விஞ்ஞானம் தோற்கிறபோது…

மேட்டூரில் சக்திபீடத்தில் கும்பாபிடேகம்! அந்த விழாவில் கலந்து கொண்டு கல்கி அவதாரமாம் நம் ஆன்மிக குருவின் அருட்பார்வையில் நனைந்து ஊர் திரும்பினேன்.

பௌர்ணமிக்கு மருவத்தூர் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணுக்குப் பிரசவ நேரம்! உடனிருந்து உதவி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நி்லை ஏற்பட்டு விட்டது.

“அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் பிறகு வேண்டுமானால் மருவத்தூர் செல்லுங்கள்” என்று என் உறவினர்கள் சொல்லி விட்டார்கள்.

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறினேன். சரி! அம்மாவின் சோதனை போலும்! என்றெண்ணி அந்தப் பெண்ணுக்கு உதவியாக இருப்பது என்று முடிவு செய்தேன்.

அந்தப் பெண்ணுக்கு பேறு காலம் அது! ஆள் வசதியில்லாமல் நான் அவளை உள்ளூர் மருத்துவமனையில் சேர்ப்பித்தேன். அதற்கு முன்பாக அவளுக்கு மூன்று எலுமிச்சம்பழம் பிழிந்து திருஷ்டி கழித்தேன்.

மருத்துவர்கள் ஒரு புறம் சிகிச்சை அளிக்க, இன்னொரு புறம் இந்தப் பெண் பிரசவ வேதனையால் புழுப்போல துடிதுடித்துக் கொண்டிருந்தாள். அவள் கூக்குரலும் கதறலும் நெஞ்சைப் பிழிந்தன. இரண்டு டாக்டர்கள் அவளுக்குச் சிகிச்சை அளித்தும் பயனில்லை.

மிக சிக்கலான கேஸாக இருக் கிறது என்று டாக்டர்கள் பேசிக் கொண்டார்கள். அறுவை சிகிச்சை செய்யாமல் குழந்தையை எடுக்க முடியாது; அறுவை சிகிச்சை செய்யலாம் என்றாலோ அதற்கான கருவிகள் ஆஸ்பத்திரியில் இல்லை.

அப்படியே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடலாம் என்றால் அதற்கும் உறுதி சொல்ல முடியாது. அதனால் தாயின் உயிருக்கும் ஆபத்து வரலாம். டாக்டர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு செய்வதறியாமல் திணறினார்கள்.

நானும் நடப்பது நடக்கட்டும் எல்லாம் அன்னையின் திருவருள் என்று அவளிடமே பாரத்தைப் போட்டு விட்டு அப்பெண்ணை அருகிலிருந்த பழனி நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தேன்.

உடனிருந்த உறவினர்கள் எல்லாம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதன் முடிவு அதிர்ச்சி தந்தது. ஆம்! குழந்தை தாயின் வயிற்றிலேயே இறந்துவிட்டது. டாக்டர்கள் கூறி விட்டார்கள்.

இப்போது தாயின் உயிரை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும். அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டும். அதனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

ஆகவே, அறுவை சிகிச்சை செய்ய ஒப்பந்தப் பத்திரத்தில் அவள் கணவனை கையொப்பம் போட சொன்னார்கள். அவரோ அழுது கொண்டே கையெழுத்திட்டார்.

ஒரு சோகமயமான – அவலம் நிரம்பிய சூழ்நிலை! அவள் கணவருக்குத் தைரியம் சொன்னேன்.

இறுதியாக, எல்லோருடைய குறைகளைப் போக்கிறவரும் – இந்தக் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக விளங்குபவரும் ஆகிய என் குருநாதர் அடிகளாரையும் ￶￶￶￶அன்னையையும் வேண்டிக் கொள்ளுங்கள்.

“நல்லபடிக் குணமானால் மனைவியோடு இருமுடி செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்” என்றேன். அவரும் அவ்வாறே வேண்டிக்கொண்டார்.

நான் அவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு டாக்டர் எங்களிடம் வந்து இன்று இரவு 10.00 மணிக்கு ஆபரேஷன் தொடங்க போகிறோம்! எங்கள் கடமையை செய்கிறோம். அதற்கு மேல் ஆண்டவன் தான் துணை – என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை கேட்கவே எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்தப் பெண் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.

