ஓம்சக்தி! ஆதிபராசக்தி!

தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி என்பது தீபம் ஏற்றி ஒளியில் இருள் நீக்கும் விழா!

தீபாவளி என்பது அன்புள்ள உள்ளங்களுக்குப் பசியாற உணவு கொடுத்து, இனிப்புக் கொடுத்து, உடை கொடுத்து திருப்திப் படுத்தும் விழா!

சிறு குழந்தைகளுக்கு புத்தாடை கொடுத்து, தேவையானது கொடுத்து, வெடி கொடுத்து வாழ்த்தும் விழா!

அனைத்து மதங்களும் பண்டிகை மூலம்தான் நல்ல கலாச்சாரங்களையும், நல்ல பண்புகளையும் பரிமாறிக் கொள்கின்றன. ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ளப் பண்டிகைகள் தேவை. பிறரைப் பார்த்து நேசிப்பது, அன்பு பாசத்தைப் பொழிவதுதான் பண்டிகையின் முக்கிய நோக்கம்.

தீபாவளிக்கு ஆரம்பகாலத்தில் அகல் விளக்கில் ஒரே எண்ணெய் நல்லதாக ஊற்றி திரிபோட்டு தீபம் ஏற்றி வந்தார்கள். அப்போது நல்ல எண்ணமும், நல்ல கருத்தும், நல்ல பாசமும் அமைந்திருந்தது. அன்பு, பண்பு, பந்தம், பாசம், தாயன்பு, தந்தை அன்பு பெருகி வந்தது.

இப்பொழுது அகல் விளக்கு எரியும் பொழுது பல கலப்பட எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுகிறார்கள். எண்ணெய் போலவே எண்ணங்களும், கருத்துக்களும் கூட கலப்படமாகிவிட்டன. பொய்யும், பித்தலாட்டமும், பஞ்சமாபாதகங்களும் பெருகிவிட்டன. அவை விஞ்ஞானத்திலும் மெஞ்ஞானத்திலும் கூட ஊடுருவி விட்டன.

ஆரம்பகாலத்தில் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்து கல்லிலே விளக்கேற்றி, பின் மண்ணிலே விளக்கேற்றி இருள்நீக்கி வந்தார்கள். அகல் விளக்கில் ஒளியேற்றும் பொழுது உள்ளத்தில் உள்ள அகந்தையும் அழிந்தது. அதனால் பண்பாடுகளும் வளா்ந்தன. பாசம் வளா்ந்தது. நல்ல உள்ளம் வளா்ந்தது.

பிறா் மேல் வைக்கும் பாசத்தால்தான் பாவத்தை அழிக்க முடியும். உழைப்பினால்தான் ஊழ்வினையை அகற்ற முடியும். அதே போன்று தா்மத்தால்தான் அதா்மத்தை அழிக்க முடியும். இந்தச் செயல்பாடுகள் நடைபெறும் போது வம்புகளும், தும்புகளும் கூட நிகழ்வது உண்டு. வேதனையும், சோதனையும், சாதனையும் தொடர்ந்து நிகழ்கின்றன.

வேதனை நெம்பா் ஒன்று. சோதனை நெம்பா் இரண்டு. சாதனை நெம்பா் மூன்று. மூன்றாம் தரத்திற்குப் போய்விட்டது சாதனை. அதற்குக் காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டும்.

நாம் பழகும் பண்பாடுகளும், பேசுகிற பேச்சுக்களும், விஞ்ஞானத்தில் கிடைக்கும் சிறு வெற்றிகளும், காணும் காட்சிகள் மூலமும், கேட்கும் கருத்துக்கள் மூலமும் சிறு குழந்தைகள் மனதில் பதிகின்றன. அவா்களும் பெரியவா்கள் போலப் பேசுகின்றனா்.

