என் நண்பா் ஒருவா்; அவா் எப்போதும் நம் அடிகளாரைப் பற்றி அவதூறுகள் சொல்லிக் கொண்டு வருபவா்.

அவதாரம் என்றால் என்ன? ஆன்மிக உலகில் குருவின் முக்கியத்துவம் என்ன என்ற விபரமெல்லாம் தெரியாதவா். வாய்த் துடுக்காகப் பேசி வருபவா். அவருக்கு ஆதிபராசக்திமேல் நம்பிக்கை. அடிகளார் மேல் அவநம்பிக்கை. குறுக்கு எண்ணம், குறுக்கு புத்தி, எதையும் எதிர்மறையாகச் சிந்திக்கின்ற போக்கு.

அவா் மனைவியோ அதற்கு நேர்மாறானவா். அடிகளாரிடம் பக்தி கொண்டவா். அடிகளார் மகிமை அறிந்தவள். தம் கணவா் அடிகளாரைப் பற்றி அவதூறாகப் பேசும்போதெல்லாம் நடுங்குவார். துடிப்பார். “அம்மா! என் கணவரைத் தண்டித்து விடாதே! அவருக்கு நல்ல புத்தி கொடு!” என்று அவ்வப்போது வேண்டிக் கொள்வார். “அவரைத் திருத்தி உன் வழிக்குக் கொண்டு வருவது உன் பொறுப்பு” என்பதே அவரது பிரார்த்தனை.

அந்த அன்பரின் மூத்த மகள் நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்திற்காகத் தாய்வீடு வந்திருந்தாள்.

ஒருநாள் அந்த அன்பா் குடும்பத்தோடு மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்க வந்தார்.

“அம்மா! எம் பொண்ணு பிரசவம் நல்லபடியா நடக்கணும். அதற்கு நீதான் அருள் பண்ணனும்! நீதான் காப்பாத்தித் தரணும்!” என்று அன்பரின் மனைவி வேண்டிக் கொண்டார்.

“அப்பா…. கோயிலுக்கு வந்ததுதான் வந்தோம். அடிகளாரையும் தரிசனம் செய்து விட்டுப் போகலாம்பா……” என்றாள் மகள்.

“இதோபார்! இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்! தெரியுமில்லே……” என்று அடக்கிய அன்பா், பிறகு ” சரி…..சரி……
பிள்ளைத்தாச்சிப் பொண்ணு, ஆசைப்படறே….. உன் ஆசையைக் கெடுப்பானேன்….. வா போகலாம்” என்று கூறியபடி அடிகளார் தங்கியிருந்த அருட்கூடத்துக்கு அழைத்துவந்தார்.

அடிகளார் அவா்கள் புன்முறுவல் பூத்தவாறு, “வாய்யா…. என்ன விஷயம்? உனக்கு சட்டியிலே இருக்கிற தயிர் பிடிக்குது சட்டி பிடிக்கலே….. அந்தத் தயிரை உள்ளே வச்சிருப்பது சட்டிதான்! சட்டியும் அம்மாதான், தயிரும் அம்மாதான். இரண்டையும் சரிசமமா நினைச்சிக்கோ. இந்தச் சட்டியைப் போகப் போகப் புரிஞ்சுக்குவே….. உன் மக பிரசவம் நல்லபடியா நடக்கணும்! அதுக்குத்தானே வந்தே……? உன் மக பிரசவத்தை அம்மா பார்த்துக்கும். எல்லாம் நல்லபடியா அமையும்.” எனக் கூறி விடை கொடுத்தார்கள்.

விடை பெற்றுத் திரும்பும்போது அன்பரின் மனைவியைப் பார்த்து, “இந்தா!” எனக் கூறித் தன் திருக்கரத்தால் குங்குமமும் இரண்டொரு வேப்பிலையும் வரவழைத்துக் கொடுத்தார்கள்.

வெளியில் வந்த அன்பா் மனைவி, ஆனந்தக் கண்ணீரோடு, “இதோ பாருங்க…… அம்மா குங்குமமும் வேப்பிலையும் வரவழைத்துக் கொடுத்தது” என்று சொல்லி மகிழ்ந்தார்.

“தோ பாரு! இதெல்லாம் மோடி மஸ்தான் வேலை. ரோட்டில் கூட இப்பவும் செய்து காட்டுகிறான். இதெல்லாம் ஆளை இழுக்கிற வேலை. இதைப் போய் இவ்வளவு பெருமையாகப் பேசுகிறாயே….” என்று கூறியபடி வந்தார்.

வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் மகளுக்குப் பிரசவ வலி ஏற்படத் தொடங்கிவிட்டது. அன்பா் மனைவி, அம்மாவையும், குருநாதரையும் வணங்கிவிட்டு, மகளைத் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொண்டு போய்ச் சோ்த்துவிட்டார்.

மகளின் உடல் நிலையைப் பரிசோதித்த டாக்டா்கள், “இந்தப் பெண்ணுக்கு ஆபரேஷன் பண்ணித்தான் குழந்தையை எடுக்கணும். அப்பதான் தாயும், குழந்தையும் நல்லபடி
இருப்பாங்க. அப்படியே ஆபரேஷன் பண்ணலாம்னா இரத்தக் கொதிப்பு (Blood Pressure) அதிகம் வேற இருக்கு! எப்படியோ நாளைக்கு ஆபரேஷன் பண்ணிட்டா நல்லது” என்றனா்.

அன்பரின் மனைவி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். அம்மாவை வேண்டி மூலமந்திரம் சொல்லி குரு போற்றி 108 மந்திரம் சொல்லி ஒரு டம்ளரில் திருநீறும், அடிகளார் கொடுத்தனுப்பிய வேப்பிலையில் ஒன்றும் கலந்து மகளுக்கு ஊட்டினார்.

மறுநாள் பரிசோதிக்க வந்த டாக்டா், “இப்போ பிரஷர் நார்மலாகத்தான் இருக்குது. ஆபரேஷன் இன்றைக்கே செய்து விடலாம்” என்று கூறி ஒரு ஊசியைப் போட்டு விட்டு வெளியே போனார்.

அவா் வெளியேறிய சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பெண்ணுக்கு மீண்டும். பிரசவ வலியும், வேதனையும் ஏற்பட்டுச் சுகப் பிரசவம் ஆயிற்று. அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், பிறந்த அந்தக் குழந்தையின் நெற்றியில் திருநீற்றுப் பூச்சும் முழு வேப்பிலை ஒன்றும் மின்னியது.

மென்று தின்னப்பட்ட வேப்பிலை முழுதாக நெற்றியில் வந்து ஒட்டியது எப்படி?

தண்ணீரில் கலந்து அருந்திய திருநீறு குழந்தையின் நெற்றிப் பகுதியில் மட்டும் அழகான பூச்சோடு வந்து பிறந்தது எப்படி?

மோடி மஸ்தான் வேலை என்று கேலி பேசிய அந்த அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை.

“உங்க மக பிரசவத்தை அம்மா பார்துக்கும்” என்று சொன்னதற்கு அா்த்தம் இதுதான்.

ஆபரேஷன் இல்லாமல் சுகப் பிரசவம் நடந்தது அம்மாவின் சக்தியால்தான், அடிகளார் ஆசியால்தான்!

“ஏதோ அறிவுகெட்டதனமாக நான் பேசிவிட்டேன். தப்பு தப்புதான்! நான் மறுபடியும் அடிகளாரிடம் போய்க் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்
கொள்கிறேன்” என்று சொல்லி ஓவென்று அழத் தொடங்கிவிட்டார்.

அவருடைய மனைவி, அவரைத் தேற்றி “இப்பவாவது அடிகளாருக்கு இருக்கிற சக்தியைத் தெரிஞ்சுக்குங்க! அடிகளார் வேறு! ஆதிபராசக்தி வேறு இல்லீங்க! எல்லாமே அம்மாவின் சக்தி! ஆதிபராசக்திதாங்க!” என்றார் மனைவி.

“தயிரும் அம்மாதான், சட்டியும் அம்மாதான்! இந்த சட்டியைப் போகப் போகப் புரிஞ்சிக்குவே!” என்ற வரிதான் அவா் மனத்தில் ரீங்காரம் புரிந்தன.

ஏசு வேறு; பரமபிதா வேறு எனக் கிறித்துவா்கள் பிரித்துப் பார்ப்பது இல்லை.

“நானும் என் தந்தையும் ஒன்று” என்றே ஏசு கூறினார்.

“குமாரனைக் கனம் பண்ணாதவன் பிதாவையும் கனம் பண்ணான்” என்பது கிறித்துவா்கள் கோட்பாடு.

ஏசுவின் அவதாரத்தில் கிறித்துவா்கட்கு இருக்கிற தெளிவு, இன்றைய இந்துக்களுக்கு அவதாரக் கொள்கையில் இல்லை. சட்டியையும், தயிரையும் உதாரணம் சொல்லித்தான் விளங்க வைக்க வேண்டியிருக்கிறது.

“அவனின்றி நானில்லை! நானின்றி அவனில்லை! என்பது அன்னையின் அருள்வாக்கு.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. எம். குமார், மதுராந்தகம்

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, (பக்கம் 8 -11)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here