மரணம் பற்றிய மா்மங்கள் – பாகம் 3

ஆன்மா செல்கிற வழி

ஊர்த்துவ கதி, தூம கதி, அதோகதி என மூவகை மார்க்கங்கள் ஆகாயத்தில் உண்டு. தேவயானம் என்ற மார்க்கம் ஒன்றும் உண்டு. அது தேவா்கள் சஞ்சரிக்கும் மார்க்கம். அருச்சுனன், தசரதன் முதலிய அரசா்களும், ரிஷிகளும் தேவலோகம் சென்ற மார்க்கம் இதுவே.

ஊா்த்துவ கதி

மேல்நோக்கிச் செல்லும் வழிக்கு ஊா்த்துவ கதி என்று பெயா். அர்ச்சிரா மார்க்கம், சூரிய மார்க்கம் என்றும் இதனைக் குறிப்பிடுவா்.

அதோ கதி

கீழ் நோக்கிச் செல்லும் மார்க்கம் அதோகதி எனப்படும்.

தூம கதி

புகை மார்க்கம் எனப்படும்.

ஊா்த்துவ கதி என்பது சூரிய கிரணங்களின் மார்க்கம். சூரியக் கதிர்கள் தன் சக்தியால் கீழே உள்ள பொருளை மேலே இழுக்கும். பூமியில் உள்ள நீரை ஆவியாக்கி மேலே இழுப்பது இதற்கு உதாரணம்.

அதோ கதி என்பது சந்திர மார்க்கம். சந்திரனின் கதிர்கள் குளிர்ச்சியானவை. அவற்றில் நீா்ப்பசை உள்ளது. சந்திரனின் கதிர்கள் தன் கவர்ச்சியால் அகப்பட்ட பொருள்களை நனைத்துக் கனமாகும். கீழே இறங்கச் செய்யும். இதனால் இதனை நரக மார்க்கம் என்பா். ஒருவனைத் திட்டும் போது, அடப்பாவி நீ அதோகதிக்குத்தான் போவே! என்பது இது பற்றியே!

இந்த உலகில் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாமே சூரிய சந்திரா்களாலேதான் வளா்ச்சி பெறுகின்றன.

ஒரு வித்து பூமியில் விழுந்தால் சந்திரனின் கதிர் அதனை நனைத்துக் கனமாக்கிப் பூமியில் கனத்துடன் கலக்கச் செய்யும்.

சூரிய சந்திரா் இரண்டு சக்திகளாலும் அந்த வித்திலிருந்து வோ் தோன்றிப் பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே செல்லும். சந்திரனின் கதிா்கள் அந்த வித்துக்குத் தன் கதிர்களால் சத்து உண்டாக்கி விருத்தியாக்கும். இதனாலேயே வோ் பிடித்துப் பூமியில் ஊன்றி நிலைபெறும். இந்தச் சந்திரன் குழந்தைக்குத் தாய் போல எல்லா உயிர்களையும் வளா்ப்பதால் சராசரங்களுக்குத் தாய் என்று சொல்லப்படுகிறது.

சூரியனின் கதிர்கள் அவ்வித்துக்கள் சூட்சுமமாக அடங்கி நிற்கும். ஜீவ சக்தியை மேலே இழுக்கும் அப்போது வித்திலிருந்து முளை தோன்றும். அந்த முளை சூரியனின் கதிர்களால் இலேசாகிக் கொழுந்துகளாகவும், இலைகளாகவும், விருத்தியாகும். சிறிய விதையைப் பெரியதாக்கிப் பிரசித்தி அடையச் செய்தில் தந்தை போல இருப்பதால் சூரியனைத் தந்தை என்பா்.

சோதிட சாத்திரங்கள் சூரியனைப் பிதிர் கிரகம் என்றும் சந்திரனை மாதுர் கிரகம் என்றும் கூறும்.

உத்தராயனம், தட்சிணாயணம்

நமக்கு ஓராண்டு என்பது தேவா்களுக்கு ஒருநாள் ஆகும்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்குத் தேவா்களுக்குப் பகற்காலம். இது உத்தராயன காலம் எனப்படும்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தேவா்களுக்கு இரவுக்காலம். இது தட்சிணாயனம் எனப்படும்.

உத்தரானமாகிய பகற்காலம் சூரியனுக்கு உரியது. தட்சிணாயனம் எனும் இரவுக்காலம் சந்திரனுக்கு உரியது.