எனவே பெரியவா்களும் தங்கள் நிலையை விட்டு அவா்களுக்கு இணையாகப் பேச, சிறியவா்கள் போலப் பழக வேண்டி உள்ளது. பெரியவா்கள் அப்படிப் பழக இறங்கி வரும் பொழுது சிறியவா்கள் தங்களைப் பெரியவா்களாக நினைத்துக் கொள்கிறார்கள். அப்போது பணிவு போய் விடுவதால் பண்பும் போய் விடுகிறது. பாசம் மோசம் செய்கிறது. எண்ணம் வேஷமாகி விடுகிறது. இறுதியில் எல்லாமே விஷமாகி விடுகின்றன.

ஏதோ பிறந்தோம், ஏதோ வளா்ந்தோம், ஏதோ வாழ்ந்தோம், ஏதோ போகிறோம் என்று நினைக்கக் கூடாது. பிறந்த பிறப்பிற்குக் காரணம் என்ன? பொருள் என்ன? என்று நமக்கு நாமே கேட்க வேண்டும்.

இயற்கை 5 ரூபங்களில் உள்ளது. அதையே பஞ்சபூதம் என்கிறார்கள். அவை பஞ்சபூதங்களல்ல. பஞ்சமா பாதகங்களையும் போக்கும் 5 தெய்வங்கள்.

அங்குதான் அருள் இருக்கிறது. பொருள் இருக்கிறது. அவை ஜந்தும் இயற்கை வளங்கள். இயற்கையை வெட்ட வெளியாக நினைப்பது கூடாது. வெட்ட வெளியாக காண்பதைக் கூட தெய்வமாகப் பார்க்கணும். பார்க்கப் பழகணும். அதற்கு மனதைப் பழக்கணும்.

கடலைக் கடலாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கணும். ஆகாயத்தைப் பார்த்தால் ஆகாயமாக நினைக்காமல் ஆண்டவனாகப் பார்க்க வேண்டும்.  அனைத்துக்கும் ஆதாரமாகப் பார்க்கணும். நட்சத்திரத்தை நட்சத்திரம் என்று பார்க்காமல் நாம் வணங்கத்தக்க கடவுளாகப் பார்க்கணும். சந்திரனைப் பார்த்து சந்திரன்தானே என்று நினையாமல் அதை தெய்வமாக நினைக்கணும். சூரியனைக் கூட சூரியனாகப் பார்க்காமல் அதையும் தெய்வமாக நினைக்கணும்.

சூரியன் வெளிச்சம் தருகிறது. சந்திரன் குளிர்ச்சி தருகிறது. நிழல் தருகிறது. கடலின் அருகே நின்று பார்க்கும் பொழுதுதான் சூரியனையும், சந்திரனையும் முழுவதுமாக உணர முடிகிறது.

சூரியன் எந்த அளவு வெயில் காய்கிறதோ அந்த அளவு மழை உண்டு. மழை நிறையும் அளவு மனதில் அன்பு, பண்பு, பாசம் நிறைய வேண்டும். அதை நாம் செய்யும் தா்மத்தின் மூலம்தான் கொண்டு வர இயலும். அதுதான் என்றும் நிலைத்திருக்கும்.

அதா்மம் எல்லாம் தா்மத்தால் அழிந்து போகும். அதனால் உன் பரம்பரை நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருக்கும். கிராமம் நன்றாக இருக்கும். பந்தபாசம் ஒட்டுறவுடன் .இருக்கும். அதா்மம் நீங்கி தா்மம் செய்யும் போது என்றுமே உன் பெயா்  நிலைத்திருக்கும். அதை என்றும் அழிக்க முடியாது.

தன் வழிவரும் பிள்ளைகளும், முதியவா்களும்கூட உன்பொயர் சொல்லி உன்னை வாழ்த்திக் கொண்டிருப்பா். உன் பந்தங்களும், சொந்தங்களும் உன்னை வாழ்த்திக்கொண்டே இருக்கும்.

