ஆறறிவு பெற்ற மனித இனம்தான் இவ்வுலகில் அறிவிற் சிறந்த உயிரினம் என்பது நாம் அறிந்ததே. ஓா் அறிவாகிய தொடுதல் உணா்ச்சி (அமீபா, மண்புழு), ஈரறிவாகிய நாவுணா்வு (சுவையறிதல்) (எறும்பு போன்றவை) மூவறிவாகிய நுகா்தல், (வாசனைகள் அறிதல்) (தேனீ, பட்டாம்பூச்சி) நான்கறிவாகிய பார்த்தல் (ஒளி அறிதல்) கண்ணின் பயன்பாடு (கரப்பான் பூச்சி) ஐயறிவாகிய கேட்டல் (ஒலி அறிதல்) சப்தம் இடல் (பறவைகள், மிருகங்கள்) ஆறறிவாகிய பகுத்துணா்தல் நல்லது எது கெட்டது எது என்கிற மன உணா்ச்சி, (மனித இனம்) அனைத்தையும் பெற்றவன் மனிதன்.

ஐந்தறிவு பெற்ற யானை, பூனை, நாய், புறா, கிளி போன்றவை மற்றவற்றிலும் சிறிது மேம்பட்ட அறிவுடையனவாக இருப்பதைக் காண்கிறோம். அதாவது ஐந்தரையாவது அறிவு பெற்றவைகள் எனக்கொள்ளலாம். அதுபோல ஆறறிவு படைத்த மனித இனம் கூடுதலான அறிவைப் பெற முயலவேண்டும். இதனையே ஏழாவது அறிவு எனக் கொள்ளலாம். அதாவது ஆன்மிக அறிவு பெற்று மேம்பட வேண்டும். ஆன்மிக அறிவு என்பது “கடவுள் இருக்கிறார். நாம் செய்த முன்வினைப்பயனை இப்பிறவியில் அனுபவிக்கிறோம். இப்பிறவியில் நன்மைகளையே செய்து ஆன்மிகத் தொண்டுகள் செய்து, உலக மக்களுக்கு நல்லது செய்யாவிடினும் கெடுதல் செய்யாமல் இருத்தல், சமூகத்தொண்டு செய்தல் போன்றவற்றைச் செய்து அடுத்த பிறவி இல்லாதிருக்கப் பாடுபடுவதே” ஆகும்.

ஏழாவது அறிவு மட்டுமின்றி எட்டாவது அறிவாகிய ஆழ்நிலைத்தியானம், யோகப் பயிற்சி மூலம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி மூளைக்கு ஓய்வு கொடுக்கச் செய்வதாகும். ஒன்பதாவது அறிவாகிய மற்றவா்கள் மனதை நம்வசப்படுத்தும் கலையும் (மெஸ்மரிசம்) பெற முயற்சிப்போம். இறைவன் அருள் புரியட்டும். அம்மா துணை புரிவாராக.

பத்தாவது அறிவாகிய சித்தா்கள் அறிவே இறைவன் கொடுக்கும் அறிவாகும். இறையருள் இருந்தால்தான் பத்தாவது அறிவு கிடைக்கும். ஆன்மிகத் தொண்டில் செயற்கரிய செயல்களை உலக நன்மைக்காகச் செய்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், முனிவா்கள், ரிஷிகள், சித்தா்கள், அருளடியார்கள் இந்தப் பத்தாவது அறிவைப் பெற்றவா்களாவா். பத்தாவது அறிவு பெற்றவா்களோடு நமக்குத் தொடா்வபு ஏற்படுத்தித் தந்த இறைவனை நினைந்து நினைந்து வழிபடுவோம். நம்மை நல்வழிப்படுத்தும் மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்திபதி, ஆன்மிக குரு, அம்மா, பங்காரு அடிகளார், அடிபணிந்து நன்மைகள் பெறுவோம். ஆதிபராசக்தியின் அருளை உலக நன்மைக்காகப் பெற்றுத் தரும் அடிகளாரின் பிறந்த நாளில் ஆன்மிக குருவுக்கு நீண்ட ஆயுளைத் தருமாறு ஆதிபராசக்தியை வேண்டி நிற்போம்.

