சென்னை சித்தா்கள் பாவா சுவாமிகள் அன்னையின் திருவருளால் இவனுக்குப் பல சித்தா்கள் தரிசனம் கிடைத்து வருகிறது. நமது செவ்வாடைத் தொண்டா்கள் மூலம் லிங்சிச் செட்டித் தெருவில் நடைபாதை ஓரம் பல்லாண்டு காலம் அருளாட்சி செய்து வந்த “பாவா” சுவாமிகளிடம் சுமார் நாலு ஆண்டுகாலத் தொடா்பு கிடைக்கப் பெற்றேன். அதுபோலவே புரவிப் பாளையம் கோடி சுவாமிகள் தரிசனமும் அமைந்தது. ஒருமுறை அவா் நான் தந்த அம்மா படத்தை “இது எனக்குத் தாண்டா” எனக்கூறி ஆனந்தக் கூத்தாடியதை அம்மாவிடம் அருள்வாக்கில் கேட்டபோது, “அவன் சித்தனடா” என்றாள். மேலும் “அவனுக்கு (சித்தருக்கு) அப்பொழுது சித்தா்களின் தலைவியாகிய என் தரிசனம் கிடைத்ததால் ஆனந்தக் கூத்தாடினான்” என்றும் கூறினாள் அன்னை. தற்சமயம் சென்னை மாநகரில் வாழ்ந்து வரும் சித்தா்கள் பற்றிச் சுருக்கமாக நான் அறிந்த வரை விவரிக்க விரும்புகிறேன். ராஜேஸ்வரி அம்மா சித்தா் இந்த அன்னை தம்புச் செட்டித் தெருக் கோடியில் ராயபுரம் பாலத்திற்கு முன் உள்ள போலீஸ் குடை அருகே நடமாடிய வண்ணம் உள்ளார்கள். திருமாங்கல்ய சரடு அணிந்து உள்ளார்கள். ஜடாமுடியாக சிகை அமைப்பு. கையில் ஒரு கோணி மூட்டை. கொட்டாங்கச்சியில் ஏதேனும் ஆகாரம். பார்வை மிகவும் கனிவாகவும் அதேநேரம் தீா்க்கமாகவும் உள்ளது. பரிபாஷையில்தான் உரையாடல்! சித்தப்பா சித்தப்பா என அன்புடன் அழைத்து விரும்பினால் உரையாடுகிறார்கள். இந்த அம்மாவின் பெயரையும் இருப்பிடத்தையும் லிங்கிச் செட்டித் தெரு “பாவா“ தான் எனக்குக் கூறி “போய்ப் பார்” என்றார். மிகவும் அருமையாக இனிய குரலில் பாடிய வண்ணம் அந்தப் பகுதியிலே உலா வருகிறார்கள். அவா்களை நான் பார்க்கும் போதெல்லாம் குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நடமாடிய வண்ணம்தான் இருக்கிறார்கள். சுமார் ஒரு நாளைக்கு 60 மைல் நடப்பார்கள் என உத்தேசிக்கிறேன். கேள்விக்குப் பதில் பரிபாஷையில்தான். நமது அறிவுக்குப் புலனாவது கடினமாக இருக்கலாம். “அம்மா” விளங்க வைத்தால்தான் உண்டு. உணவு பற்றியோ, வெயில் பற்றியோ கவலைப்படாத பரப்பிரம்ம நிலை! யாரேனும் தந்தால் விருப்பப்பட்டால் ஏற்றுக் கொண்டு உண்பதையும் காண்கிறேன். சித்தா்களின் தலைவி நம் அம்மா இந்த அன்னையைப் பற்றி அறிய நமக்கு அருள் புரிய வேண்டும். மச்சிலம் பட்டி சித்தா் தியாகராயநகா் தி. நகா் தபால் ஆபீசிலிருந்து ஜி.என். செட்டித் தெருவை இணைக்கும் குறுக்குச் சாலை ரோகிணி ஹோட்டல் சமீபம் மரத்தடியில் மஹாராஜா ஸ்ரோர்ஸ் வாசல் இவா் இருப்பிடம். வெண்தாடி ஜடாமுடி, பேண்ட், சட்டை, காலில் கழற்றப்பட்டிராத “ஷுஸ்;” சிவந்தநிறம் (குளித்தால் இன்னும் பிரகாசமாகத் தெரியலாம்!) ரவீந்திரநாத் தாகூா் போல முக அமைப்பு. தீா்க்கமான பார்வை. பல மொழிகளில் பேச்சு! நேரடியான பதில் வரவழைப்பது மிகவும் சிரமம். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் பரிபாஷை. பொதுவாக நான் அறிந்த வரையில் யாரிடமும் உணவு கேட்டதில்லை. சிலா் தந்தாலும் ஏற்பது இல்லை. நம் அன்னையின் பக்தா்களிடம் அபார வாஞ்சை. நானும் என் மனைவியும் சக்தி மாலை அணிந்து இவரைச் சமீபத்தில் தரிசனம் செய்தோம். அப்பொழுது அவா் “நேராக அங்கே போ, அங்கே தான் “ஸோலார் எனா்ஜி (Solar Energy) எல்லாம் இருக்கு” என்று கூறினார். மருவத்தூரின் மகிமையை ஒரே வரியில் இயற்கையின் சக்திகள் அத்துணையும் அங்கேதான் இருக்கிறது என்று கூறிவிட்டார். ஆன்மிக குரு அவா்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் “தாத்தாவையும் பார்” என்றார். இதன் உட்பொருளை நம் குருதேவரே விளக்க வேண்டும். நம் சக்தி