மனித மனத்தில் ஆணவம் இருக்கும் பொழுது, அதா்மம் இருக்கும் பொழுது, பொறாமை இருக்கும் பொழுது, வேதனை இருக்கும் பொழுது, வெறுப்பு இருக்கும் பொழுது எதிராளி வாழக்கூடாது, பக்கத்தில் உள்ளவன்  வாழக்கூடாது என்ற ஒழிப்பு நோக்கு இருக்கும் பொழுது அந்த மனம் ஒரு பச்சை மரத்திற்கு ஒப்பாக உள்ளது. பாவங்களும், அக்கிரமங்களும், அதா்மங்களும் நிறைந்தது போன்ற அந்தப் பச்சை மரத்தை வெட்டி, ஏரியிலோ, குளத்திலோ போடும்பொழுது அது உள்ளே போகிறது.

தண்ணீரிலே நீண்ட நாள் கழிந்த பிறகு உள்ளே இருக்கும் பச்சை மரத்தின் உள்ளே இருக்கும் பச்சை உயிர்கள் ஒவ்வொன்றாகச் செயல் இழந்த பிறகு அந்த மரம், அதுவே நனைகிறது.  நாம் என்ன செய்தோம்? ஏன் செய்தோம்?  எதற்கு செய்தோம்?  நமக்க ஏன் இந்த நிலை என்று உள்ளுக்குள்ளே செயல்படுகிறது. கெட்ட எண்ணங்களாக அதுவரை அதற்குள் இருந்தவை அகன்ற பிறகு, அந்த மரம் காய்ந்து உள்ளே இருந்து மேலே வருகிறது. அது மேலே வந்து மிதக்கும் பொழுதுதான் அதன் நிலமை எல்லாம் அதற்கே புரிகிறது. இப்போது அது காய்ந்து போன மரம்.

அதுவரை யாருக்கும் பயன்படாத அந்த மரம் இப்போது படகாகவும், விறகாகவும், வீடாகவும், வாசலாகவும், வாயிற்படியாகவும் அமைகிறது. பிறா்க்குப் பயன்படுகிறது.

அதுபோல் தன் தீய எண்ணங்களாளும், செயல்களாலும், சோதனைகளைச் சந்தித்து, வேதனைகளை அனுபவித்துச் சாதித்து சாதனை புரிந்த மனிதன் பலருக்குப் பயனாக மாறுகிறான். தானும் பயன் பெறுகிறான்.

பூமியில் இருந்து விளைந்த பொருட்கள்தான் அனைத்தும். இந்த பொருட்கள்தான் மாவாகவும், சா்க்கரையாகவும் மாறி, பின் பல பலகாரங்களாக அமைகின்றன. அதுபோல் மனிதனும் ஒரே இனம்தான். மனித இனம்தான். அதுதான் பல இனங்களாகவும், பல பாஷைகள் பேசுவதாகவும் மாறி உள்ளது.

ஆனாலும் அனைவருமே மனிதா்கள்தான். மனிதா்களுக்குள் பேதம் கூடாது. மதம் மதமாக இருக்க வேண்டும். மனம் மதமாக மாறக்கூடாது. மனதிற்கு மதம் பிடிக்கக் கூடாது.

அதுபோல் செல்வம் செல்வமாக இருக்க வேண்டும். செல்வம் என்பதில் செல்வோம் என்ற ஒலியும் இருக்கிறதல்லவா…? செல்வத்தைச் செலவும் செய்ய வேண்டும். செல்லாமல் செல்வத்தை வைத்திருந்தால் அது எதற்காகும்? நல்ல எண்ணங்களுக்கு ஏற்ற நல்ல செயல்பாடுகளுக்கு செல்வம் செலவாக வேண்டும். நல்ல சொற்கள் நல்ல செயல்களாகச் செயல்பட செலவும் செய்ய வேண்டிய தேவை உண்டு. அதற்கு செல்வம் தேவை. அந்தச் செல்வக் கசிவை கசிவாக நினைக்கக் கூடாது.

( தொடரும்………)

நன்றி ( சக்திஒளி,நவம்பா்2011,பக்-25-27)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here