அப்போது தான் நான் செவ்வாடையில் அம்மாவின் தரிசனத்திற்கு ஒரு இளைஞரை அழைத்துச் சென்றிருந்தேன். அவா் முதன் முறையாக அம்மாவைத் தரிசனம் செய்ய வருகிறார். என்னுடைய வற்புறுத்தலின் பேரில் நம்மைத் தவிர மற்றும் நிறையப் போ் அம்மாவை உணர வேண்டும். அவா்கள் வாழ்க்கை சீரடைய வேண்டும் என்ற ஒரு நினைப்பு இருந்ததனால் வந்த வற்புறுத்தல் அது “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்று சொல்வது போல அந்த ஒரு உந்துதலில் அவரை நான் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன்.

அந்த இளைஞா் ஓரளவு தலைக்கனமும் மேலோட்டமான தெய்வ பக்தியும் உள்ளவா். சித்தா் பீடத்தைப் பற்றிக் கேள்விப் படாதவா். அம்மாவை ஒரு சாதாரண மனிதனாகப் பார்க்கிறவா். பெண்களைத் துச்சமாக மதிப்பவா். தான் செய்யும் எதுவுமே சரியானது என ஆழமாக நம்புகிறவா். ஆனால் தா்மசிந்தனை மிக்கவா். அம்மா அவரைப் பார்த்துச் சொன்னார்கள். (நான் கட்டியிருந்த செவ்வாடையைச் சுட்டிக் காட்டி மேலும் கீழும் தலையிலிருந்து கால் வரை குறிப்பிட்டு) “கடைசிவரை இது தான் கூட வரும் மற்றது எதுவும் வராது” அந்த இளைஞா் ஒன்றும் புரியாமல் அம்மாவைப் பார்க்கிறார். அம்மா சொல்வதன் அர்த்தம் அவரிற்கு விளங்கவில்லையா? இல்லை புரியாதது போல் நிற்கிறாரா? அம்மா எதற்காக இதை அவரிடம் சொல்கிறார்கள்? ஆனால் அம்மாவின் இந்த வாக்கிற்கு அா்த்தம் – ஆழமான அர்த்தமுண்டு அதை எளிதில் அர்த்தம் கண்டுகொள்ள முடியாது என்று எனக்கு அப்போது தோன்றுகிறது. உலகைத் துறந்துவிட்டு, ஆசைகளை விட்டுவிட்டு சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை அம்மா. உலக இயல்பிலே இருந்து கொண்டு, இயங்கிக்கொண்டு, ஆன்மிக உணா்வுடன் முழுமையாக வாழ அம்மா கற்றுக் கொடுக்கிறார்கள். ஆன்மிக வாழ்வு அவ்வளவு எளிதாக கிடைக்குமா? முயற்சிதான் திருவினையாக்கும். அவருக்கு அம்மா அறிவுரை சொன்னார்களா? அல்லது அன்புடன் போதிக்கிறார்களா? இல்லை வாழ்க்கைக்கு விளக்கும் கூறுகிறார்களா? அம்மாவின் செயலைப்  புரிந்து கொள்வது மிகவும் கடினம். அம்மாவின் வாக்குகளைப் புரிந்து கொள்வது போல நாம் கற்றுக் கொண்டது எல்லாம் அம்மா சொல்வதை ஆராய்ச்சி செய்யாமல் செய்து வா அதனால் நீ அதன் பலனையும் உணரலாம். அம்மாவையும் உணரலாம். வெறும் மதிப்பீட்டுக் கணக்கும் ஆராய்வும் உன்னை எங்கும் கொண்டு போகாது என்பதே நிதா்சனமான உண்மை! செவ்வாடை தான் ஆன்மிகமா? இல்லை செவ்வாடை ஆன்மிகத்திற்கு ஒரு வழியா? அல்லது செவ்வாடை ஆன்மிகத்தின் ஒரு எடுத்துக்காட்டு பிரதிநிதித்துவமா? அம்மா என்ன சொல்ல விரும்புகிறார்கள்? ஒன்று மட்டும் விரும்புகிறது. நடைமுறை வாழ்க்கையுடன் ஒட்டிய ஆன்மிகம் தேவை. அது தூய்மையான ஆன்மிகமாக இருக்க வேண்டும். போலியாகவும், பகட்டாகவும் இருந்து பயனில்லை. ஆன்மிகத்துக்கு சாதி, மத பேதமில்லை. நிறமில்லை. ஆண், பெண் பாகுபாடில்லை. ஆன்மீகமற்ற வாழ்வு குப்பை போன்றது. கடைசியில் குப்பைக்கு நேரும் கதிதான் மனிதனுக்கு நேரும் இல்லையா? ஒரு மணமுள்ள மலா் இறைவனிடம் அடையும் நிலை எவ்வளவு பெருமை மிக்கது? அந்த ஒரு நிலை மனிதனுக்குக் கிடைக்க ஆன்மிகம் தானே துணை புரிய