நம் ஒவ்வொருவரையும் அன்னை வரவழைத்துத் தான் நாம் மேல்மருவத்தூருக்கு வந்திருக்கிறோம். வந்து கொண்டிருக்கிறோம். அவள் அருளால் தான் அவள் தாள் வணங்கிக் கொண்டிருக்கிறோம். ” வரவழைத்தேன் வந்தாய்!” என்னும் அன்னையின் அருள்வாக்கு மேல்மருவத்தூர்க்கு வருகின்ற அத்தனை பேர்க்கும் பொருந்தும்.

 

       அன்னை நினைக்காமல்- நாம்         அவளை நினைக்கவில்லை         அன்னை நினைக்காமல்- நாம்         அவளைத் தொழுவது இல்லை          அன்னை நினைக்காமல் -அவளது         திருவடியில் விழுவது இல்லை.         தன்னை நினைக்காதவரையும் கூட          தான் நினைக்கிறாள்;         ஏற்காதவரையும் கூடத் n        தான் ஏற்கிறாள்.         தன்னைத் தெரியாதவர்க்கெல்லாம்         தன்னைத் தெரிய வைக்கிறாள்         தன்னைக் காணாதவருக்கெல்லாம்         காட்சி கொடுக்கிறாள்!

“நாம் மேல்மருவத்தூருக்கு வந்த வழியை, வந்து இங்கே கிடந்த நிலையை,இருந்த நிலையை,  இருக்கும் நிலையை, நினைத்துப் பார்ப்பதையும், நெகிழ்ந்து போவதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.” என்று அன்னை சொல்லுகிறாள்.” நீ நடந்து வந்த பாதையை நினைத்துப்பார்”. என்று சொல்வதன் பொருளை இப்படியும் புரிந்து கொள்கிறோம். 

         அந்த  அன்பரிடம் “அம்மா இருக்கிறேன்” என்றாளே என்ன அர்த்தம்?          ” எல்லாம் வரும்” என்றாளே! என்ன பொருள்?         உத்தரவு என்றாளே! அப்படி என்றால்?  

அன்னை முன்னால் அழுது, குமுறி, அரற்றி பிதற்றி, அந்த அன்பர் உட்கார்ந்து இருந்தார். அவர் உங்க அம்மா அற்புதக்காரியாக இருந்தால்…. என்று கூவிச்சொன்ன அறைகூவல் அழிந்தது. அந்த அழுகையில் தான் என்னும் ஆணவம் ஒழிந்தது. அந்தக் குமுறலில் அன்னையின் இருப்பைச் சந்தேகப்பட்ட பேதைமை நீங்கியது.அந்தப் பிதற்றலில் இந்தத் தெளிவு ஏற்பட்ட கணத்தில் அன்னை சொன்னாள்.” அம்மா இருக்கிறேன்.”

அழுது கண்ணீர் விட்டுக் கதறும் கைக்குழந்தையை பெற்றவள். தன் மடியில் போட்டு ” அழாதே! கண்ணே! அம்மா இருக்கிறேன்” என்று சொல்லும் வார்த்தைகள் அவை.

 தாயை வெகுநேரம் காணாமல் தவித்த குழந்தை தாயைக் கண்ட மாத்திரத்தில் கதறி அழுகிறது. அப்போது தாய் சொல்லுகிற வார்த்தைகள்” அழாதே! அம்மா இருக்கிறேன்.

எதையோ இருட்டில் பார்த்துவிட்டு பயந்த, குழந்தை நடுநடுங்கி சத்தமிட்டு அலறும் போதே குழந்தையின் அம்மா சொல்லுகிற வார்த்தை” பயப்படாதே !அம்மா இருக்கிறேன்!”

தடம்மாறிப் பிள்ளைகள் தவறாக நடக்கிற போது தாய் எச்சரிக்கிற வார்த்தை “டேய் என்ன செய்கிறாய? அம்மா இருக்கிறேன்! அச்சமில்லையா?”

தாய் கூடவே இருப்பதை அறிந்தும், அறியாமலும் கண்டு கொள்ளாமல் போகிற பிள்ளையைத் தடுத்து நிறுத்தித் தான் இருப்பதை உணர்த்தி அழைக்கும் கவன ஈர்ப்பு வார்த்தைகள் “அம்மா இருக்கிறேன்”.

நம்மைப் பெற்ற தாய் சொல்லுகிற அத்தனை அர்த்தங்களோடு மேல்மருவத்தூர் அன்னையும் சொல்லுகிறாள். அம்மா இருக்கிறேன்.

அம்மா இருக்கிறேன்! தடம் மாறாதே!

