‘அன்னை ஆதிபராசத்தியும் பக்தி இயக்கமும்”

0
1716

ஒருநாள் அன்னை ஆதிபராசக்தி ஆலயத் தொண்டர்களை எதிரில் வைத்துக் கொண்டு அருள்வாக்குச் சொன்னபோது கூறிய சொற்களிவை!

‘‘இன்று நாட்டில் ஆன்மிக உணர்வு குறைந்துவிட்டது; தீய சக்திகளின் வலிமை பெருகிகக்கொண்டு வருகின்றது. அதனால்தான் அராஜகப் போக்கு. குழப்பம், கலவரம், கொலை கொள்ளை முதலான தீமைகள் சமுதாயத்தில் பெருகிவிட்டன. ஆன்மிக உணர்வு பெருகவில்லையேல் மேலும் பல அழிவுகள் உண்டு. ஆன்மிக் இல்லையேல் உலகமே இல்லை மகனே! உலகமே அழிந்துபோகும் நிலைக்கு வந்துவிடும் மகனே” என்று சொன்னாள்.

ஆன்மிக உணர்வு குன்றியதால் ஏற்பட்ட விளைவுகள்:

எண்ணங்கள்தான் உலகை ஆளுகின்றன. சமுதாயத்தில் நல்ல எண்ணங்கள் வளர்க்கப்பட வேண்டும் அறம் – நேர்மை – ஒழுக்கம் – தெய்வம் – தெய்வபக்தி போன்ற மாறாத மதிப்புடைய கோட்பாடுகளை மனித இனம் மறக்காமல் பின்பற்றி வாழவேண்டும். இன்று இந்திய நாட்டையும் – சமுதாயத்தையும் கட்டிக் காப்பது வெறும் பட்டாளமும் போலீஸ் துறை மட்டுமே அல்ல! திருடனும், கொள்ளைகாரனும்கூட தான் செய்வது பாவம் என்று உணர்கின்ற மனநிலை வரவேண்டும்! இது பாவம். இது தனது என்று மனிதர்கள் ஓரளவு பாவ புண்ணியங்கட்கு அஞ்சி வாழ்வதால் தான் இந்த அளவுக்காவது சமுதாயக் கட்டுக்கோப்பு இருக்கிறது. ஆனால் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இந்தக் கட்டுக்கோப்பையும் உடைத்துவிடுமோ என்று அஞ்சத்தக்கனவாக இருக்கின்றன!

நூற்றாண்டுக்கு நூற்றாண்டு மனித சமுதாயம் பல்வேறு வகையில் மாறுதல் பெற்று வந்தாலும் மனித வாழ்க்கைக்கு அடிப்படையான கொள்கைகளை நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். அறம் – பொருள் – இன்பம் – வீடு இந்த நான்குமே மனிதகுலம் உயிரோடு இருக்கும் வரையில் பின்பற்றியே தீரவேண்டிய அழியாத கொள்கைகள் அதனால்தான் இந்நான்கையும், உறுதிப் பொருள்கள் என்று குறிப்பிட்டனர். இன்பத்தை நாடாத மனிதன் இல்லை. அந்த இன்பத்துக்கு அடிப்படை பொருள்; அந்தப் பொருளை அறவழியில் சம்பாதிக்க வேண்டும். பகுத்துண்டு வாழ வேண்டும். இந்த நெறிப்படி வாழ்ந்தால் பிறப்பின் பயனாகிய அந்த வீடுபேறு என்ற மேலான நிலை கிடைக்கும் உலகத்தில் தோன்றிய எல்லாச் சமயங்களின் கொள்கைகளும் அறிவுரைகளும் தொகுத்துப் பார்த்தால் அறம் – பொருள் – இன்பம் – வீடு என்ற இந்த நான்கு இலட்சியங்களுக்குள் அடங்கி விடுகின்றன.

