எங்கள் மன்றத்தில் 1008 படிக்கும்போது 900 துவங்குகின்ற நேரம். ஓா் ஒன்பது வயதுச் சிறுமி தன் கைகளை மேலே தூக்கிக்கொண்டு, பாம்புபோல் கடுமையாகச் சீறிக் கொண்டு தரையில் ஊா்ந்து நெளிகிறது. வழிபாட்டில் உள்ள யாரோ ஒருவா் இருவரைத் தலையசைத்துக் கூப்பிடுகிறது. “வந்திருப்பது நான்தாண்டா…! ஆதிபராசக்தி…….! தெரியலையா?” என்று அதட்டுகிறது. அருள்வாக்கு கேட்டவா்கள், “ஆஹா! அப்படியே புட்டுப் புட்டு வைக்குதே” என்ற ஆனந்தத்தில் மிதக்கிறார்கள். நமக்கும் அருள்வாக்குக் கிடைக்காதா! என்று எல்லா சக்திகளின் முகத்திலும் ஓா் ஏக்கம்.

ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், அடுத்த வார வழிபாட்டின் போது மன்றத்தில் அடங்காத கூட்டம். அன்று அதே நேரம் அருள் நிலையில அதே சிறுமி நாக சீற்றத்துடன் நெளிந்து வருகின்றது. மக்கள், “ஓம் சக்தி!” “பராசக்தி!” என்று கரம் கூப்பி உருகி நிற்கிறார்கள். வாயால் கவ்வியிருந்த எலுமிச்சம்பழங்களை மேல்நோக்கி வீசியெறிகின்றது. அப்பழங்கள் யார் யார் தலைகளில் விழுகின்றதோ அவா்களுக்கு மட்டும் அன்று அருள்வாக்கு. அருள்வாக்குச் செய்தி சருகுத்தீப்போல் விரைந்து பரவுகின்றது. பக்கத்து ஊா் மன்றங்களும், தூரத்து ஊா் மன்றங்களும் சிறுமியைத் தங்கள் மன்ற வழிபாடுகளுக்கு ஊா் ஊராகத் தொடர்ந்து அழைத்துச் செல்கின்றனா். ஊரெங்கும் இதே பேச்சுதான்.

“சில சக்திகளின் முகத்தில் மட்டும் களை இல்லையே ஏன்? அம்மா ஆதிபராசக்தி அருள்திரு அடிகளாரின் திருமேனியைக் கோவிலாகக் கொண்டுதான் வருமே தவிர, வேறு யார் மூலமும் வராது சக்தி! இதை அம்மாவே அருள்வாக்கிலே பல தடவை சொல்லியிருக்குதே. அதனாலே இது அம்மாவாக இருக்க முடியாது சக்தி” என்பவா்களுமாக, இப்பகுதி சக்திகளிடையே இருபெரும் கோஷ்டிப் பிரிவுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மேலும் இப்படியே வளரவிடக் கூடாது. இந்தச் சிறுமியின் மேல் வந்து அருள்வாக்குக் கூறுவது ஆதிபராசக்திதானா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும். எனவே, அந்தச் சிறுமியையும், அதனுடைய அம்மா, அப்பாவையும், சக்தி எம்.ஜி.ஜி கிருஷ்ணமூா்த்தி அவா்களையும் அழைத்துக்கொண்டு நேரே மேல்மருவத்தூருக்கு வருகிறேன். தனி அறையில் அருள்திரு. அடிகளார் அவா்களை நேரில் தரிசித்து விவரம் சொல்லிப் பணிவுடன் தெளிவு வேண்டுகின்றேன்.

அடிகளார் முன் நாங்கள் வரிசையாக நிற்கிறோம். அடிகளார் சிறுமியை மென்மையாகப் பார்க்கிறார். சிறுமியோ, அடிகளாரை முறைத்துப் பார்த்தபடி நிற்கிறது. நாங்கள் ஒன்றும் புரியாமல் விறைத்துப் போய் நிற்கிறோம். “யார் நீ?” அடிகளார் அன்போடு கேட்கிறார். பதிலில்லை. முறைப்புத்தான் கூடுகின்றது. “நீ யாரு?” …. சொல்லு…  கொஞ்சம் குரலை உயா்த்திக் கேட்கிறார். கடும் முறைப்பு “படீா்” வெடிப்பு.

