மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் வருகின்றன. முன்னேற்றமும், இன்பமும் வருகின்றபோது மகிழ்ச்சியடைகின்ற நாம், தாழ்வும், துன்பமும் வரும்போது தெய்வத்தைக் குறை கூறுகின்றோம். பொருள் இழப்போ, உயிர் இழப்போ ஏற்படும்போது அது தங்கள் ஊழ்வினைப்பயன் என்று எண்ணாது, அம்மாவை வழிபட்டும் எனக்கு இந்த இழப்பு ஏற்பட்டு விட்டதே! அன்னை இதைத் தடுக்கக் கூடாதா! என்றெல்லாம் புலம்புகின்றோம்.

ஆனால், நாம் செய்கின்ற ஆன்மிகப் பணிகள், தான தருமங்கள் இவற்றின் அளவிற்கு நமது ஊழ்வினையைக் குறைத்துத் துன்பத்தின் சுமையையும் குறைத்து, நம்மை நோகாமல் அடித்து அந்த ஊழ்வினையை அனுபவிக்கச் செய்து, நமது பிறவிப் பிணியை அன்னை நீக்குகின்றாள் அன்னை ஆதிபராசக்தி. ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு மலைபோல் வந்த துன்பத்தையும், துயரத்தையும் பனிபோல் நீக்கியுள்ளாள். அன்னை மீது நாம் வைக்கின்ற உறுதியான
நம்பிக்கையும், பக்தியும்தான் இதற்குத் துணை செய்கின்றன.

அன்னையின் பக்தை ஒருத்தியின் வேண்டுதல்

கடந்த 1987 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் பூரவிழாவை முன்னிட்டு ஒரு மாத காலமாக இருமுடி அபிடேகப் பணியைச் செய்வதற்கு ஆலயத்தில் தங்கி இருந்தேன். அச்சமயம் அன்னை, கோவை மாவட்டத்தார்க்கு அன்னதானப் பணியைத் தந்திருந்தாள். அந்தப் பணியை மேற்பார்வை செய்ய அனுதினமும் காலை வேளையில் ஆலயத்திற்கு எதிர்ப்புறமுள்ள பாலிடெக்னிக் கட்டடத்திற்கு செல்வது வழக்கம்.

பௌர்ணமிக்கு முன்தினம் அப்பணிக்காகச் செல்லும்பொழுது ஓம் சக்தி மேடையின் அருகே ஐம்பத்தைந்து வயதையுடைய ஒரு பெரியவா் தன் வாயில் துண்டை வைத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க விசும்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம், “ஐயா! ஏன் இப்படி அழுகின்றீர்கள்? குடும்பத்தின் தலைவராகிய நீங்களே இப்படி அழுதால் குடும்பத்தில் உள்ளவா்களுக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்? அன்னையின் மண்ணை மிதித்து விட்டீர்கள். பாரத்தையெல்லாம் அவளிடம் ஒப்படைத்து விட்டு, அவளது பணியைச் செய்யுங்கள். அவள் நிச்சயமாகக் காப்பாற்றுவாள்” என்று கூறினேன்.

அவரோ தம் துக்கம் தாளாத நிலையில் தனக்கு இடப்புறமுள்ள வடகைக் கார் ஒன்றினைச் சுட்டிக் காட்டினார். அதன் உள்ளே முப்பது வயதுடைய ஒரு சுமங்கலிப் பெண்மணி தன் தாயின் மடியில் படுத்து இருந்தாள். அவளது நிலையோ பரதாபமாக இருந்தது. கழுத்து நிற்கவில்லை. கைகள் விறைத்த நிலையில் இருந்தன. கால்களோ உணா்வின்றித் தானாக அசைக்க இயலாத நிலையில் இருந்தன. கண்களின் கருவிழிகளோ மூக்கின் ஓரத்தில் குத்திட்டு நின்றன. நாக்கோ சரிவரப் பேச இயலாத நிலையில் இருந்தது.

