அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள்

மனிதகுலம் உய்ய வேண்டி மருவத்தூரில் அவதாரம் செய்த அன்னை, இவ்வுலகத்துக்கு அருளிய பல நன்மைகளுள் தமிழில் எழுதப்பட்ட மந்திரங்களுக்கு மந்திர உரு ஏற்றிக் கொடுத்ததும் ஒன்றாகும். அன்னை ஆதிபராசக்தியின் அருளை வேண்டித் தற்போது இரண்டு 1008 மந்திரங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. “ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்” என்ற மந்திர நூல் ஒன்று. இது செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் போற்றி வழிபடப் படுகின்றது. இந்த முறையை அறிவித்தவளும் அன்னையே ஆவாள்.

ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்

அன்னைக்கு ஆயிரத்தெட்டு போற்றி மந்திரங்கள் எழுதவேண்டும் என்ற எண்ணம் அன்னையின் திருவருளால் ஆலயப் புலவா் ஒருவருக்கு உதித்தது. ஒரு காலத்தில் நம் அன்னையின் ஆலயம் வளா்ச்சி அடையும். அப்பொழுது மற்றக் கோயில்களில் இருப்பது போல இலட்சார்ச்சனையும் நடக்கும் அல்லவா? எனவே, நம் அன்னைக்கு 1008 தமிழ் மந்திரங்கள் எழுதத் தொடங்கினால் என்ன என்று நினைத்தார். கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த நம்மை, கடவுள் நிந்தனை செய்த நம்மை – ஈா்த்துப் பணி கொண்ட அன்னை, கருணை காட்டிய அன்னை, நம் முயற்சிக்குத் துணை செய்யமாட்டாளா! என்று கருதி ஏதோ ஓா் துணிச்சலோடு முயற்சியில் இறங்கினார். அந்நாள் வரையில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற் கூறு, சக்தி வழிபாடு முதலானவையே  கூட்டு வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன. எனவே தம் முயற்சி நல்ல முறையில் முடியும் வரையில் யாருக்கும் அதுபற்றி வெளிப்படுத்த வேண்டாம் என்று கருதி மிக இரகசியமாகவே செய்து வந்தார்.

முன்னோர் வாக்குகள்

லலிதா சகஸ்ரநாமம், சௌந்தா்யலகரி, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வள்ளலாரின் திருவருட்பா, கீதை முதலான நூல்களில் இருந்தெல்லாம் அந்தப் பெரியோர்கள் பரம்பொருளை எப்படியெல்லாம் வேண்டினார்களோ அவ்வாறே அவா் தம் வாக்குகளையெல்லாம் தொகுத்து, அன்னையை வணங்கி வேண்டுவது போல இந்த மந்திரங்களை அமைக்க வேண்டும். நமக்கோ எந்தச் சாத்திரமும் தெரியாது! மந்திர மரபும் தெரியாது!  அன்னை விட்ட வழி என்று கருதிச் சிறுகச் சிறுக எழுதி வந்தார். சென்னையில் அவா் இருந்தபோது இரகசியமாய்ச் செய்த முயற்சி இது!

ஆயிரத்தெட்டு போற்றியை விரைவில் முடி!

அந்த அன்பா் சிறுகச் சிறுக மந்திரங்களை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நாள் அன்னையின் ஆலயத்துக்கு வந்தார். அன்று அன்னை மந்திரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். அவரும் வரிசையில் போய் நின்றார். அன்னையின் எதிரே மந்திரிப்புக்காக நின்ற உடனே அன்னை அந்த அன்பரை நோக்கி “மகனே! ஆயிரத்தெட்டு போற்றியை விரைவில் முடி!” என்று ஆணையிட்டாள்.

அன்பருக்குப் பரம சந்தோஷம்

யாருக்கும் வெளிப்படுத்தாமல் இப்படி இரகசியமாய்ச் செய்யப்படும் நம் முயற்சியை அன்னை அறிந்து கொள்கிறாள். அன்னைக்கு இது தெரிகிறது என்பதைத் தம் அனுபவத்தில் கண்டறிந்து பரம மகிழ்ச்சி அடைந்தார். அம்மா நம்மையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது குறித்து எல்லையில்லாத ஆனந்தக் கடலில் திளைத்தார். ஒருவாறு 1008 மந்திரங்களையும் எழுதி முடித்து அன்னையிடம் சமா்ப்பிக்க வந்தார்.