இந்த நிலையில் இரவு 8.45 மணிக்குப் பழனி மலை அடிவாரத்துக்கு ஓடினேன். அங்கே தான் நம்முடைய ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் இருக்கிறது.

மன்றத்திற்குள் சென்று, எலுமிச்சம்பழம், கற்பூரம், வேப்பிலை, மஞ்சள் நீர் இவற்றை தயாரித்துக் எடுத்துக் கொண்டு, அன்னையின் திருவுருவப் படத்தின் முன் வைத்து திருஷ்டிக் கனி தயாரித்து மஞ்சள் தீர்த்தத்தில் எரியும் கற்பூரத்துண்டைப் போட்டு, மூல மந்திரம் அடிகளார் 108 போற்றி சொன்னேன். இறுதி வரை கற்பூரம் எரிந்து கொண்டு இருந்தது. அப்போது நேரம் இரவு 9.00 மணி!

அன்னைக்குப் பிரார்த்தனை செய்து விட்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தேன். அந்தப் பெண்ணுக்கு திருஷ்டிக் கனி கழித்து வாயைத் திறக்கச் சொல்லி வேப்பிலையும் போட்டேன். மஞ்சள் தீர்த்தத்தை குடிக்க வைத்தேன்.

ஒரு டாக்டர் எங்களிடம் வந்து, இன்று இரவு 10.00 மணிக்கு ஆபரேஷன் தொடங்க போகிறோம். எங்கள் கடமையை செய்கிறோம். அதற்கு மேல் ஆண்டவன் தான் துணை – என்று சொல்லி விட்டுச் சென்றார்.

” என் குருநாதனையும் அம்மாவையும் நன்றாக வேண்டிக் கொண்டேன்”

இது நடந்து சுமார் 20 நிமிடம் களித்து….ஓர் அதிசயம்…ஓர் அற்புதம் நடந்தது! ஆம்!

எந்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையை எடுக்க முடியாது என்றார்களோ, எந்த டாக்டர்கள் இந்தப் பெண் பிழைப்பது கஷ்டம் என்று கருத்தினார்களோ அந்த டாக்டர்களே அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அன்னை ஓர் அற்புதத்தை அங்கே நிகழ்த்திக் காட்டினாள்.

அன்று இரவு 10.00 மணிக்கு அந்தப் பெண்ணை அறுவவ சிகிச்சை அரங்கத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அதிகாரிகள் கட்டளை. ஆனால் நடந்தது என்ன?

சரியாக 9.45 மணியளவில் அழுகுரலோடு அந்த பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

திரிசூலம் போல இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு பிறந்த அந்தக் குழந்தையின் தலையில் இன்னொரு அற்புதம் தென்பட்டது! ஆம்!

நான் மன்றத்தில் பூஜை செய்து அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தேன் அல்லவா? அந்த வேப்பிலை அந்தக் குழந்தையின் உச்சந்தலையில் இருந்தது. எக்ஸ்ரே பரிசோதனையில் இறந்து விட்டதாக சொல்லப்பட்ட அந்தக் குழந்தை உயிர் பெற்று பிறந்த அற்புதத்தை – அன்னையின் திருவருள் மகிமையைக் கண்டு பரவசம் அடைந்தேன்.

எங்கே விஞ்ஞானம் முடிகிறதோ அங்கிருந்து தான் மெஞ்ஞானம் ￶தொடங்குகிறது” என்பது அறிஞர் ஒருவர் வாக்கு!

இதனை அந்த மருத்துவமனையில் நடைபெற்ற அற்புதம் கண்டபிறகு உண்மை என உணர்ந்தேன்.

நம் குருபிரானுக்கும், அன்னைக்கும் தொண்டு செய்து கரையேற வழி காணுங்கள்! உண்மையான தொண்டிற்கும் உண்மையான பக்திக்கும் அன்னையின் திருவருள் பரிசு உண்டு என்பதை உணருங்கள்!

ஓம் சக்தியே! ஓம் பங்காரு அடிகளே போற்றி ஓம்!

சக்தி இசைமணி செல்வராஜ். M. A.

நோய் தீர்த்த அற்புதங்கள் ( பாகம் -1)
பக்கம் ( 145 – 149)