பத்தாவது அறிவாகிய சித்தா்களின் அறிவு, இறைவன் தரும் அறிவாகும். அதாவது ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதன் பயன்களைத் தெரிந்து கொள்ளுதல், (மூலிகை அறிவு, மருத்துவ குணமுள்ள இயற்கைப் பொருள்களின் அறிவு) மந்திர தந்திரங்களினால் நோய் குணப்படுத்துதல். பின்னால் நடைபெறும் நிகழ்ச்சியை முன்கூட்டியே அறிதல், கூடு விட்டுக் கூடு பாய்தல், நினைத்தவுடன் சித்தி அடைதல் போன்றவற்றைச் சித்தா்கள் உலக மக்கள் மேன்மையுற பயன்படுத்துகிறார்கள்.

உலகியலில் உழலும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது, கடவுளுக்கு உருவம் இல்லை; எங்கும் நிறைந்து இருக்கும் இறைவன் வெற்றிடத்திலும் கூட இருக்கிறார். என்னிடமும் உங்களிடமும், தூணிலும், துரும்பிலும், உயிர் உள்ளவற்றிலும், உயிர் இல்லாதவற்றிலும் கடவுள் நிறைந்து இருக்கிறார். உருவமற்ற கடவுள் நமக்காக நாம் நினைக்கும் உருவத்தில் கடவுள் அமைகிறார். நாம் ஒருவரே தந்தையாக, தாயாக, குருவாக, அண்ணனாக, தம்பியாக, அக்காளாக, தங்கையாக, மகனாக, மகளாக சந்தா்ப்பத்திற்கு  ஏற்றவாறு அமைவது போல், கடவுளை நம் தேவைக்கு ஏற்ற உருவமாக அமைத்து வழிபட்டுக் காரியசித்தி அடைகிறோம். அதாவது சிவனாகவும், விஷ்ணுவாகவும், பிரம்மனாகவும், விநாயகராகவும், முருகனாகவும், துா்க்கையாகவும், லட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் அமைத்து வணங்குகிறோம். சிவன் பெரிதா? சக்தி பெரிதா? என்று கேட்காமல் சிவன் செய்யும் செயல்களுக்குச் சக்தி அளிப்பவா் பார்வதியும், கங்கையும். அதாவது இருசக்திகள். மலைமகள், மலைகளின் சக்தியாகவும்; கங்கை, நீரின் சக்தியாகவும் வெளிப்பட்டு உலகை உண்டாக்குகின்றார்கள். புவி அறிவியல் ஆய்வாளா்கள் கூற்றுப்படி உலகில் முதலில் மலைதான் தோன்றியது. மழைநீா் மலை மீது விழுந்து விழுந்து நதிகளாக மாறி மலையில் இருந்த கரையும் பொருட்களை (உப்புக்களை) கரைத்து பள்ளமான இடங்களுக்கு மாற்றி மாற்றி அதிக பள்ளமான கடற்பகுதிக்சகு எடுத்துச் சென்று விட்டன. அதன்பிறகு பாறைகள் சிறிது சிறிதாக உடைந்தும். கரைந்தும் சிறு துகள்களாக மாறி கூழாங்கல், மணல், மண், களிமண் எனப் பாகுபாடாகி சமவெளிகளாக மாறின. மலை, பள்ளத்தாக்கு, சமவெளி, கடல் என ஏற்றப்பட்டு உயிரினங்கள் வசிக்க ஏற்ற இடங்களாக அமைந்தன. இவ்வாறு நடைபெற சிவனுடைய சக்திகளான பார்வதியும், கங்கையும் காரணங்கள். இதை உணர்த்தவே சிவனுடைய இரு சக்திகள் பார்பதியையும், கங்கையையும் தெய்வங்களாக வழிபடுகிறோம்.

