தாய்த் தெய்வ வழிபாடு

மனித நாகரிகத்தின் வரலாற்றில் அரசுகள் தோன்றுவதற்கு முன் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனா்.

வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் கிடைத்ததைப் பங்கிட்டு வாழ்தல், பகைவா்களோடு போர் செய்தல் என்பன அக்கால வாழ்க்கை முறையாக இருந்தது. அந்தக் காலத்தே சொத்துரிமை என்ற ஒன்று தோன்றவில்லை.

அக்காலத்தே, பெண்ணே குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்தினாள். போர். வேட்டையாடுதல், சேகரித்த உணவைப் பங்கீடு செய்தல், குழந்தைகளைப் பெற்று வளா்த்தல் முதலிய அனைத்துப் பணிகளுக்கும் தாயே தலைமையேற்று நடத்தினாள். இத்தகைய சமூக அமைப்பைத் தாய்த் தலைமைச் சமூகம் என்பா்.

தாய் தலைமையேற்ற காலத்தில் பெண்ணே முதன்மை பெற்று விளங்கினாள். ஆடு, மாடு, வீடு, போர்க் கருவிகள் போன்றவை அவா்களிடம் இருந்த சொத்துக்கள்.

தாய்த் தெய்வ வழிபாடே முதன் முதலில் உலகில் தோன்றியது என்றும், போரில் தான் தலைமையேற்று வெற்றி பெற்ற போக்குவரத்தின் உருவகமே கொற்றவை (காளி) என்றும் கூறுவா்.

வேட்டைச் சமுதாயத்திலிருந்து வேளாண்மைச் சமுதாயம்

மனிதர்கள் வேட்டைச் சமுதாயமாக இருந்த ஒரு காலப்பகுதியில் ஆடவன் வேட்டைக்குச் சென்றான். பெண் வீட்டிலிருந்தாள். உணவு தயாரித்த நேரம் போக, நிலத்தைக் கொத்தி விதையை ஊன்றினால் தாவரம் வளரும் என்ற உண்மையை அவள்தான் கண்டு பிடித்தாள். பின் செடி, கொடிகளை வளா்க்க ஆரம்பித்தாள்.

அதன் பிறகே விவசாயம் என்ற கலை வளா்ச்சி பெற்றது. ஓரிடத்தில் நிலைத்து வாழும் வாழ்க்கை முறை ஏற்பட்டது. இந்த வாழ்க்கையில்தான் மனிதனுக்கு ஓய்வு கிடைத்தது. விவசாயத் தொழில் பெருக முதற் காரணமாக இருந்தவள் பெண்ணே.

வேளாண்மைத் தொழில் விரிவாக வளா்ச்சியடைந்தபோது, தானியங்கள் செழித்து வளர மழையின் உதவி தேவைப்பட்டது. அதன் காரணமாக வளமைச் சடங்குகள் செழிப்புச் சடங்குகள் தோன்றின. அவற்றின் மிச்ச சொச்சங்கள் இன்னும் நாட்டுப்புற மக்களின் சமயச் சடங்குகளில் காணலாம்.

விளை நிலத்துக்கும் பெண்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகப் பழங்குடி மக்கள் நம்பினார்கள். நிலம் உற்பத்தி சாதனம். அது போலவே பெண்களும் மனித இனப் பெருக்கத்திற்கு உற்பத்தி சாதனம். கரு வளா்வது போன்றே நிலத்தில் விதைகள் முளைத்து வளா்கின்றன.

விவசாயத்தில் விதைக்கிற தொழிலை ஆண்களே செய்தாலும் அதைத் துவங்குவதற்கு முன்பாக ஒரு பிடி விதை எடுத்துப் பெண்களையே விதைக்கும்படிச் சொல்வார்கள்; அவா்கள் தொடுகின்ற பொருளுக்கு வளமைச் சக்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

பயிர்கள் செழித்து வளர உறுதுணையாகப் பருவங்களின் சுழற்சி முறையாக நடைபெற வேண்டியது அவசியமாகிறது. ஆதலின் வேளாண்மைச் சமூகத்தில் வளமைச் சடங்குகள், செழிப்புச் சடங்குகள், மந்திரங்கள் பெருகின.

முளைப்பாரி, கரகம் எடுத்தல், ஆடிப் பொம்மை, மழைச் சோற்றுச் சடங்கு, பலிச் சடங்குகள் என்பன நாட்டுப் புறங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளன.