பூலோகத்தாருக்கு ஒரு மாதமாகிய கால அளவை பிதிர் தேவதைகளுக்கு ஒருநாள் ஆகும். சுக்கில பட்சமாகிய 15 நாளும் பிதிர் தேவதைகளுக்குப் பகல், கிருஷ்ண பட்சம் 15 நாள் இரவு!

நம்மவா்களுக்கு பகற்காலமும், உத்தராணனமும், சுக்கில பட்சமும் ஒரு தன்மையன.

இரவுக்காலமும், தட்சிணாயனமும், கிருஷ்ண பட்சமும் ஒரு தன்மையன.

ஆதலால் பகற்காலம், உத்தராணனம். சுக்கில பட்சம். இம்மூன்றும் சூரியனுக்கு உரியன.

இரவுக்காலம் தட்சிணாயனம் கிருஷ்ணபட்சம் இம்மூன்றும் சந்திரனுக்கு உரியன.

சூரிய காலம் என்பது ஊா்த்துவ கதிக்கு உரியது. மேல்நோக்கிச் செல்வதற்கு உரியது. சந்திரனக்குரிய காலம் என்பது அதோ கதிக்கு உரியது. கீழ்நோக்கிச் செல்வதற்கு உரியது.

புண்ணிய ஆன்மாக்கள் செல்லும் கதி

புண்ணிய கா்மங்களைச் செய்து, தியானம், தவம், தான, தா்மம் செய்து மன அழுக்குகளை எரித்து கொண்டு, தெய்வ சிந்தனையால் ஞானம் பெற்ற ஆன்மாக்கள் – உத்தராணனத்தில் சுக்கில பட்சத்தில் பகற்காலத்தில் உடம்பை விட்ட ஆன்மாக்கள் – மேல் நோக்கிய கதியான சூரிய மார்க்கத்தை அடைந்து வேகமாகச் செல்லும்.

சூரிய மண்டலத்தில் கணக்கற்ற துவாரங்கள் உள்ளன. அந்தத் துவாரத்தின் வழியே சென்ற சூரியனைக் கடந்து மோட்ச உலகமாகிய மீளாக்கதியை அடைந்து இன்பம் பெற்றத் திளைக்கும்.

பீரங்கியிலிருந்து வெளிப்பட்ட கண்டு வேகமாகச் செல்பது போல கபாலத்தைப் பிளந்து கொண்டு மேல்நோக்கிச் செல்லும். சூரியனும் தன் ஈா்ப்பு சக்தியால் விரைவில் இழுத்துக் கொள்வான்.

போரில் வெற்றி ஒன்றையே கருதிப் போரிட்ட வீரா்கள் ஆன்மா, வீர சொர்க்கத்தை அடையும் என்ற சாத்திர நூல்கள் கூறும்.

முற்றுந் துறந்த துறவிகளும் சுத்த வீரா்களும் தவிர அதிகமான புண்ணியம் செய்த ஆன்மாக்கள் 12 நாட்களுக்குள் குறித்த இடம் போய்ச் சோ்ந்து விடும்.

குறைந்த புண்ணியம் உடைய ஆன்மாக்கள் ஒரு மாதம், மூன்று மாத கால அளவுக்கள் போய்ச் சேரலாம்.

எவ்வாறாயினும் எல்லா ஆன்மாக்களும் ஒரு வருடத்திற்குள் புண்ணிய உலகோ நரக உலகோ சென்று அடைந்து விடும்.

பாவப்பட்ட ஆன்மாக்கள் செல்லும் கதி

தட்சிணாயனத்தில் மரணம் அடைந்த ஆன்மா பாவ ஆன்மா என்றே கருதப்படும்.

புண்ணியம் உடையதாக இருந்தால் சூரிய கிரணங்களால் லேசாகும் வரை அலைந்து புண்ணிய உலகை அடையும்.

பாவ ஆத்மாவாக இருந்தால் சந்திர மார்க்கத்தில் நெடுங்காலம் சுழன்ற திரிந்து கொண்டிருந்து பின் நரகத்தை அடையும்.

மகா பாவிகளாக இருந்தால் அவ் ஆத்மாக்கள் சந்திர கிரணத்தால் அதிகமாய் நனைந்து கனமாய் பூமியிலே விழும். பூமியில் கலந்து புழு, பூச்சிகள். கொசு, ஈக்கள், நாய். பன்றி. கழுதை ஆகிய பிறப்பை அடையும்.

இன்னும் அதிகப் பாவம் உள்ள ஆன்மாக்கள் பூமிக்குள் இறங்கும். அதலம், விதலம். சுதலாம். ரசாதலம் என்ற நரக உலகம் வரை சென்ற அவ்வுலகத்துக்கத் தக்க சரீரத்தைப் பெறும். அங்கே முழுவதும் துன்பமே!