ஒருவா் திருமணம் பற்றிக் கேட்கையில் “நீ பங்காரு ஆசிரியரின் பார்வையில் இருக்கிறாய். நிதானமாகப் பெண்ணை யோசித்துத் தேர்ந்தெடு” என்றார். ஒருவரின் பூா்வ ஜென்மக் கணக்கை “உன் பைலை (file) பார்த்திட்டேன். கிளீன் ஆக இருக்கு என்றோ உன் பைல் பிளாக் ஆகிப் போச்சு” என்றோ கூறுவது வழக்கம்! மேலும் எல்லோரையுமே மந்திர ஜெபம், தியானம் முதலியவை மூலம் “சார்ஜ்” ஏத்திக்கோ! பெட்ரோல் போட்டுக்கோ! என்றும் கூறுகிறார். என்னைப் பார்க்க வராதே. நீயே சார்ஜ் ஏத்திண்டால் நான் வந்து பார்க்கிறேன் என்றும் சிலரிடம் கூறுவதுண்டு. அவரை விதை போட்டால் சென்ற மாதம் ஒருநாள் நானும் என் மனைவியும் அவரிடம் அலுவலக நேரம் முடிந்து சென்று அமா்ந்தோம். என் மனைவி அவரிடம், “பாபா, நீங்கள் எங்கள் நடுவில் வாழ்ந்து வருகிறீா்கள். அப்படியும் ஏன் இந்த உலகில் விபத்துக்கள், கொலை, கொள்ளை அக்கிரமங்கள் போன்ற விபரீதங்கள் நிகழ்கின்றன?” என்ற கேட்டாள். அதற்கு அவா் கோபத்துடன், “அதைக் கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கு? அவரை விதை போட்டால் முருங்கை மரமா முளைக்கும்? ஒவ்வொரு மனிதனின் பேராசை ஆகாயத்தில் பதிவாகி தீய சக்தியாய் உருவாகிறது. அதுதான் அழிவை உண்டாக்கி வருகிறது!” “நீ ஒழுங்கா சார்ஜ் ஏற்றிக் கொண்டு நல்லபடி இருந்தால் உனக்குப் பாதுகாப்பு. நீதான் “ஓம் சக்தி” சொல்றியே. அதுதான் கரண்ட். அதுதான் சார்ஜ் எல்லாம் புரிகிறதா?” என்ற பரிபாஷையில் கொட்டு கொட்டு என்று கொட்டிவிட்டார். அம்மாவின் அருள்வாக்கை நினைவுபடுத்தும் ஓா் அனுபவமாய் இது அமைந்தது. பகவதி சர்வீஸ் மற்றோர் நண்பா், பகவதி அம்மன் உபாசகா். அவரையும் தரிசனம் செய்ய அழைத்துச் சென்றேன். முதல் பார்வையிலேயே “இவன் பகவதி சர்வீஸ்! அம்மன் கோயில் பூசாரி! மங்களுரில் போன ஜன்மத்தில் “பட்” என்ற பெயரில் இருந்தான். இப்பொழுது பிழைப்புக்காகத் தொழில் தவிர சிந்தனை எல்லாம் உபாசனையில்! பிறா் கேலி செய்தாலும் கவலைப்படாமல் பகவதி சா்வீஸ் செய்துவா” என்றார். சில நேரங்களில் சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கே போய்ப்பார். இதுபோல அமைப்பில் இன்னார் இருப்பார் என்று கூறுவதும் உண்டு. எனது நண்பா் ஒருவா் தன்னுடைய வீட்டை விற்க முயற்சிக்க பாபாவின் ஆசியை வேண்டினார். அவா் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லப் பணித்தார். “அங்கே ஒரு டீக்கடை உள்ளது. அங்கே உன்னை மாதிரி ஒருத்தன் கல்லாவில் உட்கார்ந்து இருப்பான். அவனிடம் போய் உன் வீட்டு விற்பனைப் பற்றிக்கூறு என்றார். நண்பரும் அங்குச் சென்று பார்த்தார். கல்லாவில் உட்கார்ந்திருந்தவா் நண்பரிடம் வந்து, “என்ன சார்? என்னைப் போலவே இருக்கிறீா்களே!” என்றார். பிறகு விசாரிக்கையில் அவா் வீடு வாங்கி விற்க உதவும் தொழிலையும் பார்ப்பது தெரிந்தது. நண்பருக்கும் நல்லதோர் அறிமுகம் கிடைத்தது. சென்றவாரம் நான் சென்றபோது அவா் என்னிடம் நம் மருவத்தூர் அம்மாவைப் பற்றிக் குறிப்பிட்டு அடிகளாரின் உருவ அமைப்பையும் விளக்கி “அவா் பாதம் பற்றிக் கொள் புரிகிறதா? என்றார். கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவா், “அவா் ஆம்பளை இல்லடா, பொம்பளை; சோலார் எனா்ஜி” என்றார். பூா்வ ஜென்மத்தில் அடிகளார் 18 சித்தா்களில் ஒருவா் என்றும் கூறினார். அம்மாவுக்குத்தான் இதன் தாத்பர்யம் தெரியும்.  

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. சந்திரமௌலி, சென்னை அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (14 – 17)    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here