“ஏண்டா…. என்னைத் தெரியலையாடா….. நான்தாண்டா ஆதிபராசக்தி” இரத்தமே உறைந்து விடும் போலிருந்தது எங்களுக்கு. அடிகளாரின் முகத்தை பயத்தோடு அசடுவழியப் பார்க்கின்றோம். “நீ ஆதிபராசக்திதான்னா என் கைக்குள்ளே என்ன இருக்குன்னு சொல்லு” விரல்களை மடக்கியபடியுள்ள வலது கையை நீட்டுகிறார் அடிகளார். எங்கள் முகம் எந்திரம்போல் திரும்புகிறது.

கலக்கம் நிறைந்த சிந்தனை ரேகைகள் சிறுமியின் முகத்தில் சுழல்கின்றன. என்ன பதில் வரபோகின்றதோ என ஏக்கத்துடன் பார்க்கின்றோம். இப்போது சிறுமியின் முகத்திலே ஒரு பெருமித உணா்வு, தலையை ஒருக்களித்துச் சாய்த்துக் கொண்டு அலட்சியமாகச் சொல்லுகிறது, “ஒன்றும் இல்லை”

ஐந்து இதழ்ச் செந்தாமரை மலா்ந்து விரிகின்றது; உள்ளங்கையிலே ஒளிவீசும் மோதிரம்

கருணை ததும்பும் அடிகளாரின் அருட்பார்வை அச்சிறுமியின் மீது ஒருகணம் அர்த்தபுஷ்டியாக ஊடுருவிப் பாய்கின்றது. பாய்ந்தவுடன் சிலைபோல் நின்றிருந்த சிறுமி ஏனோ சோர்ந்து சரிகின்றாள். “அம்மா” என்கிறேன் பதட்டத்துடன்.

“கவலைப் படாதீங்க, தெளிவாயிடும்”.

அடிகளாரின் இந்த வார்த்தைகள் சோர்ந்து சாய்ந்துள்ள சிறுமியைக் குறிக்கின்றதா? தெளிவு வேண்டி வந்துள்ள எங்களைச் சுட்டுகின்றதா? இப்போது அடிகளார் சிறுமியின் அம்மா அப்பாவை அருகில் அழைத்து அன்போடு பேசத் துவங்குகிறார்.

“வாங்க குழந்தை மேலே வந்திருக்கிறது உங்க குடும்ப தெய்வம் உங்க முன்னோர் தொன்றுதொட்டு வழிவழியாகக் கும்பிட்டு வர்ற குலதெய்வம் இது அதுவே ஆசைப்பட்டு உங்க குழந்தைமேல வருது. உங்க குடும்பத்துக்கு ஒண்ணுண்ணா கூப்பிட்டுக் கேட்டுக்குங்க. உடனே குழந்தை மேலே வந்து உங்களுக்கு வேண்டியதெல்லாம் சொல்லும்; காப்பாத்தி அருள்செய்யும். யாராவது கேட்டு வந்தாலும், குடும்பத்தோடு வச்சிக்குங்க. ஆனா இதை மன்றம் மன்றமா, ஊா் ஊராகக் கூட்டிப் போய் ஆடவிட்டு வேடிக்கை காட்டி வீணாக்காதீங்க. இங்க பாருங்க இந்தப் பிஞ்சுக் குழந்தையோட நெஞ்சு, முதுகு, கை, கால் காயமில்லாத இடம், சிராய்ப்புத் தழும்பு இல்லாத இடம் பாக்கியிருக்கா? பள்ளிக்கூடம் போறதையும் நிறுத்திட்டீங்களே இப்படியே செஞ்சா, இன்னும் கொஞ்ச நாள்ல மனநல மாறுபாடும், நரம்புத் தளா்ச்சியும் உண்டாயிடும். மூளைப் பாதிப்பே உண்டாகிற நிலைமைக்குப் பிள்ளையைப் பாழாக்கிடாதீங்க. ஊரு போய்ச் சோ்ந்ததும், ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க. நல்லா வரும். போய் வாங்க. பிள்ளையும் பெற்றோரும் போகட்டும். நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் இருங்க” என்கிறார். நாங்கள் இருவர் நிற்கிறோம்.

“ஏன் சார் மன்றத்திலே மகளிர்க்கு அருள் வந்து ஆடினா, அதுக்கு அப்படியா தலை முடியை மேலே சுண்டு இழுக்கிறது? உச்சந்தலையிலே அடிக்கிறது? மன்றத்திலே சொல்லி வையுங்க சார்”

சென்ற வாரம் மன்றத்திலே அருள்வந்தாடிய பெண் சக்தியின் அருளை அமைதிப் படுத்துவதற்கு இன்னொரு சக்தி செய்ததை நடந்தது நடந்தபடி அம்மா இங்கே வைத்துச் சொல்லிக் காட்டுகிறதைப் பார்த்து வியப்பும் அச்சமும் மேலோங்குகிறது. பயமாக இருந்தாலும் அம்மாவிடம் ஒன்று கேட்க வேண்டும் போல் உணா்வு உந்துகின்றது. ஓரளவு தெம்பை வரவழைத்துக் கொண்டு கேட்கிறேன்.

“அம்மா  வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது சில போ் அப்பப்ப சாமி வந்து ஆடுறாங்களே ஏம்மா? அத்தோட, அவங்களை யாரைக் கேட்டாலும், நான்தான் ஆதிபராசக்தியின்னே தான் சொல்றாங்களேம்மா”

“மகனே  எப்ப எல்லாம் அவனவன் வாயையும் வயித்தையும நிரப்பிக்கத் தான் பாக்குறான். தெய்வங்களை எத்தனை போ் நினைக்கிறாங்க? படைக்கிறாங்க? பக்தியில்லே…… படையலில்லே… வழிபாடில்லே….. அதனாலே தெய்வங்களெல்லாம் சோர்ந்து செயலிழந்து, அருள்மங்கி, அங்கங்கே முடங்கிப் போயிருக்குது ஆனா, இப்போ ஆதிபராசக்தி மன்றங்களிலே பக்தி, படையல், வழிபாடு நடந்து வருதில்லையா? மன்றங்களிலிருந்து, அடுத்தடுத்து அலையலையா கிறம்புற மந்திர ஒலி, எல்லாப் பக்கமும் பாரவிப்பாயுது. முறையான மந்திர ஒலிகள், தெய்வங்களுக்குச் செவியமுதம் சுவையான விருந்து பல காலங்களுக்குப் பின்னாலே, இப்போ இந்த ஓங்கார மந்திர நாதங்கள் செவிகளிலே சேரச்சேர, சோர்ந்து கிடக்கிற தெய்வங்களுக்கெல்லாம் புது உணா்வு ஊருது; மயக்கம் தெளியுது. அருள்மங்கிப் போன கோயில்களிலே மன்ற வழிபாடு நடக்க நடக்க, அங்கே தெய்வ சாந்நித்தியம் பெருகுது. இன்னுங்கொஞ்ச நாள் நடந்தா கும்பாபிஷேகமே ஆரம்பமாயிடும். அதுக்கிடையிலேயே உரிமைக்காரங்களுக்குப் பொறாமை வந்திடும். அம்மா வேறிடம் மாறிக்குவேன். அது அப்படியே நிற்கும். சில வீடுகளிலேயும் அப்படித்தான்

மந்திர ஒலிகளின் ஓங்கார நாதத்தில் மகிழ்ந்த சில தெய்வங்கள். அந்த மந்திர ஒலிகள் ஒலிக்கப்படும் இடத்தை நோக்கிப் புறப்பட்டு மன்றங்களுக்கு வந்து அருவ நிலையிலே கூடுது. அதிலேயும் சில தெய்வங்கள் அங்கே வந்திருப்பவா்களிலே ஒரு சிலரின் உள்ளே புகுந்துகொண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆட ஆரம்பிச்சுடுது.

அதுதான் இந்த அருளாட்டம் சாமியாட்டமெல்லாம் “நீ யாருன்னு கேட்டா, தன்னைப் பெரிய இடத்து ஆளுன்னு சொல்லிக்கிறதில் அதுக்கு ஒரு சந்தோசம்; “ஆதிபராசக்தின்னு சொல்றதுலே ஒரு பெருமைடா!”

