உனக்கு நானிருக்கிறேன் மகளே!

0
928

அந்தக் குடும்பம் ஒரு பெரிய குடும்பம். பெரிய குடும்பமென்று அவர்களின் பொருள் வசதியை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அந்தக் குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் வைத்தே சொல்கிறேன். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளெல்லாம் பேரன், பேத்திகள் எடுத்த பிறகு கூட ஒரே குடும்பமாக, ஒரே வியாபாரமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்தக் குடும்பத்தின் இளைய தலைமுறையின் மூத்த மருமகள் அந்தப் பெண். அவள் தாய்
தந்தைக்கு ஒரே பெண்ணாகச் செல்லமாக வளர்ந்தவள். நன்கு படித்தவள். நல்ல பண்பினள். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் இயல்பாகவே அமையப்பெற்றவள். அவள் கணவரும் நன்கு படித்தவர்.

அவளுக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஒற்றுமையாக மகிழ்ச்சியின் உச்சியிலே வாழ்ந்து வந்த அந்தக் குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது. அவர்கள் செய்து வந்த தொழிலில் சற்றே இறக்கம். அதைத் தொடர்ந்து பல தொல்லைகள். எந்தக் குடும்பமும் சற்றே நிலைகுலைந்து போய்விடும் தருணமது. அது அந்தக் குடும்பத்திலும் நடந்தது.

ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சொல்லிக் கொள்ளும் காலகட்டம் அது. அந்தப் பெண்ணின் மீதும் குற்றங்கள் அடுக்க்கப்படுகின்றன. கடும் வார்த்தைகள் அள்ளி வீசப்படுகின்றன. கொடுஞ்சொற்களால் கொட்டப்படுகின்றாள் அவள். தாங்க முடியாத நரக வேதனை. உத்தியோகம் பார்க்கும் இடத்திலேயே தங்கிவிடலாமா… ?என்று தோன்றும் அளவுக்கு வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு நிமிடம் செல்வதும் ஒரு யுகமாகக் கழிகிறது அவளுக்கு.

தாய், தந்தைக்கு ஒரே பெண்ணாகப் பிறந்து , செல்லமாக வளர்ந்து அன்புக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அமைதியும் ஆனந்தமுமாகச் சென்று கொண்டிருந்த அவள் வாழ்க்கை என்னும் படகு, கொந்தளிக்கும் கடலிலே சிக்கிய கட்டுமரமாகத் தத்தளித்தது.

தன்னைப் பெற்ற தாய் தந்தையரிடம் அழுது மனதை ஆற்றிக் கொள்ளக் கூட அவளுக்கு மனம் வரவில்லை. அவர்களும் வேதனையில் துடிப்பார்களே! நம்மைப் பெற்றவர்களுக்கு இந்த வேதனையைக் கொடுக்கக் கூடாது என்ற நல்ல மனம் அவளுக்கு.

கூட்டுக் குடும்பமே பிரிந்துவிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இனிச் சேர்ந்து வாழ முடியாது என்று பெரியவர்கள் முடிவெடுக்கின்ற
வேளை நெருங்கியது. அவளை நெருக்கியது. அவளும் அவள் கணவரும் படித்த படிப்புக்கு நல்ல வருவாய் ஈட்டி இவர்கள் குடும்பத்தை நடத்திக் கொள்ள முடியும்.

ஆனால்… பிரிந்து சென்றால் என்ன சொல்வார்கள்? ஒரே குடும்பமாக இருந்ததைப் பிரித்து விட்டாளே பாவி என்றல்லவா பழி சொல்வார்கள்? நாம் நன்றாக இருந்தால் போதும்; நம் மகிழ்ச்சியே முக்கியம்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று பொறுப்பில்லாமல் நடந்துவிட்டானே என்று தன் கணவனையுமல்லவா வசைபாடுவார்கள்?

நாம் பிரிந்தும் செல்லக்கூடாது ஆனால் கூட்டுக்குடும்பமாகவும் வாழ முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் கூட்டுப்புழுவாகத் துடிக்கிறாள் அவள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் துவண்டு போனாள்.

மனமுடைந்த நிலையில் மருவத்தூர் மண்ணை மிதித்தாள். அன்னையிடம் அருள்வாக்கில் அமர்ந்தாள். தன் வேதனைகளைத் தாயிடம் அழுகையிலேயே வெளிப்படுத்தினாள். வேதனையோடு சென்றவளுக்கு அன்னை போதனை கொடுத்தாள்.

“மகளே! உன் முகத்தில் சாணி தெளித்தாலும் துடைத்துக்கொள்! அம்மா உனக்கு நானிருக்கிறேன் மகளே!

என்று தன் அன்பு வாக்கை அருள்வாக்காகக் கூறினாள் அன்னை.

அந்த அருள்வாக்கையே அமுதவாக்காக எடுத்துக் கொண்டாள் அவள். கடுஞ்சொற்கள் சூடாகத் தன்மீது வந்து விழும்போதெல்லாம் “அம்மா உனக்கு நானிருக்கிறேன் மகளே” என்று கூறிய அருள்வாக்கும், அம்மாவின் அருள்நோக்குமே அவள் நினைவுக்கு வரும்.

அந்தப் பழிச்சொற்களையே தன் ஊழ்வினையைத் தணிக்கும் மருந்துகளாக எடுத்துக் கொள்ள நாளடைவில் பழகிக் கொண்டாள் அவள். இல்லையில்லை……தன்னைப் பழக்கிக் கொண்டாள்.

அவள் படும் வேதனையைப் பார்ப்பதா… பெரியவர்களைப் பார்ப்பதா….
என்று அவள் கணவர் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பொழுதெல்லாம் அவருக்கும் அவளே ஆறுதல் கூறும் அளவு தன் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டாள்.

காலச்சக்கரம் சுழன்றது. அம்மாவைக் கேட்டே அந்தக் குடும்பத்தில் எதுவும் நடக்கும்படி பார்த்துக் கொண்டாள். விழுந்துவிட்ட வியாபாரம் எழுந்தது. வளர்ந்தது.

இன்று தமிழகத்து வியாபாரிகளில் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அந்தப் பெரிய குடும்பத்தின் இன்றைய தலைவி அவள். அம்மா அவளுக்குப் போதித்த சகிப்புத் தன்மையை அப்படியே எடுத்துக் கொண்டு “அம்மா உனக்கு நானிருக்கிறேன் மகளே” எனும் அமுத வாக்கையே உபதேசமாகப் பற்றிக் கொண்ட அந்தப் பெண்ணை அச்சாணியாகக் கொண்டு இன்று அந்தப் பெரிய குடும்பம் சிந்தாமல் சிதறாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது.

அந்தப் பெண்ணின் அன்புத் தலைமையில் பாசப்பிணைப்பில் அவர்கள் குடும்பம் மட்டுமல்ல அவர்கள் பொருளாதார நிலை தாழ்ந்த பொழுது, அவர்களை விட்டு விலகிச் சென்ற உறவுகள் கூட. இவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டு அம்மாவின் பணிகளில் தங்களை ஈடுபடுத்திப் பயன் பெறுகின்றனர்.அவள் மீது அன்பைப் பொழிகின்றனர்.

அன்னை உபதேசித்த சர்வ வல்லமை படைத்த சகிப்புத் தன்மையின் சக்தி தான் இது என்று அந்தப் பெண் சிலாகித்துச் சொல்லும் பொழுது, அந்தப் பெண்ணின் கண்களில் நன்றியுணர்வு ஆனந்தக் கண்ணீராக வெளிப்பட்டது எப்படிப்பட்ட தகிக்கும் சூழ்நிலையிலும் சகிக்கும் பக்குவம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று கூறி முடித்தார் அவர்.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 2000 ஏப்ரல்

பக்கம் 6- 9.