பெண்ணின் தந்தை தொடா்ந்து கூறினார், “எனது பெண்
மணிமேகலைக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு. அன்னையிடம் வந்து வேண்டிக் கொண்டதன் பேரில் சென்ற வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவளுக்குத் தாங்க முடியாத தலைவலி ஒன்று வந்தது. அதற்காகப் பல மருத்துவா்களிடம் காட்டியும் குணம் பெறாத நிலையில் இவள் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு வருகிறது. இறுதியாக பெங்களுர் சென்று ஸ்கேன் செய்ததில் இன்னமும், இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இவளது உயிர் பிரிந்து விடும். ஏனெனில் கழுத்துப் பகுதியில் மூளைக்குச் செல்கின்ற இரத்தக் குழாயில் ஓா் அடைப்பு எற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூளைக்கு இரத்தம் சீராகச் செல்லவில்லை. ஆகவே, மூளையில் உள்ள ஒவ்வொரு நரம்பாகச் செயலிழந்து வருகிறது. இந்த அடைப்பு நீங்கினால் இப்பெண்மணி உயிர் பெறலாம்.” என்று அந்த மருத்துவா்கள் தந்த அறிக்கையில் இருந்து தெரிந்து கொண்டேன்.

ஆனால் அதற்குரிய மருந்துகள் கொடுத்தும் பலன் அளிக்காத நிலையில், நாம் இனி இறந்து விடுவோம், அதற்கு முன்பாக மருவத்தூா் மண்ணில் பௌர்ணமி தினத்தன்று ஒரு மணி நேரமாவது படுக்க வேண்டும் என்ற என் பெண்ணின் ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார்.

பக்தையின் வேண்டுதலின் காரணம்

சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி என்கின்ற இடத்தில் அன்னையின் வார வழிபாட்டு மன்றம் அவளது சொந்த இடத்தில் அமையப் பெற்றுச் சீரும் சிறப்புமாகச் செயல்பட்டு வருகிறது.

அம்மன்றத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றுகின்ற பேற்றினை அன்னை எனக்கு நல்கியிருந்தாள். அன்றைய எனது பிரச்சார உரையில் “ஒரு பெளா்ணமி தினத்தன்று, பல மருத்துவா்களாலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு
நோயாளி மருவத்தூர் மண்ணிலே தங்குவானேயானால் அம்மண்ணிலுள்ள 21 சித்தா்களின் வேண்டுதலாலும் அவா்களின் தலைவியான ஆதிபராசக்தியின் ஆசியாலும், அவன் பிழைப்பதற்கு வழியுண்டு” என்று நான் கூறியதை அந்த ஊரில் வசித்து வருகின்ற மணிமேகலையின் சகோதரி கேட்டு இதனைத் தன் தங்கையிடம் கூறினாளாம். ஆகவேதான் மணிமேகலை, தான் மருவத்தூர் மண்ணிற்கு வரவேண்டும் என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டாள்.

ஈயின் உருவில் சித்தாடிய அன்னை

ஆலய வாயிலில் காரில் இருந்த மணிமேகலையைப் பல தொண்டா்கள் ஒன்று சோ்ந்து தூக்கிக் கொண்டு, ஆலயத்தை வலம் வந்து அன்னைக்கு இடப்புறம் உள்ள மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மணலில் படுக்க வைத்தோம். அன்னையின் பிரசாதத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டு, “அன்னையின் மூலமந்திரத்தையே சதா உன் மனதில் சொல்லிக் கொண்டிரு! முடிந்தால் நாளை நடைபெற உள்ள பெளா்ணமி அபிடேகத்தில் பங்கு பெற்று அன்னையின் அருள்வாக்கினைப் பெற முயலுங்கள்” என்று கூறிவிட்டு, என் பணிக்குச் சென்று விட்டேன்.

மணிமேகலையின் தந்தையும் அன்னயைின் அருளால் பெளா்ணமி அபிடேகம் செய்யும் பேற்றைப் பெற்றார். இதற்கிடையில் மணிமேகலைக்குத் தங்குவதற்கு அறை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, அவள் ஆலய மண்ணிலேயே படுத்திருந்தாள். அச்சமயம் நமது ஆலயப் பொறுப்பாளா் ஒருவா், “இப்பெண்ணினை இங்கே படுக்க வைக்கக் கூடாது, ஏதாவது ஏடாகூடாமாக நடந்து விட்டால் ஆலயப் பெயா் கெட்டு விடும், உடனே வெளியில் கொண்டு செல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.

