4-4-82 ஞாயிற்றுக்கிழமை அன்னை பொதுமக்கட்கு அருள்வாக்கு கூறுவதை நிறுத்தி இருந்தாள். 2, 2-3-82இரண்டு நாட்களும் நடைபெற்ற ஆன்மிக மாநாடு எவ்வாறு நடந்தேறியது? இன்னும் என்ன என்ன செய்ய வேண்டும்? என்பவைபற்றி அறநிலையினருக்கும் பிறருக்கும் பேசுவதற்காகவே பொது மக்கள் அருள்வாக்கு நிறுத்தப் பெற்றிருந்தது.

ஆன்மிக மாநாடு பற்றிப் பேசிக் கொண்டுவந்த அன்னை, ‘‘மகனே! ஆன்மிகத்தை அறிந்து கொள்வதும் அது பற்றிப் பேசுவதும் அவ்வளவு எளிதான காரியமன்று. அக வளர்ச்சியில் ஓரளவு வளர்ந்தவர்கள் மட்டுமே ஆன்மிகம் என்றால் என்ன என்பதை அறிய முடியும். இவ்வாறு ஆன்மிக மாநாடு கூட்டுவதன் நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இங்கு வருகிறவர்கள் அனைவரும் ஆன்மிகம் பற்றி அறிந்திருப்பார்கள், தாம் அறிந்ததைக் கூறுவார்கள் என்ற கருத்தில் இது கூட்டப் பெறவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் இங்கு வந்து இந்த மண்ணை மிதித்தால் அதன் பிறகு அவர்கட்கு ஆன்மிக வளர்ச்சி கிட்டும். அடுத்து அவர்கள் பேசும் பொழுது ஆன்மிகம் பற்றிய கருத்துக்களை வெளியிட வாய்ப்பாக இருக்கும்.

இதற்காகத்தான் இந்த மாநாடு கூட்டப் பெற்றது. இவ்வளவு பொருள் செலவழித்து எத்தனை பேர் இதில் பயன் அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒருவன் பயன் அடைந்தால் போதுமானது. இதனை அடுத்து மகளிர் ஆன்மிக மாநாடும் அதை அடுத்து உலக ஆன்மிக மாநாடும் நடத்தப் போகிறேன். 15 லட்சம் செலவழித்து உலக ஆன்மிக மாநாடு நடத்தப் போகிறேன். 10 பேர் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்துபயனடைவார்கள். அந்தப் பத்து பேருக்கு ரூ.15 லட்சம் செலவு செய்வது பெரும் பயனை உண்டாக்கும்.”

இதைக் கூறி முடித்தவுடன் அன்பர் ஒருவர் தியானம் செய்ய முடியவில்லை; அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? என்று கேட்டார். உடனே அன்னை மிகப் பெரிய உபதேசச் சொற்பொழிவு ஒன்று செய்துவிட்டாள். ‘‘தியானம் செய்வதும் தவம் செய்வதும் ஒரு வகையான வழிதான். ஆனால், தியானத்தினால் மட்டும் என்னை அடைந்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்காதே! தவம் செய்யத் தொடங்கித் தங்கள் உடம்பின் மேல் புற்று முளைக்கும் நிலையில் உள்ளவர்களும், புற்றுமண்டி அதன்மேல் மரம் முளைத்த நிலையில் உள்ளவர்களும் இன்றும் பலர் இருக்கிறார்கள்! என்றாலும் என்ன? அவர்கள் என்னைக் காண முடிந்ததா? இல்லை! ஏன் தெரியுமா? அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டாலும் என்னை வந்து அடைய முடியாது. உன் முயற்சியால் என்னை அடைந்துவிட முடியாது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். உன் முயற்சியைக் கண்டு இரக்கங் கொண்டு நான் உன்னிடத்தில் வரவேண்டுமே தவிர நீ என்னிடம் வருதல் இயலாத காரியம். இதனால் நீ முயற்சி செய்ய வேண்டாம் என்பது கருத்தில்லை. ஆனால் பிற உலகியல் விஷயங்களில் உன் முயற்சி எவ்வளவு பெரிதாக இருப்பினும் என் அருள் இருந்தால் ஒழிய அந்த முயற்சி எவ்விதப் பயனையும் அளிக்காது. சபம், தவம் என்ற இரண்டும் இல்லாமலே என் அருளைப் பெறமுடியும் என்பதையும் நீ அறிய வேண்டும்.

