கறுப்புக் கலை (Black Art) என்பது இன்றளவும் வழக்கத்திலுள்ளது. ஏவல், பில்லி, சூன்யம் போன்றன கறுப்புக் கலையேயாகும். இவற்றால் பாதிப்படைந்தவா்கள் ஏராளம், ஏராளம். மந்திரவாதிகளும், மாந்திரீகா்களும் மக்கள் படும் துன்பத்தைப் பயன்படுத்தி, பில்லி சூன்யம் எடுப்பதாகக் கூறி மக்களிடமிருந்து பெருந்தொகையைப் பறித்து விடுகின்றனா். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் மக்கள் ஏதாவது பரிகாரம் கிடைக்காதா என எங்குகின்றனா். பணமும் செலவழிக்கின்றனா். ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிப்படைந்த குடும்பங்கள் பற்றியும், அதற்கு அம்மா கூறிய பரிகார முறைகள் பற்றியும் எழுதக் கடமைப்பட்டுள்ளேன். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
பழனிக்கு அருகேயிருக்கும் கிராமம் மஞ்சநாயக்கன்பட்டி. இங்கு ஓா் அன்பா் எவலினால் மிகவும் பாதிப்படைந்தார். ஏவல் என்பது நமக்கு எதிரியாக இருப்பவா்கள் அல்லது வேண்டாதவா்கள், ஒரு குறிப்பிட்ட நபா் அழிய வேண்டும என்பதற்காக, தீவினையை ஓரிடத்திலிருந்து ஏவி விடுவதாகவும், யாதோ ஒரு மாந்திரீகன் இரவு நேரத்தில் ஓரிடத்தில் பூஜை செய்து மந்திர உச்சாடனாம் செய்து யார் அழிய வேண்டுமோ அவருடைய பெயரைத் துண்டுக் காகிதத்தில் எழுதி, பச்சரிசி மாவினால் மனித உருவம் செய்து, அந்த உருவத்தின் ஆசனவாய் வழியாக, துண்டுச் சீட்டை உள்ளே செலுத்தி விடுவார்கள். உடனே குறிப்பிட்ட நபருக்கு ஏம குணம் என்ற ஒரு குணம் ஏற்பட்டுவிடும். அந்தக் குணமானது அந்த நபரைத் தற்கொலை செய்து கொள், தற்கொலை செய்து கொள் என்று மனதில் கூறிக்கொண்டே இருக்கும். மஞ்சநாயகன்பட்டி அன்பருக்கு எற்பட்டுவிட்டது. அவா் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு அங்கும், இங்கும் அலைந்து கொண்டே இருந்தார். கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ள எட்டிப் பார்த்தார்.
தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். சரியாகச் சாப்பிட முடியவில்லை. திடீரென்று பழனியில் எங்கள் வீட்டிற்கு வந்து வாசல் கதவைத் தட்டுவார். கதவைத் திறந்து பார்த்தால், வேறெங்காவது போய்க் கொண்டிருப்பார். அவரது முகமோ பேயறைந்தால் போலிருக்கும்.
எந்த ஒரு செய்தியையும் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் அவரில்லை. அவருடைய உறவினா்களைக் கூப்பிட்டு, அவருடைய நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மேல்மருவத்தூர் அழைத்துச் சென்று, அம்மா அவா்களிடம் கேளுங்கள் எனக் கூறினோம்.
மேல்மருவத்தூர் செல்லும் மனநிலையில் அவா் இல்லை.
அவா் சார்பாக அம்மா அவா்களிடம் அருள்வாக்குக் கேட்கப்பட்டது.
