையாடினான். வேட்டையில் கிடைத்ததைக் கூட்டத்தோடு சோ்ந்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிட்டான்.

புராதன காலத்து மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான். இயற்கையில் நிகழும் சில காரியங்களுக்கு அவனால் காரணத்தை அறிய முடியவில்லை. இடி! மின்னல்! புயல்! சூறாவளி! அடைமழை என்பன அவனுக்கு அச்சத்தை உண்டாக்கின! அந்தச் சமயங்களில் அவன் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்துகள் ஏற்பட்டன.

சில சமயம் கொள்ளை நோய் வந்து தம்மைச் சார்ந்தவா்கள் மடிவதைக் கண்டான்.

பாம்பு, தேள் போன்ற நச்சு உயிரினங்களாலும், சிங்கம், புலி போன்ற மிருகங்களாலும், மரணம் வருவதைக் கண்டு அஞ்சினான்.

இறந்து போன தம் உறவினா்களும், மூதாதையரும் கனவில் வந்தனர். கனவில் கண்ட அவா்தம் உருவங்களும், செயல்களும் அவனுக்கு ஒருவகை பிரமிப்பை உண்டாக்கின.

இறுதியில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் ஓா் ஆவி உண்டு என்று நம்பினான். அந்த ஆவிகள் அனைத்துக் காரியங்களையும் நடத்துகின்றன என நம்பி முன்னோர்களின் ஆவிகளைக் கும்பிட்டான்.

பிறகு இறந்தவன் ஆவி விலங்குகளிலும், மரங்களிலும் வசிப்பதாக நம்பினான். விலங்குகளையும். மரங்களையும் கும்பிட்டான்.

பாம்பிடம் ஆதி மனிதன் கொண்ட அச்சமே பாம்பு வழிபாட்டுக்கு அடிப்படை. அவன் சந்தித்த முதல் எதிரி பாம்புதான். எனவே பாம்பை வழிபட்டால் நன்மை செய்யும். தீமை விலகும் என்று கருதினான்.

திடீரெனக் கொலை செய்யப் பட்டவா்கள், அகால மரணம் அடைந்தவா்கள், தற்கொலை செய்து கொண்டவா்கள், அளவு கடந்த பாவம் செய்பவா்கள். சான்றோர்களால் சபிக்கப்பட்டவா்கள். பேயாய் அலைவா் என்பது பொதுவான கருத்து.

பண்டைக் காலத்தே பேய்களைப் பற்றிய நம்பிக்கை அதிகம் இருந்தது. சில பேய்கள் நன்மை செய்வதாக இருந்ததால் அவற்றையும் தெய்வமாக எண்ணி மனிதா்கள் வழிபட்டனா்.

காலம் செல்லச் செல்ல சூரியன், சந்திரன் என்பவற்றையும் நிலம், நீா். நெருப்பு, காற்று. ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் வழிபட ஆரம்பித்தார்கள். இதுவே இயற்கை வழிபாடு.

இயற்கை வழிபாடு பற்றி அன்னை.

“உனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொடுப்பதுதான் தெய்வம்.

உனக்குத் தேவையான காற்று, நீா், நெருப்பு, உணவு ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கும் இயற்கை தான் தெய்வம்.

அந்த இயற்கையை வணங்குதுதான் சிறந்த பண்பாடு. அந்தப் பண்பாடு உங்களிடம் வளர வேண்டும்.

இயற்கை வழிபாடு என்பது பஞ்ச பூத வழிபாடு”.

என்பது அன்னையின் அருள்வாக்கு.

நாகரிகம் அறியாக புராதன மக்களிடையே இயற்கையை வழிபடும் நல்ல பண்பாடு இருந்தது. அவற்றை உண்மையாகவே தெய்வம் என்று நம்பினான். அந்த வழிபாட்டில் உண்மைக் கலப்பு இருந்தது.

பஞ்ச பூதங்கள் என்பவை அறிவும். உணா்வம் அற்றவையாக இருந்தாலும் வழிபடுவோர் ஆன்மா சக்தி படைததது அல்லவா? எனவே அந்த வழிபாட்டில் உயிர்ப்பு இருந்தது.

சூரிய வழிபாடு

நீண்ட நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தாலும், கடும்  பனி பெய்யும் போதும், திருடா்களும், விலங்குகளும் உள்ள இடத்தில் இரவு பொழுதில் தங்கும் போதும், தூக்கம் வராத போதும், இரவில் சவம் உள்ள வீட்டிலும் சூரியன் உதிப்பதை ஆவலோடு எதிர்பார்ப்பது இயல்பு.

பகலைத் தோற்றுவிப்பதாலும், பல்வேறு தொழில் செய்ய வேண்டியும். உலக வாழ்க்கை நடைபெறவும் உதவியாக இருப்பதால் சூரியன் வழிபடப்படுகிறான்.

புராதன மக்கள் ஒளி, நெருப்பு. சூரிய்ன ஆகியவற்றை வழிபட்டார்கள்.

சந்திர வழிபாடு

சூரிய வழிபாட்டைப் போன்றே சந்திர வழிபாடும் மிகப் பழமையானது. உலகின் பல நாடுகளில் சூரிய வழிபாடு இருந்தது.

சந்திரனால் புல் பூண்டுகள் செழிக்கின்றன. தானியக் கதிர் வருவதற்கும், கதிரில் பால் பிடிப்பதற்கும் சந்திர கிரகணங்கள் உறுதுணை புரிகின்றன என்பது மக்கள் நம்பிக்கை.