அப்பொழுது நமது ஆலயத்தில் மருத்தவத்தில் சிறந்து தொண்டாற்றுகின்ற டாக்டா் ஒருவா் சென்னையில் இருந்து வந்தார். அவரிடம் மணிமேகலையின் உடல்நிலை பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் காட்டி இப்பொழுது
அவளது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

அவரோ, “இப்பெண்மணி இன்னமும் 2, 3 மாத காலத்திற்குள் இறந்து விடுவாள். அன்னை அருள்பாலித்தாலன்றிப் பிழைப்பது அரிது” என்று கூறி, “இப்போதைக்கு எந்த அபாயமும் இல்லை” என்று உறுதி அளித்தார்.

மறுநாள் காலை பெளா்ணமி அபிடேகம் நடைபெற்றபோது, மணிமேகலை அந்த வழிபாட்டில் கூறப்பட்ட போற்றிகளைத் தான் மன்றத்தில் முன்னா் படித்ததை நினைவில் வைத்துப் படிப்பவா்களோடு சோ்ந்து மனத்திலே கூறி வழிபாட்டில் கலந்து கொண்டாள்.

நமது ஆன்மிக குரு அவா்கள் வழக்கம் போல் தம் எளிய வாகனமான சைக்கிளில் ஆலயத்தை வலம் வந்தார். அப்படி வந்தபொழுது, மண்ணில் படுத்துக்கொண்டிருந்த மணிமேகலையின் மீது தமது அருட்பார்வையை வீசிவிட்டுத் தம் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். அது சமயம் மணிமேகலைக்கு ஒரு தும்மல் வந்தது. அவளது கழுத்தை மண்ணில் இருந்து ஒரு அடி உயரம் தான் அறியாவண்ணம் தூக்கித் தும்மிய பொழுது அவளது மூக்கில் இருந்து ஒரு “ஈ” வெளிப்பட்டது. அதன் பின்னா் அவளது கழுத்து தானாக நிற்கக் கூடிய வலுப்பெற்றது.

நமது குரு அவா்கள் அலுவலகத்திலிருந்து செவ்வாடை தரித்து வலம் வரும்பொழுது மணிமேகலையை அங்கிருந்த ஒரு தூணிலே சாற்றி உட்கார வைக்க முடிந்தது. அன்னை மீண்டும் மணிமேகலையைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தை வலம் வந்தார்கள்.

தனது வலத்தை முடித்து அருள்வாக்குக் கூறும் புற்று மண்டபத்திற்குள் சென்றபொழுது மணிமேகலை தானாகத்தன் கால்களை மடக்கக் கூடிய வலுப்பெற்றாள்.

அன்னையின் அருள்வாக்கு

அன்றைய அபிடேக அருள்வாக்கிற்காக மணிமேகலையின் குடும்பத்தினா் அழைக்கப்பெற்றார்கள். அப்பொழுது மணிமேகலையின்
கணவா், சகோதரா் ஒருவா், இவா்களுடன் நான் ஆகிய மூவரும் சென்றோம்.

அன்னையை வணங்கி அமா்ந்த உடனே அன்னை என்னை நோக்கிக் கூறினாள், “மகளே! இது உடைந்த மண்பாண்டம்!” என்றாள். இதனைச் செவிமடுத்த சகோதரன் கதறித் துடித்தான். “அம்மா என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள். என் அக்காளைக் காப்பாற்று” என்று அழுதான். அன்னையும் அழுதாள்.

பின்னா் மணிமேகலையின் கணவனை நோக்கி, “மகனே! உனது முன்னோர் இதுகாறும் எந்த ஆன்மிகப் பணியும் செய்யவில்லை. எந்த தான தருமங்களும் செய்யவில்லை. அதன் விளைவே உன் மனைவிக்கு இந்த கதி. இருந்தபோதிலும், எனது மண்ணை மிதித்துவி்ட்டாய், காப்பாற்றுவது என் பொறுப்பு” என்று கூறி, பின் வருபவற்றைச் செய்யும்படி ஆணையிட்டாள்.

“நீ வருகின்ற ஆடிப்பூரத்திற்கு உன் குடும்பத்தோடு சக்தி மாலை அணிந்து வரவேண்டும். அப்படி வருகின்றபோது, உன்னைச் சுற்றியுள்ள உற்றார் உறவினா்களை 5 சுமங்கலிப் பெண்கள், 5 ஆடவா், 5 சிறுவா், 5 சிறுமியா் ஆகியோருக்கு உன் செலவில் சக்தி மாலை அணிவித்து இருமுடி ஏந்தி ஆலயத்திற்கு அழைத்து வரவேண்டும்.

