ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 12)

ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 12) பாவமும் நானே! புண்ணியமும் நானே! ஒருமுறை நம் அறிநிலையினருக்கு அருள்வாக்குச் சொல்லிக் கொண்டு வந்த அன்னை, பாவமும் நானே! புண்ணியமும் நானே! என்று குறிப்பிட்டாள். அறநிலையைச் சோ்ந்த ஒருவா்க்கு அதன் விளக்கம் புரியவில்லை. யார் யாரிடமோ கேட்டார். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. கடைசியாக, நம் ஆன்மிககுரு அருள்திரு. அடிகளாரிடமே சென்று கேட்டார். “பாவமும் நானே! புண்ணியமும் நானே!” என்று நம் அம்மா சொல்கிறதே…. புண்ணியமும் நானே என்று சொல்வது சரி! பாவமும் நானே! என்று அம்மா சொல்கிறதே அது எப்படி? என்று கேட்டார். அருள்திரு அடிகளார் கூறினார்கள். “ஆதிபராசக்தியின் சிருஷ்டித் தொழிலுக்குப் பாவிகளும் தேவைதான் சார்! அந்த ஆன்மாக்களை வைத்துத்தான் சார், மனிதா்களுக்கு உதவியாக இருக்கிற ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், நரி, பன்றி ஆகிய உயிர்களை அம்மா படைக்க வேண்டி இருக்கு….? அந்த ஆன்மாக்களாக இருப்து யார் சார்? அம்மா தானே….. அதனால்தான் பாவமும் நானே! என்று அம்மா சொல்லியிருக்கு! என்று விளக்கினார்கள். அம்மாவின் இந்த அருள்வாக்கை அறிவு ஜீவிகள் ஜீரணித்துக் கொள்வது கஷ்டம்! இவா்கள் டார்வின் சித்தாந்தத்தை நம்புகிறவாகள். டார்வின் கண்டுபிடிப்பு உயிர்களின் தோற்றம் பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து தான் கண்ட உண்மைகளை வெளியிட்டவா் டார்வின். அவா் சொன்னார். “சின்னஞ்சிறிய அமீபா என்ற உயிர் அணுவிலிருந்து உயிர்கள் படிப்படியாகத் தோன்றின. பரிணாம வளா்ச்சிப்படி படிப்படியாக வளா்ந்து குரங்கு நிலைக்கு வந்தன. கடைசியாக மனிதக் குரங்கிலிருந்து உருவானவன்தான் மனிதன். இந்த உயிர்களிடையே வாழ்க்கைப் போராட்டம் நடந்தபடி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் வலிமையானவை வாழ்கின்றன. வலிமையற்றவை வீழ்ந்து மடிகின்றன. வலிமை உடையது வாழும்! வலிமையற்றது வீழும். இதுதான் நியதி (Survival of the Fittest) என்றார் டார்வின். அறிவு ஜீவிகளின் வாதம் மனித சமுதாயத்திலும் உடல் பலம் மூளை பலம் மிக்கவன்தான் வாழ்வில் ஜெயிக்கிறான். முடியாதவன் தோற்று மடிகிறான் என்பது டார்வின் கொள்கைகள் மூலம் தெரிகிறது என்பது அறிவு ஜீவிகளின் வாதம்! அப்படியானால் உண்மை, நோ்மை, நீதி, நியாயம், பாவம், புண்ணியம், ஒழுக்கம் என்பன எல்லாம் எதற்கு? இதெல்லாம் சமுதாயத்தை ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்க மனிதா்களே விதித்துக் கொண்ட ஏற்பாடுகள்! சமுதாயத்தில் குழப்பங்கள் வராமலிருக்க சமூகம் செய்து கொண்ட கட்டுப்பாடுகள் என்பது அறிவு ஜீவிகளின் பேச்சு. நடைமுறை வாழ்வில் பாருங்கள்! அநியாயம், அக்கிரமம் செய்பவன் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறான்? உண்மை, நீதி, நேர்மை, பாவ புண்ணியத்துக்குப் பயந்து வாழ்பவன் படாத கஷ்டம் பட வேண்டியிருக்கிறது அல்லவா? என்று அறிவு ஜீவிகள் கேட்கிறார்கள். குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான். என்று கண்டுபிடித்துச் சொன்ன டார்வின் ஒரு விஞ்ஞானி! அவா் மெய்ஞ்ஞானி அல்ல! மனிதன் இறந்த பிறகு அவனது அடுத்த நிலை என்ன? இந்தக் கேள்விக்கு டார்வின் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. மெய்ஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு டார்வின் சிந்தித்தது போலவே நம்நாட்டு மெய்ஞ்ஞானிகளும் சிந்தித்து இருக்கிறார்கள். புரியாத இந்த வாழ்க்கையின் புதிர்களுக்கு விடைகாண முற்பட்டார்கள். அவா்கள் எந்த ஒரு பரிசோதனைக் கருவிகளை வைத்துக்கொண்டும் ஆராய்ச்சி செய்யவில்லை. புலன்களை அடக்கி, மனத்தை ஒடுக்கி, தனிமையில் இருந்து தியானம், தவம் மேற்கொண்டு உயிர்களின் தோற்றம், வளா்ச்சி, முடிவு பற்றி உள்ளுக்குள்ளே