இந்த நான்கு அடிப்படைக் கொள்கைகளில் இன்பமும் பொருளுமே இலட்சியம் என்று இரண்டினை மட்டும் கொண்டு விட்ட சமுதாயத்தில் போராட்டமும் – குழப்பமும் தான் நேரும்! சமுதாயத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பேரும் நல்லவர்களாக இருந்துவிட முடியாதுதான்! நல்லதும் தீயதும் கலந்த கலப்பே இந்த உலகம் என்பது உண்மைதான்! ஆனால் நல்ல எண்ணங்கட்கு வலிமையும் – ஆற்றலும் இருக்க வேண்டுமானால் நல்ல எண்ணங்கட்குச் செல்வாக்கும் – நல்லவர்கட்கு மதிப்பும் ஏற்பட வேண்டும்; தீயவர்கட்கும் – தீய எண்ணங்கட்கும் செல்வாக்கும் மதிப்பும் போற்றுதலும் இருக்குமானால் தீமைகள்தான் தலைவிரித்தாடும். இதுதான் இப்போது இன்றைய சமுதாயத்தில் நடைபெற்று வருகின்றது. அதனால் வரும் துன்பங்களையும், துயரங்களையும் சமுதாயம் அனுபவிக்கின்றது. இன்று எவருடைய வாழ்க்கையிலும் நிறைவான மனப்பான்மை இல்லை; போட்டி – பொறாமை – பணவெறி – சுயநலம் – அறநெறியில் நம்பிக்கை இல்லாமை – குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் துடிப்பு – ஆடம்பர வாழ்க்கையில் மோகம் – பிறர் நலனுக்காக உழைப்பதில் நம்பிக்கை இல்லாமை இறை நம்பிக்கை இல்லாமை எப்படியாவது நாம் மட்டும் வசதி வாய்ப்பைப் பெற்று வாழ்ந்தால் போதும் என்ற மனப்போக்கு – இவையெல்லாம் பெருகி வருகின்றன.

ஏன் இந்த நிலைமை?

எந்திர நாகரிகம் மக்களுக்குப் பல பொருள்களைக் கொடுக்கின்றது; ஆனால் எல்லாருடைய தேவைகளையும் நிறைவு செய்ய முடியவில்லை; சில நூலாலைகள் இலட்சக் கணக்கான நெசவாளர்களின் பிழைப்பைக் கெடுத்தன் விஞ்ஞான முன்னேற்றமும், விஞ்ஞான வசதிகளும் தவிர்க்க முடியாதனவாக ஆகிவிட்டன் இவற்றை நாம் வேண்டாம் என்று புறக்கணிக்க முடியாது. ஆனால் இந்த வசதி வாய்ப்புகள் சமுதாயம் அனைத்துக்கும் பயன்படுமாறு செய்யப்படவில்லை. ஏழை மக்கட்கும் சராசரி மக்கட்கும் நடுத்தர மக்கட்கும் இன்றைய வாழ்வில் ஏக்கங்கள் மிகுந்துவிட்டன! தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிமையாக வாழும்படிச் சொன்னால் எவரும் கேட்பதாக இல்லை; எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வந்து விட்ட பிறகு நேர்மையாவது! நியாயமாவது! இந்த வாழ்க்கைக்கும் பிறகு மனித வாழ்க்கை தொடர்கிறது என்று சொன்னால் நம்புபவன் இல்லை. திருக்குறளுக்கும் – கீதைக்கும் மாநாடு நடந்துவதோடு சரி! என்ற நிலை இருக்குமானால் பயன் என்ன? உலகுக்கெல்லாம் அற்புதமான தெளிவான கொள்கைகளைச் சொல்லி வழிகாட்டுகின்ற இந்துமதக் கோட்பாடுகளை அர்த்தமற்ற கோட்பாடுகள் என்று இன்றைய சமுதாயம் நினைக்கின்ற அளவுக்குத் தாழ்ந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமும் ஏக்கமுமே எழுகின்றன.

