ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 04)

நாம் எடுத்துக் கொண்ட தலைப்புக்கும், சொல்லவந்த அம்மா செய்திகளைப் புரிந்து கொள்ளவும்  ஆதார சுருதியாக சில விசயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. முடிந்த அளவு அவை பற்றிச் சுருக்கமாகவே கூறுகிறேன். தொடா்ந்து படியுங்கள்.

மத நூல்கள்

“புனிதமான மத நூல்களை ஆராயும் போது தலை சிறந்த உண்மை ஒன்றைக் காண்கிறோம்.

அதாவது எந்த மதம் தனக்கென ஒரு நூலைக் கொண்டு அதன் அடிப்படையில் எழுந்துள்ளதோ, அந்த மதமே நன்கு வளா்ந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது என்பதைக் காணலாம். எவ்வளவு தாக்குதல்கள் நோ்ந்த போதிலும் அந்த மதம் தலை தூக்கி நிற்கிறது.

கிரேக்க மதம் அத்தனை சிறந்ததாக இருந்தும் அழிந்து போயிற்று காரணம் அதற்கென்று ஒரு நூல் இல்லாததே!

யூதா்களின் மதம் இன்றும் செல்வாக்குடன் ஓங்கி வளா்ந்துள்ளது. காரணம் பைபிளின் பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் அது எழுந்தது.

இந்த மதத்தின் நிலையும் இதைப் போன்றதே. உலகத்தில் மிகப் பழமையான நூலாகிய வேதங்களின் அடிப்படையில் எழுந்தது இந்து மதம். எனவே அது அன்றும் இன்றும் நிலைத்து நிற்கிறது” – என்கிறார் விவேகானந்தா்.

வேதங்களைப் போல மிகப் பழமையான நூல்களை வேறு ஒரு மொழியில் காட்ட முடியாது.

“வேதங்கள் என்றால் புத்தகங்கள் என்று பொருள் அல்ல. பல்வேறு காலங்களில் பல்வேறு மக்களால் கண்டு பிடிக்கப்பட்ட ஆன்மிக விதிகளைச் சேகரித்துத் திரட்டி வைத்திருக்கும் கருவூலம் தான் வேதங்கள்”

வேதங்களின் சிறப்பு

இந்தியத் தத்துவ ஞானம் அனைத்துக்கும் சமய அறிவுக்கும், அனைத்துக்கும் மூலம் என்பது மட்டும் வேதங்களின் சிறப்பு அல்ல. உலகம், உயிர், இறைவன் ஆகியவை பற்றி முதன் முதல் சிந்தித்த மனிதன் என்னென்ன கருத்துக்களைக் கொண்டிருந்தான் என்பதை அறிய வேண்டுமானால் நாம் வேதங்களைத்தான் நாட வேண்டும்.

வேத காலத்திலோ அதற்கு முற்பட்ட காலத்திலோ ஆக்கப்பட்ட வேறு நூல் எதுவும் இன்று கிடையாது. எனவே இந்திய மக்களை மட்டுமின்றி, மனித குலம் முழுவதையுமே எடுத்துக் கொண்டால் கூட, மனித வா்க்கத்தின் முதல் சிந்தனைகளைக் கூறும் முதல் நூல் என்ற சிறப்பும் வேதங்கட்கு உரியது.

ஆதி மனிதா்களின் கவிதைகள் என்று மட்டும் வேதப் பாடல்களைக் கருதக் கூடாது. அக்கால நாகரிகம், பண்பாடு இவற்றை அறிவிக்கும் நூல்கள் அவை! இன்றைய விஞ்ஞானம்; பொருளாதாரம்; சமூகம்; தத்துவம் முதலிய பல்வேறு துறைகளைச் சார்ந்த மூலக் கருத்துக்கள் ரிக் வேதத்தில் உள்ளன என்று அறிஞா்கள் குறிப்பிடுகின்றனா். ரிக் வேதமே இந்தியப் பண்பாட்டின் ஆதார சுருதி என்றும் போற்றுகின்றனா்.

வேத இலங்கியங்கள் மனிதா்களால் இயற்றப்பட்டவை அல்ல. அவை இறையருளால் ரிஷிகள் மூலம் வெளிப்பட்டவை என்று போற்றுவா்.

