அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமைத் திரு டாக்டர். நடராசன் M.D.(முதல்வர், செங்கற்பட்டு மருத்துவக் கல்லூரி) அவர்கள் முன்னிலையில், திரு.
ஆனூர் ஜெகதீசன் M.L.A அவர்கள் தலைமையில், செங்கற்பட்டு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர். டாக்டர் திரு.G.R.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அந்த அழகான சிறிய கிராமத்தில் ஒரு பள்ளியில் மருத்துவ சிகிச்சை முகாமுக்குரிய ஏற்பாடுகள்
அனைத்தையும் டாக்டர். திருமதி. அமுதா செல்வராஜ் அவர்கள் செய்து வைத்திருந்தார்.

செங்கற்பட்டியிலிருந்தும் சென்னையிலிருந்தும் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட பல்வேறு மருத்துவத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தொண்டாற்றினர்.

முகாம் ஆரம்பித்த ஒருசில மணித்துளியில் ஒரு மாட்டு வண்டியிலிருந்து சுமார் 25 வயதுள்ள ஒரு வாலிபனை மயங்கிய நிலையில் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தனர்.

அந்த வாலிபன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தன் வயலில் பூச்சி மருந்து அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனையும் அறியாமல் அம்மருந்தின் நெடியைச்
சுவாசித்திருக்கின்றான்.அந்த விஷச் சத்து அவன் உடலில் ஏறி அதனால் மயக்கம் அடைந்து விட்டான். கூட வந்த உறவினர்கள் கோவென்று அழ, அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது. அன்னை ஆதிபராசத்தி அவனைக் காப்பாற்றுவதற்கு என்றே அந்த நாளாகப் பார்த்து இலவச மருத்துவ சிகிச்சை முகாமை அன்று அனுப்பினாள் போலும்! உடனே அவனுக்குத் தேவையான ஊசி போடப்பட்டது.

குளுகோகம் மற்றும் தேவையான மருந்துகளும் உடனடியாகச் செலுத்தப்பட்டன் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அவ்வாலிபன் உடல் கண்காணிக்கப்பட்டுத் தேவையான மருந்தும் அவ்வப்போது கொடுக்கப்பட்டது.

கட்டை வண்டியில் உயிர் ஊசலாடிய நிலையில் காலையில் வந்தவன், அன்று மாலை 3 மணி அளவில் சிரித்த முகத்துடன் வீட்டிற்கு நடந்து சென்றான்.பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின்
அருளை நினைத்துக் கொண்டு நாங்கள் உருகி நின்றோம்.

அந்த வாலிபனுக்குச் சிகிச்சை ஆரம்பித்த கொஞ்ச நேரத்துக்குள் வெளியே பலர் அழுகின்ற சப்தம் கேட்டது. இன்னொரு மாட்டு வண்டியில் ஐந்தாறுபேர் ஒரு மூதாட்டியைத் தூக்கிக் கொண்டு முகாம் அறையினுள் கிடத்தினர். அந்த அம்மாவுக்குக் கடந்த மூன்று நாளாக வாந்தியும் பேதியும்! சுமார் ஐம்பது தடவையாவது தண்ணீர் போல பேதியாகி இருக்கும் என்று சொன்னார்கள்.

கொடிய காலரா நோயினால் அந்த அம்மா மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார். நாடித் துடிப்போ இறங்கிவிட்டது. இரத்த அழுத்தம் மிகவும் குறைவு. எந்த வினாடியிலும் அவன் இறந்து போகலாம்! அப்படி ஒரு நிலை. அடுத்த நிமிடமே அவளுக்கு ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டன. நிறைய உப்புச் சத்துள்ள நீர் (Soline Bottle) தேவை. ஆனால் எங்களிடமோ சர்க்கரைச் சத்துள்ள நீர் (Glucose Water) தான் இருந்தது. அதை அவசரத்துக்காகக் கொடுத்துச் சமாளித்தோம்.

அங்கு எங்களோடு வந்திருந்த சக்திதிருமதி. விசாலாட்சி நெடுஞ்செழியன், திருமதி சாந்தி கோபிநாத், திருக்கழுக் குன்றத்திலிருந்து தேவையான மருந்துகளையும் வாங்கி வந்து சேர்ந்தனர். சுமார் 8 பாட்டில் உப்புத்தண்ணீர் (Saline Water) மற்றும் பல ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டன.

ஒருசில மணி நேரத்தில் அம் மூதாட்டியின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. சிறிது நேரத்துக்குப்பின் கண்திறந்து பார்த்துக் கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டான். அன்னை ஆதிபராசக்தியின் அருள் ஏழையின் பக்கம் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

இத்துடன் மட்டும் இல்லாமல், அன்று 1710 பேர்க்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ஊரே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. டாக்டர். செல்வராஜ் அவர்கள் வந்திருந்த மருத்துவர்கள் அனைவரின் தொண்டையும் பாராட்டி வாழ்த்தினார். அன்னை ஆதிபராசக்தியின் திருவருள் துணைகொண்டு இரண்டு ஊசலாடிய உயிர்களைப் பிழைக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக மருத்துவர்கள் மனநிறைவு பெற்றனர்.

ஓம் சக்தி!

பக்கம்: 28
சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 12 (1982).