இயற்கை: மனிதகுல வரலாற்றில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சூரிய மண்டலத்தின் விரிந்த விண்வெளியில் சஞ்சரிக்கும் பல நிலவுகளில் ஒன்றான சந்திரனில் மனிதன் காலடி பதிந்துள்ள இன்றுவரை பாமரமக்கள் முதல் பண்டிதர்கள் வரை இயற்கையின் எண்ணற்ற ஆற்றல்களைக் கண்டு வியக்காதவர்கள் உண்டோ? கடும் தூரத்திலுள்ள விண்மீன்களைக் கண்களால் கண்டு வியந்தான், பார்க்க முடியாத ஒலியை இடி முழக்கமாகக் கேட்டுப் பயந்தான், பார்க்கவும் கேட்கவும் முடியாத காற்றினை உணர்வால் புரிந்து கொண்டான். இயற்கையின் பொருள்களுக்குச் சுவையும் உண்டு என்பதை அவன் நாவினால் உணர்ந்து கொண்டான்.

விஞ்ஞான வழியும் உணர் உறுப்புகளும் (Sense Organs): இயற்கையின் பரிணாம மேல்படிகளில் நிற்கும் மனிதன், இவ்வாறு இயற்கையைத் தன் உணர் உறுப்புகளால் (புலன்கள்) அளந்து அளந்து அதனால் ஐயங்கள் பல தோன்றவே தனக்கே உரிய பகுத்தறிவைத் துணையாகக் கொண்டு இன்று விஞ்ஞான வழியில் வேகமாக முன்னேறுகின்றான். அதன் விளைவாக எத்தனை மாற்றங்கள் விளைந்தன.

அணுவில் அடங்கியுள்ள ஆற்றல் முதல் அண்டத்தில் நிறைந்துள்ள சக்தி வரை இன்ன பிற வியக்கத்தகு விளைவுகள் யாவும் தோன்றின.

உணவில், உடையில், உறைவிடங்களில் நல்ல நல்ல மாற்றங்கள், மொழியில், பழகும் வழியில் அழகான மாற்றங்கள் இத்துணை நன்மைகளுக்கிடையே சிற்சில தீமைகளும் விளைந்தன. ஹைட்ரஜன், காமா போன்ற வெடிகுண்டுகள் ஒரு புறமிரக்க, அவைகளை விட தீவிரமான புலனடக்கமின்மை என்ற புற்றுநோய் மக்களிடையே பரவுகின்றது. இவற்றிற்கு விஞ்ஞானத்தின் இன்றைய அமைப்பு துணையாக அமைவது போல் தோன்றுகிறது. இவை யாவும் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றன என்பதை விஞ்ஞான வரலாறு கற்றவர் உணர்வர்.

உயிரியல் முதல் விண்ணியல் வரை பல்வேறு கொள்கைகளை வெளியிட்டுப் புகழ்பெற்ற பழம்பெரும் கிரேக்கதத்துவ ஞானி அரிஸ்டாட்டில் முதல், பொருளின் அழியாமை சக்தியின் அழியாமை என்ற பழைய இரு அடிப்படை விதிகளையும் தகர்த்தெறிந்து பொருளில் சக்தியைக் காணலாம் சக்தியில் பொருளைக் காணலாம் என்ற தத்துவத்தை (E=mc2) உலகிற்கு உணர்த்திய ஜன்ஸ்டீன் வரை இயற்கை நிகழ்ச்சிகளை புலனுறுப்புகளாலும் பகுத்தறிவாலும் ஆராய்ந்து காரணங்களைக் கண்டறிந்து பிரபஞ்சத் தத்துவத்தை வெளியிட முயன்றனர். இவ்வாறு புற மனத்தின் வழியே புதியன கண்டவர்கள் காண்பவர்கள் விஞ்ஞானிகளாவர். இவர்கள் கண்டறிந்த முடிவுகள் என்ன?

‘‘குப்பாச வாழ்க்கையில் கூத்தாடும் ஐவரின் கொட்பு அடைந்த இப்பாச நெஞ்சினை ஈடேற்றுவாய்”

என்று அருணகிரிநாதர் பேசுவதையும்,

‘‘நான் என்ற பாகம் அதில் நான் நின்று மாளால் நீ நின்ற கோலம் அதில் விரவி நிற்பது எக்காலம்?… (குறித்தவர், தொண்டன், 1981)

என்று பத்திரகிரியார் வினவுதலையும் எண்ணிப் பார்க்க விஞ்ஞானிகள் வேதிமப் பொருள்களையும் (Chemicals) நுண் கருவிகளையும் (Scientific Instruments) கணித முறைகளையும் (Mathemetical Oquations) தங்களுடைய பரிசோதனைக்குப் பயன்படுத்துவதைப் போல மெய்ஞ்ஞானிகள் புலனடக்க முறையைப் பின்பற்றி இயற்கையை இப்பிரபஞ்சத்தின் தன்மையைக் காண முற்பட்டனர்.

