சிவசக்தி – ஆதிபராசக்தி

உலகம் இதுவரை சக்தியைச் சிவசக்தியாகவே பாவித்து வருகிறது. சிவசக்திக்கு மேற்பட்டது ஆதிபராசக்தி! அந்த ஆதிபராசக்தியே மேல்மருவத்தூர் தலத்தில் வீற்றிருந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். வேதங்களும் உபநிடதங்களும் எல்லாம் வல்ல மூலப் பொருளை – முழுமுதல் பொருளைப் பிரம்மம் – பரப்பிரம்மம் என்று குறிப்பிடுகின்றன.

அந்த முழுமுதற் பொருள் நானே! என்பதை அன்னை அவ்வப்போது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணா்த்தியிருக்கிறாள். அருள்நிலையில், அருள்வாக்கில் தன் பரத்துவத்தை உணா்த்தியிருக்கிறாள்.

சாதி – மதம் – மொழி – இனம் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி வந்து உலகம் பரம்பொருளின் நிழலில் வந்து இளைப்பாறட்டும் என்பதற்காகவே சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறோம்.

உலகம் என்னுடையது

“உலகம் என்னடையது. அதனை இயக்கும் சக்தியே ஆதிபராசக்தி! பம்பரம் சுழலுவதற்கு விரலும் சாட்டையும்தான் தேவை என்று நினைக்கலாம். அது சுற்றுவதற்கு விசை அவசியம். சக்தி அவசியம். ஆடுவது யார்? ஆட்டுவிப்பது யார்? என்பதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை

“சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. சக்தியே சாதிக்கும் தன்மை படைத்தது.

ஓடுவதும் நானே! உடைவதும் நானே! காடும் நானே களா் நிலமும் நானே பார்க்கும் பொருளும் நானே பார்க்கப்படும் பொருள்களும் நானே ”

ஆணிவேரும் சல்லி வேரும்

“ஆணி வேரும் சல்லி வேரும் இல்லாமலே மரம் வளா்ப்பவள் நான்.

சிறு தெய்வங்களெல்லாம் என்னை எப்படி வந்து வழிபடுகின்றன என்பதைக் கூட ஒரு சிலர்க்குக் காட்டுவேன்”

உருவம் இல்லை

“எனக்கு உருவம் இல்லை; என்னுடைய தோற்றங்கள் அணு, ஜோதி, குழந்தை, பாம்பு, விளக்கின் சுடா், சித்தா் முதலியன ஆகும்.

அனைத்துக்கும் கரு

“சூரியன், சந்திரன், பூமி, காற்று, ஆகாயம், ஈ, எறும்பு முதலிய எல்லா இயற்கைப் பொருள்களுக்குள் ஆண், பெண் என்ற இனம் உண்டு. எல்லாவற்றிற்கும் கரு உண்டு. அந்தக் கருதான் ஆதிபராசக்தி

சக்தி ரூபம்

“உங்களுக்காகவே இப்போது சக்தி ரூபம் எடுத்து வந்திருக்கிறேன்.”

எனக்கு விருப்பு – வெறுப்பு இல்லை

“எத்தனை தவறுகள் செய்தாலும் அவனும் என் பிள்ளைதான். நான் பெற்ற பிள்ளைகளுள் ஒருவன் கொலைகாரன், ஒருவன் குடிகாரன், ஒருவன் கள்ளக் கடத்தல் செய்பவன், ஒருவன் கள்ள வாணிகம் செய்பவன், ஒருவன் ஞானி, ஒருவன் பெரும் கல்விமான். அனைவருமே என் பிள்ளைகள்தாம்.

இப்பிள்ளைகளில் ஒருவன்மீது  விருப்பமோ மற்றவன்மீது வெறுப்போ எனக்கில்லை. ஞானி என்பதால் ஒருவனை விரும்புவதும். கொலைகாரன் என்பதால் ஒருவனை வெறுப்பதும் என்பால் இல்லை.

யார் இங்கு வரலாம், யார் வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு தீய குழந்தையானாலும் தாயைத் தேடிவரும். குழந்தையைத் தடுத்து நிறுத்த இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

என்னையே இல்லை என்று சொற்பொழிவு செய்துவிட்டு இரகசியமாக வருபவனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். யாரிடமும் விருப்போ வெறுப்போ எனக்கில்லை”

தண்டனையும் உண்டு; பலனும் உண்டு

“கொலைகாரனும் என் பிள்ளைதான். கொள்ளையடிப்பவனும் என் பிள்ளைதான். ஓம் சக்தி! என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வந்துவிட்டால் அவா்களை ஏற்றுக் கொள்வதால் அவா்களது தவறுகளையும் ஏற்றுக் கொண்டேன் என்று பொருள் அல்ல! உரிய காலத்தில் அவனவனுக்குத் தண்டனை உண்டு. தாயே! என்று என்னை நாடி வருவதால் அதற்கான ஒரு சில பலன்களும் உண்டு!”

கல்லைத் தான் கும்பிடுகிறாய்

“பகுத்தறிவை எல்லோருக்கும் தான் கொடுத்திருக்கிறேன். எல்லோரும் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறமுடியாது. நீ கல்லைத்தான் கும்பிடுகிறாய். அந்தக் கல்லைக் கும்பிட்டதற்காகவும் உன்னைக் காப்பாற்றுகிறேன்.

இவையெல்லாம் அன்னை அருள்வாக்கில் வெளிப்படுத்தியவை”

கல்லால் அடிப்பதும் நானே! கல்லால் அடிபடுவதும் நானே!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

நம் சித்தா் பீடத்துக்கு எதிரே ஒரு சிலா் “டீ” கடை வைத்திருந்தனா். அவா்களுள் ஒருவா் அருள்திரு அடிகளார் அவா்களையும் சித்தா் பீடத்தையும் கேலியும் கிண்டல்களும் செய்து வந்தார்.

அதனால் ஒருமுறை செவ்வாடைத் தொண்டா்களுக்கும், அவருக்கும் வாய்ப்பேச்சு முற்றி அடிதடி சண்டை ஏற்பட்டது. அவா் அடியாட்கள் சிலரை வைத்துத் தொண்டா்களைத் தாக்கினார். அவரது ஆட்கள் தொண்டா்களைக் கல்லால் அடித்துத் தாக்கிக் கொண்டிருந்தனா்.

வெளியே இப்படி சண்டை நடப்பதையும், செவ்வாடைத் தொண்டா்கள் தாக்கப்படுவதையும் கண்டு மனம் பொறுக்காத ஒருவா் அருள்வாக்கு கேட்க ஓடி வந்தார்.

“தாயே! நம் தொண்டா்களைக் கல்லால் அடித்துத் தாக்குகிறார்களே!” என்று முறையிட்டார்.

அம்மா சாந்தமாகச் சொன்னாள். “கல்லால் அடிப்பதும் நானே! கல்லால் அடிபடுவதும் நானே! என்று சொல்லி அனுப்பி விட்டாள்.

“என்ன இது! தொண்டா்களை அடிக்கிறார்களே என்று கேட்டால் இந்த அம்மா என்னவோ தத்துவம் பேசுது. ஒண்ணும் புரியலே!” என்று முணுமுணுத்தபடிப் போனார்.

கல்லால் அடிப்பவன் உள்ளே ஆன்மாவாக இருப்பதும் நான்தான். கல்லால் அடிபடுகிறவன் உள்ளே ஆன்மாவாக இருப்பதும் நான்தான்! என்பதை அன்று அம்மா உணா்த்தினாள்.

தான் பரம்பொருள் என்பதை அன்று குறிப்பாக வெளிப்படுத்தினாள். பாவம்! அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை.

கொல்வதும் நானே! கொல்லப்படுவதும் நானே! மானிடா் ஆன்மா மரணம் எய்தாது மறுபடிப் பிறந்து இறக்கும்! துணிந்து போர் செய்! என்று குருசேத்திரப் போரில் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தான்.

அதே உண்மையை இன்று கல்லால் அடிப்பதும் நானே! கல்லால் அடிபடுவதும் நானே! என்று அன்னை ஆதிபராசக்தி வெளிப்படுத்தினாள்.

பார்க்கும் பொருளும் நானே! பார்க்கப்படும் பொருளும் நானே!

ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 3ஆம் தேதி நம் சித்தா் பீடத்தில் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்களின் பிறந்தநாள் விழா சீரும் சிறப்புமாக நடக்கும். பக்தா்களும் தொண்டா்களும், திரளாக வந்து ஆசிபெற்றுச் செல்வது வழக்கம்.

அம்மா பக்தா் ஒருவா்; திருச்சிக்கு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவா். அந்த வருடம் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை; அதனால் மிகவும் வருத்தப்பட்ட அவா், “அம்மா! என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. என் சூழ்நிலை உனக்கே தெரியும். நீ என்னிடம் கருணை கொண்டவள் என்பது உண்மையானால் எப்படியாவது எனக்கு ஆறுதல்  வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இரவு உறங்கச் சென்றுவிட்டார்.

அன்றிரவு அவா் கனவில் தோன்றி அடிகளார் சொன்னார் “பார்க்கும் பொருளும் நானே! பார்க்கப்படும் பொருளும் நானே!”

 பாவமும் நானே! புண்ணியமும் நானே!

ஒரு முறை அருள்வாக்கில் அறநிலையினா்க்குத் தன் பரத்துவம் பற்றிப் பேசினாள். அப்போது பாவமும் நானே! புண்ணியமும் நானே! என்றாள். அதன் பொருள் அன்பா் ஒருவா்க்குப் புரியவில்லை.

அன்று மாலை ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்களிடம் கேட்டார். பாவமும் நானே! புண்ணியமும் நானே! என்று இன்று அம்மா அருள்வாக்கில் சொல்லிற்று. புண்ணியமும் நானே என்று அம்மா சொல்வது சரி! பாவமும் நானே என்று சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார்.

அதற்கு அடிகளார் பதில் சொன்னார்.

ஆதிபராசக்தியின் சிருஷ்டித் தொழிலுக்குப் பாவிகளும் தேவை சார்.

இந்த ஆன்மாக்களை வைத்துத் தான் சார் அம்மா நாய், நரி, ஆடு, மாடு, கழுதை, பன்றி ஆகிய உயிர்களைப் படைக்க வேண்டி இருக்கு. அந்த உயிர்களின் ஆன்மாவாக இருப்பதும் அம்மா தானே சார்! என்று கூறினார்கள்.

தொடரும்……………

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன், M.A. M.Phil.,

சித்தா்பீடப் புலவா்

மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

   ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here