பூரவிழாவில் 250 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். நாளை முதல் தினமும் காலையில் ஆட்டுப் பாலைச் சிறிது சூடாக்கி எனது படத்திற்கு முன்பாக வைத்துச் சிறிது விபூதியை அதனுள் இட்டு மூல மந்திரம் சொல்லி அருந்த வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவைக் கழுத்தின் பின்பகுதியிலும், கை, கால், மூட்டுகளிலும், இடுப்பின் கீழ்ப்பகுதியிலும் தினசரி தடவ வேண்டும்.” என்றும் கூறினாள்.

அருள்வாக்கு முடிந்ததும் மணிமேகலையின் குடும்பத்தினா் ஊா் திரும்பி விட்டனா். பத்து தினங்கள் கழித்து ஒரு பேருந்து நிறைய அவா்களது சொந்தச் செலவிலேயே அன்னை கூறிய வண்ணம் பலரை
சக்தி மாலை அணிவித்து ஆலயம் அழைத்து வந்தார்கள்.

அச்சமயம் மணிமேகலையின் தகப்பனாரிடம் விசாரித்தபொழுது, “நாங்கள் அம்மா கூறியபடி செய்து வருகிறோம். அம்மா என் மகளைக் காப்பாற்றி விட்டார்கள். என் மகள் இப்பொழுது ஒருவரின் துணையுடன் சிறிது, சிறிதாக நடக்க ஆரம்பித்து விட்டாள். சாப்பிடவும் ஆரம்பித்து விட்டாள்.” என்று கூறி மகிழ்ந்தார்.

அப்பொழுது மணிமேகலையின் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் என்னிடம் தந்தார். அதில் மணிமேகலை என்னை நேரில் பார்க்க விரும்புவதாக எழுதியிருந்தாள்.

இது நடைபெற்ற மூன்று மாதத்திற்குப் பின் அன்னையின் அருள்பணிக்காக பெங்களுர் சென்று திரும்புகின்ற பாதையில் சேலத்தில் உள்ள ஆட்டையாம்பட்டிக்குச் சென்றேன். பேருந்தை விட்டு இறங்கிய உடனேயே என்னுடைய செவ்வாடையைக் கண்டுவிட்டு 12 வயது சிறுமி ஒருத்தி ஓடி வந்து, “அக்கா நீங்கள் மணிமேகலை அக்கா வீட்டிற்கா செல்ல வேண்டும்? நான் அழைத்தச் செல்கிறேன்” என்று கூறி, எனது பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் விரைந்து முன்னே சென்றாள்.

குறைந்தது ஒரு கிலோ மீட்டா் தூரம் நடந்த பின்னா் தூரத்தில் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி “இது தான் மணிமேகலை அக்காவின் வீடு” என்று கூறி ஓடிவிட்டாள். அந்த வீட்டின் முன்னே சென்று ஓம் சக்தி என்று அழைத்தபோது, முன்பு நாங்கள் பார்த்த மணிமேகலை இப்போது சற்று பருமனாகத் தன் இடையில் ஆண்மகவுடன் எங்களைத் திரும்பிப் பார்த்து வியந்து, சந்தோஷமாக வரவேற்றாள். என்னுடைய கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

அந்தப் பெண்மணியே எங்களுக்கு இலைபோட்டுப் பரிமாறி எங்களைச் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்திச் சாப்பிடச் செய்தாள். நாங்கள் மூன்று
மாதத்திற்கு முன்பு பார்த்த மணிமேகலை எங்கே? இன்று அன்னையின் கருணையால் ஆரோக்கியத்துடன் இருக்கும் மணிமேகலை எங்கே? அன்னையின் கருணைதான் என்னே! மருவத்தூர் மண்ணின் மகிமைதான் என்னே! தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்த பக்தா்கள் உயிர்போகும் நிலையில் வந்தபோதும் மறுபிறவி அளித்துக் காப்பாற்றும் மகேஸ்வரிதான் அந்த மருவத்தூராள் என்பது தெளிவாக விளங்குகிறது.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. திருமதி கோமதி சுந்தரம், B.Sc., மத்திய வேள்விக்குழு

(1988 – இயற்கைவள மேம்பாட்டு ஆன்மிக மாநாட்டு மலரில் வெளிவந்த கட்டுரை)

மருவூர் மகானின் 68வது அவதாரத் திருநாள் மலா்.