மெய்ஞான வழியும் புலனடக்கமும்: இப்பிரபஞ்சத்தின் உண்மைத் தத்துவத்தை வேறு நோக்கிலிருந்து அறிய முற்பட்ட மற்றொரு வகை ஞானிகள் சித்தர்கள் ஆவார்கள். இவர்களுக்குப் பரிசோதனைச்சாலைகள் கிடையாது. தேவைகளற்ற தன்னலம்பேணா பரிசுத்தமான மனமே அவர்களது பரிசோதனைச் சாலை. பத்திரகிரியார், திருமூலர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், வள்ளலார், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற மெய்ஞானிகள் அகங்காரத்தை அழித்து ஓங்காரத்தில் ஒன்றியவர்கள். இவர்கள் புலன்களை அடக்கிப் புறமனத்தின் பேயாட்டத்தை ஒடுக்கியவர்கள். இவர்கள் உணர்த்திய உண்மைகள் யாவை?

விஞ்ஞானத்தின் இன்றைய நிலை: இதுவரை செய்த விஞ்ஞான சோதனைகள் பிரபஞ்சத்தைப் பற்றிய அடிப்படை தத்துவத்தை விளக்கும் போக்கினை விஞ்ஞானியும் மெய்ஞ்ஞானியுமாகத் திகழ்ந்த டாக்டர் ஐன்ஸ்டீன் தன் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றார்: ‘‘எல்லா ஆராய்ச்சிகளின் முடிவுகளும் அடங்கிவிடும் ஆதாரத் தத்துவத்தைக் காணவேண்டும் என்ற ஆவலோடு கூடிய உணர்த்தறியும் அறிவின் வளர்ச்சி, வெற்றிகளைக் கண்டு கொண்டிருந்த போதிலும், அந்த ஆதாரத் தத்துவத்தை அடைய தேவையான அடிப்படைக் கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினையில் நாம் இன்னும் தீர்வு காணவில்லை (குறித்தவர், லீங்கன் பார்வெட், (1958) இதிலிருந்து ஒன்று புலப்படுவதாகத் தோன்றுகின்றது. உயிரியல், வேதியியல், பௌதிகவியல், பொறியியல், விண்ணியல் ஆகிய எல்லா ஆராய்ச்சிகளின் முடிவுகளும் ஐக்கியமாகக் கூடிய ஓர் ஒப்பற்ற ஆதாரத் தத்துவத்தைக் காலத்திலும் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் முறைகளால் நிரூபிக்க இயலாமல் போய்விடும் என்பதைத் தான் இக்கூற்று மறைமுகமாக உணர்த்துகின்றது.

பேருள்ளம் (Supreme Mind): ஆனால், மெய்ஞ்ஞானிகளின் பிரபஞ்ச வாழ்க்கையைப் பற்றிய சித்தாந்தங்களை ஆழ்ந்த நோக்குடன் ஆராயும்போது, விஞ்ஞானிகளுக்கு எட்டாத அந்த ஆதாரத் தத்துவத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் மெய்ஞ்ஞானிகளுமான பலர் உணர்ந்திருந்தனர் என்று புலப்படுகின்றது. சுவாமி விஷ்ணு தேவானந்தா (1978) அந்த ஆதாரத் தத்துவத்தை, இவ்வாறு அழகுபட விளக்குகின்றார்:

“If the sun and earth were suddenly blown to pieces, the matter would revert to other (energy). Ultimately it would return to the Supreme Mind. compared to which either Itself is gross, Mind is the last reduction of matter to its original Source Brahman”

மெய்சிலிர்க்க வைக்கும் இவ் விளக்கத்தை மீண்டும் மீண்டும் படித்து உணர்தல் அவசியமாகிறது. சூரிய மண்டலத்தில் கருவாக அமைந்துள்ளது கதிரவன். பொருள்கள் அங்கே சிதைந்து சக்தியாக விண்வெளியில் ஊடுருவிச் செல்கின்றது. இம்மண்டலத்திலுள்ள ஒன்பது கோள்களில் வெள்ளியை அடுத்து அமைந்துள்ள பூமியில் மட்டுமே பல்உயிரணு உயிரிகள் (Mulpicollulor Organisms) இருக்கின்றன. இச்சூரிய மண்டலம் பால்வழித் தோற்றம் என்ற விண்மீன் குழுவில் (Galaxy) ஒரு அங்கமேயாகும். எல்லையற்ற விண்வெளியில் எத்தனையோ விண்மீன் குழுக்கள் அமைந்துள்ளன. கற்பனை செய்து பார்த்தால், பூமியைப் போன்ற கோள்களையுடைய எத்தனையோ சூரிய மண்டலங்கள் இந்த விண்மீன் குழுக்களில் அமைந்திருக்கக் கூடுமென்று புலனாகின்றது. ஆக பிரபஞ்ச முழுவதும் இவ்வாறு சூழ்ந்துள்ள பொருள்கள், சுவாமி விஷ்ணு தேவானந்தா (1978) கருதுவது போல் வெடித்து சிதறினால் பொருள்கள் யாவும் சிதைந்து சக்தியாக பரிணமிக்கின்றது.

– தொடரும்

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 39-41

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here