ஓம் சக்தி!  ஆதிபராசக்தி!

தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபாவளி ஒரு ஒளி ஏற்றும் விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கும் வழிகாட்டும் விழா!

தீபாவளி நாளில் தீபத்திற்கு ஒளி ஏற்றுவது போல வாழ்க்கையிலும் அன்பு எனும் அகலில்; பாசம் எனும் எண்ணெய் ஊற்றி, தர்மம் எனும் ஒளியை அதில் ஏற்ற வேண்டும். பாசத்தோடும் அன்போடும் தர்மம் செய்யும் போது மனதில் இருள் அகன்று ஒளி பிறக்கும்.

இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பு. அதைக்குறிப்பால் உணர்த்தி அக இருள் அகற்றி மனஒளி பிறக்க பாதைபோடும் விழா தீபாவளி.

அவ்வாறு மனதில் ஒளி பிறக்கும் பொழுது, எதற்காகப் பிறந்தோம், எதற்காக வளர்ந்தோம், எதற்காக வாழ்கிறோம் என்னும் ஞானம் பிறக்கும். அத்தகைய மெய்ஞ்ஞான நிலையை அடைவதே உண்மையான வாழ்க்கை. மெய்ஞ்ஞானத்தோடு கலக்காத விஞ்ஞானம் அஞ்ஞானம் தான்.

சித்தர்களும், முனிவர்களும், பெரியவர்களும் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் வலியுறுத்தி வருவது மெஞ்ஞானம் தான்.

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே விரும்புவது போல மற்றவர்களையும் விரும்ப வேண்டும். மற்றவர்களிடத்தில் அன்பு, பண்பு, பாசம் ,தர்மம் முதலியவற்றை உண்மையோடும் ,நேர்மையோடும், நேசத்தோடும், ஒழுக்கத்தோடும் செயல்படுத்த வேண்டும்.

ஆனால் அன்பும், தர்மமும் பேச்சளவிலேயே உள்ளது. செயலில் நிறைவேறுவதில்லை. அது மனதார நடைபெறாத காரணத்தால் அன்பு வம்பாகிப் போகிறது. பாசம் வேஷமாகிப் போகிறது. உண்மையும் ஊமையாகிப் போய்விடுகிறது.

புத்தாடைகள் அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து உறவினரைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக மட்டுமே தீபாவளியைக் கருதிவிடக்கூடாது.

நம்மைவிடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நாம் உதவிடும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும். தர்மம் செய்வதால் நமக்கு என்ன லாபம் என்று நினைக்காமல், மற்றவர்கள் மகிழ்ச்சிக்காகச் செய்வதே தர்மம்.

பெரியவர்களும், சித்தர்களும், முனிவர்களும் வலியுறுத்திய இத்தகைய குணங்கள் மக்களிடமிருந்து மாற, மாற, இயற்கையும் தன் இயல்பான தன்மைகளிலிருந்து மாற்றம் அடைகிறது. சீற்றம் பிறக்கின்றது.

ஒருவர் செய்வதில் நல்லது எது, கெட்டது எது, உண்மை எது, நேர்மை எது, ஒழுக்கம் எது, என்பதையெல்லாம் ஆன்மா உள்ளிருந்து உணர்த்திக் கொண்டே இருக்கும்.

அதை உணர்ந்தும் உணராதது போல் அறிந்தும் அறியாதது போல் செயல்படக்கூடாது. மக்களிடம் அருள்நோக்கம் பெருக வேண்டும். ஆனால் இப்போது எல்லாமே பொருள் நோக்கம் ஆகிவிட்டது.

உண்மையான அன்பும், நேர்மையான பண்பும், நேசமுள்ள பாசமும், பதில் உபகாரம் எதிர்பார்க்காத தர்மமும் பெருகப் பெருக, பேரழிவுகளும் தடுக்கப்படும் என்பதை அறிய வேண்டும்.

உழைப்பின் பெருமையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும்.

இதுவரை போனது பொற்காலம்! இப்போதோ, பலரது மனமே போர்க்களம். இது நடக்குமா? நமது எதிர்காலம் என்ன.. ? என்ற பயம் மனதில் பெருகிப்போய், பாதுகாப்பு உணர்வு நீக்கிய நிலையில் பலர் வாழ்கின்றனர்.

உள்ளத்தை வெள்ளையாக்கி, மனதைக் கட்டுப்படுத்தி, நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து, உண்மையான அன்பையும் பண்பையும் , பாசத்தையும், நேசத்தையும், தர்மத்தையும் வெளிப்படுத்தும் பொழுது, விஞ்ஞானத்தில் கட்டுப்படாதது கூட, மெய்ஞ்ஞானத்தில் கட்டுப்படும்.