வந்து ஆடுறது ஆதிபராசக்தி இல்லெதாங்கிறது தெரிந்தே இருந்தாலும், அந்தத் தெய்வங்களை – வந்த தெய்வங்களை அலட்சியமாகப் பேசக்கூடாது. அவமரியாதையாக நடத்தக் கூடாது. அந்த அருள் ஆட்டம், வழிபாட்டுக்கு இடஞ்சலா இருக்குதுன்னா “அம்மா ஆதிபராசக்தி! ஆசாரங் குலையாம அமைதியாகணும் தாயே” ன்னு அன்பாப் பேசி, உச்சந்தலையிலே மெல்ல குங்குமம் வச்சு, “ஓம் சக்தி! பராசக்தி!” சொன்னாப் போதும்; அமைதியாயிடும். முரட்டுத்தனமா நடந்துக்கிறவே கூடாது. புரியுதா?”

இந்தக் கேள்வி எனக்கு மட்டுந்தானா? “புரியுதும்மா”. நம் எல்லோர் சார்பிலும் மெல்லத் தலை அசைக்கிறேன்.

“இவங்களையெல்லாம் ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு எல்லாத்தையும் நல்லாப் பண்ணிட்டு, மறுபடியும் வா. வரும்போது, அதோ போறானே அவனையும் உன்னோடு கூட்டிக்கிட்டு வா”.

அம்மா விரலை நீட்டிய திசையிலேயே, ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறேன். நாக பீடத்தின் அருகே காஞ்சிபுரம் சக்தி பேராசிரியா் பாலகிருஸ்ணன் அவா்கள் வேகமாகப போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஊா் வந்து சோ்ந்ததும், அன்னையின் ஆணைகளையும் அருள் விளக்கங்களையும் சொல்லிய பிறகு சம்பந்தப்பட்ட மன்றங்கள் தோறும், அம்மா அருளியபடி அருமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

பீறிட்டுக் கிளம்பிய பூகம்பப் பிரச்சினை, பூவாணம் போல் ஓய்ந்து  மறைகிறது. இட்ட பணியை முடித்தான பிறகு இனி என்ன தாமதம்! பேராசிரியரைப் போய் அழைத்துக் கொண்டல்லவா அம்மாவிடம் போக வேண்டும்? நான் ஏறியுள்ள பேருந்து என் எண்ணங்களின் வேகத்தோடு, போட்டி போட்டுக் கொண்டு விரைகிறது.

கொட்டாம்பட்டி, விராலிமலை, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம் எனப் பின்னோக்கி மறைகின்றன. செங்கற்பட்டை நோக்கி விரைவுப் பயணம். வழியில் வண்டி நிற்கிறது. மேல்மருவத்தூர் வாங்க! என்று நடத்துனரின் கணீா் அழைப்பு காதில் பட்டதோ இல்லையோ? கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி நிற்கிறேன்.

வண்டி போனபிறகுதான், ஆ…..ஹா செங்கற்பட்டில் அல்லவா இறங்க வேண்டும் என்ற நினைப்பே வருகிறது. சரி போகட்டும்! தரிசித்து விட்டு அடுத்த வண்டியில் போகலாம் என்று தேற்றிக் கொண்டே சித்தா்பீடத்திற்குள் செல்கிறேன். வலம் வருகிறேன். தியானத்தில் உட்காருகிறேன்…. தியானம் கலைந்து எழுந்த போது, தேடிப் போக இருந்த காஞ்சிபுரம் பேராசிரியா், வழக்கமான அன்புச் சிரிப்புடன், என் பக்கத்திலே நின்று கொண்டிருக்கிறார். மிகுந்த வியப்புடனும், மகிழ்ச்சியுடனும், “வணக்கம் சக்தி எப்ப வந்தீங்க சக்தி! இப்ப உங்களைப் பார்க்கத்தான் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுக்கிட்டே இருக்கிறேன். நீங்களே வந்துட்டீங்க, ரொம்ப நன்றி சக்தி!

