நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு:
1. தங்கக் கவசம்
2. குங்குமக் காப்பு
3. மஞ்சள் காப்பு
4. சிறுதானியங்கள் காப்பு
5. வேப்பிலை காப்பு
6. துளசி காப்பு
7. விபூதி காப்பு
8. சந்தனக் காப்பு
9. நவதானியக் காப்பு
10. மிட்டாய் காப்பு
11. உலர் பழங்கள் காப்பு
“நவராத்திரி காப்பில் பங்கு பெறுவதால் 5 தலைமுறைகளைக் காப்பேன்” என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
காப்பு என்ற சிறப்பு அலங்காரம்
அன்னை ஆதிபராசக்தியின் அருள் பாதுகாப்பினை நமக்குப் பெற்றுத் தருகிறது.
நவராத்திரி காப்பு இன்றைய உலகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை உணரவும், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் நவராத்திரி காப்பு உதவும்.
*தங்கக் கவசம்*
1. தங்கம் போன்ற குணம் பெற, நல்ல சிந்தனைகளை நாம் பெற, தர்மத்திற்கும், அன்பிற்கும், பக்திக்கும், பாசத்திற்கும், தான் எப்போதும் கவசமாக விளங்குவதை உணர்த்த
அன்னை ஆதிபராசக்தி
தங்கக் கவசத்தை அணிகிறாள்.
2. “பங்காரு” என்றால் தங்கம் என்று பொருள். இப்பூவுலகில் தருமத்தை நிலைநாட்ட “பங்காரு” என்ற திருப்பெயர் கொண்ட அருள்திருஅம்மா அவர்கள் உள்ளே இருந்து நம்மைக் காப்பதையும் இந்த காப்பு நமக்கு உணர்த்துகிறது.
3. தங்கத்தினை நெருப்பில் இட்டு அதனைத் தூய்மை பெறச் செய்து விரும்பியபடி நகை செய்து கொள்வதைப் போல உலகியலில் பல துன்பங்களையும், சோதனைகளையும், அன்னை ஆதிபராசக்தி(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாரின்) துனையுடன் நாம் கடந்து வந்தால், அன்னை ஆதிபராசக்தி அருள் என்ற அமுதம் நமக்குக் கிடைக்கும் என அன்னை ஆதிபராசக்தி நமக்கு இதன் மூலம் புரியவைக்கிறாள்.
குங்குமக் காப்பு
1. மகாலட்சுமி வாசம் செய்யும் குங்குமக் காப்பு.
2. ‘ஓம் குங்கும மேனி கொண்டாய் போற்றி ஓம்’ என்ற அன்னையின் மந்திரமே இதற்கு அருள் சாட்சியாக விளங்குகிறது.
3. பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள், சிக்கல்கள், வழக்குகள், மன நிம்மதியின்மை, ஆகியவற்றில்
இருந்து காப்பது குங்குமக் காப்பு.
4. காலனையும் வெல்லும், வியாபார முன்னேற்றம் அளிக்கும்.
5. செல்வவளம் தரும்.
மஞ்சள் காப்பு
1. மங்கலம் தரும் மஞ்சள் காப்பு
2. மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டில் நல்ல நாட்களில் மஞ்சள் நீர் தெளித்தால், அமைதியும், சாந்தமும், உடல் ஆரோக்கியமும் நிலவும்.
3. கிராமங்களிலும், நகரங்களிலும், தெய்வங்களின் தேரோட்டத்திற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளிப்பது வழக்கம்.
4. அருள்திரு அம்மா அவர்களின்(பங்காருஅடிகளார்) அருள் ஆசி பெற்று நடக்கும் ஆன்மீக ஊர்வலங்கள், ஆன்மீக பாதயாத்திரைகள், அனைத்திலும் மஞ்சள் நீரை முதலில் தெளித்தபடி ஒரு பக்தர் செல்வது வழக்கம்.
5. பெண்கள், குடும்பத்தில் நல்ல நாட்களில், மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கம்.
6. பெண்களின் திருமாங்கல்யத்தில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வதன் மூலம் அன்னை ஆதிபராசக்தியின் அருளால் அவர்கள் தாலிபாக்கியம் மேலும் வலுப்பெறுகிறது.
7. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் பலரும் அன்னை ஆதிபராசக்தியை வேண்டி நம் சித்தர்பீட சன்னதியில் தொட்டில் கட்டுவது போல, திருமணமாகாத ஆடவரும், பெண்களும் ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் கிழங்கு முடித்து, சித்தர்பீட சன்னிதியில் அன்னை ஆதிபராசக்தியை நினைத்துக் கட்டுவதால் திருமணப்பேறு உண்டாகிறது.