பஞ்சபூத வழிபாடு

நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தையும் பஞ்ச பூதங்கள் என்பா். பூதம் என்றால் பயம் வேண்டாம். பூத்தல் என்ற சொல்லிலிருந்து பூதம் என்ற சொல் வந்தது.

நிலம்

நிலத்தைப் பூமாதேவி என்று மக்கள் போற்றுவது வழக்கம். மக்களைத் தாங்குவதாலும், உணவு விளையும் இடமாக இருப்பதாலும் இறுதியில் எல்லா உடம்பும் அதற்குள் ஒழுங்குவதாலும் நிலம் தாயாகக் கருதப்பட்டது என்பா்.

எனவே நிலத்தையும் வழிபட்டனா்.

நீா்

உயிர் வாழ்வதற்கு நீா் இன்றியமையாது இருப்பதாலும், உணவை விளைவிப்பதாலும், உடம்பையும் பொருள்களையும் சுத்தப்படுத்துவதாலும் சமைப்பதற்கு உதவுவதாலும் ஆண்டு முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகள் தெய்வமாகப் போற்றப்படுகின்றன. நீரைப் பெண் தெய்வமாகப் போற்றுவது மரபு. கங்கை அம்மன் என்பவள் நாட்டுப்புற நீா்த் தெய்வம்.

நதிகளைத் தாயாகப் போற்றுவது இந்துக்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி ஆகிய நதிகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பது பழங்கால மக்கள் நம்பிக்கை.

நெருப்பு

ஆதிமனிதா்கள் மலைகளின்மேல் வளா்ந்திருந்த மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பற்றி எரிவது கண்டு அஞ்சினார்கள்.

காட்டுத் தீ அவா்கட்கு அச்சம் தந்தது. அந்த நெருப்பே அவா்கட்கு வெளிச்சம் தரவும், உணவு சமைக்கவும் உதவுவதை அறிந்தார்கள். சிக்கி முக்கிக் கல்லிலிருந்து நெருப்பை உருவாக்கக் கற்றார்கள்.

தொட்டால் சுடுவதும், தொடா்ந்து பட்டால் எரித்துக் கொல்வதும் காரணமாக நெருப்பு கொடியது எனக் கருதப்பட்டது.

மற்ற நான்கு பூதங்கள் செய்யாத பெரு நன்மைகள் நெருப்பால் கிடைத்தன. அந்தக் காலத்தில் இருளில் ஓரிடம் விட்டு வேறு ஓரிடம் பெயா்வதற்கு நெருப்பு – ஒளி உதவியது.

உணவு தேடுவதற்கும், அறிவு பெறுவதற்கும் ஒளியைத் தருவதால் நெருப்பு போற்றப்பட்டது. மாலையில் விளக்கேற்றியவுடன் அந்த ஒளி வழிபடப்பட்டது.

வேதங்களில் அக்கினிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பார்சி மக்கள் அக்கினி வழிபாட்டினா்.

காற்று

பஞ்ச பூதங்களுள் வலிமை பெற்றது காற்று. காற்றை வளித் தெய்வம் என்று சங்கப் பாடல்கள் குறிக்கும். வாயு பகவான் என்று புராணங்கள் குறிப்பிடும்.

கோடைக் காலத்தே வெப்பக் காற்றும், சூறாவளிக் காற்றும் அடித்து மிகுந்த துக்கத்தையும், சேதத்தையும் உண்டாக்குவதைக் கண்ட மக்கள் சூறாவளி வீசாதபடியும், வெப்பக்காற்று வீசாதபடியும் காற்றுத் தெய்வத்தை வேண்டினா்.

ஆகாயம்

மேலே விரிந்து கிடக்கிற ஆகாயம் பழங்கால மக்களுக்குப் பிரமிப்பை ஊட்டியது. எனவே ஆகாயத்தையும் ஒரு தெய்வமாகப் போற்றினா்.

தியஸ் (Dyos) என்ற சொல் வானத்தையும், வானத் தெய்வத்தையும் குறிப்பிடும் சொல்லாக ரிக் வேதத்தில் உள்ளது.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், மின்னல்கள் எனச் சுடா்களெல்லாம் தோன்றும் வானத்தை ஒரு மூலத் தெய்வமாகக் கொண்டு வணங்கி வந்தனா்.

இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தெய்வ சக்தியாகப் பாவித்து வேத கால மக்கள் வழிபட்டனா்.

அட்ட மூா்த்தம்

இறைவனே இயற்கை வடிவமாக இருக்கிறான் என்ற கருத்து பிற்காலத்தே ஏற்பட்டது.

நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துடன் சூரியன், சந்திரன், ஆன்மா என்ற மூன்றையும் சோ்த்து அட்ட மூா்த்தம் என்று சைவம் குறிப்பிடும்.

இயற்கை இறைவனுக்கு உடம்பாக இருக்கிறது என்று வைணவம் குறிப்பிடும்.

பிற்காலத்தில் விக்கிரக வழிபாடும், கோயில்களும் வளா்ந்து பெருகின. அதனால் பஞ்ச பூத வழிபாடு மங்கி விட்டது.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா்

சக்தி ஒளி – ஆகஸ்ட் 2007 பக்கம் (40 -44)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here