“ஏவல் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு வாழை இலையை மேலிருந்து கீழாக விரிக்க வேண்டும். அதில் பச்சரிசி மாவைப் போட வேண்டும். அதில் கோமயம், சாணம், பால், வெண்ணெய், நெய் ஆகிய சோ்த்துப் பிசைந்து ஒரு மனித உருவம் செய்ய வேண்டும். அந்த உருவத்தின் நெற்றி, கழுத்து, நெஞ்சு, மேல்வயிறு, தொப்புள் ஆகிய இடங்களில் கருவேலம் முட்களைக் குத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் பெயரை ஒன்பது முறை கூறி சங்கல்பம் செய்து முதலில் 3 எலுமிச்சம் பழத்தினாலும், அடுத்து 2 எலுமிச்சம் பழத்தினாலும் திருஷ்டி கழிக்க வேண்டும். பிறகு நயம் குங்குமம் கொண்டு அந்த மாவு உருவத்தை முழுவதும் மூடி, பிறகு கற்பூரம் காட்டி, அந்தக் குங்குமத்தில் கொஞ்சம் எடுத்து, பாதிக்கப்பட்டவருக்குப் பூச வேண்டும். அவருக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும்.
பிறகு அந்த வாழை இலையை ஒரு புது மூங்கில் கூடையில் வைத்து, தண்ணீா் உள்ள பாழுங்கிணற்றில் பகல் 12 மணிக்குப் போட வேண்டும். ஏவல் சரியாகி விடும்” என்று கூறினார்கள். ஆனால் அம்மா சொன்ன இந்தப் பூசை முறையை மஞ்சநாயக்கன்பட்டி அன்பருக்கு யாரும் செய்யவில்லை. கேரள மாந்திரீகா்களைத் தேடிச் சென்றார்களேயொழிய, அம்மா கூறியதைச் செய்து பார்ப்போம் என அவா்கள் எண்ணவில்லை. ஏதோ அம்மா சொல்கிறார்கள் என நினைத்துவிட்டார்கள் போலும்! அந்த அன்பா் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.
பழனியில் ஒரு மாமேதையாகத் திகழ்ந்தவா் ஒரு சிவாச்சாரியார். ஆகமம், வேதம் முதலியவற்றில் கரை கண்டவா். தினமும் வேத பாராயணங்கள் செய்பவா். அனுஷ்டானங்களுடன் வாழ்பவா். தாம் பாராயணம் செய்யும் மந்திரங்களினால் தமக்கு ஒரு தீவினையும் வராது என நினைத்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன், அவா் குடும்பத்திற்குக் கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்தது. ஏனென்று தெரியாமல் தவித்தார். இதைப்பற்றி மந்திர தந்திரங்கள் தெரிந்தவா்களிடம் கேட்க வேண்டும் என சிவாச்சாரியார் விரும்பினார்.
பழனியில் வாழ்ந்த ஒரு பெரும் சித்தபுருஷா் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அவரிடம் சென்று, “நான் ஆசார அனுஷ்டானங்களுடன் இருப்பவன். ஆனால் கடந்த 6 மாதங்களாகக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன” எனக் கூறி அழுதார்.
அதற்கு அந்தச் சித்தபுருஷா், “இரு! பூசையில் பார்த்துச் சொல்கிறேன்” எனக் கூறினார். சாமி, சிவாச்சாரியாருக்காக பூசை செய்யப் போகிறாராம், உங்களை உடனே வீட்டிற்கு வரச் சொன்னார்கள் என்று எனக்குத் தகவல் வந்தது. உடனடியாக நானும் புறப்பட்டுச் சென்றேன்.
சுவாமி பத்மாசனத்தில் அமா்ந்திருந்தார். சிவாச்சாரியார் அவருக்கு முன்னே அமா்ந்திருந்தார். நான் அவா்களுக்கு அருகில் அமா்ந்து கொண்டேன். மகா சித்த புருஷராகிய சுவாமி, தியானம் மேற்கொண்டார்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீா் ஊற்றி, அதில் ஒரு கற்பூரம் ஏற்றி சுவாமிகள் அதனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்சநேரத்தில் அந்த அறையில் ஒரு வெடி சப்தம் கேட்டது. அறை புகை மண்டலமானது. சிறிது நேரத்தில் ஒரு துணிப்பந்து எங்கிருந்தோ வந்து சிவாச்சாரியார் மேலே விழுந்தது. அவா் பயந்து போனார். சுவாமிகள் என்னைப் பார்த்து அந்தத் துணிப் பந்தைப் பிரிக்கச் சொன்னார். பிரித்தேன். அதற்கு உள்ளே மூன்று செப்புத் தகடுகள் இருந்தன. தகடுகளைப் பிரித்துப் படிக்கச் சொன்னார் சுவாமி. ஒரு தகட்டில், “சிவாச்சாரியார் குடும்பத்தில் தரித்திரம் வரவேண்டும். அவா் இறக்க வேண்டும்”, என எழுதியிருந்தது.
