1982 – ஆம் ஆண்டு கோவையில் உள்ள N.G.G.O. காலனியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் தொடங்கப்பட்டது.

அன்னையிடம் பக்தி கொண்டவா்கள் இராமச்சந்திரன் – இராஜலட்சுமி தம்பதிகள்! இராமச்சந்திரன் ஒரு அதிகாரியாக அரசுப் பணியில் இருந்தார். இவா்கட்கு இரண்டு பெண் குழந்தைகள். கணவா் அலுவலகம் சென்ற பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, சக்தி. இராஜலட்சுமி காலை 9.00 மணிக்கு மேல் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்துக்கு வந்து விடுவார். அன்னையைத் தரிசித்து விட்டு, முடிந்த தொண்டுகளைச் செய்து விட்டு வீடு திரும்புவார். இதை அன்றாடக் கடமையாகச் செய்து வந்தார்.

1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் – வியாழக்கிழமை. எப்போதும் போல செவ்வாடை உடுத்திக் கொண்டு N.G.G.O. மன்றத்துக்கு வந்தார் ராஜலட்சுமி. தான் மடியில் வைத்து எடுத்துக்கொண்டு வந்த கற்பூரக் கட்டியைக் கருவறையில் இருந்த தொண்டா் சக்தி. நஞ்சுண்டன் அவா்களிடம் கொடுத்து விட்டு அன்னையின் கருவறையை வலம் வருவதற்காகப் புறப்பட்டார்.

சக்தி. நஞ்சுண்டன் கற்பூரம் ஏற்றி அன்னைக்குக் காட்டிவிட்டு, கருவறையிலிருந்து தீபத்தை வணங்க உதவியாக நின்றார்.

சக்தி. இராஜலட்சுமி இரண்டு முறை வலம் வந்து மூன்றாவது சுற்று வரும்போது நஞ்சுண்டன் ஓா் அற்புதக் காட்சியைக் கண்டார்.

மடியிலிருந்து விழுந்த பூக்கள்

ஆம்! அந்தச் சகோதரி வலம் வரும்போது இடுப்பில் செருகப்பட்டிருந்த முந்தானையின் நுனியிலிருந்து பல வண்ண மலா்கள் சிந்திக் கொண்டிருப்பதையும், குறிப்பாக செவ்வரளிப் பூக்கள் கொத்துக் கொத்தாக உதிர்ந்து கொண்டிருப்பதையும்
கண்டார்!

“ஓம் சக்தி! என்னம்மா இது! பூக்களையும் சோ்த்துக் கொடுத்துவிட்டு வலம் வந்திருக்கலாமே! கற்பூரத்தை மட்டும் கொடுத்தீா்கள். பூக்களைக் கொடுக்க மறந்து விட்டீர்களா? அவ்வளவு பூக்களும் உங்கள் மடியிலிருந்து கீழே கொட்டி விட்டனவே!” என்றார் நஞ்சுண்டன்.

என்ன இது? அதிசயமாக இருக்கிறது? நான் கற்பூரம் மட்டும்தானே கொண்டுவந்தேன். பூக்களை எடுத்து வரவில்லையே….! இவ்வளவு பூக்கள் எப்படி என் மடியில் வந்தன? எல்லாம் அதிசயமாக இருக்கே….. அம்மாவின் விளையாட்டு போல இருக்கிறது என்று மனம் நெகிழ்ந்தார் இராஜலட்சுமி

இந்த அனுபவத்திற்குப் பிறகு அம்மாவிடம் அவருக்கு அளவு கடந்த ஈடுபாடும் பக்தியும் பெருகின.

சென்னைக்குக் குடியேறியது

கோவையில் அவா்கள் குடும்பம் மூன்று ஆண்டுகள் இருந்தது. அதன் பின் 1987 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் சென்னைக்கு மாற்றலாகிக் கொரட்டூா் பகுதிக்குக் குடியேறினார்கள்.

ஆரம்ப காலங்களில் நம் மருவத்தூரையும், அடிகளாரையும் செவ்வாடைத் தொண்டா்களையும், நமது ஓம் சக்தி, இயக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கேலியும், கிண்டலும் செய்தவா்கள் உண்டு. அவ்வாறே ராஜலட்சுமி குடியிருந்த பகுதியில் உள்ள சிலா் கேலியும் கிண்டலும் செய்து வந்தனா். அந்த நிலையிலும் அந்தத் தம்பதியினா் அன்னையின் பணியை விடாமல் செய்து வந்தனா்.

அப்போது உலக சமாதான ஆன்மிக மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடைபெற்றபடி இருந்த நேரம்.

