ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 09)

ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 09) இடியையும் மின்னலையும் – காற்றையும் நெருப்பையும் – பாம்பையும் கருடனையும் – முன்னோர்களின் ஆவிகளையும் வழிபட்டு வந்த மனிதனுக்கு, எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று இருக்கிறது. அதன் இச்சைப்படிதான் இந்தப் பிரபஞ்சம் இயக்குகிறது என்று உணா்வதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. வாழ்க்கைப் பிரச்சனைக்குத் தீா்வு தேடி – கடவுளைத் தேடி அலைந்த ஒரு சிறிய கூட்டத்தார்க்குச் சில பதில்கள் கிடைத்தன. தியானம். தவம் என்ற பயிற்சிகளுக்குப் பிறகு சில உண்மைகள் கிடைத்தன. அந்த உண்மைகளையே உபநிடதங்கள் என்ற பெயலால் அவா்கள் வெளியிட்டார்கள். எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று உண்டு என்ற உண்மையை உபநிடத காலத்தே வாழ்ந்த ரிஷிகள் வெளியிட்டார்கள். அந்தப் பரம்பொருளைப் பல்வேறு பெயா்களால் குறிப்பிட்டார்கள். பிரம்மம், பரப்பிரம்மம், பரம புருஷன், பரமாத்மா, பூரணம் என்ற பெயர்களால் அதனைக் குறிப்பிட்டார்கள். அந்தப் பிரம்மத்தின் இயல்புகளை வெளியிட்டார்கள். பிரம்மம் – பொருள் பிரம்மம் என்றால் என்ன? அதன் பொருள் என்ன….? –    உடைத்துக் கொண்டு வெளிப்படுவது –    பிரபங்சத்திற்கு ஆதாரமாக இருப்பது. –    பிரபஞ்ச வளா்ச்சிக்குப் பிறப்பிடமாக இருப்பது. –    பிரபஞ்சமாக வெளிப்பட்டுத் தோன்றுவது. –    பிரபஞ்சமாக வளா்வது. மனம் வாய்குக்கு எட்டாதது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற அந்தப் பொருளை எப்படி வாயால் விவரிப்பது? மனத்தாலும் கற்பனை செய்து விளக்க முடியாத அந்தப் பொருளை எப்படி விளக்குவது? ஆகவே அந்தப் பொருள் நமது மனம், வாக்குக்கு எட்டாதது என்றார்கள். “வான மண்டலமே அந்தப் பிரம்மத்தின் தலை. சூரியனும் சந்திரனும் அதன் கண்கள். திசைகள் நான்கும் அதன் காதுகள். ஞான உரைகளே அதன் குரல். காற்று அதன் மூச்சு. பிரபஞ்சம் அதன் இதயம். எல்லாவற்றுக்கும் உட்பொருளாக நிற்பதும் அதவே!” என்கிறது முண்டக உபநிடதம். சொல்லால் விளக்க முடியாதது “பிரம்மத்தினைச் சொற்களால் உரைத்தல் இயலாது” என்கிறது கடோப உபநிடதம். பிரம்மத்தினை நாவால் பேச இயலாது. ஏனெனில் நாவைப் பேச வைப்பதே அந்தப் பிரம்மம்தான் என்கிறது கேன உபநிடதம். என்னதான் அபாரமான மூளை இருந்தாலும், பேச்சுத் திறமை இருந்தாலும் சில விஷயங்களைச் சொல்லி விளக்க முடியாது. மல்லிகைப் பூவின் வாசனைக்கும், ரோஜாப் பூவின் வாசனைக்கும் உள்ள வித்தியாசங்களை சில வரிகளில் எழுது. எலுமிச்சம் பழத்தின் புளிப்புக்கும், புளியம் பழத்தின் புளிப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன? திருநெல்வேலி அல்வாவின் ருசிக்கும், கல்கத்தா ரசகுல்லாவின் ருசிக்கும் உள்ள வேறுபாடு என்ன? நிலவின் குளிர்ச்சி – தென்றலின் குளிர்ச்சி பற்றி ஒரு பக்கத்தில் விளக்கி எழுது! –    இதெல்லாம் வாயால் உரைக்கவோ எழுத்தால் விளக்கவோ முடியுமா! இவற்றை உணரத்தான் முடியும். சொற்களால் விளக்க முடியாது. அதனால்தான் பரம்பொருளின் இருப்பை உணரத்தான் முடியும். சொற்களால் உணா்த்த முடியாது என்று கூறுகிறோம். ஒரு வகையில் பார்த்தால் இதுகூட நமது மொழியில் உள்ள ஒரு குறையோ அல்லது நம்மிடம் உள்ள குறையோ என்று நம்மையே நம் மனம் கேட்கிறது அல்லவா? சரி… விஷயத்திற்கு வருவோம். அறிவுக்கும் எட்டாதது அறிவாக உள்ளது பிரம்மம்! ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்டது. அறிவுக்குள் அறிவாய் நின்று அறிவினை இயக்குவதே பிரம்மம் தான். எனவே அறிவினால் பிரம்மத்தை உணர முடியாது என்கிறது பிருகதாரண்ய உபநிடதம். “நுண்ணிய அறிவாலோ, நூல்கள் பல கற்பதாலோ பிரம்மத்தைக் காண முடியாது” என்கிறது முண்டக உபநிடதம். அறிவிற்கு அப்பாற்பட்டது. “அறிவிற்கு அப்பாற்பட்ட பிரம்மம் என்பதை அறிந்து கொண்டவன்தான் பிரம்மத்தை அறிந்தவன்” என்கிறது கேன உபநிடதம் “யாவரும் அறிதற்கு அரியான்” என்கிறது தேவாரம். “அறிவரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்” என்கிறார் தேவார ஆசிரியா் ஒருவா். விஞ்ஞானம் – மெய்ஞ்ஞானம் நமது ஐம்பொறிகளுக்கும் புலனாகும் ஒலி, ஒளி பிற பருப்பொருள்கள் இவை பற்றியே விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்கின்றது. ஐம்பொறிகளுக்கும் புலப்படாத இறைமை பற்றியது மெய்ஞ்ஞானம். புறப்பொருள்களை ஆராய்வது விஞ்ஞானம். அகப்பொருளை ஆராய்வது மெய்ஞ்ஞானம். “அறிவானும் தானே! அறிவிப்பான் தானே!” என்கிறார் ஆழ்வார் ஒருவா். அறிவறிய மூா்த்தி “அறிவாக உள்ளது பிரம்மம். ஆனால் அது அறிவிற்கு அப்பாற்பட்டது. அறிவுக்குள் அறிவாய் நின்று, அறிவினை இயக்குவதே பிரம்மம்தான். எனவே, அறிவினால் பிரம்மத்தை உணர முடியாது” என்கிறது பிருகதாரண்ய உபநிடதம். “தன்னை யாவரும் அறிதற்கு அரியவன்” என்கிறார் மாணிக்கவாசகா். “இன்னதென்று கூற முடியாத மாயமான சக்தி ஒன்று எல்லாவற்றிலும் பரவி நிற்கிறது. அதனை நான் காண முடியாவிட்டாலும் அதனை நான் உணா்கிறேன். புலன்களுக்குத் தெரியும் பொருள்களிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டது. அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத அந்த ஆற்றல் நம்மை உணரச் செய்கிறது. ஆனாலும் அதனை நம்மால் மெய்ப்பிக்க இயலாது” என்கிறார் காந்தியடிகள். பிரம்மத்தை அறிந்து கொண்டதாக எண்ணுபவன் உண்மையில் அறியாதவன். பிரம்மம் நம் அறிவைக் கடந்தது என்பதை ஙானிகள் அறிவார்கள் என்கிறது கேன உபநிடதம். “அறிவரிய பிரான்” என்கிறார் நம்மாழ்வார். ஒரு பேராசிரியர்க்கு அம்மா கூறினாள். “நீ நாத்திகம் பேசினாலும், ஆத்திகம் பேசினாலும், உனக்குள் அந்த அறிவாக இருப்தே நான்தான் என்றாள். “சொல்லால் பிரம்மத்தை விளக்க முடியாது. சொல் என்பதே அதிலிருந்து உண்டாகிறது. மனத்தைக் கொண்டு நினைப்பதும் பிரம்மம் அல்ல. எந்தச் சக்தியால் மனம் நினைக்கிறதோ அந்தச் சக்தியே பிரம்மம்.” ஒருவன் பிரம்மத்தை அறியப் பார்ப்பது தன் தோள்மீதே ஏறி நிற்க முயற்சிப்பது போன்றது. அது நித்தியமாய் எங்கும் பரவி நிற்கும் மிக நுட்பமான பொருள். அதுவே அனைத்திற்கும் பிறப்பிடம் என்கிறது ஒரு உபநிடதம். சாட்சியாக இருப்பது “பிரம்மம் எல்லாவற்றையும் காண்கிறது. அனைத்தையும் அறிகிறது” என்கிறது முண்டக உபநிடதம். “உள்ளுவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிவான்” என்கிறார் நாவுக்கரசர். நீ நினைக்கிற ஒவ்வொரு நினைப்பையும் உன்னுள் ஆன்மாவாக இருந்து இறைவன் சாட்சியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார் அவா். “கண்காணி இல்லென்று கள்ளங்கள் செய்யற்க! கண்காணியாகக் கலந்தெங்கும் இறைவன் இருக்கிறான்” என எச்சரிக்கிறார் திருமூலா். நீ செய்வது அனைத்தையும் அல்லா கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்பது குரான் வசனம்.   நன்றி! ஓம் சக்தி! சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி – ஏப்பிரல் 2008 பக்கம் (61 – 64)      ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here