“தை பிறந்தால் வழிபிறக்கும்”  என்பது பழமொழி,  2கார்த்திகை பிறந்தால் கர்மம் நீங்கும்”  என்பது புதுமொழி. நமக்கு நல்வழி பிறக்க வேண்டுமேயானால் நாம் செய்த கர்ம வினைகள் நீங்க வேண்டும்.அதற்குக் கார்த்திகை மாதம் பிறக்க வேண்டும்.இப்போது கார்த்திகை பிறந்துவிட்டது.

ஆம்!  இந்தக் கார்த்திகை மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாகி நம் அம்மா நாம் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் சித்தர் பீடம் சென்று கருவறை சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்ய வைத்து நாம் செய்த கர்மங்களை நீக்கி அருள் வழங்கி வருகிறாள்.

எத்தனையோ முறை சக்திமாலை அணிந்துள்ளோமே! மேலும் சக்திமாலை அணிய வேண்டாமா?  என்று யோசிக்க வேண்டாம்.நேற்று பல் விளக்கினோம் அழுக்குப் போனது. மீண்டும் இன்று அழுக்குப் படிந்துள்ளது. அதனால் இன்றும் பல்விளக்குறோம்.நேற்றுக் குளித்தோம். உடலில் அழுக்கு சேர்ந்துவிட்டது. இன்றும் குளிக்கிறோம். நேற்று சலவை செய்த ஆடையை உடுத்தினோம். இன்று அதில் அழுக்குசேர்ந்துவிட்டது. அந்த ஆடையைத் துவைத்துத்தான் மறுபடியும் உடுத்துகிறோம். அதனால் தான் அவ்வையார்.

“கூழானாலும் குளத்துக்குடி

கந்தையானாலும் கசக்கிக்கட்டு”

-என்று கூறினார்கள்.

நம் வீட்டுப் பாத்திரத்தை நேற்றுத் துலக்கினோம். இன்று மறுபடியும் அழுக்கு சேர்ந்ததால் துலக்குகிறோம். நேற்று வீட்டைக் கூட்டிக் கழுவி சுத்தம் செய்தோம்.இன்று தூசு படிந்ததால் மீண்டும் மீண்டும் கூட்டிக் கழுவி சுத்தம் செய்கிறோம்.

சக்திகளே!  இவை எல்லாம் கண்ணுக்குத் தெரிந்த வெளி அழுக்குகள். இவற்றை எல்லாம் நாள் தோறும் சுத்தம் செய்கிறோம். அதுபோல ஆண்டுக்கு ஒரு முறை சக்தி மாலை அணிந்து இருமுடிஏந்தி நம் மன அழுக்குகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.உள்ளம் தூய்மையாக இருந்தால் தான் அன்னை ஆதிபராசக்தி அங்கு குடியேறுவாள். அதனால் தான் திருமூலர் “உள்ளம் பெருங்கோயில்” என்றார்.

பூமித் தாய் பொறுமைக்கு எடுத்துக்காட்டு!  உலகில் சிலகோடியாக இருந்த மக்கள் தொகை இன்று பலகோடியாக உயர்ந்துவிட்டது. அந்த மக்கள் பாரத்தை உலகத்தாய் மகிழ்ச்சியோடு தாங்குகிறாள்.

ஆனால் மக்கள் பாவ மூட்டிகளைச் சேர்த்துக்கொண்டே போகும் போது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவள் உடல் சலிக்கிறாள். உடல் சிலிர்க்கிறாள். அதனால் தான் பூகம்பம், புயல், சுனாமி போன்றவை ஏற்படுகின்றன. எனவே, சக்தி மாலை அணிந்து பாவங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

“படகு தண்ணீரில் செல்கிறது. அந்தப்படகில் மனிதன் வீடு கட்டியும் வாழ்கிறான். தாங்க முடியாத பாரம் ஏற்றப்படும் போது படகும் மூழ்கும். வீடும் மூழ்கும், பூமியும் அந்தப் படகு போன்றது. பாவங்கள் அதிகரிக்கும் பொழுது பூமியும் அழியும்”  என்பது அம்மாவின் அருள்வாக்கு.

நாம் தான் பத்து, பதினைந்து முறை சக்திமாலை அணிந்து விட்டோமோ இன்னும் அணிய வேண்டுமா என்று எண்ணாதீர்கள். முதல் ஒன்பது முறை சக்தி மாலை அணிபவர்கள் செவ்வாடை உடுத்த வேண்டும் என்றும் அதற்கு மேலும் அணிபவர்கள் மஞ்சள் கலந்த சிவப்பு ஆரஞ்சு நிற உடை அணிய வேண்டும் என்றும் அம்மா அருள் வாக்குக் கூறினாள்.