அம்மா இருக்கிறேன்! தடுமாறாதே! அம்மா இருக்கிறேன்! கலங்கி நிற்காதே! அம்மா இருக்கிறேன்! கண்ணீர் விடாதே! அம்மா இருக்கிறேன்! அழுது புலம்பாதே! அம்மா இருக்கிறேன்! ஆணவப்படாதே! அம்மா இருக்கிறேன்! அச்சம் கொள்ளாதே! அம்மா இருக்கிறேன்! கண்ணைத் திறந்து கொள்! அம்மா இருக்கிறேன்! கருத்தில் இருத்திக் கொள்! என்றெல்லாம் ஆயிரம் அர்த்தங்கள் புலப்பட ஆதிபராசக்தி தான் இருப்பதை வார்த்தையில் சொல்லுகிறாள்; வாழ்க்கையில் அனுபவப்பட வைக்கிறாள்.

தன் இருப்பைக் காட்டித்தான் ஆக வேண்டும் என்று அவளுக்கு என்ன அவசியம்? “அம்மா இருக்கிறேன்” என்று உறுதி சொல்ல வேண்டிய தேவை என்ன அவளுக்கு? 

பெற்றுவிட்டாள் நம்மை பேதலிக்கிறாள் அவளும் பெத்த மனம் பித்தாகித் தவிக்கிறது நம்மை எப்படியும் கரையேற்றத் துடிக்கிறது. தன் இருப்பை உணர்த்தி நம்மை அழைக்கிறது. வேறு என்ன?

 அந்த அன்பர் என்னவெல்லாம் அன்னையிடம் கேட்க நினைத்தாரோ? அன்னை என்னவெல்லாம் தனக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ? என்ன மனக்குறையோ என்ன எதிர்ப்பார்ப்போ எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து அன்னை சொன்னாள் ” எல்லாம் வரும்” என்ன அர்த்தம்?

நல்லனவும் வரும், தீயனவும் வரும், துன்பமும் வரும், இன்பமும் வரும்,வெற்றியும் வரும், தோல்வியும் வரும் வாழ்த்தும் வரும், வசவும் வரும்,தேட்டமும் வரும், வாட்டமும் வரும், எழுச்சியும் வரும், தாழ்ச்சியும் வரும், கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் விளங்கும்.

கேட்டது கிடைக்காமலும் போகலாம்.நினைத்தது நடக்கலாம். நடக்காமலும் போகலாம் எல்லாம் வரும் ஒன்று மட்டும் நிச்சயம் “எது வந்தாலும் அம்மா இருக்கிறேன். மறந்து விடாதே மகளே! மகனே!” என்று அர்த்தமும்” வாழ்க்கையென்றால் எல்லாம் வரும்”  என்ற பொருள் படவும் உரைத்தாள் அன்னை.

அலையில்லாத கடல் இல்லை; ஆனால் ஆழ்கடலில் அலைகள் இல்லை.

குத்துகிற முள்ளும் உண்டு; கூடவே நடுவில் ரோஜா உண்டு.

வெளியிலே கரடுமுரடான, கடினமான தோல் உண்டு. உள்ளே அமுதச் சுவையான பலாப்பழம் உண்டு.

கொட்டுகிற தேனீக்களுக்கு மத்தியில் தான் , இனிப்பான தேன் இருக்கிறது.

கடினமான நாரும், மட்டையும், ஓடும் வெளியே; ருசியான சத்தான இளநீர் உள்ளே. 

 வெயிலில் நடந்தால் தான், நிழலின் அருமை தெரியும் பசியில் கிடந்தால் தான், உணவின் பெருமை புரியும்.

இரவும், பகலும், சேர்ந்தது தானே ஒரு நாள் பொழுது?

தேய்வதும் வளர்வதும் சேர்ந்தது தானே உலகில் நிலவு? 

நோகாமல் நோன்பிருக்க முடியாது; வலிக்காமல் வழி நடக்க முடியாது. இது தான் வாழ்க்கை, இப்படி எல்லாம் வரும். ஆனாலும் என்ன ? “அம்மா இருக்கிறேன்!”

  தனக்குள்ளே தேனிருப்பது பூவுக்குத் தெரியாது. தனக்குள்ளே ஒளியிருப்பது நவரத்தினங்களுக்கு தெரியாது அதுபோல அன்னை நமக்குள்ளே எந்நேரமும் ஒளிந்திருப்பது நமக்குத் தெரியாது.. அதனால் தான் அன்னை சொல்கிறாள் ” எல்லாம் வரும் …….அம்மா இருக்கிறேன்.”