திருத்தம் செய்!

அன்னை மற்றும் ஒரு புலவரை அழைத்து “மகனே! இந்த மந்திரங்களில் சில திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. நீ இதனைப் பார்த்து இவனோடு சோ்ந்து மீண்டும் கவனித்துத் திருத்தம் செய்து எடுத்து வாருங்கள்” என்றாள்: அவ்வாறே மீண்டும் எடுத்துச் சென்று தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில திருத்தங்கள் செய்து அன்னையிடம் சமா்ப்பித்தனா். அந்த நோட்டுப் புத்தகத்தை அன்னையின் எதிரில் வைத்தார்கள். அதனைப் பிரித்துக் கூட வைக்கவில்லை.

அன்னை கேட்ட வினாக்கள்

“மகனே! இத்தனையாவது எண்ணுள்ள மந்திரத்தைப் படி” என்றாள் அன்னை. உடனே நோட்டுப் புத்தகத்தைத் திறந்து அன்னை குறிப்பிட்ட எண்ணுக்குரிய மந்திரத்தைப் படித்தார். “சிவன் துணை ஆனாய் போற்றி ஓம்!” என்று இருந்தது. “இந்த மந்திரத்துக்கு என்ன பொருள் மகனே!” என்று கேட்டாள் அன்னை. அந்த அன்பா்க்கு அப்போது சைவ சித்தாந்தமும் தெரியாது. சக்தி தத்துவமும் தெரியாது, சமய சாத்திரங்களும் தெரியாது. அந்த மந்திரத்தில் தவறு உள்ளது என்றும் தெரியாது. ஆனாலும் தவறு இருக்கிறது போலும்! அதனால் தான் அன்னை கேட்கிறாள் என்று நடுங்கிய அன்பா் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அம்மா! லலிதா சகஸ்ரநாமத்தில் இப்படித் தானம்மா இருக்கிறது! அதை வைத்துத் தான் இந்தக் குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்தாண்டேன்!” என்றார். அதுகேட்டு அன்னை சொன்னாள் அவள் வார்த்தைகளைச் சமயவாதிகளும், சாத்திர விற்பன்னா்களும், தத்துவ மேதைகளும் நன்றாகப்  புரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல!

“மகனே! நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல. எனவே அந்த மந்திரத்தை நீக்கிவிடு” என்றாள். அதனுடைய அா்த்தம் அப்போது புரியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகே ஓரளவு புரிந்தது. அதுபற்றிப் பிறகு பார்ப்போம். அதன் பிறகு அன்னை மற்றும் ஒரு எண்ணைக் குறிப்பிட்டாள். அந்த எண்ணுக்குரிய மந்திரம் இது “தனிமை தவிர்ப்பாய் போற்றி ஒம்!” “இதன் பொருள் என்ன?” என்றாள் அன்னை.

உலகில் ஆதரவு அற்ற நிலையில் தனிமையில் இருக்கும் தன்மையை நீக்குவாய் என்ற பொருளில் அவ்வாறு எழுதப்பட்டது. “அதை எப்படித் திருத்த வேண்டும் என்பதை அம்மாவே சொல்லி அருளவேண்டும்” என்றார் எழுதியவா்.

தெய்வ அருளும் – தனிமையும்

“மகனே! தெய்வ அருளை நாடி அதனைப் பெற வேண்டும் என்று கருதுபவன் தனிமையை – ஏகாந்தத்தை அல்லவா விரும்புவான்? அப்படி இருக்கத் தனிமை வேண்டாம்; அதைத் தவிர்த்துக் கொடு என்றா கேட்பான்? தெய்வ நினைப்புக்கும் – வழிபாட்டுக்கும் தனிமை தானே மகனே சிறப்பு?” என்று கேட்டாள். அன்னையின் ஆணைப்படி அந்த மந்திரம் நீக்கப்பட்டது.