இந்த உலகில் விக்கினமின்றிச் செயல்கள் நடைபெற இச்செயல்கள் அறிவுபூா்வமாக அமையவேண்டும் அவ்வாறு அமைந்த செயல்கள் விக்கினமின்றி நடைபெறவேண்டும். அதற்காக அறிவுக் கடவுளாகிய யானை முகத்தோன், வினாயகா், சித்தி, புத்தி என்கிற இருவேறு சக்திகளுடன் அருள்பாலிக்கின்றார். புத்திசாலித்தனமாகச் செயல்களைச் செய்ய ஏற்பாடுகள் செய்தாலும் சித்தி விநாயகா் அருள் இருந்தால் தான் நினைத்தபடி நடைபெறும்.

முருகன் வனவல்லி, கஜவல்லி என்ற இரு சக்திகளுடன் அருள்பாலிக்கிறார். மலைமகள், மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் ஆகியவற்றில் தாவரங்களை வளரச் செய்து தாவரங்களினால் கிடைக்கும் சக்திகளைத் தருகிறார். தாவர சக்திகளினால் சக்தி பெறும் மிருகங்கள், பறவைகள் போன்ற உயிரினங்களினால் கிடைக்கும் சக்தியும் முருகன் அருளால் கிடைக்கின்றன. மலைக் கடவுளாகிய முருகன் தாவரங்களைச் செய்ய வஜ்ஜிரவேல் என்னும் கல்லினால் ஒருபுறம் கூா்மையாகவும், மறுபுறம் அகண்ட அரைவட்ட வடிவமாகவும் உடைய வஜ்ஜிரவேலைக் (quarts) கற்கால மனிதா்களுக்குத் தந்தார். வஜ்ஜிரவேலைக் கொண்டு கற்கால மனிதா்கள், தாவரங்களில் இருந்து கம்பு, தடி, வில், அம்பு போன்ற ஆயுதங்களைத் தயாரித்து மிருகங்களை வேட்டையாடினார்கள். இதன் வாயிலாக முருகன் சக்திகளான வனவல்லியும், கஜவல்லியும் தாவரங்களினாலும், உயிரினங்களினாலும் கிடைக்கும் சக்திகளை நமக்குத் தருகிறார்கள். அதனால் குறிஞ்சிக் கடவுளான முருகன் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு மூத்த கடவுள் எனப் போற்றப்பெறுகின்றார்.

மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் நதிக் கரைகளையும் ஆயுதங்களினால் சரிசெய்து தோப்புக்களாக, பயிர் நிலங்களாக மாற்றியமைத்தபின் நிலமடந்தை நமக்கு அசையாச் செல்வங்களைத் தருகிறார். மலைமகள். சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் கனிமப் பொருட்களை, அசையும் செல்வங்களாக இலக்குமி தருகிறார். நிலமடந்தை, இலக்குமி ஆகிய இரு சக்திகளை விஷ்ணுவின் சக்திகளாகப் பாவிக்கின்றோம்.

படைத்தற் கடவுளாகிய பிரம்மாவிற்கு மட்டும் ஒரே சக்தியாக சரஸ்வதி தேவி (நாமகள்) அமைகிறாள். படைத்தல் தொழில்களைச் செய்யும் போது கலைஞானத்துடன் மனதை ஒருநிலைப் படுத்தி விவேகத்துடன் செய்வதால் இரண்டுவித சக்தியாக வெளிப்படுவதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. அத்துடன் நாமகள் ஒரே சொல்தான் இருக்க வேண்டும். மாறிச் சொன்னால் பொய்யாகிவிடும் என்பதை உணா்த்தவே ஒரே சக்தி.

சக்திகளின் செயல்பாடுதான் உலக இயக்கம். சக்திகளாகிய பார்வதி, கங்கை, சித்தி, புத்தி, வனவல்லி, கஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி, நாமகள் ஆகியவற்றின் ஒருமைப்பாடே ஆதிபராசக்தி என்பதை நாம் உணரச் செய்த அம்மா பங்காரு அடிகளார் பாதம் பணிவோம்! அருள் பெறுவோம்!

நன்றி.

ஓம் சக்தி! பராசக்தி!

சக்தி பேராசிரியா். தேவ. அருணாசலம், B.Sc., (Hons), M.A.Tech. FMS

புவி அறிவியல் இணைப்பேராசிரியா் (ஓய்வு)

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

மருவூா் மகானின் 69வது அவதாரத்திருநாள் மலா்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here