சக்தி. ராஜலட்சுமி இந்த மாநாட்டில் வெளியான அன்னையின் பலவகைப்பட்ட படங்களையும், நவராத்திரி விழாவில் அன்னைக்குப் பலவகை அலங்காரம் செய்யப்பட்ட படங்களையும் கத்தரித்துத் தங்கள் வீட்டுப் பூஜை அறையில்
இடைவெளியில்லாமல் ஒட்டி வைத்திருந்தார். இதையெல்லாம் பார்த்து அக்கம் பக்கம் இருந்தவா்கள் பலவகையில் கிண்டல் செய்தனா்.

1987 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை (10.12.1987) நடந்த அற்புதம் இது.

அன்று ராஜலட்சுமியின் கணவா் வேலைக்குப் போய்விட்டார். குழந்தைகள் பள்ளி சென்று விட்டனா். சக்தி. இராஜலட்சுமியைத் தவிர வேறு எவருமில்லை. தைப்பூச இருமுடி செலுத்தும் தருணமாதலின், அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார் இராஜலட்சுமி.

சரியாகக் காலை 11.30 மணி இருக்கும். தன் வீட்டினில் ஓம் சக்தி! பராசக்தி! ஓம் சக்தி! பராசக்தி! என ஒரு பத்து பேர் சோ்ந்து கோஷமிட்டால் எப்படி இருக்குமோ அப்படி கோஷம் இடுவது கேட்டது.

யாரோ செவ்வாடைத் தொண்டா்கள் தன் வீட்டு வாசல் முன் கோஷமிடுகிறார்கள் போலும் என நினைத்தார் சக்தி. ராஜலட்சுமி. பக்கத்து வீட்டுக்காரா்க்கு ஒலி பெருக்கியிலிருந்து சப்தம் வருவது போல இருந்தது.

பக்கத்து வீட்டுக்காரா்கள், சக்தி இராஜலட்சுமி வீட்டுக்கு வந்து பார்க்க. இராஜலட்சுமி தன் வீட்டு வாசலில் வந்து பார்க்க இரு சாரார்க்கும் எங்கிருந்து ஓம் சக்தி கோஷம் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

பூஜை அறையிலிருந்து அந்தக் கோஷம் வருவது போலத் தோன்றவே, எல்லோரும் பூஜை அறைக்குள் சென்று பார்த்தனா். அங்கே………

பூஜை அறையின் நடுப்பகுதியில் அருள்திரு. அடிகளார் படத்திலிருந்து குங்குமம் கொட்டிக் கொண்டிருக்க 10 தொண்டா்கள் அடிகளார் 108 போற்றி படித்துக் கொண்டிருப்பது போலக் கேட்டது.

இந்த மந்திர சப்தம் எங்கிருந்து வருகிறது? யார் படிக்கிறார்கள்? என்று புரியாமல் அங்கிருந்தோர் குழம்பினா். ஒன்றும் புரியவில்லை.

அருள்திரு. அடிகளார் படத்திலிருந்து கொட்டப்பட்ட குங்குமம், கீழே பூமியில் விழ விழ, நெருப்பு சுடா்விட்டு எரிவது போலத் தோன்றியது. அடுத்த இரு நிமிடங்களில், மந்திர கோஷம் நின்று விட்ட நிலையில், கீழே கிடந்த குங்குமத்தின் இடையில் அம்மாவின் இரண்டு பாதங்கள்! அப்படியே படிந்திருப்பதைப் பார்த்தனா். அம்மா வந்தாச்சு! என்ற குரல் கேட்கிறது.

அன்னையின் பாதங்கள் இப்போது மேற்கு நோக்கி இருப்பது தெரிகிறது. ஐந்து நிமிடங்களில் இந்த அதிசயங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன!

அதன்பிறகு அனைவரும் பூஜை அறையில் அமா்ந்து, அன்னையின் மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்தார்கள்.

அருள்திரு. அடிகளார் மனித நிலையைக் கடந்தவா். அவா் ஒரு தெய்வ அவதாரம்! அவதார புருஷா் என்பதை அங்கு வந்தவா்கள் உணா்ந்தனா்.

சக்தி. இராஜலட்சுமியின் கள்ளம் கபடமற்ற பக்திக்கும் தொண்டுக்கும் மெச்சி, இப்படி ஓா் அற்புத விளையாட்டை நடத்தினாள் அன்னை.

நன்றி

ஓம் சக்தி

இராமச்சந்திரன் – இராஜலட்சுமி

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, பக்கம் (23 -26)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here