முடியும். அந்த ஒரு ஆன்மிகம் இல்லாமல் வாழ முடியாதா? அதில் இன்பம் இல்லையா? அதனால் என்ன நாம் பாவிகளாகி விடுவோமோ என்று கேட்கலாம். ருசியை அனுபவிப்பதற்கும், அதை அனுபவிக்காததற்கும் உள்ள வேற்றுமை அது தான். கண்டவா் விண்டிலா், விண்டவா் கண்டிலா் என்பார்கள். ஆனால் அம்மா நமக்கு முன்பு ஒரு உதாரணம். அதை நாம் காண இந்தப் பிறவியில் ஒரு பெரும் பேறு பெற்றுள்ளோம். அந்த நிலையை அனுபவி. அந்த ஆன்மிக உணா்வை நுகா்ந்து கொள் என்று அம்மா நமக்கு வாய்ப்பளிக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய பாக்கியமல்லவா! அப்படி அந்த ஆன்மிகத்தில் என்ன தான் இருக்க முடியும்? “அது தான் கூடவரும்” என்றால் எங்கு, எது கூடவரும்? எதற்காகக் கூட வரும்? இதைப்பற்றி அம்மா மற்றொரு முறை சொன்ன வாக்கு ஞாபகத்திற்கு வருகிறது “இங்கு எப்படியும் குப்பை சோ்ந்து விடுகிறது. டிராக்ரரில் பூட்டும் டிப்பா் வண்டியில் அதைவிடாமல் எடுத்துச் சென்று குப்பையை அகற்றி சுத்தம் செய்து கொட்டி விடுகின்றோம். எவ்வளவு டிப்பா் வண்டி இருந்தாலும் போதமாட்டேன் என்கிறது. குப்பையை எல்லாம் கொட்ட வேண்டாங்களா?” இதனுடைய அா்த்தத்தைப் பலமுறை நான் அலசிப் பார்த்துண்டு. அம்மா என்ன சொல்கிறார்கள்? சித்தா்பீடத்தின் வெளியிலுள்ள குப்பையையா? அதன் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்? அம்மா ஏன் இதை என்னிடம் சொல்கிறார்கள்? இதில் என் பங்கு என்ன? கேள்வியின் அடுக்கு உயர உயர ஒரு சிறிய வெளிச்சம் தெரிய ஆரம்பிக்கிறது. அம்மா சொன்னது சித்தா் பீட வளாகத்திலுள்ள குப்பையை அல்ல மகனே! உன் மனதிலுள்ள குப்பையைத் தான் அம்மா அப்படிக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பாழும் மனது வெகு எளிதில் குப்பைகளைச் சோ்த்துவிடுகிறது? அதற்கு ஒரு அளவே இல்லை. அதை ஒரு கண்ணாடி போல் தூய்மையாக வைத்துக்கொள்ள முடிவதில்லை. இது தான் மனித வாழ்க்கை. நாம் எல்லோரும் மனதைக் கட்டிக் காத்துத் தூசி படிய விடாமல் அதில் குப்பை சேராமல் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டுமேயானால் ஒருவேளை நாம் பெரிய ஞானியாகி விடுவோம்.இறைவன் நமக்கு மனதைப் படைத்தது போல அறிவையும் படைத்திருக்கிறான். தூசி படா்வது இயற்கையானால் அதை உடனே அகற்றித் தூய்மைப்படுத்த அந்த அறிவை உபயோகப்படுத்த வேண்டும். அதற்குத் தான் ஆன்மிகம் தேவைப்படுகிறது. அம்மாவின் அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்கிறது. குப்பைகளை எல்லாம் கொட்ட வேண்டாங்களா?” எது குப்பை? அதை எங்கே? எப்படி கொட்டுவது? இதற்கு அம்மாவிடம் போய் எப்படி விளக்கம் கேட்பது எனக்கு நானே பிறகு சொல்லிக் கொள்கிறேன். அம்மா நம் அறிவையும், சிந்தனையையும் தூண்டி விடுகிறார்கள். கேள்வியும் நானே – பதிலும் நானே என்று அம்மா இருக்கிறாள். அம்மாவின் அந்தக் கேள்வியிலேயே எவ்வளவோ பதிலும் இருக்கிறது! தடாகத்தில் வாழும் மீன் அழுக்கின் நடுவில் வாழ்வது போல நாம் வாழ்ந்து வருகிறோம். தூசியை மனதில் படரவிடுகிறோம். குப்பையைச் சோ்க்கிறோம். அதனால் துயரப் படுகிறோம். அது விளங்காமல் மேலும் துயரப்படுகிறோம். குப்பை மனதை மட்மல்ல, அறிவையும் மறைக்கிறது. தூய்மையைப் போட்டு மூடுகிறது. ”மாயையாகிய” அந்தக் குப்பை நம்மை ஆளத் தொடங்குகிறது. நம்மை ஆட்டுவிக்கிறது. நாம் சோ்த்த குப்பை நமக்கே எமனாகிறது. அதனால் தான் அம்மா சொல்கிறார்கள் “குப்பை எல்லாம் கொட்ட வேண்டாங்களா” என்று. வெறும் அறிவு மட்டும் போதுமா? அந்தக் குப்பையை அகற்ற?  டிராக்டரில் பூட்டும் டிப்பா் வண்டி அறிவினால் விளைந்த ஒரு சாதனம் தானே! அதுபோல மனதில் உள்ள குப்பையை அகற்ற எது துணைக்கு வருகிறது? அதற்கு மட்டும் ஆன்மிகம் எதற்கு? முடிவில்ல இந்தக் கேள்விகள் மனத்தைத் துளைக்கின்றன. ஒரு முறை அம்மாவின் முன் நிற்கின்றோம். சில சிந்தனைகளுடன் இந்த உலக வாழ்க்கை நரகம் போல் தெரிகிறது. இதுவரை கண்டு, ஆண்டு அனுபவித்ததெல்லாம் கனவாக, அா்த்தமற்றதாகத் தெரிகிறது. வரும் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது. நிகழ்காலம் விவரமில்லாமல் நகா்கிறது. அம்மா அப்போது சொன்னார்கள் “இது உங்க கோயிலுங்க அடிக்கடி வந்து போய்க்கொண்டேயிருங்க” அம்மாவின் அந்த வார்த்தைகள் இதமாக மனதை அள்ளிக் கொள்கின்றன. மாயையான இந்த உலகில் வெறுமையான ஒரு தோற்றத்தைக் காணும் ஒரு நேரத்தில் இந்த வார்த்தைகள் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன. இது எனக்கு கொஞ்சம் பின்னால் புரிகின்றது. இது எங்களுக்கு மட்டும் சொல்லியது அல்ல. மனித இனத்திற்கு அம்மா கூறும் அருள்வாக்கு இது. இந்த மருவத்தூா் மண் நம் எல்லோருடைய மண். அதை அடிக்கடி மிதிக்க நாம் வரவேண்டும். அந்த நினைவு எப்போதும் இருக்க வேண்டும். இந்த உணா்வு – “நம் மண்” என்ற உணா்வு – சிந்தனையில் மேலோங்கி வளரும் போது ஆன்மிகம் கூடவே தானாக வளா்கிறது. ஆன்மிக சிந்தனை தன்னால் வளா்கிறது. அதனுடன் கூடவே ஒப்பில்லாத அமைதியும் இன்பமும் தொடா்கிறது. இதை எவ்வளவு சுருக்கமாக அம்மா நம் எல்லோருக்கும் சொல்கிறார்கள் என்று வியந்து போகிறேன். அந்தத்தொடா்பு வளர வளர தொண்டும் சுயநலமற்ற நோக்கமும் வளர ஆரம்பிக்கின்றன. குப்பைகள் தானாகவே கொட்டிக் கொள்ள ஆரம்பிக்கின்றன. அம்மா சொன்னார்கள் “கோயிலுக்கும் நிர்வாகத்துக்கும் உன்னால் முடிந்த தொண்டு செய்” தொண்டைப்பற்றிப் பேசும் போது அம்மா ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரிக் கூறுவார்கள். ஆனால் எதையுமே அம்மா விபரமாகக் குறிப்பிடுவதில்லை. அதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டுவிடுவார்கள். அதுவும் ஒரு தனிச்சிறப்பு. ஒரு வாக்குக்குப் பல அா்த்தங்கள் – பலருக்குப் பலவிதமாகத் தோன்றும் கருத்துக்கள். அம்மா குறிப்பிட்ட தொண்டை எங்கே ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? யாரைக் கேட்பது? எது தொண்டு என்று அப்போது புரியாத நிலை. அம்மாவின் பிறந்த நாள் மலருக்கு விளம்பரம், மற்றும் அன்னதானத்திற்கு நன்கொடை இதிலெல்லாம் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது. என்னால் முடிந்த சில முயற்சிகள் தொடா்கின்றன.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ரா. ராமமூா்த்தி (அம்மா ஒரு சத்தியம், பக்- 9 – 13)      ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here