அன்னையின் அருள்மொழியிலேயே சொன்னால் “அடிப்பதும் நானே ! அடிபடுவதும் நானே! அதனாலும் சொல்லுகிறாள் “எல்லாம் வரும் அம்மா இருக்கிறேன்….” எல்லாமாக அன்னை இருக்கிறாளாம். “அம்மா இருக்கிறேன்..” என்பதை ஆறுதல் வார்த்தைகள் மட்டுமல்ல. அதி அற்புதமான அத்வைத வேதாந்தம்.

உலகில் நாம் பெரிதாக மதிக்கிற எது நம்மிடம் இருந்தும், அன்னை நம் கூட இல்லை என்றால் நம்மிடம் இருப்பது எதுவுமே இல்லை. உலகில் நாம் பெரிதாக மதிக்கிற எதுவும் நம்மிடம் இல்லையென்றாலும் அன்னை நம் கூடவே இருந்துவிட்டால் , நம்மிடம் இல்லாதது எதுவும் இல்லை.

எல்லாமாக இருக்கிற அன்னை; எப்போதும் நம் கூடவே இருக்கிறாள். நாம் மறந்துவிடக் கூடாது என்று நினைவு படுத்தவே அன்னை சொல்கிறாள்.” அம்மா இருக்கிறேன்; எல்லாம் வரும்”

“உத்தரவு “என்றாளே அன்னை? “போய் வா… இன்றைக்கு இவ்வளவு தான்.” என்று நமக்கான அன்றைய அருள்வாக்கை முடித்துக் கொள்கிறாள் என்று உத்தரவு போடுகிறாள் என்று நாம் நினைக்கிறோம் ஓரளவுக்கு அது சரியே ஆனாலும் அது மட்டும்,  அர்த்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை

“நான் சொன்ன அத்தனையும் நடக்கட்டும் என்று உத்தரவு”

“நான் சொன்ன அத்தனையும் நடக்கும் என்று உத்தரவு”

“என் உத்தரவை மீறி ஒரு உத்தரவு உலகங்கள் பதினான்கிலும் இல்லை. ஆணை பிறப்பித்துவிட்டேன் என்பதற்கான உத்தரவு.”

“நான் ஒன்றைத் தரவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதனைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியும் இல்லை” என்ற அருள்வாக்கை உறுதி செய்து; தன் மீதே ஆணையிட்டுச் சொல்கிற வார்த்தை தான் ” உத்தரவு.”

எந்தச் சக்திக்கும் மேலான சக்தி அவளே! எந்தச் சக்தியும் அவளுக்குக் கட்டுப்பட்ட சக்தியே! அன்னையை கட்டுப்படுத்த இன்னொரு சக்தி இல்லை; அகிலங்கள் இல்லை என்பதன் ஆதிபத்ய ஆணை வார்த்தை “உத்தரவு ” என்கிற வார்த்தை. 

 அது உத்தரவு தருகிற வார்த்தை மட்டும் அல்ல; எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் தருகிற வார்த்தை.

இது அன்னையின் பரத்துவம். எல்லாவற்றுக்கும் மேலான ஏக ஆதிபத்யம் தான் ஒன்றே மேல் என்றே ஆன அதிகாரம்.

ஆனாலும் அன்னை சொல்கிறாள்;” நான் இரண்டு வியத்துக்குக் கட்டுப்பட்டவள்; ஒன்று உண்மையான பக்தி;  இன்னொன்று தன்னலமில்லாத தொண்டு.”

உண்மையான பக்தி என்பது எப்படி இருக்குமாம்? தெய்வத்தை நினைத்தாலே மனம் கசியுமாம்; கண்ணீர் பெருகுமாம்.

மெ, வாய், கண், மூக்கு, செவி இவையெல்லாம் இறைவனின் திருவுருவச் சிலையைக் கண்டால் கூட, எல்லா உறுப்புகளுமே கண்கள் ஆகிப் போகுமாம். ஆமாம் மெய் பார்க்குமாம்.வாய் பார்க்குமாம், மூக்கு பார்க்குமாம்,செவியும் பார்க்குமாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? கண்ணைத் தவிர மற்றவையெல்லாம் செயலற்றுப் போகும் என்று அர்த்தம். உடம்பு உணராது; வாய் பேசாது; கண்கள் கூட இமைக்காது; மூக்கு நுகராது; காது கேட்காது; உடம்பில் கண்கள் மட்டுமே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் இவையெல்லாம் சிந்தையில் ஒடுங்கிப் போகும்.சாத்வீகம்,ராஜஸம், தாமசம், ஆகிய மூன்று குணங்களும் சேர்ந்ததே சாத்வீக குணமாகும். மாற்றம் இல்லாத மகிழ்ச்சியில், துன்ப இடையீடு இல்லாத இன்பத்தில் திளைக்கும்.

