கடந்த 1980 ஆம் வருடம் நடந்த நிகழ்ச்சி இது. நான், என் மகன், மருமகன், பேரன் ஆகியோர் மேல் மருவத்தூர் சென்றிருந்தோம். அப்போதெல்லாம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வேப்பிலையால் மந்திரித்து நோய் நீக்கியது உண்டு.

அன்று செவ்வாய்க்கிழமை காலையில் குளித்து விட்டு ஈர்ப்புடவையுடன் அடியேன் ஐந்து முறை அங்கப் பிரதட்சணம் வந்தேன்.

அப்போது ஓர் இளம் தம்பதி அங்கு வந்தார்கள். அவர்களில் அந்தப் பெண் மட்டும் 49 முறை அங்கபிரதட்சணம் செய்தாள்.

என் மகளையும், மருமகப் பிள்ளையையும் பார்த்து, “நீங்களும் அங்கப்பிரதட்சணம் பண்ணுங்கள்” என்றேன்.

இருவரும் வெட்கபட்டுக் கொண்டு செய்ய மறுத்து விட்டார்கள். எனக்கோ மனக் கஷ்டமாக இருந்தது. அந்த வாரம் வெள்ளிக்கிழமை என் மருமகனின் தம்பிக்குத் திருமணம் நடந்தது.

முதல் நாள் இரவு என் மருமகன் தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டார். வாசற்படியில் இடித்து விட்டது. இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.

“தாயே என் கணவரைக் காப்பாற்று….” என்று என் மகள் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களிடம் பிரார்த்தனை செய்தாள். “என் தாய் சொன்னபடி ஒருமுறை அங்கபிரதட்சணம் வருவதற்கு வெட்கப்பட்டேன். 49 முறை அங்கபிரதட்சணம் வருகிறேன்” என்று வேண்டினாள்.

தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருடைய 32 பல்லையும் எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் கூறிவிட்டார்.

வேறு ஒரு டாக்டர் கிளிப் மாட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டார். 49 நாட்கள் திரவ ஆகாரம் தான். இதனால் மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் , மன உளைச்சலும் எங்களுக்கு ஏற்பட்டது. எனினும் அவருடைய பற்களை எடுக்காமலேயே காப்பாற்றி விட்டாள்.

அன்று நான் சொன்னபோதே ஒருமுறை அங்கபிரதட்சணம் வர வெட்கப்பட்ட என பெண், பின்னர் 49 முறை அங்கவலம் வந்துவிட்டாள். நான் நினைத்துக் கொண்டேன். “சொன்னால் புரிவதில்லை; பட்டால் தெரிகிறது!” என்று.

எப்படியோ அங்கவலத்தின் மகிமையைத் தெரிந்து கொண்டார்களே என்ற திருப்தி எனக்கு!

ஓம்சக்தி!

பக்கம் 179 – 181.
சக்தி காவேரி, மதுரை.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து….