இயற்கை இயற்கை தான். இயற்கையோடு ஒன்றிப்போகாத செயற்கை அழிவு தான். இயற்கை, தாய், தந்தை, குரு தெய்வத்தை எப்போதும் மனதில் நிலைநிறுத்தி வணங்க வேண்டும்.

ஒரு காலத்தில் கிராமங்களில் மரம், செடி, கொடி வளர்ச்சியால் பசுமை தெரிந்தது. இப்போது செடி, கொடிகளை விட மாடிகள் தான் தெரிகின்றன. அதனால் காற்றோட்டமும் தடைப்பட்டு விட்டது. பசுமை வந்தால் நிம்மதியும் வரும்.

வியாபாரம் மட்டும் பெருகினால் போதாது. விவசாயமும் பெருக வேண்டும். விவசாயம் பெருகாமல், விளைச்சல் பெருகாமல் உண்ணும் உணவுக்கு வழி என்ன… ?என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நல்ல பொருள்கள் விலை குறைவாகக் கிடைக்க வேண்டும். தீய பொருள்கள் விலை அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் வாங்கும் சக்தியும் அதிகமாகும். பண விளைச்சல் அதிகமாகும் போது, குண விளைச்சல் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு நிலம் உண்டு. நீர் உண்டு. உழைப்புத் தான் வேண்டும். வருங்காலத்தில் உழைப்புதான் உயர்வைத்தரும். உழைப்பவர் வாழ்வில் செழிப்பர்.

ஆணவம் அகல் வேண்டும்.நான் நான் என்றும் , தான் தான் என்றும், எனக்கு எனக்கு என்றும் , தனக்கு தனக்கு என்றும் வாழக்கூடாது.

தன் உழைப்பின் மூலம் தானும் வாழ வேண்டும். பிறரையும் வாழ வைக்க வேண்டும். பிறரும் வாழ வழிகாட்ட வேண்டும்.

இயற்கையோடு கலந்த வாழ்க்கையே எப்போதும் நல்லது. அகல்விளக்கில் விழுகின்ற விட்டில் பூச்சி, அந்தத் திரியோடு கலந்து, அந்த விளக்குத்தரும் ஒளியோடு கலந்து, தானும் ஒளிதந்து, அதிலேயே சங்கமாகி விடுகிறது. ஆனால் மின் விளக்கிலே பட்டு விழுந்த விட்டில் பூச்சியோ மண்ணுக்கும் மற்ற உயிர்களுக்கும் இரையாகிறது.

அகல்விளக்கு மட்டுமே வெளிச்சமாக இருந்த காலத்தில், மன வெளிச்சத்தால், நட்சத்திர மண்டலமே தெரிந்தது. இப்போது அருகில் உள்ளதே தெரியாத நிலை உள்ளது.

கடல் அலை போல் மனம் அலைபாயக் கூடாது. மேலே அலைபாய்வதாகத் தெரிந்தாலும், கடல் உள்ளுக்குள் அமைதியாக உள்ளது போல், வெளியே பரபரப்பாகத் தெரிந்தாலும் மனிதன் மனதின் ஆழத்தில் அமைதி வேண்டும். அடக்கம் வேண்டும். செய்யும் தர்மத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்.

தீபாவளித் திரு நாளை நாம் அன்போடும், பாசத்தோடும் தர்மம் செய்யும் ஒரு நாளாகக் கருத வேண்டும். செய்யும் தர்மத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்.

தர்மத்தின் இன்பத்தை மற்றவர் முகத்திலும் அகத்திலும் நாம் பார்ப்பது போல, அவர்களும் மற்றவர்களிடம் பார்க்கும் படியான தர்ம சிந்தனையை அவர்களிடம் வளர்க்க வேண்டும். வாழ்க்கை பிரகாசமாகி ஒளிபெற வேண்டும்.

அத்தகைய ஒளிபெற, உங்களுடைய உண்மையான உழைப்பும், நேர்மையான பண்புகளும், கனிவான தர்ம சிந்தனைகளும் பல்கிபெருகிட வாழ்த்துகிறோம்.

பக்தர்களுக்கும், செவ்வாடைத் தொண்டர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

அம்மாவின் ஆசி!

நன்றி

சக்தி ஒளி 2009 நவம்பர்

பக்கம் 9- 12.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here