படித்தவர்களாவது மற்றவர்கட்கு எடுத்துக்காட்டாக இருப்பார்களா என்றால் இன்றைய படிப்பாளிகள் தன்பெண்டு – தன்பிள்ளை – சோறு – வீடு – சம்பாத்தியம் என்று தங்கள் வாழ்வைச் சுருக்கிக் கொண்டார்கள். பொதுநலம் – சமூகத்தொண்டு – சமுதாயத் தொண்டு இவை பற்றிச் சிந்திக்க நேரம் இல்லை! இலஞ்சம் பெறுவதும் கொடுப்பதும் சமூக நியதியாகி விட்டது. செலவுக்கு அரசியல் கட்சிகள் – பதவி – பணம் – சாதிச் செல்வாக்கு இவற்றை வைத்து வாழத் தொடங்கிவிட்டன! வாணிகர்களின் பேராசை கள்ள வாணிகம் – கறுப்புப் பணமாக அலைக்கழிக்கின்றது.

சொன்னதையே சொல்லி – எழுதியதையே எழுதினால் பணம் கிடைக்காது என்று தொpந்துகொண்ட எழுத்தாளர்கள் சமுதாயத்தின் அவல நிலையைத் தானே நாங்கள் எழுதுகின்றோம் என்று சொல்லி பண்டைய இலக்கிய மரபுகளையும் அலை மரபுகளையும் உதறிவிட்டுப் ‘‘புதிய கலை” என்ற பெயரால் எதைஎதையோ எழுதுகின்றார்கள்!

துணிவாகத் திருடவும் துணிந்தே தீய ஒழுக்கங்களில் ஈடுபடவும் இன்றைய திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டன! இலைமறை காயாக இருந்த பாலுணர்வுப் பிரச்சினைகளை வைத்து இலட்சக் கணக்கான மக்கட்குத் தீனிப்போட்டு வளர்த்து வருகின்றன! அறநெறியிலும் – ஒழுக்கங்களிலும் நம்பிக்கை வைக்காத இளைய தலைமுறையினர் பெருகி வருகின்றனர்.

இந்த அலங்கோலங்கள் தொடர வேண்டும்; வன்முறை நீடிக்க வேண்டும் கலவரங்கள் பெருக வேண்டும்; அப்போதுதான் புரட்சி வெடிக்கும்; நம் கருத்துகளும் கொள்கைகளும் செல்வாக்கு பெற வேண்டுமானால் நாட்டில் குழப்பங்கள் இன்னும் பெருக வேண்டும் என்று சில கட்சிகள் ஆசைப்படுகின்றன.

ஓர் இயக்கமே தேவை

இந்த அலங்கோல நிலைகளில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டுமானால் ஏதாவது ஓர் அதிசயம் நடக்க் வேண்டும்; ஆன்ம பலம் பெற்ற தலைவர்கள் வழிகாட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பே இன்றைய உலக அரங்கத்தில் இல்லைபோல் உள்ளது! ஆகவே தான் மனித குலத்தைமீட்க அன்னை ஆதிபராசத்தி இங்கே பங்காருஅடிகளாரை வயப்படுத்திக் கொண்டு ஆன்மிகம் பெருக – தெய்வ பக்தி வளர திருவருள் புரிகின்றாள். மருத்துவ அறிவியல் அறிஞர்களையே திகைக்கும் வகையில் சிலருடைய நோய்களைத் தீர்த்து வைப்பதும் பலருடைய குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் – ஊழ்வினையின் ஆற்றலை உணர வைப்பதும் தெய்வ நம்பிக்கையின் ஆற்றலை உணர வைப்பதும் – பக்தியின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக அன்னை ஆதிபராசக்தி பல அற்புதங்களை நிகழ்த்துகின்றாள். மாபெரும் பக்தி இயக்கம் ஒன்றை உருவாக்குவது அவள் திருவுள்ளம் போலும்!

