அது நம் பக்தர்களெல்லாம் இருமுடி செலுத்துகிற சமயம். இருமுடித் தொண்டில் நாங்கள் பல நாட்கள் ஈடுபட்டிருந்தோம். ஒருநாள் பக்தர்கள் கூட்டம் சற்றுக் குறைவாக இருந்தது. விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த நேரத்தில் அம்மா பற்றியும், அருள்வாக்கு பற்றியும், அவரவர் அனுபவங்கள் பற்றிக் பேசிக் கொண்டிருந்தோம்.

ஆன்மாவைப் பற்றிப் பேச்சு வந்தது!

ஆன்மா நம் உடம்பில் எங்கே இருக்கிறது? என்றார் ஒருவர்.

ஆன்மா நம் இதயத்தில் இருக்கிறது என்று பெரும்பாலான உபநிடதங்கள் சொல்கின்றன.புருவ மத்தியில் இருப்பதாகச் சில உபநிடதங்கள் சொல்கின்றன.

விழிப்பு நிலையில் ஓரிடத்திலும்,கனவு நிலையில் வேறு ஒரு இடத்திலும் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் வேறு ஒரு இடத்திலும் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

ஆன்மா உடம்பெங்கும் பரவியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

ஆன்மா என்ற ஒன்று உண்டு என்று நம் அம்மாவும் சொல்கிறாள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

இன்னும் சிலரோ ஆன்மா என ஒன்று இல்லவே இல்லை; ஆன்மா என்று ஒன்று இருப்பதாகக் கூறுவது மூட நம்பிக்கை என்று கூறுகின்றனர்.- என்றெல்லாம் எங்கள் உரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம்.

ஒரு வாரம் கழித்து அம்மா அருள்வாக்கில் இது பற்றிச் சொல்லியிருக்கிறாள். திருமதி அம்மா ஒரு விழா மேடையிலேயே குறிப்பிட்டார்கள்.

ஆன்மா எங்கே இருக்கிறது? அது தொண்டையிலா?  இதயத்திலா?  நெற்றியிலா?  என்று வீணாக ஆராய்ச்சி செய்வதைவிட மற்றவர்களிடம் அன்பு காட்டப் பழகிக் கொள்! முதலில் இதைச் செய்! என்றாளாம்.

ஆன்மாவை அறிவதற்கான தீவிர முயற்சி எவரிடமும் இல்லை என்பதை அம்மா அறிவாள். அதனால் தான் அப்படிச் சொன்னாள்.

‘திருக்குறளையும், பகவத்கீதையையும் , அறிஞர்களின் பொன்மொழிகளையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறவர்கள் அதிகம். தங்கள் மேதா விலாசத்தைக் காட்டிக் கொள்பவர்கள் அதிகம். அவற்றுள் ஒரு சிலவற்றையாவது குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் குறைவு !’- இத்தகைய மனப்போக்கு உடையவர்களை அம்மா எள்ளி நகையாடுவது உண்டு.

ஒரு பேராசிரியருக்கு அம்மா சொன்னாள்.

“இன்றைய உலகத்தில் கருத்துகள் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றையாவது பின்பற்றி நடப்பவன் எவனும் இல்லை.”

ஆன்மாவைப் பற்றி நாள் முழுதும் பேசிப் பயன் என்ன…. ? அந்த ஆன்மாவைக் கண்டுபிடி …. ! அதற்கான முயற்சியில் ஈடுபடு! – என்பது தான் அன்னையின் எதிர்பார்ப்பு. அதைவிட்டுவிட்டு வெறும் பேச்சால் ஆவது என்ன? அதனால் தான் எல்லோரிடமும் அன்பு காட்ட முதலில் பழகு! என்கிறாள்.

இன்றைய மக்களிடம் இன்பங்களை நுகர வேண்டும் என்ற ஆசை மேலோங்கி விட்டது. வசதியான வாழ்க்கைக்கு மனம் ஏங்கித் துடிக்கின்றது. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று மனம் அலைமோதுகிறது. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற எண்ணம் வரமாட்டேன் என்கிறது. அதனால் இன்னும் …..இன்னும் என்று அலைகிறது.

பணவெறி ….. பணமோகம்….. இலஞ்சம்….ஊழல் ….என சமுதாயக் குற்றங்களும்- பொருளாதாரக் குற்றங்களும் பெருகி வருகின்றன.

சுயநல வெறி ஓங்கி வருகிறது. பொது நலம் என்ற உணர்வு மங்கி வருகிறது.

நாத்திகன் யார் என்பதற்கு அம்மா இன்று புதிய விளக்கம் கொடுக்கிறாள்.

‘பொது நல உணர்வே இல்லாதவன் எவனோ அவன் தான் நாத்திகன்’  என்கிறாள் அம்மா!

ஒரு காலத்தில் வேதங்களை ஒப்புக் கொள்ள மறுத்தவன் நாத்திகன் எனப்பட்டான்.

