சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்காரம் பிள்ளையின் கன்னத்தில் “பளார்” என்று ஒரு வாங்கு வாங்கினான் அவருடைய பேரன் ஆதி. பரிமாறிக் கொண்டிருந்த பாட்டி பதறிப் போனாள். ஆனால் சிங்காரம் பிள்ளை மட்டும் சிறிதும் கலக்கம் அடையாமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டார். சிந்தித்துச் சிந்தித்து மகிழ்ந்தார்.

அன்று சிங்காரம் பிள்ளையின் பிறந்தநாள். பேரனை அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போய் இருந்தார். அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் சந்நிதியில் தாழாத கூட்டம். முண்டியடித்துக் கொண்டு பேரனுடன் முன்னால் சென்றார். அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து, அவர் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை பண்ணச் சொன்னார். குருக்கள் தட்டைக் கையில் வாங்கியபோது, “சாமி, தமிழிலே பண்ணுங்கோ” என்றார் சிங்காரம் பிள்ளை. சரியென்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார் குருக்கள்.

அர்ச்சனை முடிந்து தீப ஆராதனை நடந்தது. சிங்காரம் பிள்ளை கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து, சித்த சுத்தியோடு சொக்கநாதரை வணங்கிக் கொண்டிருந்தார். கூப்பிய கரங்கள் கொஞ்சமும் விலகவில்லை.

கற்பூர ஒளியில் சொக்கநாதரைக் கண்ட அவர் பேரன் ஆதி, “என்ன தாத்தா! கண்களை மூடிக்கொண்டு கல்லைக் கும்பிடுறே”? என்றான்.

தியானத்திலிருந்த சிங்காரம் பிள்ளைக்குச் சினம் தாங்கவில்லை. ஆழ்ந்த தியானம் அப்பொழுதே கலைய பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஆதியின் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அறை கொடுத்தார் பையன் சுருண்டு போனான். பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் பதைத்துப் போனார்கள்.

சிங்காரம் பிள்ளை சீறினார். “சின்னப் பயலே! கடவுளைப் பார்த்தா கல்லுனு சொல்லறே மடையா? அது கல்லில்லை; கடவுள்! கன்னத்திலே போட்டுக்கோ” என்றார். தாத்தா அடிச்ச கன்னத்திலேயே தப்புதப்புன்னு தானும் இரண்டு போட்டுக்கொண்டு சொக்கநாதரைக் கும்பிட்டான் ஆதி.

தாத்தாவும் பேரனும் வீடு திரும்பினர். பிறந்தநாள் சாப்பாடு தடபுடலாகத் தயாராகிக் கொண்டு இரந்தது. அவருக்குப் பிடித்தமான முருங்கைக்காய் சாப்பார் மூக்கைத் துளைத்தது. ரவா பாயசம்,ஆதியின் நாக்கைச் சொட்ட வைத்தது. சிங்காரம் பிள்ளை பேரனைக் கிட்டே அழைத்துச் “சாப்பிடலாமா கண்ணு” என்றார். எப்போ அழைப்பார் என்று காத்துக் கொண்டிருந்த ஆதிமுந்தி வந்து அவரோடு பந்தியில் அமர்ந்தான்.

பாட்டி பரிமாறத் தொடங்கினாள். பருப்பை ஊற்றி நெய்யை வார்த்தாள்.

இரண்டையும் முறுகப் பிசைந்து சிங்காரம் பிள்ளை அருந்தத் தொடங்கினார். வாய்ச்சோறு கூட உள்ளே போயிருக்காது. கடுக்கென்று ஒரு கல் அடிபட்டது. பல்லே உடைந்து போயிருக்குமோ என்றெண்ணும் படியான பயங்கரச் சத்தம். சிங்காரம் பிள்ளைக்குச் சினம் பொத்துக்கொண்டு வந்தது. பரிமாறிக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்துக் கூவினார். “என்னடி சமையல் பண்றே” அறிவு கெட்ட முண்டமே! எதிலே பார்த்தாலும் கல்லைக் கொட்டி வச்சிருக்கே! இந்தாப்பாருடி கல்லே” என்று கடிபட்ட கல்லை எடுத்து அவள் முகத்திலே வீசியெறிந்தார்.

அவ்வளவுதான் அவர் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதி எழுந்தான். ஆத்திரம் தாங்காமல் தாத்தா கன்னத்திலே “பளார், பளார் என்று வாங்கினான். ஓசை படபடத்தது. திடீர் தாக்குதலில் தாத்தா திகைத்துப் போனார். ஆதி சொன்னான். “என்ன தாத்தா! கடவுளைப் போயிக் கல்லுனு தூக்கி எறியறே? எறியலாமா? வாய்க்கு வந்தபடி வையுறே வையலாமா? என்றான்.

உடனே சிங்காரம் பிள்ளைக்குக் கோயில் நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. பேரனிடம் மெதுவாகச் சொன்னார். “கோயிலிலே உள்ள கல்லைத்தான் கடவுளின்னு சொன்னேன். இதெல்லாம் கடவுளில்லை. வெறுங் கல்லுதான்” என்றார்.

ஆதி சொன்னான். “இல்லை, எனக்குக் கல்லெல்லாம் கடவுள்தான். அந்த நம்பிக்கை இன்று காலை கோயிலிலே ஏற்பட்டது. இனி அது என்றைக்கும் மாறாது. கோயில்லே இருப்பது பெரிய சொக்கநாதர் இங்கே இருப்பது சின்னச் சொக்கநாதர்” என்றான். இதைக் கேட்டுச் சிங்காரம் பிள்ளை திகைத்தார். சினக்கவில்லை. நம்பிக்கையே கடவுள் என்பதை அந்த மழலையின் மூலம் அறிந்துகொண்ட சிங்காரம் பிள்ளை சிரித்துக் கொண்டே சாப்பிட்டார். சிந்தித்துச் சிந்தித்து மகிழ்ந்தார்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 27-28

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here