அவரவர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு அவரவர்கள் வீட்டில் அமைதியாக இருந்து கொண்டு அன்னையை வழிபட்டுக் கொண்டும் இருந்து விட்டால் போதுமா? ஆகவே, தன்னிடம் பக்திப் பிணைப்பால் பிணைப்புண்ட பக்தர்களின் பக்தி உணர்ச்சிக்கு ஓர் வடிவம் கொடுத்து அவர்களைச் சமூகப் பணியிலும் -சமுதாயப் பணியிலும் ஈடுபட வைக்கின்றாள் அன்னை ஆதிபராசக்தி. 1008 வார வழிபாட்டு மன்றங்களை அமைத்து – வழிபாடுகளை நடத்தச் சொல்லி – அம்மன்றங்களில் கலந்து கொண்டு வழிபடும் குடும்பத்தார்கட்கு எல்லாப் பயன் தருகின்றாள்.
இவ்வாறாக வழிபாடு என்று தொடங்கி சிறுகச் சிறுக சமயப் பணிகளில் ஈடுபட வழிகாட்டுகின்றாள். பாழடைந்த கோயில்கட்கு எல்லாம் சென்று வழிபாடு செய்து பக்தி வளரச் செய்ய ஆணையிடுகின்றாள். ஆங்காங்கே இருக்கின்ற மன்றங்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கட்குத் தொண்டாற்றக் கட்டளை இடுகின்றாள். ‘‘அனாதைப் பிணங்களைக் கூட நீங்களே அடக்கம் செய்யுங்கள்! அதனால் புண்ணியம் உண்டு” என்பது வார வழிபாட்டு மன்றத்தார்க்கு ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் இடும் கட்டளை! ‘‘இந்த வழிபாட்டு மன்றங்கள் வெறும் பஜனை மடங்களாக மட்டும் இருந்துவிடக் கூடாது” என்றும் அம்மா சொல்லியிருக்கின்றாள்.

அந்தந்தப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் ஏதேனும் துன்பமோ வேதனைகளோ அடுத்தடுத்து நடக்குமானால் – அந்தக் குடும்பங்கட்குச் சென்று 108, 1008 மந்திர வழிபாடு செய்யுமாறும் அன்னை ஆதிபராசக்தி கட்டளையிட்டுள்ளாள்.

மன்றத்தினர் கலசபூசை, விளக்கு பூசை, குடும்பநல வேள்வி முதலியன நடத்தி பல குடும்பங்கள் செழிப்பும் வளமும் பெறவும் – அக்குடும்பங்கள் நிம்மதி அடையவும் வழிவகைச் செய்யத் திருவுளம் கொண்டு பணித்திருகின்றாள்.

இப்படி அன்னை ஆதிபராசக்தி சொல்லும் பணிகளையே செய்தால் நம் குடும்ப வேலைகள் என்னாவது என்று கருதுகின்ற தொடர்கட்கு அன்னை ஆதிபராசக்தி, ‘‘நீங்கள் நான் இடும் பணியினைச் செய்யுங்கள்; உங்கள் பணியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கின்றாள்.

ஆர்வத்தோடு – பக்தி உணர்வோடு – அகங்காரம் இல்லாமல் பொறாமை – போட்டி இல்லாமல் தொண்டாற்றும்படி அம்மா பணித்திருக்கின்றாள்.

அன்னை ஆதிபராசக்தியை மையமாக வைத்து வழிபாட்டு மன்றங்களில் கலந்துகொண்டு – சமய, சமுதாயத் தொண்டுகளில் பங்கு கொண்டு – சாதி – சமய வேறுபாடு காட்டாமல் உழைக்க விரும்புகின்ற அனைவர்க்கும் அன்னை ஆதிபராசக்தி அருள்பொழியத் தயாராக இருக்கின்றாள். அவர்கட்கு நல்லன எல்லாம் அளிக்கத் தயாராக இருக்கின்றாள்!

மாபெரும் பக்தி இயக்கத்தை உருவாக்கி – நம்மையெல்லாம் மேம்படுத்தப் பரம்பொருள் அழைக்கின்றது! பயன்படுத்திக் கொள்ள எத்தனைபேர் இருக்கின்றோம்? மற்றவர்களைப் பற்றி நினைப்பானேன்! நாம் தயாராக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது! அன்னை ஆதிபராசக்தியின் அருள் வெள்ளமாகப் பொங்கிப் பெருகுகிறது; பருகவும் பயனடையவும் – பிறவிப் பயனை அடையவும் விரும்புவோர் அன்னை ஆதிபராசக்தியின் பக்தி இயக்கத்தில் நினைத்துக் கொண்டு பயன் அடைக!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி