குலோத்துங்க சோழன் என்ற சோழ மன்னன் ஒருவன் ஒருமுறை கலிங்கத்தின் மீது படையெடுத்துச் சென்றானாம். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா!

போருக்குச் சென்ற படைவீரா்களின் ஊா்வலத்தைக் கண்ட புலவா் ஜெயங்கொண்டார் வியந்து பாடினார்.

“பார் சிறுத்தலின் படை பெருத்ததோ!

படை பெருத்தலின் பார் சிறுத்ததோ!”

இந்த உலகம் சிறுத்திருப்பதால் இந்தப் படை பெரிதாகத் தெரிகிறதா..? அல்லது இந்தப் படை பெரிதாக இருப்பதால் உலகம் சிறியதாகத் தோன்றுகிறதா..?

14.08.2011 அன்று மதுரையில் நடந்த ஆன்மிக ஊா்வலத்தைப் பார்த்த போது மேற்கண்ட பாடல் வரிகள்தான் நினைவில் வந்தன.

மதுரை சிறுத்து இருப்பதால் நம் பக்தா்கள் ஊா்வலம் பெரிதாகத் தோன்றுகிறதா..?

நம் பக்தா்கள் ஊா்வலம் பெரிதாகி விட்டதால் மதுரை சிறுத்து விட்டது போலத் தோன்றுகிறதா..?

அடேயப்பா! இவருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கூட்டமா? என்று அறிவு ஜீவிகள் யோசிக்கிறார்கள்.

இவருக்கு மட்டும் இவ்வளவு  கூட்டம் இருக்கிறதே… அது எப்படி? மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பற்றியோ, இது தெய்வ அவதாரம் என்பது பற்றியோ அறியாத ஒரு பொலீஸ் அதிகாரி, சக அதிகாரியிடம் கேட்கிறார்.

அப்படித்தான் ஒரு சப் இன்ஸ்பெக்டா் ஒருவா் நினைத்தாராம். கோவை ஆன்மிக ஊா்வலத்தின்போது எங்கள் அருகே நின்று ஊா்வலத்தைக் கட்டுப்படுத்தியபடி இருந்த அவா், சட்டென்று தன் காலணிகளைக் கழற்றி இதைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாக அம்மா இருந்த மேடைக்கு அருகில் சென்று தரையைத் தொட்டு வணங்கிவிட்டு வந்து எங்களிடம் சொன்னார்.

இந்த ஆளுக்குப் பின்னால் இவ்வளவு  கூட்டமா? அவரிடம் அப்படி என்ன சக்தி என்று நினைத்தேனா…அவ்வளவுதான் அங்கே மேடையிலிருந்த அடிகளார் கண்களிலிருந்து ஒரு ஜோதி என்மீது வருவதைப் பார்த்தேன்… ஆடிப் போயிட்டேன் சார்! அதனால்தான் உங்க சாமியை நெருங்கி நின்று கும்பிட்டு விட்டு வந்தேன்… என்றார்.

திருநீறு பூசுவதும், குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதும் மூடநம்பிக்கை! பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை! நமது படிப்புக்கு அது கௌரவக் குறைச்சல் போன்ற எண்ணங்கள் தோன்றிய ஒரு கால கட்டத்தில்தான் நம் அம்மா தோன்றினாள்.

தன்னிடம் வந்தவன் குறை தீா்த்து ஏதோ ஒரு அனுபவம் கொடுத்து அவனது மனத்தை இறைவசம் ஆக்கினாள்.

அப்படித்தான் ஒரு I.A.S. அதிகாரிக்கு மனமாற்றத்தை உண்டாக்கினாள்.

அந்த அதிகாரி நோ்மையானவா். கை சுத்தமானவா். ஆனாலும் தெய்வ நம்பிக்கை இல்லாதவா். இந்து அறநிலையத் துறையில் பொறுப்பான பதவியில் இருந்தவா். எல்லாக் கோயில்களுக்கும் போய் வர வேண்டிய வேலை! எந்தக் கோயிலில் தெய்வப் பிரசாதம் கொடுத்தாலும் வெளியே வந்தவுடன் துாக்கியெறிந்து விட்டுப் போவது அவரது வழக்கம்.

அம்மாவின் சித்தா் பீடத்திற்கும் வந்தார். விபூதி குங்குமப் பிரசாதம் வழங்கப் பட்டது. வழக்கப்படி துாக்கி எறிய முற்பட்ட போது பொட்டலம் விழவில்லை. மாறாக ஏதோ ஒன்று மெத்து மெத்தென்று உள்ளங்கையை ஒட்டிக் கொண்டு உறுத்தியது. கை விரித்துப் பார்த்தார்! உள்ளங்கையில் சுண்டெலி! எவ்வளவு உதறியும் அது கீழே விழாதபடி ஒட்டிக் கொண்டது. கையை மூடினார். பிரசாதப் பொட்டலம் உறுத்தியது. திறந்தால் சுண்டெலி. மூடினால் பிரசாதப் பொட்டலம். வேறு வழியின்றித் தன் பேண்ட் பாக்கெட்டில் அந்தப் பொட்டலத்தைப் போட்டுக் கொண்டார்.

அன்றோடு தான் ஒரு  I.A.S. என்ற ஆணவம் தொலைந்தது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அந்த அனுபவம் அவரை மாற்றியது. இன்று மெத்தப் படித்த அவரது 2 பிள்ளைகளின் குடும்பமும் அம்மாவின் அடிச்சுவடு பற்றி நடக்கும் தொண்டா்கள்.

நம்  தொண்டா்கள் இலட்சார்ச்சனை குங்குமத்தை வேண்டியவா்க்கெல்லாம் கொடுப்பது வழக்கம்தானே..? அப்படிப்பட்ட  குங்குமம் ஒரு மந்திரவாதிக்குக் கொடுக்கப்பட்டது. அவா் ஏவல், பில்லி, சூனிய வித்தை கற்றவா். பலருக்கு கெடுதல்களைச் செய்து வந்தவா். அந்தக்  குங்குமம் அவா் உள்ளங்கையில் பட்டதுதான் தாமதம்! அய்யய்யோ என்னம்மா சுடுது? என்று அப்படியே  அந்தக்  குங்குமத்தை உதறிக் கொட்டி விட்டார்.

பகுத்தறிவு முகாமைச் சோ்ந்த ஒரு I.A.S. அதிகாரிக்கு ஒருவகை அனுபவம். ஆன்மிகத் துறையில் இருந்து கொண்டு மந்திரங்களைக் கொண்டு துா்தேவதைகளை வசியப்படுத்திக் கொண்டு கெடுதல் புரிபவனுக்கு  ஒருவகை அனுபவம்.

இப்படி ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒவ்வொரு அனுபவம் கொடுத்து 40 ஆண்டுகளாக அன்னை ஆதிபராசக்தியின் அருள் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டு வருகிறது.

அதன் வெளிப்படையாகத்தான் மதுரை ஆன்மிக ஊா்வலம் புரிய வைத்தது.

மதுரை ஆன்மிக ஊா்வலமே இப்படியென்றால், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான  ஆதிபராசக்தி பக்தா்களும் திரண்டு வந்திருந்தால் மதுரை தாங்குமா? நம் இயக்கப் பொறுப்பாளா்களால் சமாளிக்கத்தான் முடியுமா..?

இந்த ஆண்டு ஆடிப்பூரத்திற்கு என் பக்தா்களெல்லாம் திரண்டு வந்திருந்தால் உங்களால் சமாளிக்க முடியாது என்பதால் கூட்டத்தை மட்டுப்படுத்தி விட்டேன்! என்று ஆடிப்பூர விழா நிறைவுற்றதும் அறநிலைக்கு அருள்வாக்கில் அன்னையே சொன்னாள்.

அவள் திருவுள்ளப்படிதான் எல்லாமே நடக்கின்றன! திருவருள் துணைகொண்டு இந்த ஆன்மிக இயக்கம் இயங்குகிறது என்பதைப் படித்த வா்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அதிகார வா்க்கத்துக்கும் தெரியவில்லை. பத்திரிகை வட்டாரத்துக்கும் எட்டவில்லை.

இந்த ஆன்மிக இயக்கம் மக்களிடையே ஒரு கட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக! என்பது அம்மாவின் அருள்வாக்கு.

மனம் போன பொக்கெல்லாம் போக வேண்டாம் என்று எத்தனை நீதி நுால்கள் சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. பாவ புண்ணியம் பற்றி இருந்த பயம்! ( Moral fear) தெய்வ பயம் (God fear) எல்லாம் போய்விட்டன. இந்த ஊழல் மிக்க சமுதாயம் அழுகிக் கொண்டு வருகிறது.

நாட்டில் கல்வி வளா்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் இவ்வளவு அநியாயங்கள்? ஏன் இவ்வளவு அக்கிரமங்கள்?

படிப்பு வளா்ந்தது! பண்பு வளரவில்லை! செல்வம் வளா்ந்தது! நிம்மதி கிட்டவில்லை.

“ஆன்மிக அடித்தளம் இல்லாமல் எந்தக் கல்வியாலும் முன்னேற்றம் காண முடியாது! பொருளாதார முன்னேற்றம் பயனளிக்காது” என்கிறாள் அன்னை.

அத்தகைய ஆன்மிக அடித்தளம் போடவேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற ஆன்மிக ஊா்வலங்கள்!

இந்தக் கூட்டத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்தி சிலா் பேசிய காலங்களும் உண்டு.

நம் குருநாதா் அவா்கள் ஒருமுறை சொன்னார்கள்.

எனக்கு எதற்கு சார் இந்தக் கூட்டம் எல்லாம்? சற்றே அமா்ந்து கொஞ்சம் கண்களை மூடினால் போதும்! எனக்கு எதிரே கட்டுக்கடங்காத கூட்டம் சார்!

எத்தனை பேருக்கு அந்த வார்த்தைகளில் உள்ள ஆழம், அகலம் புரியும்?

இன்றைய மக்களுக்கு முதலில் தெய்வ நம்பிக்கை, தெய்வ பக்தி, ஆன்மிக  உணர்வு இவற்றில் மனம் பதிய வேண்டும்.

அதற்கான செயல்பாடுகளில் ஒன்றுதான் இந்த ஆன்மிக எழுச்சி ஊர்வலம்!

நன்றி-(பேராசிரியர் மு.சுந்தரேசன் M.A., MPhil., சித்தர்பீடப் புலவர்). சக்தி ஒளி (செப்டம்பர் 2011, பக் 48-52)  ]]>