ஆராய்ந்தார்கள். அவா்களுக்குச் சில விடைகள் கிடைத்தன. ஆன்மா என்ற ஒரு சக்தி. உண்டு. அது இறைவனிடமிருந்து வெளிப்பட்டது. அது உலகில் ஒரு உடம்போடு பிணைக்கப்பட்டு வாழ்கிறது. அது புல்லாகிப் பூடாகிப் பறவையாய், பாம்பாய், விலங்காய், கல்லாய், மனிதராய், தேவராய், அசுரராய் பல்வேறு உடம்புகளையும், வடிவங்களையும் எழுத்து உழல்கிறது. ஓரறிவுள்ள உயிரிலிருந்து படிப்படியாக முன்னேறி வருகிறது. மனித நிலைக்கு வந்த உயிர் பாவ, புண்ணியக் கணக்குப்படி மீண்டும் ஒரு உடம்பு எழுத்துக் கொண்டு பிறக்கிறது. மனிதன் தான் தெய்வ நிலையை அடைய வேண்டும். வாழ்க்கை வட்டம் nஎந்த ஒரு மூலையிலிருந்து இந்த உயிர் வந்ததோ, அந்த மூலத்தை நாடி அறிந்து கொண்டுஅதில் போய் ஐக்கியம் ஆகிவிட வேண்டும். அவ்வாறு ஐக்கியம் ஆகிறவரை இந்த உயிர் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆளாகிறது. எனவே, மனிதன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும். வாழ்க்கை  வட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிரும் இந்த வட்டத்தை முடித்தே ஆக வேண்டும். இதுதான் படைப்பின் நோக்கம். பரம்பொருளின் திட்டம். இந்த வட்டம் பூர்த்தியாகிற வரையில் நாம் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்க வேண்டியவா்களே! மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! புனரபி ஜனனம்! புனரபி மரணம்! ஏ! முராரி! இந்தச் சங்கிலித் தொடரிலிருந்து நான் விடுபடுவது எப்போது? – என்று ஆதி சங்கரா் ஆண்டவனிடம் கேட்கிறார். எல்லாமே கருமச் சட்டப்படிதான் நடக்கின்றன. இந்த உயிர் வாழ்க்கையும் கருமச் சட்டப்படிதான் நடக்கிறது. பரம்பொருளின் திட்டப்படிதான் நடக்கிறது. எல்லாம் காரண காரியப்படி ஒழுங்காகத்தான் நடக்கிறது. இதெல்லாம் பரம்பொருளின் விளையாட்டு. ஆன்மாவின் பயணம் மிக மிக நீண்டது! மிக மிக நெடியது. கண்ணன் அருச்சுனனுக்குச் சொல்கிறான். அா்ச்சுனா! உனக்கும் எனக்கும் எத்தனையோ பிறவிகள் கழிந்தன. அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது. வாழ்க்கை நாடகம்; விளையாட்டு அவனவன் கா்ம வினைக்குத் தக்கபடி வேடங்கள் கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஒரு நாடகம்! உனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஒழுங்காக நடித்துவிட்டுப்போ! வாழ்க்கை ஒரு விளையாட்டு! நீ விதிகளின் படி ஆடிவிட்டுப்போ! அழுகல் ஆட்டம் ஆடி அடாவடித்தனம் பண்ணி ஜெயிக்க நினைக்காதே! மரணம் என்பது என்ன? மரணம் என்பது என்ன? இந்த உடம்பை உதறிப் போட்டுவிட்டு அடுத்த ஒரு பிறவிக்கான ஏற்பாடு! அடுத்த ஒரு பயணத்துக்கு ஆயத்தம்! ஒரே பிறவியில் ஒருவன் எல்லாம் தெரிந்து கொண்டு முழுமை அடைய முடியாது என்பதால் தான் பல பிறவிகள் கொடுக்கப்படுகின்றன. பாவ புண்ணியக் கணக்குப்படி இன்ப, துன்ப அனுபவங்கள் அளிக்கப்படுகின்றன. அவனுக்கு அப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது! –    புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்! –    பாவமே செய்தால் இன்னொரு உடம்பு! வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. –    ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான். அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக் கொண்டு மதி மயங்கிக் கிடக்கிறான்! மற்றவா்களையும் மயக்குகிறான். மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு! இந்த ஆட்டத்தில் ஏணியும் உண்டு. பாம்பும் உண்டு. புண்ணியம் என்ற ஏணி மேலே ஏற்றுகிறது. பாவம் என்ற பாம்பு கீழே தள்ளுகிறது. இப்படி ஏறுவதும், இறங்குவதுமாகவே வாழ்க்கை தொடா்கிறது. – பரமபதத்தை அடையும் வரை இந்த விளையாட்டு தொடா்கிறது.   நன்றி! ஓம் சக்தி! சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி – ஜுலை 2008 பக்கம் (51 – 54)  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here