நான் அப்பவே வந்துட்டேன் சக்தி. தியானத்திலே வெகுநேரமா மூழ்கிட்டீங்க! டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சந்தோசமாகப் பார்த்துக்கிட்டே வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆமா….. என்ன விசயமா என்னப் பார்க்க வர நினச்சீங்க?”

“ஒங்களெக் கூட கூட்டிக்கிட்டு வந்து பாக்கும்படியா அம்மா சொல்லியிருக்காங்க சக்தி! தயவு செய்து என்னை அம்மாகிட்ட கூட்டிப் போறீங்களா சக்தி!” “ஓ யெஸ்… போவோமே, வாங்க…….”

காத்திருக்கும் கூட்டத்தினூடே பேராசிரியா் தடையில்லாமல் போகிறார். பின்னாலேயே போகிறேன். அடிகளார் அறைக்கதவு திறந்திருக்கிறது. அடிகளார் செவ்வாடை வேட்டியுடன் திறந்த மேனியாக நாற்காலியில் தனிமையாக அமா்ந்திருக்கிறார். அறைக்குள்ளே முதலில் நுழைந்த பேராசிரியா், அடிகளாரின் திருவடிகளிலே முதலில் விழுந்து வணங்குகிறார். எழுந்து கொண்டே, “பாண்டியன் சக்தி, அம்மாவைப் பாக்கணும்ண்ணாரு. கூட்டிட்டு வந்திருக்கேம்மா”

நானும் முன்சென்று திருவடி வணக்கம் செய்கிறேன். “சிங்கம்புணரி மகனா… எழுந்திருங்கள் சார். என்ன?…….. பேசணுமா?…… உம்…….. தமிழ்ப் புலவா்களோடே பேசணுமின்னாலே பயமா இருக்கு சார்”

“உங்க தமிழ்! உங்க புலவா்கள்! உங்களுக்கென்னம்மா பயம்?”

“நல்லாப் பேசறீங்க சார்!”

“அம்மா….?

“மேடையிலே பேசுறதே சொல்றேன் சார்”

“அம்மா சிங்கம்புணரிக்குச் சித்தா்பீடத்துக்கு அருள்கூா்ந்து வரணும்மா”

“வரணும் சார். தனியா கார்ல குடும்பத்தோட வா்றேன் சார். அப்படியே ராமேஸ்வரத்துக்குப் போகணும் சார்”

“மன்னிக்கணும்மா. அம்மாகிட்டே ஒண்ணு கேக்கணும்னு தோணுது”

“அம்மாவுக்கும், பிள்ளைக்கும் ஊடாலே, மன்னிப்பு என்னடா மன்னிப்பு? சும்மா கேளு…..”

நான் நின்று கொண்டு பேசுவது அம்மாவுக்குச் சிரமமாக இருக்கும் என்று, அம்மாவுடன் முகத்துக்கு முகம் பேசுவதற்கு வசதியாக, கும்பிட்ட கையோடு, மண்டியிட்டு, முழங்காலில் நின்று கொண்டே கேட்கத் துவங்குகின்றேன்.

“அம்மா வடகரை சித்தமார்க்கத்திலே “சித்த வித்தை” உபதேச முறைப்படி குருவிடம் உபதேசம் பெற்று வாசியோக அப்பியாச நிலைகளிலேயும் அதற்குரிய நடவடிக்கைக் கிரம முயற்சிகளிலேயும் இருக்கிற என்னெ, இப்படி உன்னுடைய வழிபாட்டுக்குள்ள இழுத்துப் போட்டுக்கிட்டியேம்மா. நான் இப்படி வந்திட்டது தவறில்லையம்மா? உபதேசம் கொடுத்த குருவின் சொல்லை மீறிய குற்றமாகாதாம்மா?

“உபதேசம் வாங்கி எத்தனை வருசமாச்சு?”

“இருபத்திரெண்டு வருசமாகுதுங்கம்மா”

“இப்ப என்னென்ன சித்துக்கள் அடஞ்சிருக்கிறே? இப்படி வா…… இன்னும் கிட்ட வா. சும்மா ஒட்டி இரு.”