8. எளிமையானவர் முதல் செல்வந்தர் வரை அனைவராலும் பயன்
படுத்தக்கூடிய இந்த மஞ்சளை அன்னை ஆதிபராசக்தியை விரும்பி ஏற்று மகிழ்கிறாள்.
சிறுதானியக் காப்பு
1. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் ஆகிய சிறுதானியங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் சக்தி மிகப் பெரியதாகும்.
2. மற்ற தானியங்களை விட 3 முதல் 5 மடங்கு வரை சக்தி வாய்ந்தது இந்தச் சிறுதானியங்கள்.
3. சிறுதானிய உணவு வகைகளை நாம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெற்று நோய்கள் இன்றி வாழவும் அம்மா நமக்கு வழிகாட்டுகிறாள்.
4. சிறிது, பெரிது, என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் உணர்த்துகிறாள்.
வேப்பிலைக் காப்பு
1. குடும்பப் பிணி நீங்கும்.
2. ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை பறந்தோடிப் போகும்.
3. பிரசாதமாக இதனை உண்ண, நோய் பறந்து விடும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
5. வேம்பின் கீழ் பாலாக அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்டதன் மூலமாகவும், வேப்பிலை ஏந்தி அருள் கோலத்தில் வெளிபடுவதன் வாயிலாகவும், இந்த வேப்பிலையின் மகத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.
6, உலகில் பல ஆயிரம் வகைகளில் மரங்கள் இருந்தாலும், வேப்பமரம் நமது சித்தர்பீடத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.
7. வேப்பிலை காப்பினை ஆன்மிககுருஅருள் திரு அம்மா அவர்களே (பங்காருஅடிகளார்)
அம்மா காப்பு என்று அழைப்பதன் மூலம் இதன் சிறப்பினை நாம் உணரலாம்.
துளசிக் காப்பு
1. துளசியை நம் நாட்டில் வாழ்ந்த ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வர்.
2. துளசிச் செடியைத் தெய்வமாக மதித்து வணங்குவது நமது இயல்பாகும்.
3. காக்கும் கடவுளான திருமாலுக்கு உகந்தது துளசி.
4. மருத்துவ குணங்களும் இந்த இலைக்கு உண்டு.
5. முறையாக விரதம் இருக்கும் பல ஆன்மீக அன்பர்களும், துளசி தீர்த்தம் அருந்திய பிறகே தங்கள் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
6. துன்பங்களில் இருந்து நம்மைக் காக்கும் தூயவளான அன்னை ஆதிபராசக்தியேவிரும்பிச் சூடும் துளசி காப்பு.
விபூதிக் காப்பு
1. விபூதி என்றால் ‘ஐஸ்வர்யம்’ என்று பொருள்.
2. சித்தர்கள் விபூதியை மறைபொருளாகக் குறிப்பிடுகின்றனர். இந்த விபூதி, 4448 நோய்களைத் தீர்க்கக் கூடியது.
3. நமது உடலில் 11 இடங்களில் இந்த விபூதியைப் பூச வேண்டும், என்றும் அந்த 11இடங்களில் ருத்ரர்களின் தேவியர் வாசம் செயவதாகவும், ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
4. அன்னை ஆதிபராசக்திக்குச் செய்யப்படும் இந்த விபூதி காப்பு அலங்காரம் வழியாக அன்னைக்கு இந்த பதினோரு தேவியரும் நம் உடலுக்கும், உள்ளத்திற்கும், பல நன்மைகளை புரிகின்றனர்.
சந்தனக் காப்பு
1. சந்தனம் பூசிக்கொள்பவருக்குக் குளிர்ச்சியைத் தருவது போல, ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்கள் (பங்காருஅடிகளார்) தன்னை வழிபடுபவர் வாழ்வில் குளிர்ச்சியையும், அவரவர் மனங்களில் குளிர்ச்சியையும் அளிக்கிறார்கள்.
2. ‘ஓம் சந்தனச் சாந்தணி உகப்பாய் போற்றி ஓம்’ என்ற மந்திர வரியும் அன்னைக்கு சந்தனம் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறது.
3. சில பக்தர்களுக்கு, சந்தனக்காப்பின் மூலம் சந்தானம், அதாவது குழந்தை வரம், அன்னை ஆதிபராசக்தி அருளியிருக்கிறாள்.