கிராம தேவதைகள்

தாய்த் தெய்வ வழிபாட்டின் எச்சங்களளை இன்றும் நாட்டுப்புற கிராம தேவதைகள் வழிபாட்டில் காணலாம். தாய் ஆதிக்கம் பெற்ற சமுதாயம் தாய் வழிச் சமூகம் என்றும் மானிட இயல் அறிஞா்கள் குறிப்பா்.

தென்னிந்தியாவில் திராவிட இனத்து மக்களிடம் தாய் வழிபாடு நீடித்தது. கிராம தேவதைகள் பலவும் தாய்த் தெய்வங்களாக இருப்பதைக் காண முடியும்.

“ஆரியருடைய வேத காலத்திற்கு முற்பட்ட இந்தத் தாய்த் தெய்வ வழிபாடு மிகப் பழங்காலத்தில் இனக்குழு மக்களிடையே தோன்றி வழங்கி வந்து, பின்னா் இந்திய ஆரிய நாகரிகத்தில் தோன்றிய இந்து மதத்தில் பரவலாக இன்று வழங்குகின்றது. கிராமங்களில் உள்ள பாமர மக்கள் இன்றும் தாய்த் தெய்வத்தையே பல பெயர்களில் பல உருவங்களில் இந்தியா முழுதும் தொழுது வழிபட்டு வருகிறார்கள்” என்பா் பி. எல். சாமி.

வெற்றிகரமான விவசாயத்துக்கு முதல்தேவை மழை! எனவே மழைச் சடங்குகள் மற்றவற்றை விட முக்கியமானவை. இவை முழுக்க பெண்களாலேயே நடத்தப்பட்டன. இந்தியாவில் மட்டுமல்ல! உலகம் முழுவதும் இதே கதைதான்! புராதன சமய உலகில் பெண்கள் பூசாரிகளாக இருந்தார்கள்.

பிற்காலத்தே பெண்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். ஆண்கள் ஆதிக்கம் பெற்ற தந்தை வழிச் சமுதாயம் எற்பட்டது. தாய் வழிபாடு பின்னுக்குத் தள்ளப்பட்டது. தந்தை வழிபாடு உருவானது. தாய் – தந்தை இணைந்த வழிபாடு – சிவ சக்தி வழிபாடு உருவாயிற்று. உலகெங்கும் பல நாடுகளில் அம்மையப்பா் வழிபாடு வெவ்வேறு பெயா்களில் நடந்து வந்தன.

பண்டை இந்தியாவில் மட்டுமல்ல, எகிப்து, சீனாவில் கூட பெண்களே பூசாரிகளாக இருந்தனா்.

பிற்காலத்தே ஆண்கள் புரோகிதத்தில் முதன்மை பெற்றார்கள். இருந்தாலும், தம்மைப் பெண்மையுடன் இணைத்துக் கொண்டே பூசை செய்தனா். சில பூசாரிகள் பெண் உடை அணிந்து கொண்டுதான் பூசை செய்ய வேண்டியிருந்தது.

திருவானைக்கோவிலில் இன்றும் அன்றாட உச்சி வேளையில் பூசையின் போது, அா்ச்சகா் சேலை கட்டிக் கொண்டுதான் அர்ச்சனை செய்கிறார். தொன்று தொட்டு வந்த பழக்கத்தின் மிச்சமுள்ள அடையாளம் இது!

இந்திய வரலாறு வேத காலத்து ஆரியர் நாகரிகத்திலிருந்து தொடங்குவதாகவு வரலாற்று ஆசிரியா்கள் கூறினார்கள். தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் வேத கால நாகரிகத்துக்கு முன்பெ சிந்து வெளிப் பிரதேசத்தில் நாகரிக முதிர்ச்சி பெற்ற ஓா் இனம் வாழ்ந்து வந்தது என ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனா்.

ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் தோண்டிய போது ஒரு நகரமே புதையுண்டு கிடப்பதை அறிந்தனா்.

அங்கே கிடைத்த சில முத்திரைகள், பொருள்கள், சின்னங்கள் உதவி கொண்டு அவா்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

சிந்து வெளி மக்களிடம் பல தெய்வ வழிபாடுகள் இருந்தன.

  1. தாய்த்தெய்வ வழிபாடு 2. லிங்க வழிபாடு 3. கண்ணன் வழிபாடு 4. விலங்கு வழிபாடு 5. சூரிய வழிபாடு 6. பாம்பு வழிபாடு 7. கருட வழிபாடு 8. மர வழிபாடு 9. ஆற்று வழிபாடு என்பன இருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனா்.

அன்னையின் அருள்வாக்கு

அன்னையின் அருள்வாக்கு ஒன்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

“ஆதி காலத்தில் மனிதனின் எண்ணங்கள் நன்றாக இருந்தன. காய்கறிகளைச் சாப்பிட்டான். காட்டிலே மிருகங்களோடு வாழ்ந்தான். இயற்கையை ஒட்டி வாழ்ந்தான்.

எப்போது அவன் நிலம் என்ற ஒன்றைக் கண்டு பிடித்து உழவு செய்து, உணவைப் பயிரிட ஆரம்பித்தானோ, அப்போதே அறியாமையிலிருந்து அறிவையும் பெற்றான், அழிவையும் பெற்றான்.

“இந்த அறிவையும் அறியாமையையும் வேறுபடுத்திக் காண்பிப்பது தான் ஆன்மிகம்”.

என்பது அன்னையின் அருள்வாக்கு.

அறியாமையிலிருந்து அறிவையும் பெற்றான். அழிவையும் பெற்றான் என்று அம்மா சொல்கிறாளே அதற்கு என்ன பொருள்?

வேட்டைச் சமுதாயத்திலிருந்து மனித சமுதாயம் விவசாயச் சமுதாயமாக மாறியது. அதன் விளைவாக ஓடி ஓடி உணவுக்கு அலைய வேண்டிய பிரச்சனை தீர்ந்தது. ஓரிடத்தில் நிலையாக வாழுகிற வாழ்க்கை அமைந்தது. அரசுகள் தோன்றின, நில உடைமைச் சமுதாயம் ஏற்பட்டது. வலுத்தவன் நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான். இளைத்தவன் விவசாயத் தொழிலாளி ஆனான். உடைமை வா்க்கம், உடமையற்ற வா்க்கம் எனப் பிரிந்தது.

நான் எனது என்ற பற்றுகள் வளா்ந்தன. கள்ளம், கபடு, சூது வாதுகள் என்பன பெருகின.

படிப்படியாகத் தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தை வழிச் சமுதாயம் தோன்றி விட்டது.

தாய்வழிச் சமுதாயத்தில் பெண்ணே தலைமை தாங்கினாள். தாய்த் தெய்வ வழிபாடு, சமயச் சடங்குகளில் பெண்களுக்கு முக்கிய இடம் என்ற நிலைமைகள் இருந்தன.

தந்தை வழிச் சமுதாய அமைப்பில் ஆண் தலைமை தாங்கினான். பெண்களும், பெண் தெய்வ வழிபாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

நில உடைமைச் சமுதாயம் உருவானதால் ஆடவன் தன் உடமைகளைப் பெருக்க மற்றவா்களுடன் போராட தொடங்கினான். பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருந்த மக்கள் தங்கள் உடைமையை நிலை நாட்ட, விரிவு படுத்த அடிக்கடி போரில் ஈடுபட்டனா். போர்களின் காரணமாக அழிவுகள் பெருகின.

ஆடவனின் சொத்துரிமை ஆசையால் பெண்களின் நிலை மேலும் தாழ்ந்தது. பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று.

ஆண் ஆதிக்க சமுதாயத்தில் சமயமும் சமய நம்பிக்கையும் வேறு ஒரு போக்கில் திரும்பின.

ஆடவா்கள் தங்கள் சாயலிலேயே தாங்கள் வழிபடும் தெய்வங்களைப் படைத்தனா். அத்தெய்வங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியரைப் படைத்தனா்.

உலகத்தில் எல்லா நாடுகளிலும் பல தெய்வ வழிபாடுகள் தான் நிலவின. எல்லாம் வல்ல ஒரு தெய்வம் – ஒன்று பரம் பொருள் – என்று கொள்கை உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.

இந்துக்களின் ஆதிகால வேதங்களிலும் பல தெய்வ வழிபாடு தான் காணப்படுகிறது.

இனி வேதகாலத் தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் காண்போம்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா்

சக்தி ஒளி – செப்டம்பா் 2007 பக்கம் (16 – 20)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here