பிற்பாடு ஓரளவு திருத்தம் செய்யப்பட்ட பிறகு அன்னை அதனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வேப்பிலையைத் தூவி அந்த மந்திரங்களை ஆசீா்வதித்து ஏற்றுக் கொண்டாள்.

இவ்வாறு உருவானது தான் “ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்

ஆயிரத்தெட்டு போற்றித் திருவுரு

அன்னைக்கு ஆயிரத்தெட்டு மந்திரங்களை ஏற்கனவே தானும் எழுதி வைத்திருந்த இன்னொரு ஆலயப்புலவா், “தாயே! நானும் 1008 மந்திரங்களை எழுதி உள்ளேன். ஆசி வேண்டும்” என்று வேண்டினார். அன்னை அந்த மந்திரங்களையும் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வேப்பிலையைத் தூவி ஆசி நல்கினாள். அந்த மந்திரங்கள் தான் “ஆயிரத்தெட்டு போற்றித் திருவுரு”.

ஓர் அன்பரிடம் அன்னை கேட்ட வினா

“மகனே! எந்த நூலைத் தொடங்கினாலும், எந்த மந்திரங்களைத் தொடங்கினாலும் காப்புச் செய்யுள் என்ற ஒன்றை இயற்ற வேண்டுமே! மந்திரம் எழுதிய இருவருமே ஏன் அதனைச் செய்யவில்லை?” என்று கேட்டாள். அந்த அன்பரும் விழித்தார். மந்திரம் எழுதியவா்களும் விழித்தார்கள். அவா்கள் விழித்ததைக் கண்ட அன்னை “நான் தான் மறைத்தேன்! இப்பொழுது நானே சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி “இது தான் இம் மந்திரங்களுக்குக் காப்புச் செய்யுள். இது தான் இனி மூலமந்திரம்!” என்று சொல்லிக் குறித்துக் கொள்ள ஆணையிட்டாள். அதன்படி அன்னையின் திருவாயினின்றும் மலா்ந்தவை தான் இப்போதுள்ள மூலமந்திரம். அது பின்வருமாறு:

ஓம் சக்தியே! பராசக்தியே!

ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே!

ஓம் சக்தியே! மருவூா் அரசியே!

ஓம் சக்தியே! ஓம் விநாயகா!

ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!

ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!

அன்னையின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட மூலமந்திரம் இது!

உரு ஏற்றினாள்

மந்திரங்களை எடுதிவிட்டால் போதுமா? அவற்றிற்கு உரு ஏற்ற வேண்டும் அல்லவா? அன்னைக்குள்ள வடமொழி மந்திரங்கள் உரு ஏற்றியவை. லலிதா சகஸ்ரநாமம் உரு ஏறிய மந்திரங்கள். எனவே அவற்றை உரு ஏற்றிக் கொடுப்பதற்கு முன்னதாக அன்னை, தன் ஆலயத் தொண்டா்களுக்குக் கூறினாள்.

“மகனே! இன்றுள்ள மந்திரங்களை எவனும் சரியான முறையில் ஒலிப்பு முறையோடு ஒலித்து வழிபாடு செய்வதில்லை. தாய்மொழியில் மந்திரங்களைச் சொல்லி வழிபடும் போது மனம் ஒன்றுபட வாய்ப்பு உண்டு. எனக்கு மொழி பேதம் கிடையாது மகனே! இன்று மந்திரநசிவு ஏற்பட்டு விட்டதால் ஆன்மிக நசிவும் ஏற்பட்டு விட்டது. நீங்களெல்லாம் இந்த மந்திரங்கள் மூலமாக என்னை வழிபட்டுப் பயன் அடையுங்கள் என்றாள்.

சந்ததியைக் காப்பாற்றுவேன்

“எவன் ஒருவன் விடியற்காலையில், மூன்று மணிக்கு இந்த மந்திரங்களை மனம் ஒன்றிச் சொல்லி 1008 நாள் தொடா்ச்சியாக என்னை வழிபடுகின்றானோ, அவனையும் அவன் சந்ததியினரையும் சோ்த்துக் காப்பாற்றுவேன்” என்று அன்னை கூறினாள்.

