அந்தப் பத்துப்பைசா நாணயம் எழுப்பிய கணீர் ஓசை சிங்கார வேலருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருமணி நேரத்திற்கு முன்புதான் தன் மகள் ஆதியையும் தன் பகவனையும் கையிற் பிடித்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்துக்கொண்டிருந்தார்.

ஆறு வயதும் நான்கு வயதும் நிரம்பிய அந்தச் சிறுமியும் சிறுவனும் அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டு முன்னே ஓடினார்கள்.

அப்பொழுது மணலிற் புதைந்திருந்த ஒரு பத்துப்பைசா நாணயம் ஆதியின் கண்களிற் பளிச்சிட்டது. பாய்ந்துசென்று அந்தப் பத்துப் பைசாவை எடுத்தான்.

அதைப் பார்த்த பகவன் ‘‘அக்கா வா! போய் மிட்டாய் வாங்கலாம்” என்றான்.

‘‘போடா யார் போட்டார்களோ பாவம்! அவுங்க காசிலே நாம் எப்படி மிட்டாய் வாங்கலாம்? என்றாள் ஆதி. பாவம், பகவனுக்கு மிட்டாய் மீதிருந்த ஆசை பறிபோயிற்று. ‘அக்கா! பின்னே இந்தக் காசை என்ன செய்யப் போறே” என்றான் பகவன் மெதுவாக, ‘தொலைச்சவுங்களைத் தேடிக் கொடுத்திடப் போறேன்” என்றாள் ஆதி.

‘‘எங்கேம்மா அவுங்களைத் தேடிக் கண்டுபிடிக்கப் போறே? ஆண்டவன் உனக்குக் கொடுத்தாரேன்னு சந்தோஷப் படம்மா” என்றார் தந்தை சிங்காரவேலர்.

‘‘ஏம்ப்பா! அப்படியின்னா அதை தொலைச்சவுங்க, ஆண்டவன் நம்ம காசைத் தொலையச் செய்திட்டாரென்னு வருத்தப்பட்டிருப்பாங்களே” என்றாள் ஆதி.

அடித்தவாய் துடைத்தமாதிரி அவள் சொன்ன பதில் அப்பாவிற்கு எப்படியோ இருந்தது. சரி சரி தேடிக் கண்டுபிடித்துக் கொடம்மா என்றார் சலிப்பாக

பார்த்தவங்களை யெல்லாம் ‘‘நீங்க பத்துக்காசைத் தொலைச்சிட்டிங்களா? இந்தப் பத்துக் காசு ஒங்களதா” என்று துளைக்கத் தொடங்கினாள் ஆதி. சிலர் ‘‘இல்லைக் கண்ணு” என்றார்கள். சிலர் செல்லமாகத் தட்டிக்கொடுத்தார்கள். சிலர்! நல்ல பொண்ணு நீயே வைச்சுக்கோ என்றார்கள்.

‘‘அது எப்படியுங்க வச்சுக்கிறது, அடுத்தவங்க காசை?” என்றாள் ஆதி. சொன்னவர்கள் சிரித்துக் கொண்டே தூர மறைந்தார்கள். இதற்குள் அப்பாவும் குழந்தைகளும் மூன்று முறை ஆலயத்தை வலம் வந்தாயிற்று.

அப்போது ஆலயத்து ஒலி பெருக்கியில் ஒரு இளைஞர் சில முக்கிய அறிவிப்புகளைச் செய்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடிப்போய் ‘‘பத்துக் காசைத் தொலைச்சவங்க யாராவதிருந்தால் அதை ஆதியிடம் வாங்கிக்கலாம்” என்று அறிவிக்கும்படி கூறினாள் ஆதி. அவர் சிரித்துக்கொண்டே ‘‘பத்துக் காசைத் தொலைச்சவுங்களையெல்லாம் இதிலே அறிவிக்கக் கூடாதம்மா” என்றார் குழைவாக.

‘‘அப்போ! நீங்க அறிவிக்கிறதின்னா எவ்வளவு காசைத் தொலைக்கணும்” என்றாள் வெடுக்கென்று. அதைக் கேட்ட அறிவிப்பாளர் உடனே ஆதியின் செய்தியையும் அப்படியே அறிவித்தார். கேட்டவர்கள் அனைவரும் வியப்போடு சிரித்து, அவரவர்களும் ‘என்னுது என்னுது கொடு கொடு” என்று விளையாட்டுக் காட்டினார்கள்.

ஆதியோ, ‘‘அடையாளம் சொல்லி யாராவது ஒருவர் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாளே பார்க்கலாம். எங்கும் ஒரே சிரிப்பு எவரும் அவளிடம் வரவில்லை.

உடனே பக்கத்தில் நின்ற பகவன் ‘‘யாருந்தான் வாங்க வரலையே அக்கா, வா மிட்டாய் வாங்கலாம்” என்றாள் மீண்டும். ‘‘ஊஹும் அதெப்படி வாங்கலாம்? என்றாள் ஆதி கண்டிப்புடன்.

அதைக்கேட்டு அங்கு நின்றவர்களில் ஒரு பெரியவர் ‘‘அப்படியின்னா ஒன்று செய்யம்மா பத்துப் பைசாவிற்குக் கற்பூரம் வாங்கிட்டு வா” ஆண்டவன் முன்னாலே ஏற்றிவச்சு நாமெல்லாரும் கும்பிடலாம் என்றார். ஆதியின் முகம் மலர்ந்தது. சம்மதம் தெரிவித்தவளாய் அருகேயிருந்த தேங்காய் பழக் கடைக்குக் கற்பூரம் வாங்க ஓடினாள்; கடையிலிருந்தவரிடம் காசை நீட்டினாள்.

அப்போது கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த பார்வையிழந்த பெண்ணொருத்தி ‘‘பார்த்துக்கேக்க கண்ணில்லையம்மா, யாராவது பார்த்துப் பத்துக்காசு போடுங்க அம்மா” என்று கூவிய குரல் ஆதியின் காதில் விழுந்தது.

கற்பூரம் வாங்க நீட்டிய காசை, பளிச்சென்று அந்தப் பார்வையிழந்த பெண் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டாள் ஆதி. பாத்திரத்தில் விழுந்த அந்தப் பத்துப் பைசாவின் ‘‘கணீர்” ஓசை சிங்காரவேலருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு மட்டுமா? அங்கு நின்ற அனைவருக்குந்தான். அவர்கள் அனைவரையும் விட அதிகம் மகிழ்ந்தவன் இறைவனே!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 41-42

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here