மண்ணின் சிறப்பு

ஆரம்பம் எங்கே?  முடிவு எங்கே?  ஆதிபராசக்திக்கு ஆதி எது ? அந்தம் எது?  நாளெல்லாம் அருள்வாக்கு மழை. மெளனத்திலும் சொல்வது ஆயிரம்- இதை அறிந்து கொள்ளும் திறனற்ற நாங்கள் உங்கள் பிள்ளைகள். மருவூர் மண்ணை மிதிப்பதே பாக்கியம் தானே? அந்தப் பேறு எத்தனைபேருக்குக் கிடைத்திருக்கிறது;  இன்னும் கிடைக்கப் போகிறது?

“அம்மா ஒரு சத்தியம்”– இதை அறிவது மிக அசாத்தியம். அம்மா சொன்னது ஒன்று என்றால் அதில் சொல்லாதது பல்லாயிரம். நடந்தது, நடப்பதை எல்லாவற்றையும் நமக்கு எடுத்துச் சொல்லும் அம்மா, பராசக்தியின் மனித ரூபம். உணர்ந்தால் தான் இதைச் சொல்லமுடியும்.  இதை உணரவும் ஒரு தகுதி வேண்டுமோ?  எல்லோருக்கும் இது கிடைக்குமோ ? அருளைப் பொழியும் அம்மாவை சத்திய ஜோதியாகப் பார்ப்போம், கேட்போம், உணர்வோம், பணிவோம், நினைவோம், துதிப்போம், செயல் ஆற்றுவோம். அதன் ஆதி அந்தத்தைப் பற்றி மறப்போம், நான் என்ற நம்முடைய பேச்சும் நினைவும் துறப்போம். சத்தியத்தைக் கிளறிப்பார்க்க முடியுமா?  அதனால் கிடைப்பது குழப்பம் தானே?  ஜோதியிடம் வந்து ஒளி பெற்ற பிறகு இருட்டு எதற்கு?

அம்மாவை முதன் முறையாக நேருக்கு நேர் சந்தித்து, வணங்கி உரையாடும் சந்தர்ப்பம். நான் அம்மாவிடம் சொல்லுவேன். “இந்தக் காரியங்களை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இது என் பொறுப்பு ” என்று. அம்மா என்னிடம் “நீ யார் பார்த்துக்கொள்வதற்கு உன்னையும் சேர்த்து நான் பார்த்துக்கொள்கிறேன்.” இதற்கு என்ன அர்த்தம்?  கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வாங்கிய உணர்வு. ஆனால் அது வலிக்கவில்லை, வருத்தவில்லை. மாறாக சத்திய ஜோதியின் ஒரு துணுக்கை உணர ஆரம்பிக்கிறேன். எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்று பல மணி நேரம் புரியாமல் போயிற்று. அம்மா சொன்ன இதற்கு என்ன அர்த்தம்? ஆயிரம் அர்த்தங்கள் இதில் அடக்கம். அது போகப் போகப் புரிகிறது.

எல்லா அர்த்தங்களையும் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையின் உண்மையான ஆனந்தங்களையும், இனிமையையும் உணராமல் பொய்யான நிலையற்ற பலவற்றை இன்பம் என எண்ணி நாடுகிறோம்.

மருவத்தூர் கருவறையில் சில நிமிடங்கள் 108 போற்றி திருவுரு மந்திரம் சொல்லி நிற்கும் போது, அதைக் கொஞ்சம் உணர முடிகிறது. இந்த வித்தியாசத்தை உணர்வது எப்படி? ஏன் அது விளங்கமாட்டேன் என்கிறது?  எது நம் உள்ளத்தையும் அறிவையும் திரைபோட்டு மறைக்கிறது?

எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. அதன் அருகில் வந்து அதை எல்லோரும் அடைய முயற்சிப்பதில்லை. கிடைத்தாலும் பாதுகாத்து வைத்துக் கொள்ள முயல்வதில்லை. அம்மா ஒரு முறை சொல்லுவார்கள். “இந்த மண்ணை மிதித்தாலே போதும் என்று அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டுமோ என்னமோ தெரியவில்லை. அப்படி என்ன இருக்கிறது இந்த மண்ணில்!  இரத்தத்தின் நிறம் சிவப்பு போல மண்ணின் இயல்பும் ஒன்று தானே! இது என்ன வித்தியாசமான சிறப்பு?  அம்மா எதைக் குறிப்பிடுகிறார்கள் அங்கு தான் நம் தடுமாற்றம் ஆரம்பம்.

சலனமற்ற தெளிந்த ஓடையைப் போல, காற்றில் ஆடாத நிலையான ஒரு தீபம் போல, ஒரு உன்னத நிலையை இந்த மனதால் அடைவது மிகவும் கடினம். அங்கு தான் அந்த நிலையில் தான் ஆனந்தத்தின் உச்சியை உணர முடியும். அதை அனுபவித்தால் தான் தெரியும். வெறும் வெளிப்படையான தெய்வ வணக்கத்தாலோ, அல்லது பக்தியின் அடையாளங்களாலோ அது பெறப்படுவதில்லை.

மனது ஒரு கட்டுக்கடங்காத குதிரை. அதை வசப்படுத்தும் தொழில் கடினம். மிகக் கடினம். நம்முடைய மற்ற புலன்களை நாம் ஓரளவு முயற்சியுடன் கட்டுப்படுத்தலாம். ஆனால் இந்த மனது யாருக்கும் அடங்குவதில்லை. அதை நிலைப்படுத்த வேண்டும் என்று அம்மா சொல்லுகிறார்கள். அது தான் இந்த மண்ணின் மகிமையும், பெருமையும் தனித்தன்மையும் ஆகும்.

நன்றி

அம்மா ஒரு சத்தியம்

பக்கம் 1 – 3

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here