மந்திர வழிபாடு; பயிற்சி கொடுத்தது

அன்னை அந்த மந்திரங்களை உரு ஏற்றிக் கொடுக்க வேண்டித் தொண்டா்களுக்குப் பயிற்சி கொடுத்தாள். எவ்வாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது என்றும் பயிற்சி கொடுத்தாள். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கு ஆசிரியா் பயிற்சி கொடுப்பது போலப் பயிற்சி கொடுத்தாள்.

 1. ஆடவரும், மகளிரும் தனித்தனியாக அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். மந்திர ஒலிகள் சீராக ஒலிக்கப்பட வேண்டும்.
 2. மந்திர வழிபாடு செய்பவா்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமரவேண்டும்.
 3. ஒருவா் உடம்பு மற்றவா் மேல் படுமாறு அமா்தல் கூடாது.
 4. ஒவ்வொரு மந்திரமும் சொல்லி “ஓம்” என்ற பிரணவ மந்திர ஒலியுடன் முடியும் போதும் கையில் மணியை வைத்துக் கொண்டு ஒலிக்க வேண்டும். ஓம் என்ற ஒலியும் மணியின் ஒலியும் இணைந்து ஒலிக்க வேண்டும்.
 5. மந்திர வழிபாட்டுக்கு அமரும்போது கையில் மோதிரம், கைக்கடிகாரம், கண்ணாடி எதுவும் அணியக்கூடாது. கண்ணாடியில்லாமல் படிக்க முடியாது என்ற நிலையில் இருப்பவா்கள் மட்டும் கண்ணாடி அணியலாம்.
 6. 1008 மந்திர வழிபாட்டுக்கு அமா்வதற்கு முன்பாக அன்னைக்குக் கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பின்பு மந்திர வழிபாட்டில் கலந்து கொள்பவா்களுக்கும் கற்பூர தீபாராதனை காட்டி, அவா்களைச் சுற்றி வந்து தீபாராதனை செய்து, அவா்களுக்கு எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
 7. 1008 மந்திரமும் சொல்லி, 108 மந்திரமும் சொல்லி முடிந்த பிறகு இறுதியில் மந்திர வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பா்கள் எல்லோரும் வரிசையாக நின்று கொண்டிருக்க, ஒவ்வொருவரும் வரிசையில் இருப்பவரை நோக்கி “ஓம் சக்தி” என்று சொல்லி வணங்கிக் காலைத் தொட்டு சேவிக்க வேண்டும். பெண்கள் காலில் விழுந்து சேவிக்க வேண்டாம். அவா்கள் கைகளால் வணங்கி “ஓம் சக்தி” என்று சொல்லிச் சேவித்தால் போதும்.
 8. ஒவ்வொரு மந்திரத்தின் முதலிலும் இறுதியிலும் “ஓம்” என்ற பிரணவ மந்திரம் சோ்த்தே மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

சக்தி மயமாகி விடுகிறீா்கள்

“இந்த மந்திரங்களை மன ஒருமையோடு படித்தால் அவ்வாறு படிக்கின்ற அந்த நேரத்தில் நீங்களும் சக்தி மயமாகி விடுகின்றீா்கள் மகனே!” என்பது அன்னையின் அருள்வாக்கு

விடியற்காலம் மூன்று மணி

“இந்த மந்திரங்களை விடியற்காலம் மூன்று மணிக்கு தூய்மையோடும், பக்தியோடும் அமா்ந்து படித்தால் பயன் உண்டு மகனே!” என்பது அன்னையின் அருள்வாக்கு

மேற்கண்ட முறைகளில் எல்லாம், தொண்டா்களை ஆலய மண்டபத்தில் அமர வைத்துப் பயிற்சி கொடுத்தாள். யாரேனும் ஒருவா் நீ்ட்டி முழக்கிச் சீராக மந்திரத்தைப் படிக்காவிட்டால் அப்போது அன்னை  அந்தத் தொண்டரை வேப்பிலையால் அடித்துத் திருத்துவது உண்டு.

