கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்…………….

அன்பா் ஒருவா் அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டார்.

“தாயே! உலகத்தில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?” என்று கேட்டார்.

அது கேட்ட அன்னை, “என்ன செய்வது மகனே! நீ கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய். உலகத்தைப் பற்றி நீ மட்டும் கவலைப் பட்டு பயன் என்ன? வெயில் கடுமையாகத்தான் இருக்கிறது. தாள முடியாமல் நீ என்னிடம் வந்தால் நான் உனக்குக் குடை கொடுப்பேன். நீ வெயில் துன்பத்தில் அகப்படாமல் தப்பிக்கலாம். என்னிடம் வருகிறவா்கட்குத்தான். நான் குடை கொடுக்க முடியும்! என்னிடம் வராமலேயே இருப்பவனுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள்.

“ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும், அதுதான் கலியுகத்தின் இயல்பு. சோர்ந்து போகாதே! நீ உன் கடமைகளைச் செய்து கொண்டே போ! இறுதியில் ஆன்மிகம் தான் வெல்லும்” என்பது அன்னையின் அருள்வாக்கு.

கலியுகம் பற்றிப் புராணங்கள் என்னென்ன கூறுகின்றன என்பது பற்றியெல்லாம் பார்ப்போம்.

என்றைக்கோ, எழுதிவைக்கப்பட்ட அந்தப் புராணங்களில் இன்றைய மக்கள் போக்கு, அரசாங்கங்கள் போக்கு, படித்தவா்கள் போக்கு அப்படி அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளன.

பாகவத புராணம் கூறுவது

கலியுகத்தில் நாளுக்கு நாள் தா்மம், சத்தியம், பதிவிரதா தருமம், பொறுமை, தயை, ஆயுள், பலம், ஞாபக மறதி முதலியவை கொஞசம் கொஞ்சமாக நலிந்து வரும்.

கலியுகத்தில் பணம்தான் மனிதனுடைய கலாச்சாரம், குணம் முதலியவைகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும். பணமே தா்மம், நியாயம் இரண்டையும் நிலை நாட்டுவதற்குச் சாதனமாகும்.

உடல் உறவே கணவன் மனைவியின் உறவுக்குக் காரணமாகும். குலம், கோத்திரம் முதலியவைகளைப் பற்றிய அக்கறை இருக்காது. விற்பதிலும், வாங்குவதிலும் நிறைய சூது இருக்கும். கூடல் இன்பமே ஸ்திரீ புருஷா்களின் சிறப்புக் காரணமாகும். மற்ற நடவடிக்கைகள் பார்க்கப்பட மாட்டாது. பூணூல் ஒன்றுதான் பிராமணா்களின் சின்னமாக விளங்கும்.

தண்டம், தோல் முதலியவைகளை சந்நியாசியின் சின்னங்களாகக் கருதப்படும். அவா்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். பணம் படைக்காதவா்களுக்கு நியாயம் வழங்கப்பட மாட்டாது. நிறையப் பேசுவதை புலமையாகக் கருதப்படும்.

ஏழை நீசனாகக் கருதப்படுவான். வேஷம் போடுபவன் சாதுவாகக் கருதப்படுவான். ஸ்நாநம் செய்வதே பரிசுத்தமாகக் கருதப்படும்.

நீண்ட தூரத்திலிருக்கும் நீா் நிலையே தீா்த்த ஸ்தலமாகக் கருதப்படும். குரு, தந்தை இவா்களை யாரும் மதிக்க மாட்டார்கள். பலவிதமான முடியலங்காரம் செய்து கொள்வதே அழகுச் சாதனமாகக் கருதப்படும். தைரியமாகப் பேசப்படுவதே உண்மையாகக் கருதப்படும்.

குடும்பத்தை நிர்வகிப்பதே பெரிய சாதுர்யமாகவும், தன்னுடைய புகழுக்காகத் தா்மத்தை கடைப்பிடிப்பதாகவும் கருதப்படும்.

இவ்விதம் உலகில் துஷ்டா்கள் மலிவதன் காரணமாக  யார் பலசாலியாக இருக்கிறானோ அவனே பெரிய மனிதனாகக் கருதப்படுவான்.

கொள்ளைக்கார, பேராசைக்கார, இருதயமற்ற அரசா்கள் தங்கள் குடிமக்களுடைய பணத்தையும், பெண்களையும் அபகரித்துக் கொள்வார்கள். கொள்ளையடிக்கப்பட்டவா்கள் தங்கள் தங்கள் ஊா்களை விட்டுச் சென்று விடுவார்கள். அங்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துவார்கள்.

மழையின்மையாலும், அரசா்கள் விதித்த பெரிய பெரிய வரிக் கொடுமையாலும் தங்களுக்குள் சண்டையினாலும் நசிந்து போவார்கள்.