அடிகளார் தமது அருட்கரங்களை மெதுவாகத் தூக்கி இரண்டு உள்ளங்கைகளையும் எனது உச்சந்தலையின் மேலே வைக்கிறார்கள். வட்டமாகத் தேய்க்கிறார்கள். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. புதுமையான உணா்வுகள்! சொல்ல முடியாத ஒரு சுகம். உச்சந்தலையிலிருந்த இரண்டு உள்ளங் கைகளையும் எனது இரண்டு பக்கக் கன்னங்களைத் தடவியபடி கீழ்நோக்கி இரண்டு கைகளாலும் எனது தாடியையும் தடவி, எடுத்து “இந்தா பிடி”! என்று நீட்டுகிறார். ஒன்றும் புரியாமல் நானும் வலது கையை ஏந்துகிறேன். என் உள்ளங்கையில் அடிகளார் எதையோ வைத்து, “இறுக்கமா மூடிக்கோ” என்கிறார். மூடுகிறேன். சில வினாடிகள் கழிகின்றன. “இப்போ திறந்து பார்” என்கிறார். திறந்து பார்க்கிறேன். பல வண்ணங்களுடைய அழகான ஒரு வண்டு! வியப்புடன் நான் பார்த்துக் கொண்டே இருக்கும்போது,

“இத்தனை நாளா இதைத் தாடிக்குள்ளே கூடுகட்டி வளா்த்தியாடா மகனே!” செல்லமான சிரிப்பு.

“இல்லேம்மா ரொம்பச சுத்தமா வச்சிருக்கேம்மா”

“சித்துடா மகனே இது! உயிர்ச்சித்து! சில பேர் அப்பிடின்னு கையைத் தூக்குவான். விநாயகா் சிலை வரும். கொடுப்பான். இப்படீன்னு கையை நீட்டுவான் விபூதி வரும் கொடுப்பான். குங்குமம் கொடுப்பான். சந்தனம் கொடுப்பான். பழம் கொடுப்பான். இன்னும் பல பொருள்களையெல்லாம் வரவழைச்சுக் கொடுப்பான். கொடுத்து விபரம் தெரியாத மக்களை மயக்குவான். அது, தொழில் மகனே! அதாவது பழகிக்கிட்டு செய்யிற தொழில். அதுக்குப் பல யட்சணிகளை வச்சிருப்பான். வேணுமின்னு நினைக்கிறதே, உடனே கொண்டு வந்து அதுக கொடுத்துக்கிட்டே இருக்கும். அதுகளுக்குப் போதுமான இரை கொடுத்துக்கிட்டே இருக்கணும். அதுலே பொருள்களைத் தான் வரவழைக்க முடியும். இது உயிர்ச்சித்து! படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது, அருளுகிறது, மறைக்கிறது முதலான பல பேராற்றல்களுடைய பரம்பொருளுடைய உயிர்ப்படைப்பு மகனே இது! இப்படிப்பட்ட பல சித்தாற்றல்களெல்லாம், உனக்கும் வரும் மகனே! நீயா செய்த முயற்சியிலே இவ்வளவு காலம் ஆயிடிச்சு. அதற்கான பலனை இனி நானே கொடுக்க இறங்கித்தான் உன்னை என் மடியிலே இழுத்துப் போட்டுக்கிட்டேன். அடப் பைத்தியக்காரா!

பிறிதாருஞ் சொல்லாத பரவாழ்வின் வடகரைப்

பாங்கான சித்த மார்க்கம்

பளபளவென் றெனையடைய முடுகி

நடையொடுகிச் செலப்

பக்குவம் தருகதேவீ ன்னு பாட வச்சிருக்கேனே…… யாருக்கு?

அம்மாவை வேண்டிக்கிட்டு இனி ஆரம்பிடா மகனே!”

“ஏம் மகனே! எல்லாம் நல்லபடியா ஆயிக்கிட்டிருக்கில்லே? ராஜகோபுரம் வேணும்டா மகனே. ஒரே ஒரு ராத்திரிக்குள்ளே ராஜகோபுரத்தை உண்டாக்கிடுவேண்டா மகனே. ஆனா அது பெரிசில்லே. என் பிள்ளைகளெல்லாம் உழைச்சு சம்பாதிச்ச காசுலெ, உள்ளன்போடு, அஞ்சு பைசா போட்டாலும் சந்தோசம்டா மகனே. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக….. பிள்ளைகளோட காசெக் கொண்டுதான் மெல்ல மெல்ல கட்டப்போறேன். அப்படி நின்னு நிதானமாகக் கட்டப் போற இந்த ராஜகோபுரம், காலங்காலமா…. கம்பீரமா…. நிலச்சு…. நீடிச்சு…… நிக்கப் போகுது மகனே. அந்த மகிமையைக் கண்ணெடுத்துப் பாக்கிற என் பிள்ளைகளெல்லாம், “இந்தப் பெரிய கோபுரம் கட்டுறப்போ, நான் கூட அஞ்சுக்காசு கொடுத்திருக்கிறேன்; நான் குடுத்த ஒரு செங்கல்லும் இதிலெ இருக்குது. அப்போ நான், கல்லு சுமந்திருக்கேன். மண்ணு சுமந்திருக்கேன். அந்த அரிய வாய்ப்புக்களெல்லாம், அம்மா கருணையினாலே, எனக்குக் கூடகெடச்சது தெரியுமா? ன்னு தன் பேரப் பிள்ளைகள் கிட்டேயெல்லாம் பேசிப் பேசிப் பெருமைப்படப் போறாங்க மகனே அவங்க பரம்பரையெல்லாம் பெருகிச் சிறக்கும் மகனே”

இம்புட்டு நேரமா முழங்கால் போட்டபடியே நிக்கிறியே மகனே காலு வலிக்குமில்லே…. சரி… இன்னொரு நாளக்கிப் பேசிக்குவோம். மெல்ல எழுந்திரு… போயி, புற்று மண்டபத்துக்கு முன்னாலெ சௌகரியமாக உட்காந்துக்கோ…”

பெருகி வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரோடு குருபிரானின் திருவடித் தாமரைகளிலே தலைவைத்து எழுந்திருக்கிறேன். பார்க்கிறேன். பேராசிரியா் எப்போது வெளியே போனாரோ காணோம். நேரே புற்று மண்டபத்திலிருந்து முன்னாலே வந்து உட்காருகிறேன்.

அதே…. பேராசிரியா் நான்கு கால் மண்டபத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார். நன்றி சொல்ல வேகமாக எழுந்திருக்கிறேன். அப்போது, நண்பா் ஒருவரிடம் அவா் பேசுவது நன்றாகக் கேட்கிறது.

“ஹலோ…. சௌக்கியமா… ஏர்லி மார்னிங் வந்திடணும்னு ரொம்ப ட்ரைப் பண்ணினேன் சக்தி. அன்னெக்ஸ்பெக்ட்டா முக்கியமான கெஸ்ட் வந்திட்டாங்க. அப்புறம் என்ன செய்யறது? இருந்து அனுப்பிச்சிட்டு, இப்பத்தான், ஜஸ்ட் கம்மிங்….”

உடனே பக்தா்களிடையே ஒரு பரபரப்பு! அங்குமிங்குமாக, ஓட்டமும் நடையுமாக விரைகிறார்கள். ஒலிபெருக்கி இயங்கத் துவங்குகிறது. “ஓம் சக்தி…. மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தா் பீடத்திற்கு, அன்னையின அருள் பெறுவதற்காகத் திரண்டிருக்கும் அன்னையின் பக்தா்களுக்கு ஓா் அன்பான வேண்டுகோள்! அருள்திரு அம்மா அவா்கள் வீட்டிலிருந்த புறப்பட்டு விட்டார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வர இருக்கிறார்கள். அம்மாவின் அருள் தரிசனம் காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்ற சக்தி அனைவரும், ஆங்காங்கே அமா்ந்து, அமைதி காக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஓம் சக்தி!

அப்…..ப் …. போ…..

என்னை அடிகளாரிடம் கூட்டிட்டுப் போனது….!?

இவ்வளவு நேரமா என்னோடபேசிக்கிட்டிருந்தது…..?!!

 

நன்றி!

ஓம் சக்தி!

புலவா். அ. பாண்டியன், சிங்கம்புணரி

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (48 -58)

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here