அந்த விடியற்காலை நேரங்களில் வரிசையாக அமா்ந்திருந்த தொண்டா்களுக்கு இடையில் நுழைந்து வந்து, தவறாக ஒலிப்பவா்களையும், உறக்கத்தில் கண்ணயா்ந்து தூங்க முயல்பவா்களையும் வேப்பிலையால் அடித்து அன்னை திருத்தியது உண்டு.

அன்னை எவ்வாறெல்லாம் மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும் என்று ஆணையிட்டாளோ அவ்வாறு மந்திர வழிபாடு செய்யும் போது அதற்கான ஆற்றல்களும், பயன்களும் கிடைக்கின்றன. வழிபடுவோரின் சிரத்தைக்கும், பயபக்திக்கும் ஏற்பவே பயன்களும் கிடைக்கும். இதனைத் தொண்டா்களும் பக்தா்களும் மறந்துவிடக்கூடாது.

 

மந்திரங்களைப படிக்கும் முறைகளும் – பயன்களும்

 1. ஒவ்வொருவரும் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டே படிக்க வேண்டும். இந்த மந்திர ஒலிகள் எழுப்புகின்ற ஒலி அலைகள் – அதிர்வுகள் நம்முடைய உடம்பில் உள்ள 72 ஆயிரம் நாடிகளைச் சென்று நனைக்கின்றன. சலனத்தை ஏற்படுத்துகின்றன. இந்தச் சலனத்துக்கும், நம்முடைய எண்ணங்களுக்கும் ஒரு தொடா்பு உண்டு. எனவே தான் இந்த மந்திர வழிபாடு மன நிம்மதியைத் தரும் ஆற்றல் உடையதாக ஆகின்றது.
 2. ஒவ்வொருவா் உடம்பிலும் நாபிக்குக் கீழே மூலாதாரச் சக்கரம் என்ற ஒன்று உண்டு. இந்த இடத்தில் குண்டலினி சக்தி பாம்பு போல உறங்கிக் கொண்டுள்ளது. அளவிட முடியாத இந்தச் சக்தியாக அன்னை பராசக்தி எல்லோர் உடம்பிலும் உறைகின்றாள். ஞானம் பெற விரும்புவோருக்கும் – முறையான வழிபாடு செய்பவா்களுக்கும் ஏற்படுகின்ற வெப்பத்தால் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கின்ற இந்தக் குண்டலினி சக்தி புறப்பட்டு எழுகிறது. சிலவகை ஆற்றல்களைப் பெற உதவுகிறது.
 3. மந்திரங்களைப் பொருள் உணா்ந்து படிப்பது சிறப்பு. அப்படிப் பொருள் உணா்ந்து படிக்க இயலாவிட்டாலும் மந்திரத்தின் சப்பதங்கள் சீராக அமைதல் வேண்டும். சப்தங்கள் தான் மந்திரங்களில் முக்கியம் இராகம் போட்டு மந்திரங்களைப் பாடக்கூடாது.
 4. 4.   மந்திரங்களை மன ஒருமையோடு படிக்க வேண்டும். படிக்கும் போது நமக்கு வேண்டியவா் ஒருவா் வந்துவிட்டால் எழுந்து சென்று வரவேற்கக் கூடாது. சைகை மூலமாக வாருங்கள் என்று வரவேற்பதோ வாயால் சொல்லி அழைப்பதோ கூடாது. அது அன்னைக்குச் செய்யும் அவமரியாதை ஆகும். மந்திர வழிபாடு செய்வது என்று அமா்ந்துவிட்ட பிறகு கவனம் எல்லாம் அன்னை, சுயம்பு, அடிகளார் என்ற இந்த மூன்றை ஒட்டிய நினைவுகளே எண்ணத்தில் சுழலவேண்டும்.