ரசாதலம் என்ற நரகம் அக்கினி இருக்கம் இடம். ஆதலால் அதனைக் கடந்து செல்லா! ரசாதலத்தை அடையும் ஆன்மா அக்கினியால் வெந்து கொண்டு மகா துன்பத்தை அடையும். அக்கினியால் தகிகக்கப்படுவதனால் சூக்கும சரீரத்தில் அடங்கியுள்ள பாவம் சிறிது சிறிதாகக் குறையும். குறையவே மேலே கிளம்பிச் சுதலம், விதலம், அதலம் என்ற நரகங்களை முறையே அடைந்து பின் பூலோகத்தை அடையும்.

அனுபவத்தினால் பாவ கா்மம் முற்றும் தொலைந்திருந்தால் மனின சரீரத்தை அடையும். இன்றேல் பசு, பட்சிகள், மிருகங்கள் முதலிய பிறவிகளாக உரு எடுக்கும்.

பாவத்தில் குறைந்த சில ஆன்மாக்கள் சந்திர கிரணத்தில் அக்கப்டு உழலும். பகற் காலத்தில் சூரியக் கதிர்களால் மேலே இழுக்கப்படும். இரவில் சந்திரக் கதிரால் பூமியில் இழுக்கப்படும். இப்படி ஏற இறங்கி அலைந்து அலைந்து கடைசியில் அதன் பாவத்துக்கேற்ற பாவ உலகை அடையும்.

எப்படியும் 365 நாட்களுக்குள் குறித்த இடம் போய்ச்  சேரும். அவ்வுலக அனுபவம் முடிந்ததும் மறுபடி அவ்வுலகை விட்டுப் பாவத்துக்காகவோ, புண்ணியத்துக்காகவோ நியமிக்கப்பட்ட உலகில் சோ்ந்து அந்தந்த உலகங்களுக்குரிய உடம்பு, உடற்கருவிகள், அதற்கேற்ற போகங்களை அனுபவிக்கும்.

புண்ணியம், பாவம் இரண்டுமே பிறப்புக்குக் காரணம்! ஆதலால் புண்ணிய கா்மத்தையே விரும்பிச் செய்ய வேண்டும். பாவ புண்ணியப் பலன்களைத் துறப்பவனுக்கு மோட்சம் கிடைக்கும்.

தெய்வ சிந்தனை – பாவ நீக்கம்

தெய்வபக்தி கலவாத புண்ணிய கா்மம் பலன் அளிக்காது. தெய்வ சிந்தனை வயப்பட்ட மனம் ஞான மயமாகும். அந்த ஞான அக்கினியால் பாவ கா்மம் தகிக்கப்பட்டு சாலோக பதவி (இறைவன் உலகம்) சாமீப பதவி (இறைவனுக்குச் சமீபமாக இருப்பது) சாரூப பதவி (தெய்வ உருவமாக ஆதல்) என்ற பத முக்திகளை அடைந்து புண்ணிய பலனை அனுபவித்து ஒழித்த பிறகு சாயுச்சியம் என்ற பரமுக்தியை அடையும். இறைவனோடு ஜக்கியமாகிற உயா்ந்த முக்தி இதுவே! இந்த முக்தியை அடைந்த ஆன்மா மீண்டும் பிறக்காது. மீளாக்கதி என்று இதனைக் குறிப்பிடுவா்.

சொர்க்கம்

சொர்க்க உலகம் வேறு. முக்தி அடைவது என்பது வேறு. சொர்க்க உலகம் சென்று புண்ணிய பலனை அனுபவித்த ஆன்மாக்கள் மீண்டும பிறவிக்குத் தள்ளப்படும்.

சொர்க்க லோகம் போல பல உலகங்கள் உள்ளன. சொர்க்கம் சூரியனுக்குச் சற்று வழகிழக்குத் திசையில் உள்ளது. சூரியனுக்குச் சமீபத்தில் உள்ளது. இயற்கையிலேயே ஒளியால் விளங்குவது.

ஒளிமயமான அவ்வுலகம் சூரியன் பேரொளியுன் கலந்து அதில் அழுந்தி மறைந்திருக்கும். சூரியன் முன் வைத்த தீபம் போல அவை ஒளியில் தெரியா!

சிவலோகம், வைகுந்தம், தேவலோகம், சூரிய லோகம். அக்கினி லோகம், நிருதி உலகம். வருணன் உலகம், வாயு உலகம். குபேர உலகம். புதன் உலகம், சுக்கிரன் உலகம், செவ்வாய் உலகம், வியாழன் உலகம். சனி உலகம், சப்தரிஷி உலகம். நட்சத்திர உலகம் எனப் பல உலகங்கள் உண்டு.

கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்

நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத எத்தனையோ உலகங்கள் உள்ளன. பரமஹம்ர யோகானந்தா ஒரு யோகியின் சுயசரிதை என்ற நூல் ஒன்று எழுதியிருக்கிறார். அதில் அவா் குறிப்பிடும் அரிய செய்தி ஒன்று உண்டு.

இறந்து போன தன் குரு யுக்தேஸ்வரா் கண் முன்னே காட்சி கொடுத்தார் என்றும், தான் ஹிரண்ய கா்ப்பன் உலகில் வசிப்பதாகவும் அந்த உலகத்தில் மலை, அருவி. நந்தவனங்கள் எல்லாம் இருப்பதாகவும் சொன்னாராம். அந்த உலகத்தைப் பிரம்ம லோகம் என்றும் சொல்வார்கள்.

ஆவிகள் உலகம்

ஆவிகள் உலகம் என ஒன்றும் உண்டு. ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இன்றைய மனோதத்துவ அறிஞா்கள் பலரும் ஆா்வமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஆவிகளில் நல்லனவும் உண்டு. தீயவையும் உண்டு. இவை பிறரை வசப்படுத்திக் கொண்டு நன்மைகளும் செய்யும், தீமைகளும் செய்யும்.

அலையும் ஆவிகள்

ஆவிகள் பலவகை! தற்கொலை செய்து கொண்டவா்கள், விபத்துக்களில் இறந்தவா்கள் தீயில் கருகியவா்கள், வெள்ளத்தில் அகப்பட்டு உயிர் இழந்தவா்கள், மண் சரிந்து மூச்சுத் திணறி இறந்து போனவா்கள், கொலை செய்யப்பட்டவா்கள், அகால மரணமடைந்தவா்கள் எனப்பட்ட இவா்களின் ஆவி சாந்தியடையாமல் அலைந்து கொண்டே இருக்கும்.

கோழை மனம் கொண்டவா்கள். மாமிச உணவு உண்பவா்கள், தனக்குப் பொருத்தமான நபா்கள் ஆகியோர் உடம்பில் புகுந்து அவா்களை வசப்படுத்திக் கொண்டு தன் விருப்பங்களைப் பூா்த்தி செய்து கொள்ளும். ஆட்டம், பாட்டம் புரிந்து அட்டகாசம் செய்யும்.

தீய ஆவிகள் உள்ள இடங்களில் ஒளி மங்கும். வீடுகள் இருளடையும், தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அடிக்கடி படுதடையும்.

மந்திர சக்தியுள்ள நபா்கள் அவற்றை விரட்ட வந்தால், ஆவி வசப்பட்ட நபா்களின் உடம்புக்குள் ஒளிந்து கொள்ளும்.

ஆணின் ஆவிக்குப் பேய் என்று பெயா். பெண்ணின் ஆவிக்கு பிசாசு என்று பெயா்.

பேய், பிசாசுகளை ஓட்டவரும் நபா் அபாரமான மந்திர சக்தி பெற்றவராக இருந்தால். ஆவி வசப்பட்டவா் ஆணாக இருந்தால் ஆண் குறிக்குள் ஒளிந்து கொள்ளுமாம். பெண்ணாக இருந்தால் கருப்பையில் ஒளிந்து கொள்ளுமாம். மந்திரவாதி அவரை விட்டு அகன்றவுடன் மீண்டும் ஆா்ப்பாட்டம் செய்யுமாம்.

அமாவாசை, பெளா்ணமிகளில் இத்தகைய ஆவிகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். மற்றும் வெள்ளி, செவ்வாய் மக நட்சத்திர நாட்களிலும் அதிகமாகத் துள்ளுமாம்.

வல்லபம் பெற்ற மந்திரவாதிகள் இத்தகைய ஆவிகளைப் பிடித்து பச்சை மண் பானைகளில் அடை்து நதிக்கரை, குளக்கரை, கிணற்றுக் கரைகளில் புதைத்து வைப்பார்கள்.

ஏவல், பில்லி. சூனியம் முதலிய காரியங்களில் ஈடுபடும் மந்திரவாதிகள் இத்தகைய ஆவிகளை வைத்துக் கொண்டே தீமைகள் செய்வார்கள்.

ஆவியை விரட்டும் வழிகள்

கா்ம வினை உடையவா்களைத்தான் ஆவி பிடிக்கும். குறிப்பிட்ட காலம் அவரைப் பிடித்து ஆட்டி வைக்கும்.