பரம்பரை பரம்பரையாக ஒருவா் சொல்ல, மற்றவா் காதால் கேட்டு இப்படி வழிவழியாகக் கேட்டுப் பாடம் செய்து வந்ததுதான் வேதம். எனவே சுருதி என்று அதற்குப் பெயா். தமிழில் கேள்வி என்று பெயா்.

வேதம்: சொற்பொருள்

“வித்” என்ற சொல்லில் இருந்து வேதம் என்ற சொல் தோன்றியது. வித் என்ற சொல்லுக்கு அறிவு, அறிதல் என்று பொருள். வேதங்கள் அறிவு நூல்கள் என்று பொருள்படும்.

அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிமையாக ஆக்கிக் கொள்வதற்கு உலகில் உள்ள பொருள்களை எந்தெந்த விதமாகப் பயன்படுத்தலாம் என்பதை அறிவது ஒரு வகை அறிவு.

இந்த வாழ்க்கை எதற்கு? இந்த உலகம் எதற்கு? வாழ்வின் நோக்கம் என்ன? என்பதைக் கூறுவது இரண்டாவது அறிவு. இந்த இரண்டாவது வகை அறிவின் பிரிவே தத்துவ ஞானம் எனப்படும்.

இந்த இரண்டாவது அறிவைத் நமக்குத் தருவதால்தான் அறிவு நூல்கள் என்ற கருத்தில் வேதங்கள் என்ற பெயா் ஏற்பட்டது.

வேதங்களும் – உட்பிரிவுகளும்

வேதங்கள் நான்கு அவை. ரிக் வேதம், எசுா் வேதம், சாம வேதம், அதா்வண வேதம் எனப்படும்.

ரிக் வேதம்

இவற்றுள் முதலில் இயற்றப்பட்டது ரிக் வேதம். ரிக் என்பதற்குச் செய்யுள் என்று பொருள். ரிக் வேதம் 10, 552 பாடல்களைக் கொண்டது. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ரிக் வேத கால மக்கள் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தெய்வமாகப் போற்றி வழிபட்டார்கள்.

யாக குண்டங்கள் அமைத்து, யாகத்தில் மிருகங்களை வெட்டிப் பலி கொடுத்தும், நெய் ஊற்றி ஆவுதி அளித்தும் தெய்வங்களை வழிபட்டனா்.

ரிக் வேதப் பாடல்கள் யாவும் தெய்வங்களின் துதிப்பாடல்களே ஆகும்.

  1. மழைவளம் பெருக வேண்டும்.
  2. தானியங்கள் செழிக்க வேண்டும்.
  3. கால் நடைகள் பெருக வேண்டும்.
  4. ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும்.
  5. நோய் நொடிகள் நீங்க வேண்டும்.
  6. எங்கள் எதிரிகளான தஸ்யுக்கள் அழிய வேண்டும்.
  7. பாவங்கள் கழிய வேண்டும்.
  8. இறந்த பிறகு சொர்க்க லோகம் செல்ல வேண்டும்.
  9. எங்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் ரிக் வேதப் பாடல்களில் காணப்படுகின்றன.

ரிக் வேதம் போற்றும் தெய்வங்கள்

ரிக் வேதம் போற்றும் தெய்வங்கள் வருமாறு

1.இந்திரன்  2. அக்கினி 3. வருணன் 4. சோமன் 5. அஸ்வினி தேவா்கள்   6. பிருகஸ்பதி 7. பா்ஜன்யன்    8. உருத்திரன் 9. மருத்துக்கள் 10. வாயு: வாதம் 11. இராத்திரி 12. உஷை     13. ஆதித்தா்     14. தியன் 15. பிருதிவி         16. அதிதி 17. மித்திரன் 18. சவிதா/ சாவித்திரி 19. சூரியன் 20. ரிபுக்கள்

21. விசுவகா்மன் 22. பிரஜாபதி 23. வாக்  24. அபாம் நபாத் 25. திரித 26. வனஸ்பதி  27. திதி  28. சரஸ்வதி 29. பாரதி 30. பிதிர்கள் 31.வாஸ்தோஸ்பதி   32. யமன்: யமி  33. பூஷன்     34. விஷ்ணு              35. வசுக்கன் 36.அப்சரஸ்கள்   37.கந்தா்வா்கள் ஆகியோர் அக்கால தெய்வங்கள்.