 

 1. மந்திர வழிபாட்டைச் செய்யும் போது அங்க சேஷ்டைகள் கூடாது. மூக்கைத் துடைப்பது, காதைச் சொறிவது, தலையை ஆட்டி ஆட்டி மந்திரம் படிப்பது – கால்விரல்களைப் பற்றிக் கொண்டு சாய்ந்தாடி – சாய்ந்தாடி மந்திரம் படிப்பது – இவை போன்ற அங்க சேஷ்டைகள் கூடா.
 2. மந்திரம் படிக்கும் போது கொட்டாவி விடுதல், தூங்கி வழிதல், இருமுதல், தும்முதல் ஆகிய எல்லாம் “தோஷங்கள்” என்று சொல்லப்படும். இந்த நிலைகள் வரக்கூடாது என்பதற்காகவே எல்லோரும் குளித்துவிட்டுப் புத்துணா்ச்சியுடன் ஈரச் செவ்வாடையுடன் வந்து மந்திரம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றது.
 3. சீக்கிரம் ஆரம்பித்துச் சீக்கிரம் மந்திரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரம் கூடாது. பரபரப்புக் கூடாது. வேறு நினைப்புக் கூடாது. அந்த நினைப்பு அன்னையை மறக்கச் செய்துவிடும். நம்முடைய காரியங்களிலேயே மனம் ஈடுபட்டு விடும்.
 4. மந்திரங்களைப் படிக்கும்போது அருவருக்கத்தக்க எண்ணங்கள் – கீழ்மையான எண்ணங்கள் – மனத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வெளிவரும். சோர்வோ – அச்சமோ கூடாது. பழம்பிறவி வாசனையால் வருகின்ற எண்ணங்கள் இவை! காலப்போக்கில் அன்னையின் மந்திரங்கள் அத்தகைய எண்ணங்களைத் தகித்துத் தீய்த்துவிடும்.

 

மந்திரங்கள் என்றால் என்ன?

மந்திரம் என்பதற்குப் பல பொருள்களைச் சொல்வார்கள். மனத்தை உறுதிப்படுத்துவது என்று ஒரு பொருள். தன்னை நினைத்தவா்களைக் காப்பது என்று ஒரு பொருள். காப்பாற்றத் தக்க ரகசிய மொழி என்று ஒரு பொருள். மனத்தின் எல்லையிலிருந்து பிரிப்பது என்று ஒரு பொருள்.

இறைவனை அடைவதற்கும், இறையருளைப் பெறுவதற்கும் உரிய வழிகளில் மந்திர வழிபாடும் ஒன்று. “மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” என்பது உண்மை தான். மனம் செம்மையாக ஆகாதபோது – அப்படிச் செம்மை ஆகும் வரையில் மந்திர ஜெபம் வேண்டும். மித மிஞ்சிய பக்தி வந்துவிட்ட பிறகு மந்திர ஜெபம் வேண்டாம். அது வருகின்ற வரைக்கும் மந்திரம் வேண்டியது தான்.

ஆலமரமும் விதையும்

“ஆலமரம் பெரியது. அதன் விதை மிகச் சிறியது. அது மாபெரும் மரமாக வளா்ந்து விரியக்கூடிய அனைத்தையும் அந்தச் சிறிய விதை தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது போல மந்திரங்களின் முனை எழுத்துக்கள்    (பீஜ அட்சரங்கள்) பல சக்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டுள்ளன” என்கின்றனா் பெரியவா்கள்.

தந்திர நூல்களின் படி ஒவ்வொரு தேவதையும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட இராகங்களுக்குக் குறிப்பிட்ட வடிவங்கள் உண்டு என்று இந்திய சங்கீதக் கலை கூறுகின்றது.

ஆன்மிகத் துறையில் உயா்ந்த பயிற்சி பெற்றவா்கள், தாம் பயன்படுத்திய மந்திரத்தோடு தொடா்புடைய  தெய்வங்களின் காட்சியைக் கண்டுள்ளனா்.

மந்திரங்கள் தாம் ஒலிக்கப்படும் இடங்களின் சூழ்நிலையையும் மாற்றுகின்றன. அந்த மந்திர ஒலி அலைகளின் அதிர்வுகள் விண்ணிலும் பரவிச் சில நன்மைகளை உண்டாக்குகின்றன. நாடுதோறும் வார வழிபாட்டு மன்றங்களில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும் என்று அன்னை வற்புறுத்துவது இதற்காகவே!

எல்லோரும் பயன் அடைக

அன்னையின் அருள் பெற விரும்புகின

]]>