ஊசி போட்டும்…. தீராத நோய் தீர்த்து வைத்த அன்னை ஆதிபராசக்தியின் டாலர்!!!!!

0
2290
மதுரை மாவட்டம் – தோப்பூர் கிராமத்தில் வசிப்பவர் விருமாண்டி. எச். ஆர். கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கெமிக்கல் அவரது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமலும், சளியும் சேர்ந்து தொல்லை கொடுத்து வந்தது.
மருத்துவரிடம் சென்று காட்டிய போது “உங்களுக்குள் காச நோய் வந்திருக்கிறது. தொடர்ந்து வைத்தியம் பார்க்க வேண்டும். 50 ஊசிகள் போட வேண்டும்” என்று சொல்லிவிட்டார். தொடர்ந்து ஊசிகள் போட்டு வந்தும், இருமலும் சளியும் குறைந்தபாடில்லை.
அவர் மனைவி நிலையூர் என்ற
ஊரில் ஊட்டச்சத்து மையத்தின் அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு தோழி. அவர் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பக்தை. தனது கணவரின் நிலைமையைத் தோழியிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு மேல்மருவத்தூர் பிரசாதமும், டாலர் ஒன்றையும் தோழி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
“எங்கள் வீட்டில் ஆறு பேர் இருக்கிறோம். யாருக்குக் கொடுப்பது? எல்லோரும் எனக்கு வேண்டும் – எனக்கு வேண்டும் என்று கேட்பார்களே… சரி! சீட்டு எழுதிப்போட்டு யார் பெயருக்கு வருகிறதோ அவருக்கே டாலர் போட்டு விடுகிறேன்!” என்று சொல்லி டாலரை வாங்கிக் கொண்டு போனார்.
வீட்டில் ஆறு பேர் பெயரையும் தனித்தனியாக எழுதி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படத்தின் முன்பு குலுக்கி எடுத்தார்கள். சக்தி விருமாண்டி என்ற பெயர் எழுதிய சீட்டுத்தான் வந்தது. அந்த டாலரை சக்தி விருமாண்டிக்குப் போட்டார்கள்.
டாலர் போடும் வரை சக்தி விருமாண்டி 25 ஊசிகள் போட்டு முடித்து இருக்கிறார். அதுவரை உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்புறம் ஏழு ஊசி போட்டுக் கொண்டார். இன்னும் 18 ஊசி பாக்கி!
இந்த நிலையில் அவருடைய சளி, சிறுநீர், மலம் இவற்றை டாக்டர் டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்.
“உங்கள் உடம்பில் எந்த வித நோயும் இல்லையே! காசநோய் வந்திருக்கிறது என்று யார் சொன்னது?” என்று டாக்டர் கேட்டிருக்கிறார்.
இதே டாக்டர் தான் உங்களுக்கு காசநோய் வந்திருக்கிறது என்று சொன்னார். இதே டாக்டர் தான் இப்போது இல்லை என்று சொல்கிறார்.
சக்தி விருமாண்டிக்கு அப்போது தான் அந்த டாலரின் மகிமை தெரிய வந்தது.
இன்று சக்தி விருமாண்டியின்
குடும்பமே பரம்பொருள் பங்காரு
அம்மா அவர்களின் தீவிர பக்தர்கள். இன்னும் எச். ஆர். கம்பெனியில் பிட்டராக நல்ல முறையில் வேலை பார்த்து வருகிறார்.
ஒரு செப்பு டாலர் மூலமும்
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்கள் காப்பாற்றுகிறார்கள். அனுபவப்பட்டவர்களுக்குத்தான்
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் மகிமை புரியும்.
 
ஓம்சக்தி!
பக்கம் 203 – 204.
சக்தி ஏ, நாகராஜன், திருமங்கலம், மதுரை.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து….