தெய்வத்திடம் கூட எதையும் எதிர்பார்க்காத பக்தியே, உண்மையான பக்தியாகும். ஆனால் வாழ்க்கை அப்படியா இருக்கிறது? நாம் அப்படியாவாழ்ந்து கொண்டிருகிறோம்?

காலை எழுந்தது முதல், கண்மூடித் தூங்கப் போவது வரை இருக்கின்ற எல்லா நொடிகளிலும் எண்ணி முடியாத எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

எதிர்பார்த்து எதிர்பார்த்து எங்கும் கிடக்கிறோம். எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் ஏங்கித் தவிக்கிறோம்.

“அன்னை நமக்குச் சுமையை மட்டும் கொடுக்கவில்லை. சுமையைச் சுமக்கத் தோள்களையும் கொடுத்திருக்கிறாள்” என்ற ஞானம் மறந்து போகிறது செயல் மரத்துப் போகிறது.

அம்மாவிடம் இதைக் கேட்டேன் இதைச் செய்யவில்லை. அதைக் கேட்டேன். அதைச் செய்யவில்லை என்கிறோம். அன்னை இதைச் செய்ய வேண்டும்,அதைச் செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும்; நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும். உடனே நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

கீரை விதை மூன்றாம் நாள் முளைக்கும், ஏழாம் நாள் அறுவடையாகும். அதன் வளர்ச்சிக்காலமும், வாழ்க்கைக் காலமும் அப்படி. 

 தென்னை விதை முளைக்கவே மூன்று மாதங்கள் ஆகும். பயன்தரக் குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும். முப்பது நாற்பது ஆண்டுகள் முழுப்பயன் தரும்.

அதுபோல நாம் போட்டு வைத்திருக்கின்ற வினைகள் என்னும் விதைகள் ஒவ்வொன்றும் முளைக்க விடுகிற காலமும் உண்டு; முதிர வளர்கின்ற காலமும் உண்டு.  இந்த எதார்த்தங்கள் புரிய வேண்டும். எதிர்பார்ப்புகள் கூடாது.

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றங்களே இல்லை. ஆற்ற முடியாத துயரங்கள் இல்லை.

துடுப்புகள் இல்லாத, படகுப் பயணங்கள் இல்லை தொல்லைகள் இல்லாத வாழ்க்கை எல்லைகள் இல்லை.

பள்ளங்கள் சீராக்கப்பட்டுத்தான் பாதைகள் அமைகின்றன. நம் உள்ளங்கள் சீராக்கப்பட்டுத்தான் வாழ்க்கைப் பயணங்கள் அமைகின்றன. இவை எதார்த்தங்கள்; எதிர்பார்ப்புகள் இல்லை.

எதிர்பார்ப்புகளை நோக்கிக் காத்திருக்கும் எண்ணம் குறையுமானால் மனம் நிதானம் அடையும். ஒரு நிலையில் எதிர்பார்ப்புகளைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக வாழச் சொல்லி மனம் நம்மை வழி நடத்தும். அன்னை மனத்தில் இருப்பாள்.

வாழ்க்கையில் துன்ப நெருப்புகள் இருக்கும்;  நம்மைத் தொட்டுவிடும்;  ஆனால் சுட்டுவிடாது. அம்மா கூட இருப்பாள்.

வழியில் வழுக்கல்கள் இருக்கும்;  நாம் சறுக்கி விழ மாட்டோம். சக்தி தாங்கி நிற்பாள்.

இவை சத்தியங்கள் மட்டும் இல்லை; சாத்தியங்கள் கூட.

உயர்ந்த தன் உயர்ந்ததாக ஆன்மிக உலகம் போற்றுகிற வியம் ‘வீடுபேறு’ முக்தி! இனி ஒரு தாய் வயிற்றில் பிறவாமல் மருவூர்த்தாயே எனக்கருள்வாய்!. என்று கேட்கும் நிலை. அதைக் கூட எதிர்பார்த்துக் கேட்காமல், அன்னைமீது பக்தி செய்கிற நிலை அது.

“அந்த நிலை பக்தி வருமானால்,

ஓடும் செம்பொன்னும்

ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினில்

கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா

விறலின் அன்பினார்”

என்று பெரியவர்கள் கூறும் பெரிய பக்தி வந்து சேரும். 

                                                                                  ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி டிசம்பர் 2010

பக்கம் 43-48. 

  

 

]]>

1 COMMENT

  1. மிக அற்புதமான நெஞ்சைத் தொடும் ஆழமான கருத்துக்கள். இன்று நான் மேல்மருவத்தூருக்கு நேரில் சென்றதாகவே உணர்ந்தேன். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here