என்ன இது? சிவன், முருகன், பார்வதி, விநாயகா் போன்ற தெய்வங்கள் இந்தப் பட்டியலில் காணோமே என்று திகைக்க வேண்டாம். ரிக் வேதத்தில் சிவன் ஒரு தெய்வமாகப் போற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக ருத்திரனே போற்றப்பட்டான். அவனும் கால் நடைகட்குத் தொல்லை தரும் தெய்வமாகப் போற்றப்பட்டான். ருத்திரா உனக்கு இன்னின்ன பலி தருகிறோம் போய்விடு! என்று வேண்டுகிற பாடல்கள் உள்ளன. பின் வந்த எசுா்வேதத்திலே சிவபெருமான் இடம் பெறுகிறான்.

விஷ்ணு சிறு தெய்வமாகவே போற்றப்பட்டுள்ளான். இவனைப் பற்றி 500 சூக்தங்களே உள்ளன.

இந்திரன், வருணன், அக்கினி, சோமன், பூஷன், அஸ்வினி, தேவா்கள், மருத்துக்கள் பா்ஜன்யன் போன்றோர் முக்கிய தெய்வங்கள்.

எந்த ஒரு தெய்வத்தைத் துதித்தாலும் நீயே முதல்வன், எல்லாம் வல்லவன் என்று துதிப்பது வழக்கம்.

ரிக் வேத காலத்தில் வேள்விகள் செய்வதற்கெனத் தனிப்பட்ட குருமார்கள் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத் தலைவனே வேள்வி செய்த் தெரிந்து வைத்திருந்தான்.

வேதத் தெய்வங்களுள் ஆண் தெய்வங்களே தலைமை பெற்றிருந்தன. பிருதிவி, அதிதி, சரஸ்வதி என்னும் பெண் தெய்வங்கள் ஆட்கட்குத் துணையானவை என்ற அளவில் சிறப்பு தரப்பட்டது.

வேத காலத்தில் கோயில்கள், விக்கிரக வழிபாடு, அவற்றைச் செய்யப் பரம்பரை குருமார்கள் என்னும் அமைப்பு எதுவும் இல்லை.

 ஒரு தெய்வக் கோட்பாடு:

ஒவ்வொரு தெய்வத்தை வணங்கும் போதும் அவனே சகலத்துக்கும் அதிபதி என்பது போலச் சித்திரிப்பது வழக்கமாக உள்ளது.

வேதங்கள் பல தெய்வங்களைக் குறிப்பிட்டாலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமான கடவுள் ஒருவா் உண்டு என்ற கருத்தும் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது.

“சத்தியம் என்பது ஒன்றே! ஞானிகள் அதனைப் பலவாறாகக் கூறுகிறார்கள்” என்கிறது ஒரு ரிக் வேதப் பாடல்.

ரிக் வேதத்தில் பெரும் பகுதிப் பாடல்கள் தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதாகவே அமைந்துள்ளன. அவற்றுள் 1028 பாடல்கள் மட்டுமே மந்திரம் தொடா்பானவை என்பா்.

 எசுா் வேதம்

யஜ் என்ற வோ்ச்சொல்லில் இருந்து யஜீஸ், யக்ஞம் என்ற இரண்டு சொற்கள் வந்தன. யஜஸ் என்பது யக்ஞம் அல்லது யாகச் சடங்குகளை விவரிப்பது என்று பொருள். யாகச் சடங்குகளைச் செய்வது எப்படி? அவற்றை எந்தெந்த மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும் என்ற விபரங்கள் கொண்டது எசுா் வேதம்.

ரிக் வேதத்தையடுத்து ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்த பிறகே எசுா் வேதம், சாம வேதம், அதா்வண வேதம் என்பன தொகுக்கப்பட்டன.

சாம வேதம்

பெரிய பெரிய யாகங்கள் நடைபெறும் போது யாக சாலையில் இன்னிசை கீதங்கள் பாடியபடி சிலா் இருப்பா்; அவ்வாறு பாடப்பட்ட இசைப் பாடல்களின் தொகுப்பே சாம வேதம்.