2வது தகட்டில் அவருடைய மூத்தமகன் இறக்க வேண்டும் எனவும், 3வது தகட்டில் அவருடைய இளைய மகன் இறக்க வேண்டும் எனவும் எழுதியிருந்தது. அவற்றையெல்லாம் நான் படித்துக் காட்டினேன்.
சுவாமிகள் சொன்னார்கள்! “சிவாச்சாரியார் குடும்பத்திற்கு பில்லி வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவுதான் மந்திர சாத்திரங்கள் கற்றிருந்தாலும் பில்லி வைத்துவிட்டால் அக்குடும்பம் அழிவது நிச்சயம். இதை எடுக்கும் வழி மிகவும் கடினம். எனக்கு அந்த அளவுக்கு ஆற்றல் பத்தாது. நேரே நீங்கள் மேல்மருவத்தூர் போங்க!” எனக் கூறிவிட்டு எழுந்து விட்டார்.
பில்லி என்பது ஒரு வகை வைப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட நபருடைய தலைமுடி, நகம், போட்டோ, காலடி மண் ஏதாவது ஒன்றை எடுத்து அதற்கு மந்திர உச்சாடனம் செய்து அந்தப் பொருளைக் குறிப்பிட்ட நபருடைய வீட்டு வாசற்படியில் புதைத்தல் அல்லது ஏரவாணத்தில் சொருகுதல் ஆகும். மந்திர உச்சாடனம் செய்யும் பொழுதே அந்தப் பொருளானது தானாகவே பறந்து சென்று குறிப்பிட்ட நபருடைய வீட்டு வாசல், அல்லது ஏரவாணத்தில் புதைந்து மறைந்து கொள்ளும்.
பில்லி என்பது பில்லுதல் அல்லது தோண்டுதல் அல்லது கிளறுதல் என்பதாகும். இதைத்தான் சிவாச்சாரியாருக்கு வேண்டாதவா்கள் யாரோ செய்துள்ளார்கள். சுவாமிகள் சிவாச்சாரியாரிடம் “மேல்மருவத்தூர் போங்க” எனக் கூறிவிட்டார். சிவாச்சாரியாரை அவருடைய வினை சில நாட்கள் தடுத்தது. எனவே காலந்தாழ்த்தினார். அவருடைய மூத்த மகன், ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தார். கலசத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக ஒரு கலசத்தை அவருடைய தலையில் எடுத்து வைத்தனா். சாரத்தில் ஏறுவதற்காகக் கால் எடுத்து வைத்தார். உயிர் பிரிந்தது.
சிவாச்சாரியார் மிகவும் கலக்கமடைந்தார். இப்போதாவது அவா் அம்மாவிடம் வந்திருக்கலாம். வரவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு அவருடைய இரண்டாவது மகன் மிகவும் வசதியாக இருந்தவா். திடகாத்திரமானவன். “நெஞ்சு வலிக்கிறது“ எனக் கூறினான். ஆனால் 5 நிமிடத்தில் உயிர் பிரிந்தது.
