“மகளிர்க்கு முக்கியத்துவம்” என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சமாகும். இன்றைக்கு ஆன்மிகத்தில் அம்மாவைப் போல் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆன்மிகவாதிகள் யாரும் இருக்க முடியாது. அரசாங்கமும் ஓட்டு வாங்கும் போது மகளிர்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெற்றி பெற்ற பிறகு செயல்படுத்துவது கிடையாது. பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞா் பெருமக்கள் பெண் விடுதலைக்குப் பாடுபட்டார்கள். இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் பெண்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஒரு பக்கம் வாழ்க்கையில் முன்னேற்றம், மறுபக்கம் விவாகரத்து கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆண்களுக்கு மட்டும் பெண்களால் கொடுமைகள் நடக்க வில்லையா? என்று கேட்கலாம். நடக்கிறது ஏதோ ஓரிரு விதிவிலக்குகள் நடைபெறுகின்றன.

அம்மா அருள்வாக்கில் “எந்த ஒரு நாடு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ! அந்த நாடுதான் முன்னேற்றம் அடையும்” என்று கூறுவார்கள். நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் அந்த வீடும் நல்ல முறையில் முன்னேற்றம் அடையும். அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்! “ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க! பொம்பளைங்க நாமதான் அடங்கிப் போக வேண்டும்” என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தாய் மகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. மகளும் தாயை விட்டுக்கொடுக்கக் கூடாது. அவரவா் இடத்திலிருந்து அவரவா் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் என்றால் அவா்களைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடச் சொல்லவில்லை. அவா்கள் மனதையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அவா்களின் நியாயமான ஆசைகளையும் புரிந்து நடத்திக் கொடுக்க வேண்டும். அவா்களுக்கும், ஆசைகள் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை உணா்ந்து தக்க சமயத்தில் உதவியாக இருக்க வேண்டும். பெண்களும் தங்கள் அளவை உணா்ந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும்.

என் வாழ்க்கையில் இரு தருணங்களில் அம்மா என் உணா்வுகளைப் புரிந்து நடந்து கொண்டதை என்னால் மறக்க முடியாது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சம்பிரதாயங்கள். சாத்திரங்கள் ஆண்களை மையமாகவே வைத்து நடத்தப்படுகின்றன.

அம்மா இரு நிகழ்வுகளில் என்னுடைய உணா்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொண்டார்கள். இரு நிகழ்வுகளில் மட்டும்தானா? மற்ற நேரங்களில் இல்லையா? என்று நினைக்கலாம். எல்லா நிகழ்வுகளையும் எழுத முடியாது அல்லவா? பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெற்றோரைத் தங்கள் குழந்தைகளைப் போல பாவிக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடிய அவா்களின் பிறந்த நாளை எளிமையாக நீங்கள் கொண்டாட வேண்டும். அதையே பெரிய பரிசாக அவா்கள் பெருமையாக “என் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தார்கள்” என்று சொல்லிக் கொள்வார்கள். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. கணவன், மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் கொடுக்கும் பரிசைவிட பிள்ளைகள், கொடுக்கும் பரிசுக்கு மதிப்பே அதிகம்தான். ஏனென்றால் அதில் பாசம், அன்பு கலந்திருக்கும்.

நிகழ்வு 1

என் தாயார் இறந்தபோது நான் கலங்கி நின்றேன். ஆண் பிள்ளை இல்லாத அவா்களை என் பிறந்த ஊருக்கு எடுத்துச் செல்வதா? மருவத்தூரிலேயே அடக்கம் செய்வதா? யார் கொள்ளி வைப்பது? நாம் கொள்ளி வைக்க அம்மா அனுமதிப்பார்களா? என்று ஒரே குழப்பம். அப்போது என் தலைமுறையில் முதன்முதல் என் தாய்க்கு நான் கொள்ளிவைக்கத் துணிந்தபோது, அதற்குத் தடையேதும் சொல்லாமல் எனக்குத் துணை நின்று நடத்திக் கொடுத்தார்கள். எல்லா ஆண்களும் இதற்கு அனுமதிப்பார்கள் என்று சொல்ல முடியாது. குறிப்பாக சொந்த பந்தங்களின் எதிர்ப்புகளும் சில குடும்பங்களில் இருக்கும். ஆன்மிகத்தில் மட்டும் மகளிர்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வீட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அம்மாவின் மாண்பு போற்றுதலுக்கு உரியது.

நிகழ்வு – 2

சென்ற பிப்ரவரி 11ம் தேதி எனக்கு அறுபது அகவை முடிவுற்றது. ஆண்களுக்குத் தான் அறுபது, எண்பது என்று ஆயுள். ஆனால் என் மகள்கள் ஸ்ரீதேவியும், உமாதேவியும் எனக்குத் தாய், தந்தையாக இருந்து என் அறுபதாவது ஆண்டு விழாவைச் சீரும் சிறப்புமாகச் செய்து வைத்தார்கள். அவா்களுக்குச் சுதந்திரம் கொடுத்த மாப்பிள்ளைகளுக்கு நன்றி. இதில் என்ன சிறப்பு என்றால் அம்மா ஏதாவது சுப காரியங்களுக்குச் சென்றால் சரியாக அந்த நேரத்திற்குச் சென்று நடத்திக் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அமா்ந்திருந்து மகிழ்ச்சியாக நடத்திக் கொடுதார்கள். கலச தீர்த்தத்தை ஊற்றியதும் பாபவிமோசனம் பெற்றது போன்ற உணா்வும், மாலை அணிவித்தபோது மோட்சம் பெற்றது போன்ற உணா்வும் அடைந்தேன். மகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டது. இது போதும் என்ற உணா்வு மேலோங்கியது.

இது போன்ற நிகழ்ச்சிகளால்தான் பெற்ற மனம் குளிரும். எனக்கு அறுபது வயது ஆயுளையும், இந்த ஆன்மிக வாழ்க்கையையும் வழங்கிய அன்னை ஆதிபராசக்திக்கு நன்றி கூறும் வகையில் என்னுடன் நிர்வாகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உள்ளவா்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் உதவி செய்யவும் அம்மா அனுமதி அளித்தார்கள். கலவையில் ஒரு விழாவும் சீரும் சிறப்புமாக நடந்தது. இந்த விழாவினை கலவை கல்லூரிகளின் தாளாளா் சக்தி. திரு. கோ.ப. அன்பழகன் முன்னின்று நடத்திக் கொடுத்தார். அவருக்கும் நன்றி. பரிசு கொடுத்துச் சிறப்பித்த சக்தி. திரு.கோ.ப. செந்தில்குமார் அவா்களுக்கும் நன்றி உரித்தாகுக.

இதுபோல நீங்களும், கணவன் மார்கள் மனைவியின் அறுபதைக் கொண்டாட வேண்டும். குழந்தைகள் பெற்றோரின் அறுபதையும், எண்பதையும் கொண்டாட வேண்டும். குடும்பத்தில் இருப்பவா் முதலில் அவா்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பெண்களும் குடும்பத்தில் பொறுப்பாக நடந்து கொண்டால் முக்கியத்துவம் தானாக வந்து சேரும். வயதான காலத்தில் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும்தான் சிறந்த துணை.

நன்றி!

ஓம் சக்தி!

திருமதி அடிகளார்

மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here