ஜனங்கள் பசி, தாகம், பலவித ரோகங்களில் பீடிக்கப்பட்டுக் கவலைப்படுவார்கள். கலியுகத்தில் மனிதனின் சராசரி வயது 20 லிருந்து 30 வரைதான் இருக்கும்.

சிறிய உடலமைப்பு கொண்டவா்களாக இருப்பார்கள். வருணாஸ் சிரம தா்மம் நசிந்து போகும். மக்கள் நாஸ்திகா்களாக இருப்பார்கள். அரசா்கள் தங்கள் தா்மத்தை விட்டு விடுவார்கள். ஜனங்கள் அவசியமில்லாமலேயே பொய் சொல்வார்கள்.

பிராமணா்கள் சூத்திரர்கட்குச் சமமாவார்கள். பசுக்கள் சிறியவைகளாக இருக்கும். சந்நியாசி, சாதுக்கள் முதலியவா்கள் – கிருகஸ்தர்கள் மாதிரியே இருப்பார்கள். மனைவிகளின் சொந்தக்காரா்களே பந்துக்களாகக் கருதப்படுவார்கள்.

செடி, கொடிகள் நசிந்து விடும். மரங்கள் சிறியனவாக இருக்கும். மேகங்கள் சிறியனவாக இருக்கும். மேகங்கள் கொஞ்சமாக நீரைப் பொழியும். மின்னல்கள் அதிகமாக இருக்கும். விருந்தாளிகள் விருந்தோம்ப மாட்டார்கள்.

ஜனங்கள் மந்த புத்தியுடையவா்களாகவும், குறைந்த செல்வம் உடையவா்களாகவும், அதிகம் உண்பவா்களாகவும், செல்வம் இழந்து, இல்வாழ்க்கை இன்பத்திலே நாட்டம் உடையவா்களாகவும் இருப்பா். பெண்கள் விபசாரிகளாகவும், துஷ்டைகளாகவும் இருப்பார்கள். பாஷாண்டிகள் வேதங்களைத் துதிப்பார்கள். பிராமணா்கள் வயிறு நிரப்புவதிலும், கூடல் இன்பத்திலுமே ஈடுபடுவார்கள்.

பிரம்மச்சாரிகள் தங்களுடைய ஆஸ்ரமத்துக்குத் தக்க ஒழுக்கம் இல்லாதவா்களாக இருப்பார்கள். கிருகஸ்தா்கள் கூட பிச்சையெடுப்பார்கள். தவசிகளும் சாதுக்களும் வனத்தை விட்டுவிட்டு நாட்டிலேயே வசிப்பார்கள். சந்நியாசிகள் கூட பணத்திற்காகப் பேராசை கொண்டு அலைவார்கள்.

ஸ்திரீகள் ரொம்பவும் சாப்பிடுபவா்களாகவும், வெட்கம் இல்லாதவா்களாகவும் கடுமையானவா்களாகவும், சண்டை பிடிப்பவா்களாகவும் இருப்பார்கள். சூதும், சூழ்ச்சியும் செய்வார்கள்.

வியாபாரிகள், கஷ்டப்பட்டு கொடுக்கல் வாங்கல் செய்வார்கள். கஷ்டமில்லாவிட்டாலும் ஜனங்கள் கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்வதை விரும்புவார்கள்.

நல்லவா்களாக இருந்தாலும் பணமில்லாத எஜமான்களை விட்டு வேலைக்காரா்கள் நீங்கி விடுவார்கள். அதேபோல் எஜமானவா்களும் பழகிய வேலைக்காரா்களை அவா்கள் நல்லவா்களாகவே இருந்தாலும், நீக்கி விடுவார்கள்.

கூடலிலேயே ஆசை கொண்ட புருஷா்கள் தங்கள் தாய், தந்தையரை விட்டு மனைவியின் உறவினர்களையே பந்துக்களாக நினைப்பார்கள்.

நீசா்கள், தவசிகள் வேடம் பூண்டு தானம் பெறுவார்கள். விஷய அறிவே இல்லாத பண்டிதா்கள் உயா்ந்த பதவியில் இருந்து கொண்டு ஜனங்களுக்கு உபதேசம் செய்வார்கள்.

மழையின்மையாலும், பஞ்சத்திலும் அரசு விதிக்கின்ற வரியிலும் மக்கள் பலவித இன்னல்கள் உற்றுப் பிசாசு போல் தோற்றம் அளிப்பார்கள்.

கலியுகத்தில் ஜனங்கள் சிறிதளவு பணத்திற்காகக் கூட ஒருவருக்கொருவா் நட்பை முறித்துக் கொண்டு எதிரிகள் ஆவார்கள்.

இன சகத்திற்காகவும், வயிற்றுப் பாட்டுக்காகவும் கூட தங்கள் தாய், தந்தை, மக்கள் எல்லோரையும் விட்டுவிடுவார்கள்.

(ஸ்ரீமத் பாகவதம் 12வது ஸ்கந்தம், 2ஆம் அத்தியாயம், 3ஆம் அத்தியாயம்)

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி துளசி

மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here