அன்னை ஆதிபராசக்தியைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே தங்கிவிட்டார்.

அன்றைய இரவு என் கனவில் அன்னை வான் உயரத்தில் காட்சி தந்தாள். அதில் ஒரு ஆண் உருவமாகவும், ஆதிபராசக்தியாகவும் மாறி மாறித் தெரிகிறது. அந்த ஆண்நபர் யார் எனத் தெரியவில்லை. தாய் தன் இரு கரங்களை நீட்டி நான்தான் வா! வா! என்கிறாள்.

நான் மிகவும் பயந்து போய் என் கணவர் ஏதோ மாய மந்திரம் நிறைந்த இடத்திற்குச் சென்றுள்ளதாக நினைத்துப் பயந்தேன். திரும்பப் படுத்தாலும் அதே கனவு. அக்கனவில் ஆண் உருவம் எனக்கு ஏதோ குறிசொல்வது போல் சொல்லிவிட்டு மறைந்து விட்டது.

மறுநாள் என் கணவர் அன்னை ஆதிபராசக்திகூறிய அருள்வாக்கைக் கூறி அங்கிருந்து வாங்கி வந்த
அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்தினைக் காட்டினார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம்..என் கனவில் வந்த அதே ஆண்உருவம் அந்தப் படத்தில் இருந்ததோடு என்னிடம் குறிசொல்வதைப் போல கூறிய அந்த வார்த்தைகளே என் கணவருக்கு அளித்த அருள்வாக்கு…

தாயே! உன்னைக் காண நான் வராமலே எனக்குக் காட்சி தந்து மறுநாள் கூற வேண்டிய அருள்வாக்கை முதல்நாளே கூறி என்னை அழைத்தாயே என்று நினைத்து என் விழிகளில் நீர் பெருகியது.

அதிலிருந்து எனக்கு அன்னை ஆதிபராசக்தியே குரு! குருவே அன்னை ஆதிபராசக்தி! என வாழ்கிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மாதவிடாய்க் கோளாறு ஏற்பட்டது. வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டேன். கர்ப்பப்பையில் ஏதாவது கோளாறு இருக்கும் பரிசோதனை செய்யச்சொல்லி குடும்பத்தனர் கூறினர். நான் அன்னை ஆதிபராசக்தியையே வேண்டிக்கொண்டு செல்லவில்லை.
சென்றமாதம் வலி தாளாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றேன். பரிசோதித்த மருத்துவர் நீர்க்கட்டி போல் உள்ளது என்று கூறி கட்டி இருப்பதை சோதனை மூலம் உறுதிப்படுத்தியபின்…சென்னைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் எனக் கூறி குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கடிதம் கொடுத்தார். இங்கேயே கட்டிக்கு ஆபரேஷன் செய்கிறீர்களே…
எனக்கும் இங்கேயே செய்யுங்களேன் என்றதற்கு …இங்கு உங்கள் நோய்க்கு செய்யுமளவு வசதியில்லை. கட்டி பெரியதாகவும் அதனருகில் சிறு சிறு நீர்க்கட்டிகள் இருப்பதாகவும் கூறியனுப்பினார்.

வீட்டினர் சென்னைக்கு அழைத்தனர். நான் அன்னை ஆதிபராசக்தியைவிட வேறு மருத்துவரில்லை எனக் கூறி அவளையே முழுதாக நம்பியுள்ளேன்…எனக்கு எது வந்தாலும் அவள் காப்பாள். அப்படியே மருத்துவமனை செல்ல வேண்டுமானாலும் அவள் கூறட்டும் வருகிறேன், என சொல்லி விட்டேன்.
வீட்டினர் அருள்வாக்கு கேட்க மருவூர் அழைத்து வந்தனர். அன்று செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் அம்மாவின் சுற்றுபூஜை காண வேண்டி கன்னி கோயிலுக்கு முன் அமர்ந்து இருந்தேன்.
அன்னை ஆதிபராசக்தி தட்டுடன் வலம் வந்தாள். கன்னி கோயில் சென்று திரும்பும் போது என்மீது தன் அருள்பார்வையை பாய்ச்சினாள். நான் தாயே! உன் பார்வையே மருந்தம்மா! அது கிடைத்ததே என் பாக்கியம் என்று எண்ணிக் கொண்டு பாதபூஜைக்கு சென்றோம்.