முழுவதுமாக என்னையே சரணம் என்று அடைந்துவிடு. அதன் பிறகு நானாக உனக்கு என்ன பணி இடுகிறேனோ அதனை ஏன்? என்ன? எதற்கு என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் முழுமனத்தோடு செய்ய முற்படு! அப்பொழுது என்னை எளிதாக அடைய முடியும். தொண்டு நெறி என்ற இந்த நெறியில் இருக்கும் சௌகரியத்தைத் தெரிந்து கொள். நான் உன்னிடம் வரவேண்டும் என்று கருதி நீ செய்யும் சப தவங்களால் என்னை வரவழைக்க முடியாது என்று கூறினேன். ஆனால், நானாக உன்னிடம் வரும் அரிய சந்தர்ப்பம் ஒன்று உண்டு. அது எப்பொழுது தெரியுமா? நானே உன்னிடம் வந்து ஒரு பணியைச் செய்யுமாறு ஏவுகிறேன். அந்தப் பணி சிறியதாகவோ, பெரியதாகவோ, கடினமானதாகவோ, எளிமையானதாகவோ இருக்கலாம். ஆனால் ஒன்றை மறந்துவிடாதே! நான் எங்கோ இருந்து கொண்டு உன்னை ஏவவில்லை. உனக்கு அருகாமையில் வந்துதான் பணியைச் செய் என்று ஏவுகிறேன். நான் உனக்கு அருகாமையில் வரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள். எவ்வாறு என்று கேட்கிறாயா? நான் இட்ட பணியை உடனே நீ செய்து முடித்தால் என்னைப் பற்றிக் கொள்ள முடியும். நானே உன்னிடம் வந்து தான் அந்த பணியை உனக்கு இடுகிறேன். என்னிடம் நீ வர வேண்டும் என்ற உன் விருப்பத்திற்கு இணங்காத நான் இப்பொழுது நானே உன்னிடம் வருகிறேன் அல்லவா? இதைவிட அரியவாய்ப்பு உன் வாழ்க்கையில் வேறு எப்போது கிடைக்க போகிறது? எந்தப் பொருளை எப்படியாவது நெருங்க வேண்டும் என்று நீ நினைத்து சபம், தவம் முதலியவற்றை மேற்கொள்கிறாயோ அந்தப் பொருளே இப்பொழுது உன்னை நாடி, உன் அருகில் வந்து ஒரு பணியை உனக்கு இடுகிறது என்றால் அதைவிட உனக்குக் கிடைக்கும் வாய்ப்பு வேறு எதுவாக இருக்க முடியும்? எந்த ஒன்றை நாடி நீ சபம், தவம், தியானம் முதலியவற்றை மேற்கொள்கிறாயோ அந்த ஒன்று உன்னிடமே வந்து ஒன்றைச் செய்யுமாறு ஏவுகிறது என்றால் இதைவிடப் பெரிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்.

நீ அந்தப் பணியை முழு மனத்துடன், முழு முயற்சியுடன் செய்து முடிப்பதுதான் என்னை உன்னை விட்டுப் போக விடாமல் பற்றி இருத்திக்கொள்ளும் எளிய வழியாகும். தொண்டு செய்வதன் மூலம் நீ என்னை எளிதாகப் பற்றிக் கொள்ள முடியும். எந்தப் பணியை நான் இட்டாலும் அதில் உயர்வு தாழ்வு கருதாமல் இலாப, நஷ்டக் கணக்குப் போடாமல் செய்து முடிப்பதே நீ என்னை அடையும் வழியாகும்.

தவம் மேற்கொண்டு புற்றாகவும், மரமாகவும் நிற்கின்றவர்கள் என்னை இன்னும் காணவில்லை. ஆனால் என் பணியைத் தலைமேற்கொண்டு செய்யும் உன் எதிரில் நான் நிற்கிறேன். இந்த எளிய வழியை நீ விட்டு விடாதே இவ்வாறு அன்னை கூறி முடித்தாள்.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 14-16]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here