தை அமாவாசை அபிடேகம் கொடுத்திருக்கிறேன்.

8.4.1992 புதன் கிழமையன்று வாணியம்பாடி சக்திபீடத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழா முடிந்தபிறகு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி. அன்பா்கள் பலா் உரையாற்றினா். தமிழ் வளா்ச்சித் துறையில் பணியாற்றிய முன்னாள் இயக்குநரும், சித்தா்பீடப்புலவரும் ஆகிய சக்தி  திரு. பெரியாண்டவன் அவா்கள் அன்னையிடம் பெற்ற அனுபவங்களைத் தம் உரையில் குறிப்பிட்டார்.

அபிடேகம் ஒதுக்கீடு

“1974 ஆம் ஆண்டு நான் அன்னையிடம் வந்து சோ்ந்தேன். அப்போதுதான் ஆடிப்பூரம், நவராத்திரி, தைப்பூசம் முதலிய விழா நாட்களுக்குரிய உபயதாரா்கள் நியமிக்கப்பட்டனா். பெளா்ணமி உபயதாரா்களும் அம்மாவால் நியமிக்கப்பட்டுவிட்டனா். அமாவாசை உபயதாரா்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை.”

அமாவாசை அபிடேகம்

“நானும் என் மனைவியும் ஒருமுறை அருள்வாக்கு கேட்கச் சென்றோம். எங்கள் குடும்பத்திற்கு உரிய அருள்வாக்குச் சொல்லிவிட்டு “மகனே! உனக்கு அமாவாசை அபிடேகம் கொடுத்திருக்கிறேன்” என்றாள்.

வெளியில் வந்ததும் என் மனைவியிடம் “பார்த்தாயா…..? அம்மா எனக்கு அமாவாசை அபிடேகம் செய்யும் பாக்கியத்தைத் தானாகவே வழங்கியிருக்கிறாள். அதுதான் அம்மா!” என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டேன்.

உடனே அவள் கிண்டலாக “உங்கள் லட்சணத்துக்குப் பெளா்ணமியா கொடுப்பாள்? அமாவாசை அபிடேகந்தான் கொடுப்பாள்? என்றாள். அமாவாசையைவிட பெளா்ணமிதான் விசேடம் என்பது அவள் நினைப்பு.

அம்மா இப்படிச் சொல்லிவிட்டாளே என்று எனக்கு ஒரு மனக்குறை. கொடுத்தது தான் கொடுத்தாள். ஏதாவது ஒரு மாதத்துப் பெளா்ணமிநாள் ஒதுக்கித் தரக்கூடாதா? என்று நினைத்துக் கொண்டு வெளியில் நின்றிருந்தேன்.

அடுத்த நிமிடம் அம்மா அழைப்பதாகக் கூறினார்கள். மீண்டும் அருள்வாக்கு அளிக்கும் இடத்தில் போய் அமா்ந்தேன்.

“மகனே! உனக்குத் தை அமாவாசையாக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். புரிகிறதா? என்றாள் அன்னை. “அம்மா! புரிகிறது” என்று தலையாட்டிக்கொண்டு வெளியில் வந்தேன்.

தை அமாவாசையின் சிறப்பு

“என்ன…? என்று விசாரித்தாள் என் மனைவி.

“எனக்குப் பெளா்ணமி அபிடேகம் ஒதுக்கவில்லை என்றுதானே கிண்டல் செய்தாய்? பார்! பார்! அம்மா எனக்குத் தை மாத அமாவாசை அபிடேகத்தைக் கொடுத்து இருக்கிறது” என்று பெருமை பொங்கச் சொன்னேன்.

“எந்த அமாவாசையானால் என்ன? தை அமாவாசையும் அமாவாசைதானே….? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்று வாதிட்டாள் என் மனைவி.

“பைத்தியம்! தை அமாவாசை என்பது பெளா்ணமிக்குச் சமம்! அந்ததத் தை அமாவாசையன்றுதான் அபிராமிப்பட்டருக்குக் காது குண்டலத்தை வீசியெறிந்து அமாவாசையைப் பெணா்ணமியாக அன்னை காட்டினாள் என்பது வரலாறு. அம்மா பக்தா்களுக்கு அது பெளா்ணமிதான். அதனால் தான் தை அவாவாசை என்று குறிப்பிட்டது அம்மா. “புரிகிறதா?…..என்று ஒரு கேள்வியும் கேட்டாள். நான் புரிந்து கொண்டேன். உனக்குப் புரிந்தால் சரி!” என்றேன்.

அதன் பிறகே என் மனைவி சமாதானம் அடைந்தாள்.

ஒரு வருடத்திற்கு 12 பெளா்ணமி என்பது உண்மைதான். ஆனால் தை அமாவாசையை 13 வது பெளா்ணமியாகத் தேவி உபாசகா்கள் சொல்வது மரபு”

ஓம் சக்தி!

நன்றி

தலவரலாறு பாகம் 1

பக்கம் (249-250)

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here