எங்கள் முறை வரும்வரை அன்னை தன் அருள்மொழிகளை வழங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் செல்லும் சமயம் மவுனம் காக்கத் தொடங்கிவிட்டாள். தாய் தன் கையசைவின் மூலம் வாழ்த்தி அனுப்பினாள். ஆனாலும் அன்னை ஆதிபராசக்தி எதுவும் கூறவில்லையே எனக் கவலையாகிவிட்டது.
நான் கருவறையின் முன் நின்று வீட்டிலும் (கனவிலும்) நீ வந்து எதுவும் கூறவில்லை் இங்கு வந்தாலும் மவுனம் சாதிக்கிறாய்.எனக்கு என்ன வந்தாலும் நீயே துணை! நீ கூறாமல் எங்கும் செல்ல மாட்டேன், என்று வேண்டிக்கொண்டு ஊர் திரும்பினேன்.

வீட்டிற்கு வந்தபின் வயிறுவலி வந்தபோதெல்லாம் பாதபூஜை தீர்த்தமும், நவராத்திரி எண்ணெயும் மூலமந்திரம் 1008,108 மந்திரங்களைக் கூறியபடி அடிவயிற்றில் தடவி வந்தேன். சித்தர்பீடத்திற்குச் சென்று இரண்டு நாட்கள் கழித்து வயிற்றுவலி அதிகமாகியது.நான் குனியும் போதெல்லாம் அடிவயிற்றின் இடதுபுறம் ஏதோ தடுப்பது போன்று தெரியும்.

நான் அன்னை ஆதிபராசக்தியின் படத்தின் முன் நின்று தாயே! எனக்கு நீதான் துணை! கட்டி இருப்பது போன்று இப்போது எனக்கே தெரிகிறது.வீட்டில் சொன்னால் பயப்படுவார்கள், வலியை நீ தந்தால் வலிதாளாமல் வீட்டில் கூறிவிடுவேன் போல் உள்ளது. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்! வலியைத் தாங்கும் சக்தியைத் தா! என்று கூறி தீர்த்தமும் அகண்ட எண்ணெயும் தடவி வந்தேன். தடவியதும் வலி குறையும். இப்படியே சில நாட்கள் சென்றன.

அன்னை ஆதிபராசக்தியிடம் தினம்தினம் மனமுருகி வேண்டினேன். எந்த சோதனையை நீ தந்தாலும், உன் பாதம் விடாத உறுதியையும் தா! என்று கூறி அவளைச் சரணாகதி அடைந்தேன்.
ஒருநாள் இரவு கனவில் அன்னை ஆதிபராசக்தி நம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா உருவத்தில் வந்து என்னைத் தன்னருகே அழைத்தாள். பின் பக்கத்திலிருந்த பெரிய புற்றையும் அருகிருந்த சிறுசிறு புற்றுக்களையும் காட்டி, உனக்கு வந்துள்ள கட்டி சாதாரண கட்டியல்ல; இதைப் போன்றது, நீ என்னிடம் வைத்த தளராத நம்பிக்கையினால் இதனைக் குணப்படுத்திவிட்டேன். இனிமேல் உனக்கு எதுவுமில்லை, கவலையின்றி இரு! நான் துணை இருப்பேன்! என்று கூறி மறைந்து விட்டாள்.

அன்றிலிருந்து எனக்கு வயிற்று வலி எதுவுமின்றி நலமாக உள்ளேன். அவளது கருணையை எண்ணி எண்ணி என் கண்ணீரை அவளுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அவளது அருளுக்கு ஈடேது. எங்களால் இயன்ற மருத்துவ காணிக்கை அனுப்பி வைத்தோம். இனியும் இயன்ற போதெல்லாம் அனுப்புவோம்.

நம்பிக்கையோடு அவள் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்! சோதனை, வேதனை எது வந்தாலும் பிடித்த பிடி தளராது இருங்கள். அன்னை ஆதிபராசக்தியின் அருள் நமக்கு நிச்சயம் உண்டு!
குருவே தெய்வம்!
தெய்வமே குரு! என்பதை உணர்ந்து குருவின் பாதம் பணிந்து அவளைச் சரண்டைவோம்!