அடுத்து வந்த கால கட்டத்தில் கடவுளை நம்பாதவன் நாத்திகன் எனப்பட்டான்.

அம்மா இன்று சொல்கிறாள். பொது நல உணர்வே இல்லாதவன் எவனோ அவன் தான் நாத்திகன். சுயநலமே கொண்டு வாழ்பவன் தான் நாத்திகன்!

அதனால் தான் பிறருக்கு தொண்டு செய்ய வைத்துப் பொதுநல உணர்வை ஊக்குவித்து செவ்வாடைக் கூட்டத்தைப் பழக்குகிறாள்.

இந்தப் பொதுநல உணர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது அன்பு!

‘அம்மாவுக்காகச் செய்கிறேன் என்று எதையும் செய்யாதே!  கோடிக் கணக்கான மக்களுக்காகச் செய்கிறேன் எனக் கருதிக் தொண்டு செய்!”  என்கிறாள் அம்மா.

அன்பு, பாசம், கருணை, நீதி, நியாயம், தருமம், என்ற உணர்ச்சிகள் இன்று வற்றிவிட்டன.

காமம், குரோதம், வன்மம், பயம், எதிர்கால அச்சம்!  வன்முறை, பேராசை, வக்கிரபுத்தி, தீவிர வாதம் போன்ற உணர்வுகள் பெருகி வருகின்றன.- இன்றைய சமுதாயத்தில் பொதுவாக யாருக்கும் நிம்மதி இல்லை. பாதுகாப்பு இல்லை.

ஆன்மிகம் ஒன்று தான் இதற்குத் தீர்வு…..

எல்லோரிடமும் அன்புணர்ச்சியை வளர்ப்பது தான் இதற்குப் பரிகாரம்!

அன்பு என்பது மாபெரும் சக்தி!

அன்பே கடவுள்! அன்பே சிவம்!  என்பார் திருமூலர்.

அன்புள்ள இடத்தில் அச்சம் இருக்காது.

தூய்மையான – முழுமையான அன்பு அச்சத்தை அகற்றி விடும்.

ஆயுள், ஆரோக்கியம், அமைதி, அழகு போன்றவற்றை அளிக்கக்கூடிய சக்தி அன்பில் இருக்கிறது.

மனிதகுலத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான உற்சாகத்தை- ஊக்கத்தை- செயலாற்றும் சக்தியை இந்த அன்பு அளிக்கவல்லது.

தாயின் அன்பு- தந்தையின் அன்பு- அக்கம் பக்கத்தாரிடம் அன்பு கிடைக்கப் பெறாதவன் தான் சமூக விரோதியாகிறான். தீவிரவாதி ஆகிறான்.

ஒருவனுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அன்பே முதலிடம் வகிக்கிறது. அன்பைப் பெற்றவனே அன்பின் மகிமையை உணர முடியும்.

எல்லோரும் என்னைப் பாராட்ட வேண்டும். போற்றிப் புகழ வேண்டும் என்று அவனவனும் ஆசைப்படுகிறான்.

உங்களால் தன்னலமற்ற அன்பை அளிக்க முடியுமா?

ஆம்! என்றால் நீங்கள் புகழுக்கு உரியவர்கள்!

தன்னலமற்ற அன்பிற்கு, தூய்மையான அன்பிற்கு ஒரு மாபெரும் சக்தி உண்டு.

அன்னை தெரசா புகழைத் தேடி அலைந்தாரா?  புகழ் அவரைத் தேடி வந்தது!

எல்லாம் இருந்தும் எனக்கென்று யாரும் இல்லை. என்னிடம் உண்மையான அன்பு செலுத்த யாரும் இல்லை.

என்னிடம் உள்ள பணத்துக்காகத் தான் இவர்கள் போலியாக நடிக்கிறார்கள்!  என்று உள்ளுக்குள் குமுறும் பணக்காரர்கள் எத்தனை? எத்தனை?

எனக்கென்று யாரும் இல்லை என்ற மனநிலை வரக்கூடாது. அதுவே ஒரு நோய்!  கெட்ட நோய்!  ஒரு மன நோய்!

பெரிய பெரிய பங்களா!  மகன் ஒரு நாட்டில் கம்ப்பூட்டர் எஞ்சினியர். மகள் ஒரு நாட்டில் பெரிய டாக்டர். மனைவி போய்ச் சேர்ந்து விட்டாள். வேலைக்காரன் தயவில் – தனிக்காட்டுக்குக் குரங்குபோல, அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கித் தவிக்கும் முதியவர்கள் எத்தனை?  எத்தனை?

குழந்தை- குடும்பம்- நகரங்கள் -உலகங்கள்- பிராணிகள் போன்ற அனைத்தும் அன்பினால் தான் ஒன்றுபட முடியும். வாழ்க்கையின் ஒருங்கிணைந்த சக்தியாக அன்பு விளங்குகிறது.