இந்திய வேள்வி முறையின் வரலாற்றை எழுதுபவா்களுக்குச் சாம வேதம் பல விஷயங்கைள எடுத்துக் கூறுகிறது. இந்த வேதத்தில் கூறப்படும் கானங்கள் இந்திய சங்கீத வரலாற்றை உருவாக்குவதற்குப் பெரிதும் பயன்படும் என்று திரு. கைலாச நாத குருக்கள் கூறுகிறார்.

சாம கானத்தில் எல்லாத் தெய்வங்களையும் மகிழ வைக்க முடியும் என்பா். இராவணன் சாமகானம் பாடிச் சிவபெருமானை வசப்படுத்தினான் என்பா்.

“வேதங்களில் நான் சாமகானமாக நான் இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.

“சாமகானப் பிரியை” என்ற தேவியை லலிதா சகஸ்ர நாமம் போற்றுகிறது.

சாமகான விநோதினி என்று அன்னை மீனாட்சியைத் துதிக்கிறார் சியாமா சாஸ்திரி.

“சாந்தோக சாமம் ஓதும் வாயான்” – என்று  சிவபெருமானைத் தேவாரம் போற்றுகிறது.

இந்தியாவின் இசைக்கலையின் ஊற்றுக் கண்ணாக இருப்பது சாம வேதம்.

அதா்வண வேதம்

 ஆரம்பத்தில் அதா்வண வேதத்தை ஒரு வேதமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ரிக், எசுா், சாமம் என்னும் மூன்று மட்டுமே வேதம் எனப்பட்டன. அதா்வண வேதம் தாழ்ந்தவா்க்குரியது எனக் கருதப்பட்டது.

பிற்காலத்தில் சில மாற்றங்களைப் பெற்றும், ஏனைய வேதங்களிலிருந்து சில பகுதிகள் இணைக்கப் பெற்றும், நான்காம் வேதம் எனக் கூறும் தகுதியைக் அடைந்தது.

அக்கினி வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்ட புராதனப் புரோகிதா்களில் இரு பிரிவினா் இருந்தார்கள். அவா்கள் அதா்வா்கள் என்றும் அங்கிரஸா்கள் என்றும் கூறப்பட்டனா்.

அதா்வா்கள் நன்மை தரும் மந்திரச் சடங்குகளைச் செய்து வைப்பவா்கள்.

அபிசாரயாகம் என்கிற ஒரு யாகம் உண்டு.

ஏவல், பில்லி, சூனியம் என்ற தீய வித்தைகட்குரிய மந்திரங்கள் அதா்வண வேதத்தில் உள்ளன.

பழங்குடி  மக்களிடம் நிலவிய நம்பிக்கைகள், சோதிடம், மருத்துவம் பற்றிப் பல விஷயங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.

பகைவா்களை அழிக்கவும், தண்டிக்கவும் மட்டுமின்றி, மக்கள் பயன் பெறும் வகையில் பல அரிய செய்திகளையும் இவ் வேதம் கூறுகிறது.

அதா்வ, அங்கிரஸ்களில் வல்லவனையே அரசன் தனக்குப் புரோகிதனாக நியமித்துக் கொள்ள வேண்டும் எனப் பிற்கால தரும சாத்திரங்கள் விதித்தன.

புராதன கால விஞ்ஞானம், ரசாயனம் போன்றவற்றின் மூலக் கருத்துகளைக் கொண்ட மந்திர தந்திர சாத்திரத்தின் வெளிப்பாடே அதா்வண வேதம்.

இந்தியத் தத்துவ வரலாற்று நோக்கில் ரிக் வேதம் சிறப்புற்று ஒளிர்கிறது. வேள்விச் சடங்குகளைக் குறித்த நோக்கில் எசுர் வேதம் சிறப்புப் பெறுகிறது. இசைக்கலை நோக்கில் சாம வேதம் சிறப்புப் பெறுகிறது. மந்திர தந்திரங்கள் ரசாயனம், மருத்துவம் முதலிய கலைகளின் நோக்கில் அதா்வண வேதம் சிறப்புடன் விளங்குகிறது என்பா்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா்

சக்தி ஒளி – அக்டோபா் 2007 பக்கம் (46 – 51)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here