நாங்கள் அந்த வண்ண உடையிலும் ஒன்பது முறை சக்தி மாலை செலுத்தியபிறகு அதாவது பதினெட்டு மாலைக்குப் பிறகு அதாவது பதினெட்டு மாலைக்குப் பிறகு அம்மாவிடம் தாயே ! பதினெட்டு மாலை செலுத்திவிட்டோம்.அடுத்து மாலை போடும் போது எந்த நிற ஆடை உடுத்துவது ” என்று கேட்டோம்.

அம்மா உடனே, “உங்கள் கணக்குப்படி பதினெட்டு முறை செலுத்திவீட்டீர்கள்! என் கணக்குப்படி இன்னும் பதினெட்டு ஆகவில்லை” என்று அருள்வாக்கு வழங்கினாள்.

சக்திகளே! நம் கணக்கு வேறு, அம்மாவின் கணக்கு வேறு எனவே தொடர்ந்து மாலை அணிந்து கொண்டே வர வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தோ, தெரியமலோ பல தவறுகளைச் செய்துகொண்டே வருகிறோம். ஆகையினால் பாவம் சேர்ந்துகொண்டே போகிறது. அந்தப் பாவங்களைப் போக்கத் தொடர்ந்து சக்திமாலை அணியவேண்டும்.

சிலருக்குச் சில ஆண்டுகள் சக்திமாலை அணிந்த உடனே அம்மா அருள் வழங்கியுள்ளாள். நமக்கு வழங்கவில்லையே என்று மனம் துவண்டுபோகாதீர்கள். காத்திருங்கள் துயரங்களை அருள்வடிவில் போக்குவாள்.

விதை தான் நிலத்தை நோக்கி வர வேண்டும் என்பது அம்மாவின் அருள்வாக்கு!  நாம் எல்லாம் விதைகள்!  நம் அம்மா அன்பு என்னும் ஈரமும், அருள் என்னும் வளமும் நிறைந்துள்ள நிலம்!  விதைகளாகிய நாம் எல்லாம் அம்மாவை நோக்கி சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி வருகிறோம்.

இந்த விதைகள் பலவகைப்படும்!  கீரை விதைத்த இரண்டு, மூன்று நாட்களில் முளைக்கும். ஒரு மாதத்திலேயே பயன்தரும். நெல் விதை முளைக்க ஜந்து, ஆறு நாட்களாகும். அறுவடை செய்ய மூன்று. நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும். கரும்பு முளைக்க மூன்று வாரங்களாகும். அது வளர்ந்து, இனிப்பு மிகுந்த சாறைத் தருவதற்கு ஓராண்டாகும். தேங்காய் நெற்று, முளைப்பதற்கே மூன்று, நான்கு மாதங்களாகும்.

சக்திகளே!  எல்லாமே விதைகள் தாம்!  முளைப்பதற்கும் பயன்தருவதற்கும் காலம் மாறுபடுகிறது. கீரை போன்றவை உடனே பயன்தருகிறது. தென்னை பயன்தர நெடுநாட்களாகிறது.விதைக்கேற்பப் பயன்தரும் காலங்கள் வேறுபடுவதைப்போல, நாம் செய்த வினைகளுக்கேற்ப , அம்மா நமக்கு அருள் வழங்கும் காலமும் வேறுபடுகின்றது. எப்படியாயினும் அம்மாவின் அருள் நிலத்தைச் சேர்ந்துவிட்ட விதை , இன்றில்லாவிட்டாலும் நாளை, அல்லது நாளை மறுநாள், முளைத்து பயன் தந்தே தீரும்.

எனவே சக்திகளே!  தொடர்ந்து சக்திமாலை அணிவோம். எல்லோரையும் சக்தி மாலை அணியச் செய்து சித்தர்பீடம் அழைத்துவருவோம். பொருள் வசதியில்லாத ஏழை, எளியவர்களுக்கும் நம் பொறுப்பில் சக்தி மாலை அணிவித்து அவர்களையும் நம் அம்மாவிடம் அழைத்து வந்து நாம் பெற்று வரும் அருள் இன்பத்தை அவர்களையும் பெறச் செய்வோம்.

 ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி நவம்பர் 2009.

பக்கம் 18-20.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here