“இந்த உலகமே தூய்மையான அன்பிற்காக மிகவும் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. பிரதிபலன் எதிர்பாராமல் நாம் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கொடு ! கொடு!  பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடு! என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

காற்றுக்கு அலைகள் இருப்பது போல, ஒலிக்கு அலைகள் இருப்பது போல, அன்பிற்கும் அலைகள் உண்டு. அதிர்வுகள் உண்டு. ரஷ்ய நாடு இது குறித்து ஆராய்ந்து சொல்கிறது.

அன்பின் அலைகள் வானொலி அலைகளைப் போலப் பரவி அதற்கு நெருங்கியவர்களின் மனங்களை அடையவல்லது. மனத்தைத் தட்ட வல்லது.

இந்தியாவில் ஒரு குடும்பம். அவர்கள் ஒரே மகன் அமெரிக்காவில் டாக்டராக இருந்தான். வசதியான வாழ்க்கை. அனைவரிடம் மதிப்பு மரியாதை பெற்று வாழ்ந்தான். ஒரு நாள் மனைவிக்கும் இவனுக்கும் ஏதோ ஒரு சண்டை . வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு செத்தான்.

 அதே நாளில் அயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த தாய்க்கு ஒரு கனவு ! தன் மகன் இரத்தவெள்ளத்தில் இறந்த கிடப்பது போல ஒரு காட்சி!  விழித்தவுடன் வயிற்றைப் பிசைந்து போல ஒரு வேதனை!

எப்படி இது சாத்தியம்? அன்பின் அதிர்வலைகளை இதற்குக் காரணம்!

n

மின் சக்தி! அணுசக்தி! சூரிய சக்தி!!  என்று ஆராயும் விஞ்ஞானிகள் அன்பின் சக்தியைக் குறித்து அதிகம் ஆராய்ச்சி நடத்தவில்லையே..?

அணுகுண்டுக்குக் கோடிக் கணக்கில் செலவிடும் நாடுகள், மக்கள், வறுமை நீக்க- அன்பு நெறி பரவ ஏன் செலவு செய்வதில்லை….?

‘தன்னலமற்ற தன்மையே கடவுள்!  என்றார் விவேகானந்தர்.

அந்தத் தன்னலமற்ற அன்புக்குத் தாயே சிறந்த உதாரணம்.

தூய்மையான அன்பு என்றால் என்ன?  தன்னலமற்ற அன்பு தான் தூய்மையான அன்பு. இயற்கை இதனைத் தாய் மூலம் கற்றுக் கொடுக்கிறது. தாய்மையின் மேலான பொறுப்பை இயற்கை பெண்களுக்குக் கொடுத்துள்ளது.

சாதாரண மக்களின் அன்பு சுயநலத்துடன் ஆரம்பிக்கிறது. நாய்கள் சந்தோஷமாக விளையாடும். அதே சமயத்தில் உணவுக்காக ஒன்றுடன் ஒன்று சண்டை போடும். உலகியல் மனிதர்களின் அன்பும் அதே போலத் தான். ஒரு சமயம் கட்டி அணைத்துக் கொண்டு இனிமையாகப் பேசுவான். ஆனால் மறுகணமே அடித்துக் கொள்ளத் தயங்கமாட்டான்.

அன்பு எந்த அளவிற்குத் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள தன்னலமற்ற தன்மை தான் உரைகல்!

நம் அம்மாவைத் தரிசிக்க எங்கெங்கோ இருந்து வருகிறார்கள். அவர்களைப் பார்த்து முதன் முறையிலேயே நீண்ட நாள் பழகியவர் போல அம்மா பேசுகிறாள். அண்ணன், தம்பி, அக்கா, பெற்றோர்,கூட அவ்வளவு அன்பாகப் பேசுவதில்லை. அதனால் தான் அம்மாவிடம் வருபவர்கள்- அவ்வளவு பாசமாக- அடிக்கடி வருகிறார்கள். அம்மாவிடம் நாம் காண்பது தெய்வீக அன்பு!

இந்தத் தெய்வீக அன்பின் அலைகள் உலகெங்கும் பரவ வேண்டும் என்று தான் அம்மா நம்மையெல்லாம் தொண்டு மார்க்கத்தில் இறக்கிப் பழக்கி வருகிறாள்.

அம்மாவின் உபதேசம் மிகமிக எளியது!

“வந்து பிறந்து விட்டோம். எத்தனை நாள் இருப்போம் என்பது நிச்சயமில்லை.இருக்கும் போதே பத்து பேருக்கு உபயோகமாக நல்லது செய்துவிட்டுப் போ!”

அந்த நல்லது செய்ய எது தேவை!

அன்பு!  அந்த அன்பு வளரத் தொண்டு தேவை!

அன்பும் தொண்டும் வார வேண்டிய இடத்தில் போட்டி, பொறாமைகள் வளரக் கூடாது. அப்படி வளர்ந்தால் நாம் அம்மாவிடமிருந்து வெகு தூரம் விலகிப் போக நேரிடம் . ஜாக்கிரதை!

ஓம் சக்தி நன்றி சக்தி ஒளி 2009 செப்டெம்பர் பக்கம் 17- 23.]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here