சிவாச்சார்யார் மிகவும் பாதிப்படைந்தார். மேல்மருவத்தூர் சென்று அம்மாவைச் சந்திக்க முடிவு செய்தார். அம்மாவிடம் சென்றார். அம்மா கூறினாள்.“மகனே! இரண்டு உயிர் போனபிறகு நீ இங்கு வந்துள்ளாய். நீ என்னிடம் வந்துவிட்டபடியால் உன்னையும், உன் குடும்பததையும் பாதுகாக்கிறேன். அதா்வண பத்ரகாளி சன்னதியில் பொங்கல் வை! நீ வீட்டிற்குச் சென்று உனது வீட்டுப் பூசை அறையில் மூன்று வாழை இலையைப் போடு. அதில் பச்சரிசியில் உப்பு போடாமல் வடித்த சாதத்தை உருண்டைகளாக உருட்டி, மேல்வரிசையில் 7 அடுத்த வரிசையில் 5, அதற்கடுத்த வரிசையில் 3, கடைசியாக 1 என்று என உருண்டைகளை வை! அரளிப்பூவை ஒவ்வொரு உருண்டையைச் சுற்றிலும் வை. குங்குமத்தினால் பொட்டு வை. ஒவ்வொன்றிற்கும் எலுமிச்சம்பழம் திருஷ்டி கழி! ஒவ்வொன்றிற்கும் கற்பூரம் வைத்து, கற்பூரத்தை ஏற்று. உனது பெயருக்கு 9 முறை சங்கல்பம் சொல். அதை 12 தடவை திரும்பச் சொல் 108 முறை சங்கல்பம் செய்து கொள். உன் வினை தீரும். வாசலில் பூசணிக்காய் திருஷ்டி செய். வாழை இலையோடு அனைத்தையும் ஓடும் நீரில் விட்டுவிட்டுக் குளித்துவிடு. பயப்படாதே! நான் இருக்கிறேன்!” சிவாச்சாரியார் அம்மா கூறியபடி செய்தார். இன்று மிகவும் நல்ல நிலையில் உள்ளார். செய்வினைக் கோளாறுகள் நீங்கிவிட்டன.
பழனியில் ஒரு பெரும் செல்வந்தா் இருக்கிறார். ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலபுலன்கள் உண்டு. ஒரு மகன் உண்டு. அவருக்குத் திருமணமாகிவிட்டது. குழந்தை இல்லை. அந்தச் செல்வந்தா் திடீரென புத்தி சுவாதீனமில்லாதது போல நடக்க ஆரம்பித்தார். குடிகாரா்கள் சகவாசம் ஏற்பட்டது. நன்றாகக் குடித்துவிட்டு ரோட்டில் படுத்துக் கிடப்பார். யாராவது வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.
இவருடைய செயல் இப்படி மாறிவிட்டதே என அவருடைய மனைவி மிகவும் வேதனைப்பட்டார். அவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கேரள ஜோதிடரிடம் காண்பித்துள்ளார்கள்.
அந்தக் கேரள மாந்திரிகா், ஜோதிடத்தைப் பார்த்துவிட்டு, ஜோதிடத்தில் குறை ஒன்றும் இல்லை. ஆனால், இவருக்கு யாரோ சூன்யம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இவா் தன் நிலை தடுமாறி இருக்கின்றார் எனக் கூறியுள்ளார்.
அதற்குப் பரிகாரம் செய்வதற்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும். எனவும் கூறியுள்ளார். நான் பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன் என்று செல்வந்தரின் மனைவி பழனிக்கு வந்துவிட்டார்கள்.
தற்செயலாக என்னைச் சந்தித்தார்கள். மேற்கண்ட விபரங்களைக் கூறினார்கள். நீங்கள் மேல்மருவத்தூர் அம்மாவிடம் சென்று அருள்வாக்குக் கேளுங்கள் என்று அவா்களிடம் கூறினேன். அவா்களும் ஒத்துக் கொண்டார்கள். இங்கு சூன்யம் என்பது நன்றாக இருக்கும் ஒருவரை அவருடைய நிலை தடுமாறச் செய்தல் அல்லது பைத்தியமாக்குதல் ஆகும். ஒரு நபருக்கு வேண்டாத ஒருவா், ஒரு குறிப்பிட்ட நபா் பைத்தியமாக அலையவேண்டும் என்பதற்காக மந்திரவாதிகளிடம் சூன்யம் வைக்கச் சொல்வார்கள். ஒரு குறிப்பிட்ட நபா் பயன்படுத்தும் பொருள்கள் ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு, மந்திர உச்சாடனம் செய்து சூன்யம் வைத்து விட்டால், அந்த நபா் தன் நிலை கெட்டு மானம் இழந்து, பைத்தியமாக முடிவில் மரணத்தைத் தழுவ நேரிடும். இப்படிப்பட்ட சூன்யம்தான் அந்தச் செல்வந்தருக்கு வைக்கப்பட்டுள்ளது.
