ஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் !

ஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் ! ஓம் நுணுக்கற் கரிய நுண்ணியள் போற்றி ஓம் ! நமது ஐம்புலன்கட்கும் ஆதாரமாக இருப்பது நம் உள்ளம். நம் உள்ளம் தான் கண்ணால் பார்க்கிறது; காதால் கேட்கிறது; மூக்கால் முகர்கிறது; நாவால் சுவைக்கிறது; உடலால் உற்று உணர்கிறது . உள்ளத்து உணர்வார் ஒளிரும் இறைவனை, நம் உள்ளம் பூரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறதா ? என்றால் இல்லை என்கிறார்கள் ஞானிகள். அண்ட சராசரங்கட்கும் ஆதாரமாக ஏதோ ஒன்று உள்ளது என்பதை மட்டுமே நமது உள்ளம் உணர்கிறது. அந்த ஒன்று எப்படிப்பட்டது ? எத்தன்மை கொண்டது ? அது ஆணா ? பெண்ணா ?- இவை பற்றி எல்லாம், நம் உள்ளத்திற்கு எதுவும் தெரிவதில்லை. ஏதோ ஒன்று மட்டுமே உள்ளது என்கிற அளவில் நின்று விடுகிறோம். அதற்கு மேல் நம்மால் எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறு எடுத்துக் கூற இயலாத நுட்பமான உணர்வாக உள்ள இறைவனை, “சொல்லாத நுண்ணுணர்வாய் ” என்கிறார் மாணிக்கவாசகர் உலகப் புகழ் பெற்ற தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுவன இவை….. ! “உலக அற்புதத்தைக் கண்டு, அந்தப் புரிய இயலாத புதிரைக் கண்டு, அச்சமும் வியப்பும் கலந்த உணர்வுடன் நிற்காதவன் உயிரில்லாத ஒருவனுக்குச் சமம். கண்கள் இருந்தும் காணாத குருடன் ! உயிர் வாழ்க்கையின் புதிரை ஆராய்ந்து காணும் பொழுது, ஓர் அச்ச உணர்வே எழுகிறது. இந்த அச்ச உணர்விலே இருந்துதான் சமய உணர்வு மலர்கிறது . நம்மால் அறிந்து கொள்ள இயலாதது. ஒன்று இருக்கிறது. அது உன்னத ஞானமாகவும், ஒளி மிக்க அழகுடையதாகவும் இருக்கிறது.அதனை நமது அற்பமான அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது. ஏதோ ஒன்று இருக்கிறது என்று மட்டுமே தெரிகிறது. இந்த உணர்வுதான் சமயத்தின் சாரம் ஆகும். இதுவே சமயத்தின் சாரம் எனக் கொண்டால், அழுத்தமான சமயவாதிகளில் நானும் ஒருவன் !” – என்கிறார் அந்த விஞ்ஞான மேதை. இவ்வாறு நம் உள்ளத்து உணர்வாக ஒளிரும் ஒப்பில்லாத பொருளை, அதாவது இறைமையை மையமாகக் கொண்டு தான் உலகத்து சமயங்கள் எல்லாம் உதித்தன. சொல்ல முடியாத நுண்ணுணர்வாக உள்ள இந்தப் பொருளைப் பற்றிச் சொல்கிறார் மாணிக்கவாசகர் : ” நோக்கரிய நோக்கே ! நுணக்கரிய நுண்ணுணர்வே ! அதே வாசகங்களைக் கொண்டு, இம் மந்திரங்கள் அன்னை ஆதிபராசக்தியின் பரத்துவத்தைப் புகழ்கின்றன. 1008 போற்றி மலர்கள் விளக்க உரை நூல் பக்கம் – 257 + 258]]>