2000 ஆம் ஆண்டு எனது அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் நம் ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் படம் ஒன்று கிடைத்தது. அப்போது எங்களுக்கு மேல்மருவத்தூர் பற்றி எதுவும் தெரியாது. இந்தச் சிறிய படத்தை என்ன செய்வது என்று எனது அம்மா கேட்டபோது, உங்கள் பர்சில் வைத்திருங்கள், பாதுகாப்பாக இருக்கும் என்றார். அதன்படி என் அம்மா வைத்திருந்தார்களே தவிர பெரிதான ஈடுபாடு கிடையாது.

2004 ஆம் ஆண்டில் கனடாவில் இருக்கும் சக்தி ஒருவர் மேல்மருவத்தூர் பற்றிக் கூறி அது பற்றிய விபரங்களை அனுப்பி வைத்தார். அதன் பிறகுதான் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காருஅடிகளார் பற்றிய விபரம் தெரிய வந்தது. சிறிது சிறிதாக எங்களுக்கு ஈடுபாடும் வந்தது.

2004 நவம்பர் மாதம் முதன் முதலாக மேல்மருவத்தூர் வந்தோம். என் தம்பிக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. அவனை வற்புறுத்திச் சிரமப்பட்டுத்தான் அழைத்து வந்தோம்.

அம்மாவுக்குப் பாதபூஜை செய்யும்போது, அம்மா எங்கள் யாவரையும் பார்க்காமல் என் தம்பியையே கீழிருந்து மேலாகப் பார்த்தபடி அருள்வாக்குச் சொன்னார்கள். அதன் அர்த்தம் எங்களுக்குப் பின்னர் தான் விளங்கியது.

அந்த வருடம் டிசம்பர் மாதம் டெங்கு காய்ச்சல் வந்தது. டெங்கு காய்ச்சலில் நான்கு வகை உண்டு. அதில் மிகவும் மோசமானது நான்காவது காய்ச்சல். அது தான் என் தம்பிக்கு வந்தது. மருத்துவமனையில் சேர்த்த மறுநாளே மயங்கி விழுந்துவிட்டான். உடனடியாக ஐ.சி.யு விற்கு மாற்றி, இரத்தம் ஏற்றிக் கோண்டே இருந்தனர். வீட்டில் எங்கள் யாருக்குமே நிம்மதி இல்லை.

தம்பியைப் பார்க்கச் சென்றபோது அவன் என் அம்மாவைப் பார்த்து அழ, அம்மா அவனைப் பார்த்து அழ, என்ன செய்வது என்று தெரியாமல் நானும் அப்பாவும் தவித்தோம்.

நான்காம் நாள் டாக்டர் வந்து, காலையில் எடுத்த இரத்த பரிசோதனை அறிக்கையைப் பார்த்து, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி வரலாம் என்றார். இரத்தத்தில் ஒரு கூறு சிறிதளவு குறைந்தாலும் “ஷாக்” எற்படலாம் எனவும், தோலில் இரத்தக் கசிவு ஏற்படலாம் என்றும் கூறினார்.

என் தம்பிக்கோ அந்த எல்லைக்கு வந்து விட்டிருந்தது. என் அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.

மேல்மருவத்தூர் அம்மாவின் மூலமந்திரத்தைப் படித்து, தம்பிக்குக் குணமாகிவிட்டால், அதற்குச் செலவாகும் பணம் முழுவதையும், மேல்மருவத்தூர் மருத்துவப் பணிக்குக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டு, மந்திர நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.

அன்று மதியமே இரத்த பரிசோதனையில் மாற்றம் தெரிந்தது. இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார்கள்.

அடுத்த நாள் மதியமே ஐ.சி.யு வில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றினார்கள். 7ஆம் நாள் நலமாக வீடு வந்து சேர்ந்தோம்.

டெங்கு காய்ச்சல் வந்த யாருமே இரண்டு வாரங்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து திரும்பியது கிடையாது. அதுவும் ஆபத்தான வகை டெங்கு வந்து ஒருவாரத்தில் குணமானது என் தம்பி மட்டுமே என்று கூறவேண்டும்.

என் தம்பிக்கு வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அவன் வினையைத் தீர்த்து பார்வையாலேயே அருள் வழங்கிய பாங்காரு தெய்வத்தின் கருணையை என்னவென்று சொல்வது!

எங்கள் வாழ்நாள் முழுவதும் அன்னையின் அருளை மறவோம்.

குருவடி சரணம்! திருவடி சரணம்!

நன்றி!

ஒம் சக்தி!
சக்தி.B.சுஜானி, கொழும்பு-4, இலங்கை
மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலர்.