4. சந்தனம் அபிஷேகப் பொருளாகவும், நறுமணம் வீசும் பொருளாகவும் உள்ளது. நமது ஆன்மா குளிர்ச்சி பெற்று, நம்வாழ்வு நறுமணத்துடன் விளங்க அன்னை ஆதிபராசக்திக்குச் சந்தனகாப்பு.
நவதானியக் காப்பு
1. ‘நவ’ என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள்.
2. நவகிரகங்களைக் குறிக்கிறது அவற்றின் விபரம் பின்வருமாறு:
தானியம் – கிரகம்
கோதுமை – சூரியன்
நெல் – சந்திரன்
துவரை – செவ்வாய்
பாசிப்பயறு – புதன்
கொண்டைக்
கடலை – வியாழன்(குருபகவான்)
அவரை/
மொச்சை – வெள்ளி
எள் – சனி
உளுந்து – ராகு
கொள்ளு – கேது
3. நவகிரகங்களைச் சாந்தப்படுத்தும் நவதானிய காப்பு.
4. கிரகக் கோளாறுகள், தோஷங்களில் இருந்து காக்க வல்லது.
5. ஜாதகமும் நமக்கு சாதகமாகும்.
மிட்டாய் காப்பு
1. ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்றும் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்றும் கூறுவது போல குழந்தைக்குப் பிடித்தமான மிட்டாயைக் காப்பாக அணியும் அன்னை ஆதிபராசக்தி, தானும் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று நமக்கு உணர்த்துகிறாள்.
2. மிட்டாய் இனிப்பாக இருப்பதைப் போல் எந்நேரமும் நமக்கு இன்பத்தை அதாவது பேரின்பத்தை அளிக்கப்போவதாக ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்கள் (பங்காருஅடிகளார்)இங்கே உணர்த்துகிறார்கள்.
கற்கண்டுக் காப்பு
1. கற்கண்டு என்ற புனிதப் பொருள் தெய்வங்களுக்குப் படைக்கக்கூடிய நைவேத்திய பொருளாகும்.
2. கற்கண்டு கரும்பில்லிருந்து பெறப்படும். கரும்பு விவசாயம் பனை விவசாயம் ஆகியவை செழிக்க உதவும்.
உலர் பழங்கள் காப்பு
1. உலர் பழங்கள் மாறுபட்ட வெப்ப நிலைகளிலும் அதன் சத்துகளையும், சுவையையும் இழப்பதில்லை. அதுபோல உலகில் பல சூழ்நிலைகள் மாறினாலும், “அன்னை ஆதிபராசக்தியை அடைய வேண்டும்” என்ற எண்ணத்தை நாம் கடைபிடிக்க வேண்டும்.
2. வெளிநாடுகளில் இருந்தும், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளைந்து வருகின்ற இந்த உலர் பழங்களை அன்னை ஆதிபராசக்தி, தான் சூடிக் கொள்வதன் மூலமாக, அனைத்து உலகிற்கும் தான் தாய், என்றும் எல்லா மக்களும் தன் குழந்தைகள் என்றும் உணர்த்துகிறாள்.
லட்சார்ச்சனை வழிபாடு
1. லட்சம் முறை அன்னை ஆதிபராசக்தியின் திருப்பெயர் உச்சரிப்பது லட்சார்ச்சனை. குடும்பமும் நலமுடன் வளம் பெற்று, அவரவர் லட்சியங்கள் நிறைவேற இந்த வழிபாடு நடக்கிறது.
2. அன்னை ஆதிபராசக்தியின் சித்தர் பீடத்தில் அன்னையின் 1008, 108 மந்திரங்கள் ஒலிக்கும் அதே நேரத்தில், பதிவு செய்தவர் பெயர் மற்றும் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்படுகிறது.
3. லட்சார்ச்சனையில், நம் பெயர், நம் குடும்பத்தார் பெயருக்கு மட்டுமல்லாமல், நம்முடைய வண்டி, வாகனங்கள் எண்ணிற்கும், பணிபுரிகின்ற தொழில் நிறுவனங்கள், கடைகள், ஆகியவற்றின் பெயருக்கும் செய்யலாம்.
4. லட்சார்ச்சனை பிரசாதத்தினை (அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப்படம், மஞ்சள், குங்குமம்,) அன்னை ஆதிபராசக்தியின் வழிபாட்டு மன்றங்கள் வாயிலாகவும், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் மூலமாகவோ அல்லது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திலோ பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
ஓம் சக்தி
நன்றி.
சக்தி ஒளி .2018.