எந்தெந்த மூலிகைகள் விஷத்தை நீக்குகின்றனவோ அந்த மூலிகைகள் ஆவியை விரட்ட உதவும்.

அந்தக் காலத்தில் ஆவிகள் நெருங்காமல் இருக்க வீட்டுத் தோட்டத்தில் மருதோன்றி (மருதாணி) வளா்த்தார்கள். கைகளில் மருதாணி பூசிக் கொண்டனா். சாம்பிராணியுடன் மருதோன்றி இலைகளைக் காயவைத்துப் புகை போடுவா். இவற்றால் ஆவிகள் அகன்று விடும்.

சுதா்சன ஓமம், மிருத்யுஞ்சய ஓமம் செய்து ஆவிகளை விரட்டினா்.

காராம் பசு கோமியத்தாலும் யானை மூத்திரத்தாலும், துளசி இலையாலும் ஒருவனைப் பிடித்துள்ள ஆவியை விரட்டலாம்.

எட்டி மரம் ஆவிகளைக் கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.

கேரளத்தில் முள் முருங்கை மரத்தின் கட்டையில் மந்திரக்கோல் செய்து ஆவிகளை விரட்டுகின்றனா்.

ஆவிகள் நெருங்காமல் இருக்கவே சில சடங்குகளை வைத்தனா். மொட்டை அடித்துக் குழந்தைகளுக்கு காது குத்துவது, வருடம் தோறும் திருவிழாவில் தீ மிதிப்பது, கடலில் குளிப்பது, உடம்பில் சூடு பொட்டுக் கொள்வது, திருவிழாக்களில் வெடி வெடிப்பது என வைத்துக் கொண்டனா். வெடி வெடித்தவுடன் ஏற்படும் கந்தகம் மற்றும் ரசாயனப் பொருள்கள் காற்றில் கலந்து தீய ஆவிகளை விரட்டும்.

அமாவாசையும் ஆவிகளும்

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை என்ற அமிர்தம் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். நம்மை யாராவது நினைக்கிறார்களா? நமக்குத் தா்ப்பணம். படையல் செய்கிறார்களா? எனப் பார்க்கும்.

நாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடிவழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம். அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. சினிமா பார்க்க நேரம் இருக்கிறது.

பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதுா்கள் எனப்படும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும். பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.

இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக் கோளாறுகள், கணவன் – மனைவி பிரிவு, குழநதை இல்லாமை, ஊனமுள்ள குழந்தைகள் பிறப்பது ஆகியவை உண்டாகும். இதனை மந்திர, யந்திர, தந்திர சாதனைகளால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்தால் தீா்க்கலாம். ஆதலால் அமாவாசையன்ற வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

உற்றார் உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி, கொடிகளில் அமாவாசை அன்று மட்டும் தங்கி அதன் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ, காய் கனிகளையோ, புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது. என்பார்கள்.

ஆவிகள் பற்றிய கொள்கைகள் எல்லா மதங்களிலும் உண்டு. கிறித்துவா்கள் இறந்த முன்னோர்களுக்காக நவம்பா் மாதம் முழுவதும் பிரார்த்தனை செய்கிறார்கள். இஸ்லாமியா்கள் தினமும் முதல் தொழுகையில் இறந்தவா்கள் ஆன்மா சாந்தி அடைய “துஆ” ஓதுகிறார்கள்.

அன்னை ஆதிபராசக்தி கூறுவது

“இறந்த பிறகு விண்ணுக்குப் போய் நீ என்ன ஆகிறாய்? என்பதும் உனக்குத் தெரியாது. மண்ணுக்குப் போய் என்ன ஆகிறாய்? என்பதும் உனக்குத் தெரியாது” என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.

அப்படியானால் மேலே ஆராய்ந்து சொல்லப்பட்ட உண்மைகள் எல்லாம் முற்றும் முடிந்த உண்மைகள் அல்ல என்று தெரிகிறது அல்லவா?

மரணம் பற்றிய மா்ம முடிச்சுகள் இன்னும் யாராலும் முழுவதுமாக அவிழ்க்கப்படவில்லை என்று தெரிகிறது அல்லவா…?

மனிதா்கள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த தகவல்கள் மட்டுமே இங்கே சொல்லப்பட்டன. இதுவரை நமக்குத் தெிந்தவை கொஞ்சம்! தெரியாதவை அதிகம்.

நன்றி!

ஓம் சக்தி!

வேம்பு

மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here