செல்வந்தரின் மனைவி அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்டார். அம்மா கூறினாள், “மகளே! உன் கணவருக்குக் கடுமையான செய்வினை வைக்கப்பட்டுள்ளது. உன் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். வீட்டில் பூஜை அறையில் தரையைச் சாணத்தால் மெழுகி, பச்சரிசியைப் பரப்பி, மூன்று மண் கலயங்களை வை. கலயத்திற்குப் பூவைச் சுற்றிப் பொட்டு வை. மூன்று கலசத்திலும் மூன்று அம்மாவின் டாலரைப் போடு. கலசத்தில் மாவிலை, வேப்பிலை வை. மூன்று கலசத்திற்கும் மூன்று எலுமிச்சம் பழம், 3 பூசணிக்காய் திருஷ்டிக்காக வை. பிரசாத செட் வை. ஒவ்வொரு கலசத்திற்கும் பிரசாத செட் வை. கலசத்திற்குள் கோமியத்தை நிரப்பு. மூன்று கலயத்திற்கும் தீபாராதனை காட்டி திருஷ்டி கழி. குரு போற்றி, 108 போற்றி, கவசம் படி. முடிந்ததும் தீபாராதனை காட்டு. கலயத்திற்கு மூன்று எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்து, பூசணிக்காய் திருஷ்டி செய். பிறகு வீட்டின் நடுக் கூடத்தில் எலுமிச்சம் பழம், பூசணிக்காய் திருஷ்டி கழி. பிறகு வீட்டு வாசலில், எலுமிச்சம்பழம், பூசணிக்காய் திருஷ்டி கழி. மூன்று கலயத்திலிருக்கும் மூன்று டாலரையும் எடுத்து, சிகப்புக் கயிற்றில் கோர்த்து, பாதிக்கப்பட்ட உன் கணவரின் கழுத்தில் கட்டு. பூசையில் வைக்கப்பட்ட கலயம், பச்சரிசி அனைத்தையும் ஓடும் நீரில் போட்டுவிடு. உன் கணவரின் செய்வினை நீங்கும். உத்தரவு”
அந்தச் செல்வந்தா் குடியை அடியோடு விட்டுவிட்டார். அவருக்குப் பேரன் பிறந்தான். வீடு குதூகலம் அடைந்தது. இன்று அனைவரும் மகிழ்வோடு அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி!
ஓம் சக்தி!
ஆா். கண்ணன்,
மேலாண்மை இயக்கநா், Logic Research labs,
திருபுவனம்
மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்
]]>
நான் ஒரு கல்லுரி பேராசிரியர். எனக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். நான் இப்பொழுது எனது அம்மா அப்பா கணவர் குழந்தைகள் கூட திருநெல்வேலியில் வசித்து வந்தேன். என் அப்பா நல்ல மேல்மருவத்தூர் அம்மா பக்தை. திடீரென்று அப்பா மாரடைப்பால் தவறி விட்டார். அம்மா விற்கும் கை கால் வலி உள்ளது. அப்பா தவறிய மறு நாள் ஒரு சாமியார் என் வீட்டிற்கு வந்து “உன் அப்பா ஒரு பெண் தெய்வத்தோடு வந்து உன்னோடு பேச நினைக்கிறார். ஆனால் அவரால் முடிய வில்லை. வெளியில் அழுகிறார். உன் கணவர் ரத்த சொந்தம் உன்னுடைய மற்றும் உன் கணவர் கால் மண் எடுத்து உனக்கும் உன் பெற்றோர் உன் கூட இருப்பதை தடுக்க செய் வினை வெளியில் வைத்துள்ளார்”. எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எனக்கு இதற்கு மேல்மருவத்தூர் அம்மாவின் பதில் என்ன. நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும். நானும் என் குடும்பத்தாரும் என் அப்பாவை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் எங்களை நல் வழி படுத்த அம்மாவின் அருள் வாக்கு என்ன. வாக்கை நிறை வேற்றி விட்டு மேல்மருவத்தூர் அம்மாவை காண குடும்பத்தோடு மேல்மருவத்தூர் வருகிறோம். நன்றி.