எங்கள் மன்றத்தின் உப தலைவர் சக்தி. மல்லிகார்ச்சுனன் வீடு ஒன்றைக் கட்டி முடித்திருந்தார். அங்கு வேலை செய்து வந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் ஒருநாள் என்னைப் பார்த்து, ” நீங்களெல்லாம் செவ்வாடை கட்டிக் கொண்டு ஊரை ஏமாற்றுகின்றீர்கள். .. பொய் சொல்லிப் பணம் வாங்குகிறீர்கள்….!” என்று கேலியும் கிண்டலும் செய்தார்.

“என்ன இந்த ஆள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் இப்படிப் பேசுகிறாரே…” என்று ஒருபுறம் வருத்தம் ஏற்பட்டது.

அந்த மேஸ்திரி வேலையை முடித்து விட்டு புறப்படும் முன்பாக மின்விளக்கு போடுவதற்காக இரண்டு மின்சார வயர்களைச் செருகுவதற்குப் பதிலாக ஓர் வயர் மட்டும் செருகிவிட்டு மற்றொன்றைக் கையில் வைத்திருந்தார்.

அவர் பிடித்திருந்த இடம் வயர் அறுக்கப்பட்ட இடம் என்பதைக் கவனிக்கவில்லை. அதனால்
மின்சாரம் பாய்ந்து விழுந்து விட்டார்.

கையில் பிடித்திருந்த வயர் விழுந்துவிட்டது. ஆனால் ஒரு வயர் விளக்கில் இருக்கிறது. உடம்பில் இன்னும் மின்சாரம் பாய்ந்த படி இருந்தது. அது தாள முடியாமல் “அய்யோ! அம்மா!” என்று கதற ஆரம்பித்து விட்டார்.

சக்தி மல்லிகார்ச்சுனன் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். விளக்கில் இருந்த வயரை எடுக்கலாம் என்று நினைத்தால், மேஸ்திரியைத் தாண்டிச் சென்றால் தான் வயரை எடுக்க முடியும்.

ஏதாவது மரக்கட்டையை எடுத்து தள்ளி விடலாம் என்றால், அன்று மழை பெய்து அங்கிருந்த மரக்கட்டையெல்லாம் ஈரமாகியிருந்தது.

அவர் அருகே சென்றாலே ஷாக் அடித்தது. வேறு வழி எதுவும் புலப்படவில்லை. உடனே…..

“அம்மா! ஓம்சக்தி! இவரைக் காப்பாற்று!” என்று கதறினார். என்ன ஆச்சரியம்! விலகியிருந்த வயர் அவர் அபயக்குரலுக்குப் பின் தானாகக் கீழே விழுந்தது.

தப்பி பிழைத்த மேஸ்திரியை பார்த்து “இதோ பார்! உன்னை அம்மா தான் காப்பாற்றியது என்பது புரிகிறதா? அந்த அம்மனை நம்புவதும், நம்பாததும் உன் விருப்பம். நம்பிச் செல்கிற செவ்வாடைத் தொண்டர்களை ஏளனம் புரியதே! கேலியும் கிண்டலும் செய்யாதே!”

ஏதோ உனக்குப் புத்தி புகட்டுவதற்கு அம்மா உன்னை இன்று காப்பாற்றி விட்டது. திருத்த முடியாதவனாக இருந்தால் அவனை விட்டு விடுகிறது. இனிமேலாவது செவ்வாடைத் தொண்டர்களை இழிவாகப் பேசாதே…” என்று அறிவுறுத்தினார்.

“ஆமாம் சார். தப்புதான்! தெரியாத்தனமாகப் பேசி விட்டேன். ,, என் விஷயத்தில் உடனுக்குடன் தண்டனை கிடைத்து விட்டது….! என்று வருந்திக் கூறினார் அந்த மேஸ்திரி.

இப்போது அவர் அன்னை ஆதிபராசக்தியின் பக்தனாகி விட்டார். சக்தி மாலையணிந்து இருமுடி எடுத்து வருகிறார். கருவரைத் தொண்டு என்றால் ஓடோடி வருகிறார்.

இப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் பண்ணி அந்த மேஸ்திரியை ஆட்கொண்டாள் நம் அன்னை ஆதிபராசக்தி.

ஓம்சக்தி!

பக்கம் 153 – 154
சக்தி குணாளன், வாலாஜாபேட்டை.
இந்த ஜோதி ஏக ஜோதி என்னும் நூலிலிருந்து…..